கோப்பாய் பிரதேச செயலகம்

கோப்பாய் பிரதேச செயலகம்மணற்றி எனப்படும் மணலூரை அந்தகக்கவி வீரராகவன் யாழ் இசைபாடி பரிசாகப்பெற்றன். இதனால் இம்மணல் ஊர் யாழ்ப்பாணம் எனப்பெயர் பெற்றது. யாழ்ப்பாணம் முன்னர் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி என மூன்று பிரிவுகளாகவே பிரிக்கப்பட்டிருந்தது. விலகம் என்பது மணல் ஊர் என்றும் இது மருவி வலிகாமம் என வந்ததாக ஒருசாரரும் வலி – மண், கம -ஊர் வலிகம, மருவி வலிகாமம் என வந்ததாக இன்னொருசாராரும் கூறுவர்

வலிகாமம் என்னும் தனிப்பெரும் பிரிவு நிருவாக கட்டமைப்புகளை பரந்துபடுத்தும் நோக்கில் வலிகாமம் கிழக்கு வலிகாமம் வடக்கு, வலிகாமம் மேற்கு, வலிகாமம் தெற்கு, வலிகாமம் தென் மேற்கு என ஐந்து நிருவாகப் பிரிவுகளாக காலக்கிரமத்தில் பிரிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரிவின் கிழக்கு எல்லையாக உவர் நீரேரியும் வடக்கு எல்லையாக வடமராட்சி தெற்கு பிரதேச செயலக பிரிவும், மேற்கு எல்லையாக நல்லூர், உடுவில் பிரதேச செயலக பிரிவுகளும், தெற்கு எல்லையாக நல்லூர் பிரதேச பிரிவும் உள்ளன.

இலங்கை சுதந்திரமடைந்த 1948 இன் பின் உள்ள நிருவாக முறை ஆங்கில ஆட்சியாளர் நிருவாக முறையே அடிப்படையாக கொண்டிருந்தது. இதில் பிரதேசங்கள் தோறும் மணியகாரர்களையும் கிராமங்கள் தோறும் கிராமத்தலைவர்காரர்களையும் நியமித்து நிதிதிரட்டலையும் நிருவாகத்தையும் செயற்படுத்தினார்கள். இம்மணியகாரர்கள், கிராமத்தலைவர்காரர்ககள், நியமனங்கள் குறித்த பிரதேசத்தில் உள்ள செல்வாக்கான தலைமைத்துவ பண்புகளை கொண்ட குடும்பங்களில் இருந்தே நியமிக்கப்பட்டன.

வலிகாமம் கிழக்கின் ஆரம்ப சரித்திரத்தை எடுத்து நோக்கும் போது முதலாவது மணியகாரராக வேலுப்பிள்ளை என்பவரும் அதைத்தொடர்ந்து தம்பிப்பிள்ளை என்பவரும் கடமையாற்றியதாக அறியமுடிகிறது. பின்னர் மணியகாரர் என்ற பெயர் பிரிவுக்காரியாதிகாரி என மாற்றம் செய்யப்பட்டு நிருவாகக் கட்டமைப்பு இயங்கியது.

இப்பிரிவுக் காரியாதிகாரிகள் முன்னையரைப் போல் குடும்ப செல்வாக்கு பரம்பரைப் பெருமை அடிப்படையில் அல்லாது C.A.S என்னும் இலங்கை நிர்வாக சேவையில் சித்தியடைந்தோரே நியமிக்கப்பட்டனர்.

கோப்பாய் பிரதேச செயலகம்1970 இல் பிரிவுக்காரியாதிரிகள் உதவி அரசாங்க அதிபர்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டார்கள் இவ்வாறே 1963 இல் கிராம தலைமைக்காரன் முறை ஒழிக்கப்பட்டது. கிராம சேவகர்கள்/ கிராமத் தலைமைக்காரன் என்ற இரட்டைப் பதத்தோடு கிராம மட்ட  நிருவாக உத்தியோகத்தர் முறை கொண்டு வரப்பட்டது.

