சங்கம் வளர்த்த சதாசிவஐயர்

சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்த மதுரையம் பதியிலே பெருமக்கள் பலர் நான்காம் சங்கமாக மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவித் தமிழிற் பரீட்சைகளை நடாத்தி வருவதைக் கண்ணுற்று இவ்வீழமண்டலத்திலும் அப்படி ஒருசங்கத்தை நிறுவினால் என்ன என்று யோசித்து, முனைந்து, முயற்சி செய்து வெற்றியும் கண்டவர்தான் சதாசிவம் ஐயரவர்கள். அவர் நிறுவிய சங்கம்தான் ‘ஆரியதிராவிட பாசாவிருத்திச் சங்கம்’ ஊருக்கொரு பண்டிதரும் மேடைக்கு பல பேச்சாளர்களுமாக நிரம்பியிருக்கும் இந்த வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமை ஐயரவர்களையே சேர்ந்தது. தமிழிலும் வடமொழியிலும் முறையாகப்பயின்று மாணவர்களை சிறந்தோங்க வேண்டும் என்று சுன்னாகத்தில் ஒரு பிரசீன பாடசாலையையும் நிறுவித் தகுந்த வித்துவான்களையும் நியமித்தார். கரவை வேலன் கோவை, ஐங்குறுநூறு, வசந்தன் கவித்திரட்டு ஆகிய நூல்களை அவர் அரிதில் முயன்று வெளியிடவும் செய்தார். பகுதிவித்தியாதரிசகராக இருந்த ஐயரவர்கள் இளம்மாணவர்களது இடர்பாட்டை நீக்கத் தமிழ் மொழிப்பயிற்சியுந் தேர்ச்சியும் என்ற அரிய நூலை உதவினார். தேவிதோத்திர மஞ்சரி, இருதுசங்கார காவியம் இவற்றை கவிதை உருவத்திலே அவர் ஆக்கினார். அவர் நிறைந்த உழைப்பாளி, பலரையும் தன்னுடன் சேர்த்துக் காரியம் பார்க்கக்கூடிய திறமைசாலி. அவரைப் போலச் சங்கமமைத்துத் தமிழ் வளர்க்கக் கூடியவர் இப்போது யாரிருக்கிறார். ஐயர் தோற்றுவித்த கலையாக்கம் கருதிய வெளியீடான ‘கலாநிதி’யை நிலைக்கச்செய்யவேண்டியது அவரது நினைவை நிலைபெறச்செய்வதாகும்.

Sharing is caring!

Add your review

12345