கோவிற்கடவை சனசமூக நிலையம்

கோயிற்கடவைகோவிற்கடவை சனசமூக நிலையம் ஆனது 1.01.1979 இல் நிலையான இடத்திலிருந்து செயற்பாடுகளை ஆரம்பித்து இன்று இருபத்தைந்து ஆண்டுகள் புர்த்தியடைந்த நிலையில் தனது சேவையால் முன்னோக்கிய திசையில் வளர்ச்சிகண்டு வருகிறது.

வளர்ச்சிக்கும் புரட்சிக்கும் வாழ்க்கைத் தடைகளை உடைத்தெறியும் மறுமலர்ச்சிக்கும் மனித விடுதலைக்கும் அடித்தளம் அமைப்பது கல்வியே ஆகும். அனைவருக்கும் கல்வி என்றும் பொருள்மிகு தாரக மந்திரத்தின் அடிப்படையில் இக் கிராம சிறார்களின் ஏற்றமிகு கல்வியையும், மக்களின் வளர்ச்சியையும் நோக்காக கொண்ட கோவிற்கடவை சன சமூகநிலையத்தின் வரலாறு பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாகும்

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற ஒளவை மூதாட்டியின அறிவுரைக்கமைய எமது முன்னோர்களின் எமது ஊரில் கோயிலைக் கட்டினார்கள். அதனைத் தொடர்ந்து அவர்களால் 1942ம் ஆண்டு சமூக மேம்பாடு கருதி சமுக அமைப்பு என்ற எண்ணக்கரு உதையமாயிற்று அதன் முலம் கிராம முன்னேற்ற சங்கம், நூலகம், மாதர்சங்கம், என்பன உருவாக்கப்பட்டு அவை காலத்திற்கு காலம் பல்வேறு சேவைகளை ஆற்றிவந்தது. அதன் பின் 1968ம் ஆண்டுளின் முன்பகுதிகளில் வீரபத்திரர் ஆலயத்தின் அண்மையில் இவ் ஊர் அன்றைய இளைஞர்களினால் சேர்ந்து கிடுகினால் அமைக்கப்பட்டு கொட்டகையில் சனசமூக நிலையத்தை ஆரம்பித்தார்கள். அதன்பின் அமரர் ஞானபிரகாசம் அவர்களின் விடா முயற்சியாலும் சேவையாலும் எமது ஆலய பிரதமகுரு கணேசகுருக்கள் அவர்களின் தந்தையாராகிய ஆறுமுகஜயாவின் பெருமனதினால் ஆலய முன்றலில் அமைந்துள்ள அவரது காணியில் இந்நிலையம் ஆரம்பிக்கப்பட்டு செயற்பட தொடங்கியது. இக்காலப்பகுதியில் அமரர் ஞானபிரகாசம் அவர்கள் இந்நிலையத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய அளப்பரிய சேவையை நன்றியுடன் நினைவுகூர்கின்றார்கள்.அவரின் திடீர் மறைவுக்குபின் நிலையத்தின் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டது.

கோவிற்கடவை

1974ம் ஆண்டின் முற்பகுதியில் மீண்டும் திரு. பொன்னையா வரதராஜன் தலைமையில் அதே கட்டடத்தில் முனைப்புடன் இயங்கத்தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திரு. சிதம்பரப்பிள்ளை சச்சிதானந்தம் தலைவராகவும் திரு. மயில்வாகனம் மகேஸ்வரன் செயலாளராகவும் கடமையாற்றிய காலப்பகுதியில் இந் நிலையத்திற்கு நிரந்திர கட்டடம் அமைக்க வேண்டும் என்ற இளைஞர்களின் அவாவினாலும் விடாமுயர்ச்சியாலும் கடும் உழைப்பினாலும் திரு. சுப்பையா ஆசிரியர் அவர்களின் தலைமையிலான ஆலய நிர்வாக சபையினரின் ஆதரவுடன் தற்போது உங்கள் முன் காட்சியளித்துக் கொணடிருக்கின்ற கட்டடத்திற்கான அடிக்கல் 1975ம் ஆண்டின் நடுப்பகுதியில் திரு.இளையகுட்டியப்பா அவர்களால் நாட்டப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடம் பணவசதி இருக்கவில்லை. மக்கள் வழங்கிய நிதியுதவியுடனும் இளைஞர்களின் கடும் உழைப்பினாலும் ஊக்கத்தினாலும் இக் கட்டிடம் வளரதொடங்கியது. இக்கட்டடத்திற்கான கற்கள் இவ் ஊர் இளைஞர்கள் சேர்ந்து நிலத்தினுள் உள்ள கற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டதும் மற்றும் இப் பகுதியில் ஆங்காங்கே சேகரிக்கப்பட்டவையாகும். இக் கட்டிட வேலைகளை நிறைவேற்றுவதற்காக எம்மக்களிடம் நிதி கேட்டு நாடிச்சென்ற போது திரு. சுப்பையா சிவசுப்பிரமணியம் அவர்கள் கூரைக்குத் தேவையான சீற் தகடுகளையும், திரு.பொன்னையா மயில்வாகனம் அவர்கள் கூரைக்குரிய மரங்களையும் தந்து பெருமனதுடன் உதவினார்கள். இளைஞர்களின் முயற்சியால் எண்பது சதவீதமான வேலைகள் பூர்த்திசெய்யப்பட்டன. அரச நிதியுடன் மிகுதி வேலைகள் பூர்த்திசெய்யப்பட்டது.

