கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை
” இளமையிற் கல்‘ எனும் மகுட வாசகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையினை நிறுவிய செல்லையா உபாத்தியாரே அதிபராகவும் ஆசிரியராகவும் செவ்வனே சேவையாற்றி இவ் ஊர்ப்பிள்ளைகளுக்கு மட்டுமன்றி அயலூர்ப் பிள்ளைகளுக்கும் அறிவுப் பசியினை மட்டுமன்றி வயிற்றுப் பசியினையும் போக்கிவந்தார்.
இப் பாடசாலைன் தீவிர வளர்ச்சியை கண்ட அரசு 1960 ஆம் ஆண்டு இப்பாடசாலையினைப் பொறுப்பேற்றது. பாடசாலையினை பொறுப்பேற்ற அரசு இப்பாடசாலையினை ஆரம்ப நிலை, இடைநிலை, உயர் வகுப்புக்கள் கொண்ட 1 ஏபி பாடசாலையாகத் தரம் உயர்த்தியிருந்தது.
காலப்போக்கில் அரசாங்கம் கொண்டுவந்த கல்விச் சீர்திருத்தங்களின் காரணமாக ஆரம்பப் பிரிவினை மூடிவிடத் தீர்மானித்தது. 1975 ஆம் ஆண்டு முதலாம் வகுப்பு அனுமதி நிறுத்தப்பட்டது. இதனால், விசனமடைந்த கொக்குவில் மத்தி வாழ் மக்கள் அப்போதைய நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் சி.அருளம்பலம் ஊடாக இப்பாடசாலையின் முக்கியத்துவத்தினை எடுத்துக் கூறியதன் பலனாக கல்வித்திணைக்கத்தின் அனுமதியுடன் 1976.01.19 அன்று கொக்குவில் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மா. மகாதேவா வால் “ஆரம்பக் கலவன் பாடசாலை’ எனும் புதிய நாமத்துடன் தனித்துவமாகப் பெருமையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப் பாடசாலையின் முதல் அதிபராக செ. நாகலிங்கம் என்பவர் நியமிக்கப்பட்டார். இவ் அதிபர் தமது பணிகளை சேவை மனப்பாங்குடனும் அர்ப்பணிப்புடனும் செவ்வனே ஆற்றிவந்தார். அவ்வேளையில், இப் பாடசாலை தரம் 1 முதல் தரம் 5 வரையாக ஒவ்வொரு தரமும் 2 பிரிவுகளைக் கொண்ட வகுப்புக்களாக இருந்தது. இப்படியாக தமது கடமையை சரிவரச் செய்துவந்த அதிபர் செ. நாகலிங்கம் ஓய்வுபெற்றார்.
அவரைத் தொடர்ந்து அதிபராக எ. குருசாமி என்பவர் பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து அதிபர்களாக திருமதி. கணபதிப்பிள்ளை என்பவரும் சேவையாற்றியிருந்தார். இவர்களின் பின் 1985.03.15 ஆம் திகதி த.அழகரத்தினம் அதிபராக பதவியேற்றார். இவ் அதிபரின் காலப் பகுதியிலேயே இப்பாடசாலைக்கு பெருமளவு மாணவர்கள் படை எடுத்ததனால் வகுப்பறைகள் மாணவர்களின் தேவைக்குப் போதாததன் காரணத்தினால் ஒவ்வொரு தரத்திலும் 3 பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு மொத்தம் 15 வகுப்புக்கள் கல்வித்திணைக்களத்தின் அனுமதியுடன் பெருமிதத்துடன் ஆரம்பித்துவைக்கப்பட்டன. இக் காலப்பகுதியிலேயே பாடசாலையின் கல்வி முன்னேற்றம் மட்டுமன்றிஇ பௌதீக வளங்களும் அதிகரிக்கப்பட்டன.
மேலும், 2000 மாம் ஆண்டு 5 ஆம் ஆண்டு புலைமைப் பரிசில் பரீட்சையில் ந. நொசாந்தன் என்ற மாணவன் அகில இலங்கையில் முதல் 10 மாணவர்களுள் ஒருவராக முதன்மைப் புள்ளியினைப்பெற்மை பாடசாலையின் வளர்ச்சிக்கு மேலுமொரு எடுத்துக்காட்டாகும்.
இப்படியாக பாடசாலையின் வளர்ச்சிக்காக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து அர்ப்பணிப்புக்களைச் செய்த அதிபர் ஓய்வுபெற்றுச் சென்றார். பாடசாலையின் வரலாற்றில் அதிபர் த. அழகரத்தினம் அவர்களது காலம் பாடசாலைக்கு ஓர் பொற்காலம் என்றால் அது மிகையாகாது. இவரது சேவைக்காலத்திலேயே பாடசாலை தேசிய ரீதியில் தனக்கு என ஓர் முத்திரையினைப் பதித்தது என்பதுதான் உண்மை.
