கொக்கான் வெட்டுதல் – கிராமத்து விளையாட்டு

கொக்கான் வெட்டுதல் - கிராமத்து விளையாட்டுகொக்கான் வெட்டுதல் – கிராமத்து விளையாட்டு ஆனது பாடசாலையில் படிக்கும் காலங்களில் எமக்குப் பிடித்தமான விளையாட்டுக்களில் கொக்கான் வெட்டுதல் முக்கிய விளையாட்டாக இருந்தது. இதைக் கூடுதலாகப் பெண்கள்தான் விளையாடுவார்கள். மாங்கொட்டை போடுதல், சிப்பி, ஏரோப்பிளேன், இது தவிர கிளித்தட்டு, கெந்திப் பிடித்தல், றவுண்டெஸ்(Rounders) இவைகளும் எமது பாடசாலைகளில் முக்கிய இடத்தை வகித்திருந்தன. இவையெல்லாமே உடலை அசைத்து விளையாடும் விளையாட்டுக்கள். ஆனால் கொக்கான் வெட்டுதல் அப்படியல்ல. அது இருந்து விளையாடும் விளையாட்டு. ஏதாவதொரு விறாந்தை நுனியில் இருந்துதான் இதை விளையாடுவோம். சீமெந்து விறாந்தை இவ்விளையாட்டுக்கு உகந்தது. விறாந்தை இல்லாவிட்டால் டோங்கு(மார்பிள்) மேலெழும்பாது. (bump பண்ணாது).

கொக்கான் வெட்டுவதற்கு ஒரு டோங்கும்(மார்பிள்), இரு சிறிய கற்களும் அல்லது ஒரு டோங்கும், நான்கு சிறிய கற்களும் வேண்டும். அனேகமாக எங்கள் எல்லோரதும் பாடசாலை சூட்கேசில் ஒரு டோங்கு, ஒரு சிற்பி, ஒரு நன்கு சப்பையான காய்ந்த மாங்கொட்டை என்பன இருக்கும். சூட்கேஸ் இல்லாதவர்கள் கொம்பாஸ் பெட்டிக்குள் வைத்திருப்பார்கள்.

வீட்டிலும் எப்போதாவது நண்பிகள் ஒன்று கூடும் போது கொக்கான் வெட்டி விளையாடுவோம். ஆனால் இவ்விளையாட்டை வீடுகளுக்குள் யாரும் வரவேற்பதில்லை. கொக்கான் வெட்டினால் வீட்டுக்குத் தரித்திரம் பிடிக்கும் எனப் பெரியவர்கள் சொல்வார்கள். “ஏன் தரித்திரம் பிடிக்கும்?” என்ற எனது கேள்விக்கு யாருமே இதுவரை பதில் சொல்லவில்லை.
ஆனால் இவ்வளவு தூரம் எமக்குப் பிடித்தமான விளையாட்டு உலகளவில் பலருக்கும் தெரியாமல் இருப்பதுதான் ஏனென்று தெரியவில்லை. அமெரிக்காவைப் பார்த்தால் கண்ட கண்ட விளையாட்டுக்களை எல்லாம் உலக வெற்றிக் கிண்ண விளையாட்டு என்று அறிவித்துப் போட்டியாக வைத்து விடுவார்கள். எங்கள் விளையாட்டுக்களில் இந்த கொக்கான் போல் உலகளாவாத எத்தனையோ விளையாட்டுக்கள் இருக்கின்றன.

இந்தக் கொக்கானை மட்டும் உலக வெற்றிக் கிண்ணப் போட்டியாக்கி இருந்தால் எங்கள் பெண்களில் எத்தனை பேர் சம்பியன் ஆகியிருப்பார்கள்.

 

ஒரே வடிமான கற்களை எடுத்து, நிலத்தில் கைக்கெட்டும் தூரம் வரை வீசி ஒரு கல்லை மேலெறிந்து கீழேயுள்ள கல்லை பொறுக்கி மேலிருந்து வரும் கல்லை இத்துடன் ஏந்த வேண்டும். இதில் பலவகை உண்டு. 5,7,12,20 என  ஒவ்வொரு விளையாட்டுக்கும் கற்களின் எண்ணிக்கை வேறுபடும். ஐந்து ஐந்து  கல்லில் விளையாடுவதாயின் ஒரு ஆட்டம் அமைவது ஒரு கல்லை மேலெறிந்து ஒவ்வொரு கல்லையும் தனித்தனி எடுத்து ஏந்துதல் (ஓர்வி), அடுத்ததாக ஒரு தடைவ 1 கல்லும் அடுத்ததில் 3 கல்லையும் எடுத்தல் மூவீ அடுத்ததாக, மேலே எறிந்து நான்கு கல்லையும் வாரிக் கொண்டு மேற்கல்லைப் பிடித்து திரும்பவும் கல்லை எறிந்து நான்கு கல்லையும் கீழே வைத்து ஏந்தி, பின்னர் எறிந்து, வைத்த நான்கையும் வாரி மேற்கல்லை ஏந்தி ஒரு பிழையும் விடாமல் எடுத்தல் 1 ஆட்டம் வெற்றி. இதே பாங்கில் 7 கல் விளையாட்டும் உண்டு. இத்தனை கல்லைப் பொறுக்கும் போது மறுகல் அனுங்கக் கூடாது. பொறுக்கல், கொத்தல், இறாஞ்சல், சூழற்றல் எனப் பல நுட்பங்கள் உண்டு. இத்தனை கல்லைப் பொறுக்குவதற்கு எத்தனை உயரத்துக்கு கல்லை எறிய வேண்டும் எனும் மதிப்பீடு, நிலத்தில் கல்லை வீசுவதும் ஒரு கலை, நெருக்கமாக வீசினால் கல்லை அனுங்காமல் பொறுக்குவது கஷ்டம் பரந்து வீசினால் விநாடிக்குள் பொறுக்குவது இயலாது. பொறுக்கிய கற்கள் நழுவி விழும் சந்தர்ப்பமும் உண்டு. அதனால் ஆட்டம் இழப்பர். 4 பேர் ஆடலாம்.
மூளைக்குப் பயிற்சி, கண்களுக்குப் பயிற்சி, அவதான சக்தி விரிவு, கைவிரல்களுக்கு நுட்பம் தேரும் பயிற்சி, நரம்பு பயிற்சி, சிறு தொழில்களையும் லாவகமாகச் செய்யும் பயிற்சி, விரல்களுக்கு சுறுசுறுப்புப் பயிற்சி, நிதானம், உத்தேசப் பயிற்சி, மகிழ்ச்சி எனப் பலவிதமான நன்மை, கற்களின் ஓசை காதுக்கு இனிமையுங் கூட.

By -‘[googleplusauthor]’

நன்றி – பகுதி தகவல்- சந்திரவதனா

 

Sharing is caring!

Add your review

12345