கோவிற்கடவை

01.01.1979 முதல் திரு. பொ. மயில்வாகனம் அவர்கள் தலைவராகவும் திரு.ஸ்ரீசந்திரன் அவர்கள் செயலாளராகவும் கொண்ட நிர்வாகசபையினால் இந்த கட்டடத்திலிருந்து தனது சேவையை வழங்க ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து வந்த நிர்வாக சபைகளினால் நிலையத்தின் செயற்பாடுகளை படிப்படியாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. நாட்டின் ஏற்பட்ட அரசியல் இராணுவ நடவடிக்கைகளினாலும், 1987ம் ஆண்டிலிருந்து பல இடையுறுகளையும் பின்னடைவுகளையும் சந்திக்க வேண்டியேற்பட்டது. ஆனாலும் தனது சேவையை வழங்கி கொண்டு இருந்தது. 2000ம் ஆண்டின் இறுதியில் மக்களின் உதவியுடன் இளைஞர்களின் அர்பணிப்புடனான சேவையினாலும் இந்நிலையமானது மீண்டும் புணரமைக்கப்பட்டு வெளிநாடுகளில் வாழ்கின்ற  உறவுகளின் ஆதரவுடன் தனது பன்முகப்படுத்தப்பட்ட சேவையை மீண்டும் உத்வேகத்துடன் வழங்க ஆரம்பித்துள்ளது.

நூல் நிலையத்தின் தேவை கருதி ருபா 35000 பெறுமதியான தளபாடங்கள் செய்யப்பட்டன. மாணவர்களினதும் வாசகர்களினதும் வாசிப்பு, கல்வி தேவைகளை வழங்குவதற்காக நூலக இரவல் வழங்கும் பகுதி ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு தேவையான நூல்கள் மூன்று கட்டங்களாக ருபா 65000 இற்கு வாங்கப்பட்டது. அத்துடன் இந்த நிலையத்தை சார்ந்தவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூல்களும் பெற்றுக்கொள்ளப்பட்டன. தினசரி பத்திரிகைகள் போடுவதற்கும் நூல்கள் இரவல் வழங்கும் பகுதிக்கும் பொறுப்பாக செல்வன் வி.கஜயதாஸ், செல்வன் க.விபுட்சன் இருவரும் நியமிக்கப்பட்டனர். இவ் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து நூலகபொறுப்பாளராக செல்வி.ரேவிகா சண்முகநாதன் செயற்பட்டுவருகிறார். இப்பொழுது வாரத்தில் ஒருநாள் மட்டும் செயற்படும் இரவல் வழங்கும் பகுதியை மாணவர்களின் நலன் கருதி இரண்டு நாட்கள் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளார்கள். மாணவர்களின் கல்வி அடைவுகளை உயர்த்தவேண்டும் என்ற நோக்கில் 2001ம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் மாணவர்களிடையே அவர்களின் ஆற்றல்கள் திறன்களை வெளிக்கொணரும் வகையில் கல்வி கலை கலாச்சாரம் தொடர்பான போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்கள் வழங்கியும் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை, க.பொ..த (சா த) பரீட்சைகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்படுகினறன. மேலும் க.பொ.த (உ த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களை ஊக்கிவிக்கும் முகமாக பரிசில்கள் (பணத்தொகை) வழங்கி வருகின்றார்கள். பரிசளிப்பு விழாவிற்கான நிதியினைப்பெறும் நோக்கில் தேசிய சேமிப்பு வங்கியில் (பருத்தித்துறை) சேமிப்பு கணக்கொன்றை ஆரம்பித்துள்ளார்கள்

 

மாணவர்களுடைய ஆங்கில, கணித, விஞ்ஞான, பாட அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்கில் இந்நிலைய அணுசரணையுடன் வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. இவ் வகுப்புக்களை நடாத்துவதற்கு தேவையான தளபாடங்களை வழங்கி ஆதரவளித்த ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தான பரிபாலனர் சபையினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றார்கள். இந்நிலையம் 25 வருடஆணடு பூர்த்தியடைந்ததை முன்னிட்டு கட்டடம், தளபாடங்கள் என்பவற்றுக்கு வர்ணம் பூசுவதற்கு நிதியுதவி வழங்கியும் வர்ணபூச்சு வேலைகளில் ஈடுபடும் தமது பங்களிப்பை வழங்கிய இளைஞர்கள் அனைவருக்கும் பாரட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றார்கள். கடந்து வந்த பாதையை திரும்பிபார்க்கும் போது பொறியியலார்கள், மருத்துவர்கள், விஞ்ஞான, கணித, வர்த்தகபட்டதாரிகள், அரச உயர்அதிகாரிகள், ஆசிரியர்கள், வங்கியாளர்கள், என நாடளாவிய ரீதியில் பல சிறப்புமிகு பதவிகளிலும், இக்கிராமத்தின் புதல்வர்கள் பணியாற்றி வருகின்றார்கள். உலகின் பல முனைகளிலும் உன்னதமான நிலைகளில் பலர் உள்ளனர்.

பொது வேலைத்திட்டம் என்ற வகையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் இப்பகுதி வீதிகள் சிரமதானம் முலம் துப்பரவுசெய்யப்பட்டு பிரதேசசபை மூலம் செப்பனிடப்பட்டது. ஆலயத்தின் திருப்பணி வேலைகளிலும் சிரமதான வேலைகளிலும் தனது பங்களிப்பை வழங்கிவருகிறது.
வறுமைகோட்டுக்கு கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் நிலைமைகருதி அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. எமது பிரதேசத்தில் அமைந்துள்ள மயானம் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது. இராணுவ நடவெடிக்கைகளினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுக்கான ஆதரவும் உதவியும் வழங்கப்பட்டது. ஆலயத்திற்கும் நூல்நிலையத்துக்குமான சைக்கிள் பாதுகாப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

By -‘[googleplusauthor]’

நன்றி- மூலம் -கோவிற்கடவை இணையம்

Sharing is caring!

Add your review

12345