குரும்பசிட்டி பொன்பரமானந்தர் மகாவித்தியாலயம்

குரும்பசிட்டி பொன்பரமானந்தர் மகாவித்தியாலயம்

இலங்கையை ஆட்சிசெய்த போத்துக்கேயரும் ஒல்லந்தரும் சுதேச மதங்கள அடக்கி ஒடுக்கித் தமது கிறிஸ்தவ மதப்பிரிவுகளை வளர்க்கும் மதத்தீவிரவாதிகளாக விளங்கினர். பிரித்தானியர் ஆட்சி ஏற்பட்டதும் அவர்கள் கடைப்பிடித்த சமய சமரசக் கொள்கை காரணமாகச் சுதேச மதங்களான சைவமும், பெளத்தமும் 19ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி காணத்தொடங்கியது.
யாழ்ப்பாணத்தில் சைவசமய மறுமலர்ச்சியின்
பிதாமராக விளங்கிய ஆறுமுகநாவலர் தமது பிரச்சாரங்களாலும் துண்டுப்பிரசுரங்களாலும்,  நூல்களிளாலும் சைவசமயிகளை விழிப்படையச் செய்தார்.
பிரித்தானியர் ஆட்சியின்போது கிறிஸ்தவ மதத்தைப் பரப்பப் பல மதக்குழுக்கள் இலங்கைக்கு வந்தன. இக்குழுக்கள் தமது மதத்தைப் பரப்புவதற்கு வாய்ப்பாக பாடசாலைகளை நிறுவினர்.  அங்கு கல்வி கற்கவரும் மாணவர்கள் கிறிஸ்வத மதத்துக்கு சேரும்படி வற்புறுத்தப்பட்டனர். யாழ்ப்பாணம் வந்து சேந்த இவ்வாறான மதக்குழுக்களில் அமெரிக்கன் மிசன் முதன்மை பெற்றது. 1816,ல் தெல்லிப்பளையில் முதல் அமெரிக்கன் மிசன் பாடசாலை (இன்றைய யூனியன் கல்லூரி) நிறுவப்பட்டது.  அதனைத்தொடர்ந்து, குரும்பசிட்டியைச் சூழவுள்ள மயிலிட்டி, ஏழாலை,  வறுத்தலைவிளான், புன்னாலைக்கட்டுவன் முதலான இடங்களிலும் இந்த மிசன் பாடசாலைகள் நிறுவப்பட்டன.
குரும்பசிட்டியிலும் 19ஆம் நூற்றாண்டின் அந்திமப்பகுதியில் ஜோன் என்னும் பாதிரியார் பேய்க் கிணற்றின் வடதிசையில் நின்ற ஒரு புளியமர நிழலில் போதனைகளை ஆரம்பித்திருந்தர் எனவும் அதனைத்தொடர்ந்து குரும்பசிட்டி சந்தியில் இருந்து குப்பிளான் செல்லும் வீதியில் சுமார் 150 மீற்றர் தூரத்தில் வீதியின் கிழக்குப் புறத்தில் ஒரு கிறிஸ்தவப்பாடசாலை அமைக்கப்பட்டது என்றும் அறிய முடிகிறது. அது மேரி பாடசாலை என அழைக்கப்பட்டது.  ஜோன் கற்பித்த புளியடி சார்ந்த காணியின் உறுதியில் “மேரி வளவு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேரி பாடசாலையில் ஈழகேசரி நா.பொன்னையா அவர்கள் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்தவப் பாதிரிமார்கள், மக்களை மதம்மாற்றப் பலம்மிக்க ஆயுதமாகப் பாடசாலைகளை அமைத்துச் செயற்பட்டமையைக் கண்ட ஆறுமுகநாவலர்,  சைவப்பாடசாலைகளை நிறுவுவதே இவ்வச்சுறுத்தலை எதிர்க்கொள்ல வழி என்று தீர்மானித்தார். 1848 இல் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியசாலையை ஆரம்பித்தார். கிராமங்கள் தோறும் சைவப்பாடசாலைகளை ஆரம்பிக்கும்படி பிரச்சாரம் செய்தார். இதனால் சைவப்பாடசாலைகள் குடாநாட்டின் பல பகுதிகளிலும். ஆரம்பிக்கப்பட்டன. பேராசிரியர் சு.வித்தியானந்தனது பாட்டனார் சின்னத்தம்பியுடையாரால் வீமன்காமம் டச்சுவீதியில் 1891 ஆம் ஆண்டில் “சுப்பிரமணிய வரோதய வித்தியசாலை”  ( தற்போதைய வீமன்காமம் மகா வித்தியாலயம் ) ஆரம்பிக்கப்பட்டது. அதுவே குரும்பசிட்டிக்கு அண்மையில் அமைந்த முதற்சைவப் பாடசாலையாகும்.

பொன்பரமானந்தர் பாடசாலையின் ஆரம்பம்


பொன்.பரமானந்தர் இவ் வீமன் காமம் பாடசாலைக்குச் சென்று கல்வி கற்று முதன்மை மாணவனாக விளங்கினார். அங்கு சில காலம் ஆசிரியராகக் கடமையாற்றினார் என்பது செவிவழிச் செய்தியாகும். உடையார் பரம்பரையைச் சேர்ந்த பொன்னம்பலம் என்பவர் குரும்பசிட்டியிலும் ஒரு சைவப்பாடசாலையை அமைக்கப் பரமானந்தருக்கு உதவினார். தமது மாமனார் தருமசாதனம் செய்த காணியில் ஒரு கட்டடத்தை அமைத்துப் பரமானந்தர் குரும்பசிட்டி பொன்பரமானந்தர் மகாவித்தியாலயம் ஐ அமைத்தார். இது மயிலிட்டி தெற்குச் சைவத்தமிழ்க் கலவன் பாடசாலை என அழைக்கப்பட்டது.
மயிலிட்டி தெற்கு என்பதே எமது கிராமத்துக்கு வழங்கப்பட்ட பழமையான பெயராகும். குரும்பசிட்டி என்னும் பெயர் சட்டரீதியாக ஏற்கப்பட்டது, 1965 – 1970 காலப்பகுதியிலேயே ஆகும். எனினும் கிராமிய எழுச்சி காரணமாகப் பொது நிறுவனங்களது பெயர்கள் குரும்பசிட்டி என்ற பெயருடன் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தே வழங்கப்பெறத் தொடங்கியமையும் கான்கிறோம்.
சைவத்தமிழக் கலவன் பாடசாலை என்ற பெயர் சில காலத்தின் பின் மகாதேவா வித்தியாசாலை என்று பெயர் மாற்றம் பெற்றது. பரமானந்தரது மகனின் பெயர் மகாதேவன் என்பதும் அவர் 1919இல் பிறந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.1975 இல் மகாதேவா வித்தியாசாலை என்ற பெயர் கைவிடப்பட்டு பொன்பரமானந்தர் வித்தியாலயம் என அழைக்கப்படலாயிற்று.  இப் பாடசாலையின் வளர்ச்சி நிலையை அவதானித்த கல்வித் திணைக்களம் 1982 இல் வழங்கிய தரஉயர்வின் பேறாகப் பொன்பரமானந்தர் மகாவித்தியாலம் என்ற இன்றைய பெயர் ஏற்படலாயிற்று.

By – Shutharsan.S

நன்றி குரும்பசிட்டி இணையம்

Sharing is caring!

Add your review

12345