கே. எஸ். ஆனந்தன்

கே. எஸ். ஆனந்தன்

புனைகதை, நாடகம், ஆய்வுக்கட்டுரை, இலக்கிய விமர்சனம் ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்க ஜனரஞ்சக எழுத்தாளரான கார்த்திகேசு சச்சிதானந்தம் அவர்கள் கே. எஸ். ஆனந்தன் எனும் புனை பெயரில் ஈழத்து இலக்கிய துறையில் நுழைந்தார். ஆரம்பத்தில் இவரது எழுத்தாக்கங்களை பத்திரிகை பிரசுரம் செய்யப் பின்னடித்த போதும் பின்னர் இவரது நாவல்களை தேடிப்பிரசுரிக்கும் அளவுக்கு முன்வந்தன. கோண்டாவில் வடமேற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட கே. எஸ். ஆனந்தன் இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடியை வாழ்விடமாகக் கொண்டுள்ளார். இவரின் பத்து நாவல்கள் இதுவரை நூலுருப் பெற்றுள்ளன. இதில் ”தீக்குள் விரலை வைத்தால்” என்னும் வீரகேசரிப் பிரசுரமாக வந்த நாவல் நூல் இவரின் எழுத்தாற்றலை ஈழவாசகர்களிடையே நிலைநிறுத்தியது. இரண்டு பதிப்புகளாக வெளியிடும் அளவுக்கு பிரபல்யம் பெற்றது. கே. எஸ். ஆனந்தன் பற்றி இவரை இத்துறையில் ஊக்குவித்த கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்) அவர்கள் குறிப்பிடுகையில் ”பரந்துபட்ட வாசகர் பரப்பைக் கொண்ட எழுத்தாளர்” எனக் கூறியுள்ளார். மேலும் இவரை இத்துறையில் எஸ். டி. சிவநாயகம், புலவர் பார்வதிநாதசிவம் ஆகியோர் ஊக்குவித்துள்ளனர்.

கே. எஸ். ஆனந்தன் அவர்களின் சிறுவர் இலக்கியத்திற்காக யாழ் இலக்கிய வட்டம் இவரைக் கௌரவித்துள்ளது. நாடகத்திற்காக அகில இலங்கை சைவப் புலவர் சங்கம் இவருக்கு தங்கப் பதக்கம் பரிசளித்தது. இருபத்து நான்கு நாவல்களை எழுதியுள்ள இவரின் மேலும் ஐந்து நூல்கள் இவ்வாண்டில் (2009) வெளிவரவுள்ளன. ஒன்பது நாடகங்களை மேடையேற்றியுள்ள கே. எஸ். ஆனந்தன், தமிழக முன்னனிப் பத்திரிகைகளான கல்கி, கலைமகள், ஆனந்தவிகடன், குமுதம் முதலாக ஈழத்துச் சஞ்சிகைகள் பத்திரிகைகளிலும் ஆக்கங்களை வெளியிட்டுள்ளார்.

ஆரம்பக் கல்வியை இணுவில் சைவ மகாஜனா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியிலும், கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் கற்று சித்தியடைந்த இவர் பட்டப்படிப்பை வெளிவாரியாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்றார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கிடைத்த வேலையை விட்டு விவசாயத்தை தொழிலாகக் கொண்ட இவர் சமூகப் பரப்பில் வாழுகின்ற மக்களின் உணர்வுகளை தன் ஒவ்வொரு நாவலிலும் வெளிப்படுத்தியுள்ளார்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

Add your review

12345