1955ம் ஆண்டளவில் உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்கள் பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டு பிரதேசங்கள் தோறும் அதிகாரங்கள் பரவலாக்கபட்டு உதவி அரசாங்க அதிபர்கள் பிரதேச செயலர்களாக தரமுயர்த்தப்பட்டார்கள்.

பிரதேசசெயலர் முறை நடைமுறைக்கு வந்ததும் யாழ் கச்சேரியில் குவிந்திருந்த நிருவாக கட்டமைப்புகள் பன்முகப்படுத்தப்பட்டு பிரதேச செயலகங்களில் காணி, பிறப்பு, இறப்பு, மோட்டார்வாகன வரி, திட்டமிடல், நிதி, நிர்வாகம், ஒய்வூதியம், விளையாட்டு, மகளிர்அபிவிருத்தி, வீடமைப்பு அதிகாரசபை, சிறுவர் நன்னடத்தை, சமூகசேவைகள், கலாசாரம், முன்பிள்ளைபருவஅபிவிருத்தி, தொழிற்பயிற்சி, உளவளத்துனை போன்ற இன்னேரன்ன துறைகள் கொண்டுவரப்பட்டன.

இம்முறை மக்கள் நீண்ட தூரம் சென்று யாழ் கச்சேரியல் தமது அலுவல்கட்கு காத்திராமல் தமது பிரதேச செயலகங்களிலேயே தமது கருமங்களை இலகுவாக நிறைவேற்ற வழிகோலியது.

வலிகாகமம் கிழக்கு பிரதேசத்தின் பணியாற்றிய மணியகாரர் பிரவுக்காரியாதிரி, உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலர், உதவிப் பிரதேசசெயலர் விபரம் வருமாறு.

1. திரு.வேலுப்பிள்ளை – மணியகாரன்
2. திரு.தம்பிப்பிள்ளை – மணியகாரன்
3. திரு.தெய்வேந்திரப்பிள்ளை – காரியாதிகாரி
4. திரு.D.N செல்வரத்தினம் – காரியாதிகாரி
5. திரு.மு.சுப்பிரமணியம் – காரியாதிகாரி
6. திரு.தி.முருகேசம்பிள்ளை – காரியாதிகாரி
7. திரு.ச.சிறீநிவாசன் – காரியாதிகாரி
8. திரு.யோ.து சபாபதிப்பிள்ளை – காரியாதிகாரி
9. திரு.வேதாரணிய சேயோன் – காரியாதிகாரி
10. திரு.வ.கந்தப்பிள்ளை – காரியாதிகாரி
11. திரு.க.மாணிக்கவாசகர் – உதவி அரசாங்க அதிபர்
12. திரு.வ.சொக்கலிங்கம் – உதவி அரசாங்க அதிபர்
13. திரு.சி.அம்பலவாணர் – உதவி அரசாங்க அதிபர்
14. திரு.கி.கிட்டினர் – உதவி அரசாங்க அதிபர்
15. திரு.க.சபாபதிப்பிள்ளை – உதவி அரசாங்க அதிபர்
16. திரு.க.குலேந்திரா – உதவி அரசாங்க அதிபர்
17. திரு.சி.முருகேசபிள்ளை – உதவி அரசாங்க அதிபர்
18. திரு.இ.இளங்கோ – உதவி அரசாங்க அதிபர்
19. திரு.ககனகரத்தினம் – உதவி அரசாங்க அதிபர்
20. திரு.க.கேதீஸ்வரன் – உதவி அரசாங்க அதிபர்/பிரதேச செயலர
21 திருக.சிறீநிவாசன் -பிரதேச செயலர்
22. திரு.ஆ.மகாலிங்கம் – பதில் பிரதேச செயலர்
23. திரு.பு.சுந்தரம்பிள்ளை – பதில் பிரதேச செயலர்
24. திரு. செந்தில்நந்தன் – பதில் பிரதேச செயலர்
25. திருமதி சா.அஞ்சலிதேவி – உதவிப் பிரதேச செயலர்
26. திருமதி சி.நிமலினி – உதவிப் பிரதேச செயலர்
27 திரு.க.இராசதுரை – உதவிப் பிரதேச செயலர்
28. திரு.C.A. மோகன்றாஸ் – பிரதேச செயலர்

