பேராசிரியர் சண்முகலிங்கன்

பேராசிரியர் சண்முகலிங்கன்

பல்துறை நிபுணரும், சமூகவியல் பேராசிரியரும், யாழ் பல்கலைக்கழக துணை வேந்தருமாகிய பேராசிரியர் நாகலிங்கம் சண்முகலிங்கன் அவர்கள் தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, நல்லூரை வாழ்விடமாகவும் கொண்டவர். தமிழில் சமூகவியல் பயில்வு நிலை பெறக் காரணமாக இருந்ததுடன் தமிழ்ச் சமூகம், பண்பாடு தொடர்பான பல ஆய்வு நூல்களின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். உலகப் புகழ் பெற்ற மானிடவியல் பேராசிரியர் கணநாத் ஒபயசேகர வழிகாட்டலில் இவர் மேற்கொண்ட கலாநிதிப் பட்ட ஆய்வு A new face of Durga என்ற தலைப்பில் டெல்கி கலிங்கா பதிப்பக வெளியீடாக வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் தமிழக மானிடவியலாளர் பக்தவக்சல பாரதியுடன் இணைந்து “இலங்கை இந்திய மானிடவியல்” என்னும் நூலினை வெளியிட்டுள்ளார். இவரது தந்தையின் பெயரில் அமைந்துள்ள நாகலிங்கம் நூலகத்தின் வெளியீடான “சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்“, “அமைப்பும் இயங்கியலும்” இவரது புதிய நூல்கள். மேலும் இந்தியா, ஜப்பான், ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளின் பல்கலைக்கழகங்களின் அதிதி பேராசிரியராகவும் இருந்துள்ளார். சமயத்தின் சமூகவியல், ஊடகங்களும் மேம்பாடும், பண்பாட்டு மேம்பாடு என்பன பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்களின் ஆய்வு ஆர்வங்களாகும்.

பேராசிரியர் சண்முகலிங்கன் சமூகவியல் புலமையாளராக விளங்குவதுடன் பல்கலை ஈடுபாடும் பயில்வும் கொண்டவராக பல அரங்க நிகழ்வுகள், ஆக்கப் படைப்புகளின் மூலம் கலை இலக்கிய உலகில் அறிமுகமானவர். மகாஜனாக் கல்லூரியில் மாணவனாக இருந்த காலங்களில் அகில இலங்கை ரீதியில் சிறந்த நடிகருக்கான தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். பிந்நாளில் இலங்கை வானொலியில் பல ஆக்க இசைப் படைப்புகளை உருவாக்கியுள்ளார். பாடலாசிரியராக,பாடகராக பல ஆக்கங்களை தந்த இவரது ஆக்க இசை அரங்க நிகழ்வுகளான மானஸி, உயிரின் குரல், கண்ணீரைத் துடைத்துக் கொள், ஞானக்குயில் என்பன குறிப்பிடத்தக்கன. அத்துடன் வசந்தன் கூத்து மற்றும் மானுடவியல் விவரணச் சித்திரங்களை ஒலிப்பேழையாக தயாரித்துள்ளார்.

இவரது இலக்கியப் படைப்புகளில் வடகிழக்கு மாகாண இலக்கிய நூல் பரிசு பெற்ற “நாகரீகத்தின் நிறம்” – கறுப்புக் கவிதைகள், யுனெஸ்கோ அரச மொழித் திணைக்கள விருதுகளைப் பெற்ற “சான்றோன் எனக் கேட்ட தாய்” – சிறுவர் நாவல், யாழ் இலக்கிய வட்டப் பரிசு பெற்ற “சந்தன மேடை” என்பன குறிப்பிடத்தக்கன. “சான்றோர் எனக் கேட்ட தாய்” நாவல் “தோதன்ன” அமைப்பினரால் அண்மையில்  சிங்கள மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. கல்விப் பணியுடன் கலையாக்கப் பணியிலும் தொடர்ந்து பங்களித்து வருகின்றார்.

இவர் தொடர்பான வேறு பதிவுகள் சண்முகலிங்கன்

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

Add your review

12345