க. திருஞானசம்பந்தன்

க. திருஞானசம்பந்தன்

க. திருஞானசம்பந்தன் அவர்கள் 20.10.1913 – 07.01.1955 வரை வாழ்ந்தார். இவர் சம்பந்தன் என்று அழைக்கப்பட்டார். யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பிறந்து பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையிடம் பாடங்கேட்டுப் புடம்போடப்பட்ட தமிழ் ஆசிரியமணி சம்பந்தன் அவர்கள் இந்தியத் தமிழ் அறிஞர்களுடன் நெருங்கிய தொடர்பும் அதன் விளைவாக படைப்பாற்றலையும் உள்வாங்கியவர். சிறுகதைகளுக்கு அழுத்தமான காவிய மரபினைத் தந்தவர் இவராவார். கலைமகள், கிராம ஊழியன், மறுமலர்ச்சி, ஈழகேசரி ஆகிய பத்திரிகைகளில் இருபதுக்கு மேற்பட்ட சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். ஈழதேசம் நவீன இலக்கியத்தில் பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்பதற்கு சிறுகதைத்துறை காரணமாயின் அப்பெருமைக்கு உந்து சக்தியாக இருந்தவர் சம்பந்தன் ஆவார். தனது இருபத்தைந்தாவது வயதில் எழுத்துலகில் நுழைந்து கொண்ட இவர் 1939 ம் ஆண்டு கலைமகள் சஞ்சிகையில் ”தாராபாய்” என்ற சிறுகதையை முதலில் எழுதி இருந்தார்.

க. திருஞானசம்பந்தன் அவர்கள் ஈழத்துச் சிறுகதைகளில் உருவமும், உள்ளடக்கமும், அழகாகவும் கதைக்கோப்பில் ஆழமாகவும் விரவி நிற்பதற்கு இவ்வெழுத்தாளர் காரணியாய் இருந்துள்ளார். எக்காலத்திற்கும் பொருந்துவனவாக மனிதனின் அடிப்படைப் பண்புகள் அழியாத உருவில் எழுந்திருப்பதால் இவரின் இலக்கியப் படைப்புகள் தனித்துவமானவையாகவும் அக்காலத்திலுயே விளங்கிக் கொள்ளக்கூடியவாறும் இருந்துள்ளன. 1938ம் ஆண்டு காலப்பகுதியில் சிறுகதைத்துறைக்குள் காலடி பதித்துள்ள சம்பந்தனின் சிறுகதைகள் பற்றி அறிந்து கொள்வதற்கு நூல் தொகுப்பொன்றினை வெளியிடாமற் போனது துரதிஷ்டவசமானது. இருந்தாலும் இம்மண்ணில் வாழ்ந்த சிறுகதை எழுத்தாளர்களின் சிறுகதைத் தேடல்கள் மூலம் கண்டறிந்து அவற்றினை தொகுத்து பெரும் சேவையாற்றிவரும் ஈழத்தின் தற்போதைய மூத்த எழுத்தாளரான செங்கை ஆழியானும், அமரரான செம்பியன் செல்வனும், ”சம்பந்தன் சிறுகதைகள்” என்ற பெயரில் நூலொன்றினை 1998ல் வெளியிட்டனர். இவ்வெழுத்தாளரின் ஞாபகார்த்தமாக யாழ் இலக்கிய வட்ட அனுசரணையுடன் வருடாவருடம் சிறந்த ஆய்வு நூலுக்கான ”சம்பந்தன் விருது” வழங்கப்பட்டு வருகிறது.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடு

Sharing is caring!

1 review on “க. திருஞானசம்பந்தன்”

Add your review

12345