தற்போது திரு.மருதலிங்கம் பிரதீபன் பிரதேச செயலராகவும் செல்வி சபாரத்தினம் பிறேமினி உதவிப் பிரதேச செயலராகவும் கடமையாற்றுகின்றனர்.

இதில் திரு வேலுப்பிள்ளை மணியகாரன் திரு தம்பிப்பிள்ளை மணியகாரன், திரு வ. கந்தப்பிள்ளை  திரு. மாணிக்கவாசகர்  திரு.கி.கிட்டிணர் திரு. க.இராசதுரை  ஆகியோர் இம் மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள்

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் பிரிவு வளலாய் தொடக்கம் கல்வியங்காடு வரையான 31 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டது. இப்பிரதேசத்தின் மையத்தில் அமைந்த கோப்பாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவிலேயே இப்பிரிவின் நிருவாகக் கட்டமைப்பிற்கான அலுவலகம் அமைந்துள்ளது.

கோப்பாய் பிரதேச செயலகம்கோ – மன்னன் பாய் – இருப்பிடம் எனப்படும் சங்கிலி மன்னன் கோட்டைகளில் ஒன்று அமைந்த கோப்பாய் வடக்கில் இக் கட்டிடம் அமைந்து சாலச் சிறந்ததே. கோப்பாய் வடக்கில் தற்போது உள்ள பொதுச் சந்தைக் கட்டிடத்திற்கு எதிரே பழைய கோட்டை என்னும் குறிச்சியுள்ளது. இக்குறிச்சியிலேயே சங்கிலி மன்னனின் கோட்டையொன்று இருந்தது. தற்போது பழைய கோட்டை ஒழங்கை எனப்படும் ஒழங்கையின் முகப்பில் சங்கிலித்தோப்பில் உள்ளது போன்ற அரண்மனை நுழைவாயில் இருந்ததை சிறிய வயதுகளில் நான் பார்த்துள்ளேன். காலக் கிரமத்தில் சமூக அக்கறை இன்மையோரால் இது சிறுகச் சிறுக அழிக்கப்பட்டுவிட்டது.

தற்போது இவ் ஒழுங்கையில் உள்ள அரசனால் கட்டுவிக்கப்பட்ட நீராடும் தடாகமான குதியடிக்குளம் இக் கோட்டையின் சிதிலங்களில் ஒன்றாக காணப்படுகிறது. தற்போது இராசவீதி என அழைக்கப்படும் இராசபாட்டை சங்கிலி மன்னன் வந்துபோன வீதியாக கருதப்படுகிறது.

இவ்வாறு சரித்திரப் பிரசித்திபெற்ற கோப்பாயில் தலைமை அரச நிருவாக கட்டமைப்பிற்கான கட்டிடமான பிரதேச செயலகம் அமைந்தது பொருத்தப்பாடு உடையதே.

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகம் இன்று வரை கோப்பாய் DRO கந்தோர் என்றோ அல்லது கோப்பாய் AGA கந்தோர் என்றோ அல்லது கோப்பாய் பிரதேச செயலகம் என்றோதான் மக்கள் நாவில் தவழ்ந்துவருகிறது.

