கொல்லங்கலட்டி வீரகத்திப் பிள்ளையார் கோவில்

யாழ்ப்பாணத்தின் வடபாலுள்ள மாவிட்டபுரத்தில் கொல்லங்கலட்டி என்னுங் கிராமத்தில் இக் கோயில் அமைந்துள்ளது. கொல்லங்கலட்டியிலே ஒவ்வொரு வளவிலும் வெற்றிலைக் கொடிகள் நிறைந்திருக்கும். வெற்றிலைக் கொழுந்து நாளுக்கு நடும் போது தோட்டத்தில் பிள்ளையார் பூசை செய்த பின்பே நடுகை தொடங்கும். ஆண்டு தோறும் வெற்றிலைத் தோட்டத்தில் விநாயகருக்குப் பொங்கல் மடையும் நடைபெறும். வுpநாயகர் வழிபாடு சிறப்பாக நடைபெறும் இப்பிரதேசத்திலே வீரகத்திப் பிள்ளையார் கோவில் அமைந்தமை வியப்பன்று.

இக்கோவிலின் தொடக்க வரலாறு மிகப்பழைமையானது. கோவில் அருகில் கேணிகளும் அமைக்கப்பட்டுள்ளன. எட்டாம் நூற்றாண்டளவில் சோழகுல மன்னனான திசை உக்கிரச் சோழன் மகள் தனது குன்மநோயும் குதிரை முகமும் மாறத் தீர்த்த யாத்திரை செய்யும் போது ஈழ நாட்டின் வடக்கே உள்ள கீரிமலைத் தீர்த்தத்திற்கும் வந்தாள். விநாயகப்பெருமானை முதலில் வழிபடாமையால் அவள் நோய் தீரவில்லை. எனவே அதற்குப் பிராயச்சித்தமாக ஏழு விநாயக விக்கிரங்களைப் பிரதிட்டை செய்வேனென நினைந்து முதலில் கொல்லங்கலட்டியில் பிரதிட்டை செய்தாள். பின்னர் வரத்தலம் (பன்னாலை) அளகொல்லை, கும்பளாவளை, பெருமாக்கடலை (அளவெட்டி) ஆலங்குழாய், கல்வளை ஆகிய இடங்களில் பிரதிட்டை செய்தாள்.
கொல்லங்கலட்டிக் கோவில் குமாரவேலுவின் மகன் பொன்னையாவால் அமைக்கப்பட்டு வழிபடப் பெற்று வந்தது. 1929 ஆம் வருடம் நிறைவான வழிபாட்டுத்தலமாயிற்று. 1968 ல் வெளியிடப்பட்ட சிறப்புமலர் இக் கோயில் பற்றிய பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது. நவாலியூர் க. சோமசுந்தரப்புலவர் வீரகத்திவிநாயகருக்குத் திருவூஞ்சல் பாடியுள்ளார். விநாயகருக்குரிய நிவேதனப் பொருட்களைப் பாடலிலே குறிப்பிட்டுள்ளார். பருப்பு, நறுஞ்சர்க்கரை, பால், தேன், பாசவல், தினையிடி, பழம், பாகு, கருப்புமுறி, முறுக்கு, வடை, சுண்டும் கடலை, பொரிமோதகம், அடைகாய், இளநீர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சைவத்திரு. பொ. அம்பலவாணக்குருக்கள் வீரகத்தி விநாயகர் மீது சில வெண்பாக்கள் பாடியுள்ளார். அவர் பாடலில் மடைப் பொருட்கள் வருமாறு.

“வெல்லங் கலந்திரு மெட்பொரி மோதகம் வெண்கரும்பும்
கல்லுங் கிழங்கவல் கற்கண்டு பலாப்பங் காய் கனியும்
வெல்லங்குசந்தந்த வெம்பாசம் மேற்கொள்வியன் கரத்துக்
கொல்லங்கலட்டி இறைவற் களித்தருள் கூடுதியே.”

Sharing is caring!

Add your review

12345