குருகவி ம. வே. மகாலிங்கசிவம்

மாவிட்டபுரத்தைச் சேர்ந்த குருகவி ம. வே. மகாலிங்கசிவம் அவர்கள் சிறந்த தமிழறிஞர். செய்யுள் யாப்பதில் வல்லவர். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராக இருந்தவர். அக்காலத்தில் விழா மலர்களிலும், இதழ் மலர்களிலும், பாராட்டு விழாக்களிலும் இவரது பாடல்கள் சிறப்பாக இடம் பெற்றன. “குருகவி” என அறிஞர்கள் அழைப்பார்கள். ”கற்பனைச் சுருக்கம்” எனப் போற்றப்பட்டவர்.

தமிழகத்திற்கு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவப்பிரகாச வித்தியாலத்தில் அதிபராக இருந்தவரும், ஈழத்தமிழர்களின் வரலாறு கூறும் “ஈழமண்டல சதகம்” எனும் நூலின் ஆசிரியரும் புகழ் பெற்ற உரையாசிரியருமான மட்டுவில் ம.க.வேற்பிள்ளை அவர்களின் புதல்வர் இவர்.

இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் இவரைப்பற்றித் தன் “இலக்கிய வழி” (1994பக்கம்91) நூலில் பின்வருமாறு குறிப்பிடுவார்.

“கவிசமயம் என்று ஒரு சமயஞ்சொல்லுவார்கள். அந்தச் சமயம் சைவசமயம் முதலிய சமய வகைகளைச் சேராது. கவிஞன் ஒருவன் ஓர் உணர்ச்சி கைவந்த பிறகு அதன் பரிபக்குவ பருவம் நோக்கி, நன்றாக கவனித்துவிட்டது என்று கண்ட பொழுது, ஏற்ற சந்தர்ப்பங்கள், பாத்திரங்களை நாடி அதனை இன்னும் இன்னும் பெறாது, பொறுக்க முடியாது, கருவுயிர்த்ததற்கு சொல்லுருவத்திற் கண்டு களித்தற்கு முகஞ் செய்கின்றான். அம் முகத்திற்குச் கவிச்சமயம் என்று பெயர் வைத்துக்கொள்வோம். அப்படி ஒரு சமயம் மகாலிங்க சிவத்திற்கு இல்லை. எந்தச் சமயமும் அந்தக் கவிஞருக்குக் கவிசமயமே. இருடி கருப்பத்திற்கு “இனி” என்ற வார்த்தையில்லை. மகாலிங்க சிவத்திற்கும் பிறகு என்ற பேச்சில்லை.”

கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மாணவர் ஒருவர் படிப்பிற்கு ஒருபாடல் எழுதித் தரும்படி கேட்டார். உடனே அவர் சொன்ன பாடல் இது.

“மங்கையிவள் செல்லும் வழியில்
நறுந்தருக்கள் நிழல் செய்து
மலிக மற்றும் பொங்கு மணல்
தாமரையின் பொலன் தாது
போற் பொலிக, புனித வாவி
எங்கு மலர்ந்திலங்கிடுக
மந்தமாருதம் வீச இனிய
தோகை யுங்குயிலும்
துணையாக அறு தொடர்கண்
ஊகரம் போல் உறுக தூரம்.”

எளிமையும் ஆழமும் மிக்க இப்பாடல் குருகவி ம. வே. மகாலிங்கசிவம் அவரின் கவிசமயத்துக்குச் சான்று பகரும், பழனிக்குமரன் மீது நூல் யாத்துள்ளார்.

By – Shutharsan.S

Sharing is caring!

Add your review

12345