கோப்பாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் இப்பிரதேசத்தின் நிருவாகத் தலைமையாகமான மணியகாரன் கந்தோர், பிரவுக்காரியதிகாரி பணிமனை, உதவி அரசாங்க அதிபர் பணிமனை அனைத்தும் தற்போது பிரதேச செயலகம் அமைந்துள்ள காணியில் இருந்த தனியாரின் மிகப் பெரிய வீட்டிலேயே இயங்கிவந்தன. 1995ஆம் ஆண்டு இடம் பெற்ற ”றிவிறச” இரானுவ நடவடிக்கையின் போது இத்தனியார் வீடு மிகப் பெரிய சேதமடைய 1996ம் ஆண்டு மீளக்குடியமர்வின் பின் தற்போது பிரதேச செயலக கட்டிடத்திற்கு அருகாமையில் உள்ள சோமசுந்தரம் இரத்தினசபாபதியின் இரண்டு வீடுகளில் இவ் அலுவலகம் இயங்கி வந்தது.

2000ம் ஆண்டில் அப்போதய பிரதேச செயலராக இருந்து திரு.கதிரவேலு கேதீஸ்வரனின் அயராத முயற்சியால் ஒவ்வோர் கிராம அலுவலர்களுக்கும் தத்தம் பிரிவுகளில் உள்ள பொது மக்களிடமும் சேர்த்த பணத்தில் தற்போது பிரதேச செயலகம் அமைந்துள்ள 17 பரப்பு காணியை சண்டிலிப்பாயில் உள்ள காணிச் சொந்தக்காரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு இப்புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இக்காணிக் கொள்வனவை முன்னின்று நடாத்திய அப்போதைய பிரதேச செயலர் திரு. கதிரவேலு கேதீஸ்வரனும் காணிக் கொள்வனவு நிர்வாக சபை உறுப்பினர்களும் அப்போதைய கிராம சேவையாளர்களும் அதற்குரிய பணத்தை தந்துதவிய வலிகாமம் கிழக்கின் ஒவ்வோர் குடிமகனின் பங்களிப்பும் என்றென்றும் மறக்கமுடியாததாகும்

1987ஆம் ஆண்டு வரை வலிகாமம் கிழக்கு பிரதேசம் 10 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டிருந்தது. கிராமங்களில் கிராம சேவகர்களும் மையத்தில் பிரதேச செயலரும் நிருவாகத்தின் அச்சாணிகளாக விளங்க ஏனைய உத்தியோகத்தர்கள் நிருவாக வலைப்பின்னல் ஊடாக நிருவாகத்தை தொகுத்து மக்களுக்கு பெரும்பணி செய்தனர்.

1987ஆம் ஆண்டு இப் பத்து கிராமசேவையாளர் பிரிவுகளும் 17 கிராமசேவையாளர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விசேடசேவை உத்தியோகத்தர்களும் கிராம சேவையாளர்களாக உள்வாங்;கப்பட்டடு இப் 17 பிரிவுகளுக்கும் நியமிக்கப்பட்டனர்.

இக் கிராமசேவகர் பிரிவுகளின் குடித்தொகையை கருத்தில் கொண்டு குடித்தொகையின் அடிப்படையில் 1/3/1990 இல் இப் பிரிவுகள் 31 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பயிர்செய்கை உத்தியோகத்தர்களும்(CO) விவசாய விஸ்தரிப்பு உத்தியோகத்தர்களும்(KVS)கிராமசேவையாளர்களாக உள்வாங்கப்பட்டனர்.

1993ஆம் ஆண்டு கிராம சேவையாளர்கள் கிராம அலுவலர்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டனர்.1998ம் ஆண்டு அதிசிறப்பு கிராமசேவையாளர் முறை நடைமுறைக்கு வந்தது. 1வது அதிசிறப்பு கிராம சேவையாளராக திரு.வே.சின்னத்துரையும் பின்னர் திரு.கா.சோ.சிவராசனும் கடமையாற்றினார்கள்.உதவி அரசாங்க அதிபர் பணிமனைகள் பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்ட போது பின்வரும் புதிய பதவிகளும் உருவாக்கப்பட்டன.

