கொட்டடி அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம்

1830ஆம் ஆண்டளவில் இயக்கச்சியில் இருந்து வந்த ஆறுமுகம் சின்னப்புவால் கொட்டடியிலுள்ள பனையடைப்பு மத்தியில் ஒரு அரசமடத்தடியில் திரிசூலம் வைத்து வழிபட்டு வரப்பட்டது. அதன்பின் 1940ம் ஆண்டயவில் மூலஸ்தான அறையில் வைரவரைப் பிரதிஷ்டை செய்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. வைகாசி சித்திரைப் பொங்கலின் போது மூன்று வளர்ந்து நேர்ந்து பறை ஒலி சகிதம் மடைப்பண்டம் எடுத்து கோவில் முன்றலில் பொங்கி மடைபரவிப் படைத்து வெளிமடை எறிவர். இவ் ஆலயத்தின் தென்புறத்தில் மடைப்பள்ளியும் களஞ்சிய அறையும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் பொங்கல் திருநாளன்று பல நூற்றுக்கணக்கான பத்தர்கள் பொங்கிப் படைத்து வழிபட்டனர். பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலையில் பஜனையும் பொங்கலும் வெளிமடை எறிதலும் நடைபெற்று வந்தன. பிற்காலத்தில் வருடாந்த பொங்கல் தினத்தில் அலங்கார உச்சவமும் வெகுவிமரிசையாக நடைபெற்று வந்தது. இத்திருவிழாவில் 1955ஆம் ஆண்டு அகில உலகப்புகழ் நாதசுரமேதை ரி.கே. இராசரத்தினப்பிள்ளை இந்தியாவில் இருந்து வருகைதந்து இன்னிசைமழை பொழிந்தார். சிகரம் கப்பறம் மின்சாரதீப அலங்காரம் மத்தாப்பு வாணவேடிக்கை போன்றவையும் கோயில் முன்றலில் மேடை அமைத்து தவில் கச்சேரி வில்லுப்பாட்டு சதிர்க்கச்சேரி போன்றவையும் நடைபெற்றன. வைரவப் பெருமான் சப்பறத்தில் வீதிவலம் வருவார். இவ்வலங்காரத் திருவிழாவைக்கண்டு களிக்க அயற்கிராமங்களிலிருந்தும் பல நூற்றுக்கணக்கான மக்கள் வந்து கூடுவர். கண்டாமணியும் மணிக்கோபுரமும் 1960ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. இராணுவ நடவடிக்கை காரணமாக ஊர்மக்கள் இடம்பெயர்ந்தபோது இக்கண்டாமணி காணாமற்போய்விட்டது. 1996ஆம் ஆண்டு ஊர்மக்கள் மீளக்குடியமர வந்தபோது திரு.க.இராசையா தலமையில் கோவிலை சுற்றிவர இருந்த பத்தைகள் வெட்டி துப்பரவு செய்து பூசைகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. 2002ம் ஆண்டு திரு.க.இராசையா பூசகர் தலைமையில் ஒரு பரிபாலனசபை அமைக்கப்பட்டது. அவ் ஆண்டு தொலைந்த கண்டாமணிக்குப் பதிலாகப் புதியதொரு கண்டாமணி கொழுப்பிலிருந்து தருவித்து நிறுத்தப்பட்டது. இக்காலகட்டத்தில் புவனேஸ்வரி அம்பாள் அறநெறிப் பாடசாலை வகுப்புக்கள் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் திரு.ந.கதிரித்தம்பி ஆசிரியர் தலைமையில் இக்கோயில் முன் மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. புவனேஸ்வரி அம்பாள் சிறுவர் பாடசாலை வருடாந்த விழா திருவாசகம் முற்றும் ஓதல் போன்றவையும் இம்மண்டபத்திலேயே நடைபெற்று வருகின்றது. இத்திருத்தலத்தை விரிவுபடுத்தி அமைக்கும் பொருட்டு 2005ஆம் ஆண்டு தை மாதம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டுக் கோவில் திருப்பணி வேலைகள் துரிதகதியில் நடைபெற்று வந்தன.

—-நன்றி—–
1.திரு. க. அருணாசலம் – இடைக்காடு
2.திரு. வை. தம்பு – இடைக்காடு
3.திரு. வே. சுவாமிநாதன் – இடைக்காடு
4.திருமதி. பொ. மகாதேவா – இடைக்காடு

Sharing is caring!

Add your review

12345