இவரைத் தொடர்ந்து பாடசாலையின் அதிபராக 2001.03.21 அன்று சி. ஞானேஸ்வரன் என்பவர் குறுகிய காலம் (2 வருடங்கள்) அதிபராக இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றார். இவரது காலத்தில் பாடசாலையின் கல்வி வளர்ச்சியடைந்ததுடன் இப்பாடசாலையின் பழைய மாணவன் தவராஜா என்பவரின் உதவியுடன் பன்முகப்படுத்தப்பட்ட அரச நிதியிலிருந்து 5 வகுப்பறைகள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இவ் அதிபர் 2003.02.28 ஆம் திகதி இடமாற்றம் செய்யப்பட்டார். இவரது இடமாற்றத்தைத் தொடர்ந்து இப்பாடசாலையின் பழைய மாணவியும் ஆங்கில ஆசிரியையுமான திருமதி செ. சகாதேவன் அவர்கள் அதிபராகக் கடமையேற்றதுடன் பூர்த்திசெய்யப்படாமல் இருந்த கட்டடத் தொகுதியினை தன்னுடைய அயராத முயற்சி, சிறந்த பேச்சாற்றல் காரணமாக நல்லூர் பிரதேச சபைத் தலைவர் மணிபல்லவன் அவர்களின் உதவியுடன் பூர்த்தி செய்தார்.
இப்புதிய தற்போதைய அதிபரின் அதிதீவிர முயற்சியின் பயனாக கற்றல் கற்பித்தல் செயற்பாடும் அபிவிருத்தி அடைந்ததுடன், இணைப் பாடவிதானச் செயற்பாடுகளின் அபிவிருத்திகள் மேம்பட்டுச் செல்கின்ற நிலையினை கொக்குவில் பகுதி மக்கள் மட்டுமன்றி, பல்வேறு இடங்களிலுள்ள மாணவர்களும் கவரப்பட்டமையினால் பாடசாலையின் அனுமதிக்கான விண்ணப்பங்கள் வருடாவருடம் பல நூற்றுக்கணக்கில் அதிகரித்தன. இதற்கு எல்லாவற்றுக்கும் மூலகாரணம் தற்போதைய அதிபரும் ஆசிரியர்களும் தான் என்றால் அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. இம்மாணவ அனுமதிக்கான இட நெருக்கடியினைக்குறைக்க பாடசாலயின் பழைய மாணவர் நம் சமூகப் புரவலலருமாகிய மாணிக்கம் சுப்பிரமணியம் அவர்களின் உதவியினை பாடசாலை சமூகம் நாடிச் சென்றவேளையில் எதுவித தயக்கமும் இன்றி பெருமனதோடு 140 X 30 அடி பரப்பரவு கொண்ட மண்டபத்தினை அமைத்துத் தந்தார். இம்மண்டபமே “சுப்பிரமணிய மாலதி” மண்டபம் என்னும் நாமத்துடன் உயர்ந்து நிற்கின்றது.
இம் மண்டபத்தில் மாணவச் சிறார்களின் நிகழ்வுகளைத் திறம்பட நடத்துவதற்காக பெற்றோர் ஒருவரின் உதவியுடன் பொது அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்பாடசாலையானது இரண்டு கட்டிடத்தொகுதிகளாக இயங்க ஆரம்பித்தது. இக்கட்டிடத் தொகுதிகளுக்கு தனித்தனியான மின் இணைப்புஇ குடிநீர் வசதிகள், தொலைபேசி வசதிகள் என்பன தனித்தனியா மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்திலுள்ள தலைசிறந்த பாடசாலைகள் முதல் மூன்றில் ஒரு பாடசாலையாகும். இப்பாடசாலையின் வளாகத் தேவைகளும் குறிப்பிட்ட அளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை இங்கு விசேட அம்சமாகும்.தற்போதைய புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கு அமைவாக கற்றல் செயற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் அதேவேளை சம காலத்தில் பௌதீக வள அபிவிருத்தியினையும் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளமை இப்பாடசாலையின் முக்கிய சிறப்பம்சமாகும்.
இதற்கெல்லாம் காரணம் பாடசாலையின் தற்போதைய இவ் அதிபராகும். மாணவச் சிறார்களால் மடம் எனவும் பெற்றோர்களால் “அம்மா” எனவும் அன்பாக அழைக்கப்படும் இவ் அதிபர் வீட்டிற்கு செல்வதில்லையா என நானும் பெற்றோர்கள் பலரும் எண்ணியுள்ள பல சந்தர்ப்பங்கள் உண்டு. காரணம் எந்த நேரம் சென்றாலும் பாடசாலையில் அதிபரைச் சந்திக்க முடியும் . எப்போதுமே அவருடைய சிந்தனையெல்லாம் பாடசாலையின் வளர்ச்சி, அபிவிருத்தி பற்றியே இருக்கும் என்பது பெற்றோர்களின் கூற்றுக்களில் இருந்து அறியக்கூடியதாகவுள்ளது.
மேலும்பாடசாலையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய நிலையில் முதல் பாடசாலைகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டு தேசிய கல்வி ஆணைக்குழுவின் பாராட்டும் பெற்றுள்ளது. இதன் மூலம் அனைத்துப் பாடசாலைகள், கல்வித்திணைக்களம் என்பனவற்றின் பார்வை எல்லாம் இக் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை இது திரும்பியுள்ளது என்பதனை அனைவரும் ஏற்கத்தான் வேண்டும்.
இப்படியாக பல்வேறு சாதனைகளைப் படைத்துவரும் பாடசாலையில் நூல் நிலையம், விளையாட்டு மைதானம் இல்லை என்பது மிகவும் வேதனை தரக்கூடிய விடையமாகக் காணப்படுகின்றது. ஆனால் அதிபர் இவ் விடங்களை கருத்திற் கொண்டு தன்னுடைய சேவைக் காலத்திலேயே தான் இப்பாடசாலைக்கு ஓர் ஒழுங்கான நூல் நிலையமும் விளையாட்டு மைதானத்தினையும் அமைத்துத் தரத் தேவையான கடும் முயற்சிகளை எடுத்துவருவதனை அவதானிக்க முடிகின்றது.