உதவித்திட்டமிடல் பணிப்பாளர்,கணக்காளர்

தற்போது உதவித்திட்டமிடல் பணிப்பாளராக திரு.இரத்தினராசா கிருஸ்ணராசனும்,கணக்காளராக திருமதி வசந்தமாலா மனோகரனும் பணியாற்றிவருகின்றனர்.நிர்வாக உத்தியோகத்தராக திரு.சுப்பிரமணியம் மகேந்திரன் அவர்கள் கடமையாற்றிவருகின்றர்.

வலிகாமம் கிழக்கு பிரதேசத்தின் பொருளாதார வளங்கள்

இப் பிரதேசம் கல்சிய செம்மஞ்சள் இலற்றசோல் எனப்படும் மண் வகையைக் கொண்ட செழிப்பான விவசாய பிரதேசமாகும். யுhழ்-பருத்தித்துறை வீதிக்கு கிழக்கே வயலும் வயல்சார்த்த மருத நிலம் காணப்படுகிறது. இப் பிரதேச மக்களின் பெரும்பான்மையோரின் ஜீவனோபாயத் தொழில் விவசாயமாகும். யாழ். மாவட்டத்தில் வாழைப் பயிர்செய்கையில் 37 வீதம் செய்கை இப்பிரதேசத்திலேயே செய்யப்படுவதாக பிரதி விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் தெரிவிக்கிறர். குறிப்பாக நீர்வேலி, கோப்பாய், உரும்பிராய், ஊரெழு, அச்செழு, சிறுப்பிட்டி கிராம அலுவலர் பிரிவுகள் வாழைச் செய்கைக்கு பெயர் போன இடங்களாகும்.

இருபாலை கிழக்கு, இருபாலை தெற்கு,கோப்பாய் தெற்கு,கோப்பாய் மத்தி, கோப்பாய் வடக்கு நீர்வேலி தெற்கு, நீர்வேலி வடக்கு, சிறுப்பிட்டி கிழக்கு, புத்து}ர் கிழக்கு, ஆவரங்கால் கிழக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் யாழ் பருத்தித்துறை வீதிக்கு கிழக்கு பக்கமான பிரதேசங்கள் நெற்செய்கைக்கு பெயர் போன பிரதேசங்களாகும்.மேலும் இக்கிராம அலுவலர் பிரிவுகளில் தெங்கும் கமுகும் செழித்து வளர்கின்றன.

கோப்பாய், உரும்பிராய், நீர்வேலி, அச்செழு, ஊரெழு போன்ற பிரதேசங்கள் மரக்கறி, சிறுதானியங்கள் என்பவற்றிற்கு பெயர் பெற்ற இடங்களாகும்.குறிப்பாக அச்செழு, ஊரெழு போன்ற கிராம அலுவலர் பிரிவுகள் மேல் நாட்டுமரக்கறிகளான பீற்றூட், கரட், கோவா, கறிமிளகாய், லீக்ஸ், முள்ளங்கி என்பன சிறப்புற விளையும் பிரதேசங்களாகும்.

இடைக்காடு, வளலாய், சிறுப்பிட்டி, புத்து}ர் போன்ற பிரதேசங்களில் சின்ன வெங்காயம் பெருமளவில் பயிரிடப்படுகிறது. உரும்பிராய் ஊரெழு கிராமங்களில் பரீட்சாத்தமாக செய்கை பண்ணப்பட்ட திராட்சை மிகப்பெரும் வெற்றியளித்து இன்று பெரும் பணம் கொழிக்கும் பணப்பயிராக செய்கை பண்ணப்படுகிறது.

கால்நடைவளம்

கல்வியங்காடு தொடங்கி இடைக்காடு வரையிலான 31 பிரிவுகளிலும் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக கோப்பாய் நீர்வேலி சிறுப்பிட்டி ஆவரங்கால் போன்ற வயலை அண்டிய பிரதேசங்களில் மந்தை மந்தையாக மாடுகள் காணப்படுகின்றன.இவை பெரும்பாலும் உற்பத்தித்திறன் குறைந்த உள்ளுர் இன மாடுகள் ஆகும். வுhழைத் தோட்டங்களில் பட்டி அடைக்கவே இம்மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

