கோப்பாய் சங்கிலியன் கோட்டை

எனினும் அண்மைக் காலங்களில் இடிக்கப்பட்டு அவ் இடங்களில் புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எஞ்சியிருந்த கட்டிடப் பகுதிகள் கூட இடிக்கப்பட்டு வேறு தேவைகளிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ் அரணின் சுற்றாடலில் கிணறு வெட்டிய போதும் வீடு கட்ட அத்திவாரம் வெட்டிய போதும் பழமையான கலைச்சின்னங்கள் வெளிவந்ததாக அறிய முடிகின்றது. அண்மையில் இவ் இடத்தில் தொல்லியல் ஆய்வை மேற்கொண்ட கலாநிதி இரகுபதி இங்கு பரவலாகக் கிடைத்த மட்பாண்டங்களை ஆய்வு செய்து அவற்றின் காலம் யாழ்ப்பாணம் அரசு தோன்றுவதற்கு முற்பட்டதாக இருக்கலாம் எனக் கருத்தத் தெரிவித்துள்ளார். (ரகுபதி 1987) இக் காலக்கணிப்பு யாழ்ப்பாண அரசு தோன்ற முன்னரே இவ் இடத்தில் செறிவான மக்கள் குடியிருப்புக்கள் இருந்ததைக் காட்டுகிறது.
கோப்பாயை யாழ்ப்பாண மன்னர்கள் தமது நடவடிக்கைகளின் முக்கிய ஒரு மையமாக தெரிவு செய்ததற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நல்லூர் இராசதானியின் கடற்கரைப் பட்டினமாக யாழ்ப்பாணம் விளங்கினாலும் இதன் பாதுகாப்பிற்காகப் பண்ணைத்துறை, கொழும்புத்துறை, கோப்பாய், செம்மணி போன்ற இடங்களில் அரண்களை அமைத்தனர் எனக் கூறப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் போரத்துக்கேயருக்கும் யாழ்ப்பண மன்னர்களுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் யாழ்ப்பாண மன்னர்களுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் யாழ்ப்பாண மன்னர்கள் கோப்பாயில் உள்ள கோட்டையைத் தமது முக்கிய பாதுகாப்பு அரண்களாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக சங்கிலி மன்னன் காலத்தில் போர்த்துக்கேயர் மீண்டும் படையெடுக்கலாம் என அஞ்சித் தமது படையின் ஒரு பிரிவை நல்லூரிலும் இன்னொரு பிரிவை கோப்பாயிலும் வைத்திருந்ததாகத் தெரிகிறது.
கோப்பாயை மையமாகத் தெரிவு செய்தமைக்கும் முக்கிய பாதுகாப்பு மையமாகத் தெரிவு செய்தமைக்கும் அதன் அமைவிடம் ஒரு முக்கிய காரணமாகும். தற்போது கோட்டையின் அழிபாடுகள் காணப்படும் இடம் பெரு நிலப்பரப்பிலிருந்து தென்மராட்சி ஊடாக யாழ்ப்பாண அரசின் மீது மேற்கொள்ளப்படும் படையெடுப்புக்களைத் தடுப்பதற்கு முக்கிய மையமாகக் காணப்படுகிறது. இதற்கு கோப்பாய்க்கும் தென்மராட்சிக்கும் இடைப்பட்ட சிறு கடல் பெருந்துணையாக இருந்தது. ( இராசநாயகம் 1926) 12ஆம் நூற்றாண்டில் பொலநறுவையில் ஆட்சி செய்த முதலாம் பராக்கிரமபாகு கோப்பாய்க்கு எதிரேயுள்ள மட்டுவழல் என்னும் இடத்தில் தன்படைகளை நிறுத்தி வைத்திருந்தான். இதே காலப்பகுதிக்குரிய சோழர் கல்வெட்டுக்கள் கோப்பாய்க்கு நேரெதிரே அமைந்த மட்டுவில் என்னும் இடத்தைப்பற்றி அங்கிருந்த படைவீரர்களையும் யானைகளையும் சிறைப்பிடித்ததாக கூறுகின்றன.