கெருடாவில் தரைக்கீழ்க்குகை

சுண்ணக்கற்பார் நிலவுருவங்களிலே தரைக்கீழ் அமைந்த குகைகளும் ஒன்றாகும். யாழ்ப்பாணக்குடாநாடு சுண்ணக்கற்பாரினால் ஆக்கப்பட்டது. மயோசீன் காலத்து பாறைப் படையமைப்பினை அது கொண்டுள்ளது. மாரிகாலங்களில் மேற்பரப்பில் மழையாகக் கிடைக்கும் நீர் பாறைமூட்டுக்கள் வழியாக கீழிறங்கி, தரைக்கீழ் குகைகள் ஊடாக அடிப்படையிலே பாய்ந்து சென்று கடலில் கலப்பதனைக் காணலாம். வல்வெட்டித்துறைக்கும் பொலிகண்டிகுமிடையே காணப்படும் ஒரு கிராமத்தின் பெயரே அவ்வாறு தரைக்குக் கீழாக ஓடிவரும் நீர் ஊற்றுக்களை ஞாபகமூட்டுகின்றது. கடற்கரையிலே மலைமேலிருந்து கீழேவிழும் சிற்றருவிகள் போன்று நீர் வீழ்ந்து கொண்டிருப்பதனை மாரிகாலங்களில் இங்கு காணலாம். இக்கிராமத்தின் பெயர் ‘ஊறணி’ என்பதாகும். ஊறணிக் கிராமம் பெயர் சூட்டப்பட்டமைக்கும் குடாநாட்டின் தரைக்கீழ் நீர் கடலோடு வந்து சேருகின்ற தொழிற்பாட்டின் பெரும் பரப்பிற்கும் இடையே இக்கிராமம் அமைந்திருப்பதே காரணமாக அமைந்தது. ஊர் சக தண்ணி என்பது ஊர்தணி ஆகிப்பின் ஊறணி என இன்று மருவி வழங்குகின்றது எனலாம். ஊர் சக வாரி சமன் ஊதாரி போன்று, ஊர் சக தண்ணி ஊறணியாயிற்று.
தொல்லியல் ரீதியில் ஊறணி என்ற கிராமம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அக்கிராமத்தின் அருகில் பொலிகண்டி கந்தவனக்கடவை அமைந்திருப்பது அப்பிரதேசத்தின் வரலாற்று முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுகின்றது எனலாம். தீவகப்பகுதியில் காட்டி எவ்வாறு நன்னீர்ப்பிரதேசமாக விளங்க பெருங்கற்கால குடியிருப்புக்களுக்குரிய தொல்லியல் மையமாக விளங்கியதோ அதே போன்றே ஊறணிக் கிராமமும் விளங்குகின்றது. ஊறணி ஒரு பெருங்கற்காலக் குடியிருப்பு என்பதில் எள்ளளவிலும் சந்தேகம் எழமுடியாது. அவ்வகையில் கெருடாவில் தரைக்கீழ்க்குகைகளும் பெருங்கற்கால சவஅடக்க அறைகளைக் கொண்டிருக்கின்ற வகையில் அவை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
இச்சுரங்கத்திற்கும் நல்லூர் மந்திரி மனைக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகின்றது.

Sharing is caring!

Add your review

12345