அதேவேளை கோப்பாய், இருபாலை, உரும்பிராய், நீர்வேலி, ஊரெழு போன்ற பிரிவுகளில் உயர் இனப்பசுக்கள் வீட்டுத்தொழுவங்களில் வளர்க்கப்பட்டு இப்பிரதேசத்தின் பால் தேவையை பூர்த்திசெய்கின்றன.மேலதிக பால் கலாசாலை வீதியில் உள்ள பால் சேகரிக்கும் நிலையத்தால் சேர்க்கப்பட்டு பற்றாக்குறை நிலவும் பிரதேசங்கட்கு அனுப்பப்படுகிறது.ஆடுகளை பெறுத்தவரை உரும்பிராய், ஊரெழு, கோப்பாய், நீர்வேலிப் பகுதிகளில் நல்ல இன யம்புனாபாறி ஆடுகள் வீட்டுத் தொழுவங்களில் வளர்க்கப்படுகின்றன.

கால்நடை விவசாய வளங்களைத்தவிர இப்பிரிவில் உள்ள செம்மணிப் பகுதியில் உப்பு உற்பத்தியாக்கப்படுகிறது. செம்மணி உப்பளத்தில் உற்பத்தியாக்கப்படும் உப்பு பிற இடங்களுக்கு அனுப்பபடுகிறது.இது தவிர இப்பிரதேசம் பனை, மூலிகை வளங்களுக்கும் பெயர் போன இடங்களாகும் இவ்வளங்கள் சரியான முறையில் இனம் காணப்பட்டு உரிய முறையில் பயன்படுத்தப்படவேண்டும்.

வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள்

1.நிலாவரை வற்றா நீர் ஊற்று :– இது நவற்கிரி கிராம அலுவலர் பிரிவில் காணப்படுகிறது. இயற்கையாக அமைந்த இவ் வற்றா நீர் ஊற்றிலிருந்து முன்னர் சிறுப்பிட்டி, நீர்வேலி போன்ற இடங்களில் தோட்டங்களிற்கான நீர்ப்பாசனம் செய்யப்பட்டு வந்தது. தற்போது இவ் முறை கைவிடப்பட்டுள்ளது.

2.பொக்கணை நீருற்று

இது ஊரெழு கிராம ஆலுவலர் பிரிவில் அமைந்துள்ளது. சிறிய கற்பார் ஒன்றின் மத்தியில் சிறிய குழியாக காணப்படும். இந்நீருற்று வற்றாத நீருற்றாகும்.இராமன் தன் முழங்காலை ஊன்றி அம்பு தொடுத்து இந்நீர் ஊற்று ஊருவாகியதாக கர்ண பரம்பரைக் கதையோன்று உள்ளது.இந் நீர்ஊற்றில் இருந்து சங்குவேலி, கட்டுடைப் பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

3.நீர்வேலி அரச கேசரிப்பிள்ளையார் கோவில்

நீர்வேலி தெற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இவ்வாலயம் 17ம் நுற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் மன்னன் பரராசசேகரனின் மைத்துனன் மன்னன் பண்டாரத்தின் முதன் மந்திரி அரசகேசரியால் கட்டப் பெற்றதாக கூறப்படுகிறது.இவ்வாலய திருமஞ்சன தீர்த்தக் கிணறு தான்தோன்றியானது எனச்சொல்லப்படுகிறது.
4.கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் கோவில்
கி.பி 113-135 வரை இலங்கையை ஆண்ட கஜபாகு மன்னன் சோழநாட்டிலிருந்து கொண்டு வந்த கண்ணகையம்மன் சிலைகள் பொருத்தமான இடங்களில் ஸ்தாபித்த போது கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் ஆலயமும் ஸ்தாபிக்கப்பட்டதா சேரன் செங்குட்டுவன் எனும் நு}ல் கூறுகிறது.

