கூழங்கைச் சக்கரவர்த்தி

யாழ்ப்பாணத்து வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையின்படி, யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது மன்னன் கூழங்கைச் சக்கரவர்த்தியாவான். வையாபாடல் இப் பெயரின் வடமொழியாக்கமான கோளுறு கரத்துக் குரிசில் என்ற பெயரில் இவனைக் குறிப்பிடும். இவன் கை ஊனமுற்று இருந்த காரணத்தால், “கூழங்கையன்” என அழைக்கப்பட்டுப் பின்னர் “கூழங்கைச் சக்கரவர்த்தி” அல்லது “கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி” எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
மணற்றிடர்” என்று அன்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைப் பரிசாகப் பெற்ற யாழ்ப்பாணனே, இந்தியாவிலிருந்து,  தசரதன் மைத்துனனான குலக்கேது என்பவனின் மகனான கூழங்கைச் சக்கரவர்த்தியைக் கூட்டிவந்து முடிசூட்டினான் என வையாபாடல் கூற, சோழ வம்சத்தில் வந்த திசையுக்கிர சோழனுடைய மருமகனான சிங்ககேது என்பவனுடைய மகனே இவனெனவும்,  யாழ்பாடியின் பின் அரசனில்லாதிருந்த யாழ்ப்பாணத்தை ஆள இந்தியாவிலிருந்து இவனைப் பாண்டிமழவன் என்னும் ஒருவன் அழைத்து வந்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை கூறும். வையா பாடலின்படி இவனுடைய ஆட்சித் தொடக்கம் கலியுக ஆண்டு 3000 (கி.மு. 101) ஆகும். தற்கால ஆய்வாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை.
தமிழ்ப் படைகளின் உதவியுடன் இலங்கைமீது படையெடுத்து அப்போதைய தலைநகரமான பொலநறுவையைத் துவம்சம் செய்த கலிங்க மாகன் எனும் கலிங்கத்து இளவரசனே காலிங்கச் சக்கரவர்த்தி என்னும் பெயருடன் தனியரசு நடத்தினான் என்றும் இப்பெயரே திரிபடைந்து கூழங்கைச் சக்கரவர்த்தியானதென்பதும், சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் செ.இராசநாயகம் போன்றோருடைய கருத்து. தற்போது இதற்குப் போதிய ஆதரவு இல்லை.
கூழங்கைச் சக்கரவர்த்தியின் காலம் கி.பி 13 ஆம் நூற்றாண்டு என்பதே தற்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் காலக் கணக்கு ஆகும்.
இவ்வரசனே நல்லூர் நகரைக் கட்டியவன் என வைபவமாலை குறிப்பிடுகிறது. இவன் சிங்கைநகர் என அழைக்கப்பட்ட இன்னொரு இடத்திலிருந்தே ஆண்டான் என்றும், 15 ஆம் நூற்றாண்டிலேயே நல்லூர் கட்டப்பட்டது என்பதும் சிலருடைய கருத்து. எனினும் நல்லூர் மட்டுமே ஆரியச்சக்கரவர்த்திகளுடைய தலைநகராக அமைந்திருந்ததென்பதே இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாகும்.

நன்றி: விக்கிபீடியா இணையம்

Sharing is caring!

Add your review

12345