தொழிற்சாலைகள்:-

நீர்வேலியில் அமைந்த காமட்சியம்மாள் இரும்புத் தொழிற்சாலை,நீர்வேலி ஓயுஏலு கண்ணாடித்தொழிற்சாலை,இருபாலையில் அமைந்திருந்த சிறீராம் நூற்பு ஆலை, கோப்பாய் தெற்கில் அமைந்திருந்த பெனியன் தொழிற்சாலை,அச்சுவேலி கைத்தொழில் பேட்டை என்பன ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது மட்டுமல்லாமல் தரமான உற்பத்திகளை பிறஇடங்களுக்கு ஏற்றுமதி செய்தன. காமட்சியம்பாள் பூட்டு,சாவி,  மேசை விளக்கு கண்ணாடிகள் மிகவும் தரம்வாய்ந்தவையாக கருதப்பட்டன.போர்ச் சூழலில் இத் தொழிற்சாலைகள் முற்றுமுழுதாக இயங்காமல் போய்விட்டன.

பிரதேசத்தின் தமிழ் வளர்த்த பெரியார்கள்:-

இருபாலை நெல்லைநாதமுதலியார், இருபாலை சேனாதிராயமுதலியார்,கோப்பாய் அம்பலவாணப் பண்டிதர், வடகேவை சுப்பிரமணியக் குருக்கள்,மறுமலர்ச்சி பஞ்சாட்சரசர்மா, கோவைமகேசன், நீர்வேலி பீதாம்பரப்புலவர், நீர்வேலி சிதம்பரநாதப் புலவர், நீர்வேலி பிரம்மசிறீ முத்துக்குமார ஆச்சாரிய சுவாமிகள், நீர்வை சங்கரசிவசங்கரபண்டிதர், நீர்வை பேரறிஞ்ஞர் சிற்சபேசன், சிறுப்பிட்டி வை. தாமோதரம்பிள்ளை,ஆவரங்கால் நமசிவாயபுலவர், ஆவரங்கால் பண்டிதர் சுப்பிரமணியம், கலாநிதி சொக்கலிங்கம் (சொக்கன்), கவிஞர் கலாநிதி.இ. முருகையன் (நீர்வேலி) அச்சுவேலி வைத்தியநாத செட்டியார், தம்பிமுத்துப்பிள்ளை(அச்சுவேலி) ஞானப்பிரகாசசுவாமிகள், பேராசிரியர் நந்தி, மறைத்திரு குமாரசாமிக் குருக்கள், வேன் மயில்வாகனப் புலவர்,ஊரெமு சு.சரவணமுத்துபிள்ளை, வித்துவான் வேலன், இடைக்காடர் தென் கோவை வித்தகம் ச.கந்தையாப்பிள்ளை,அருட்திரு சா.ஞானப்பிரகாசசுவாமிகள் என்போர் இப்பிரதேசத்தில் தமிழ் வளர்த்த அறிஞர்களாக திகழ்கின்றனர்.இவ்வறிஞர்களின் தொகுப்பு ஓர் மேலோட்டமான தொகுப்பாகும்.தமிழ் வளர்த்த அறிஞர்கள் பற்றி விரிவாக ஆராயப்பட வேண்டும்.ஆங்கில இலக்கியத்தை அழகு செய்த வகையில் எஸ்.ஜே.குணசேகரம் (கோப்பாய்) அழகு சுப்பிரமணியம் அச்சுவேலி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார் இதில் அழகு சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் எழுதிய கதைகள் உலகத்தரம் வாய்ந்த சிறுகதைகளாக மேலைத் தேசத்தில் மெச்சப்படுகிறது

 By – Shutharsan.S

நன்றி – தகவல் – வடகோவை வரதராஜன்

மூலம் – http://www.dskopay.lk இணையம்

Sharing is caring!

1 review on “கோப்பாய் பிரதேச செயலகம்”

  1. இதை போல மற்றைய பிரதேச செயலகங்களும் இணையத்தளத்தை வெளியிட்டால் பிரயோசனமாக இருக்கும்.

Add your review

12345