சந்தசுவாமிகள்

சந்தசுவாமிகள் (James Ramsbotham) பற்றிய வரலாறு. கஸ்தூரிமான் இனிய வாசனையால் கவரப்பட்டுக் கால் விசைத்தோடும். ஓடிக்களைத்து ஓரிடத்தின் படுத்துக்கிடக்கும். அப்போது அவ்வினிய வாசனை தன்னிடத்தேயேயுள்ளதை அறிந்து அமைதியுறும். சந்தசுவாமிகள் பரலோகராச்சியக் கவர்ச்சியால் பூலோகமெங்கும் ஓடியலைந்தார். ஈற்றில் கொழும்புத்துறைக் கொட்டலிலே யோக சுவாமிகளது காலடிக்கீழ் ஆறுதலாக அமர்ந்திருந்தார். சுவாமிகள் ”பரலோகராச்சியம் உன்னுள்ளே உள்ளதே” எனக் காட்டி வைத்தார். அக்கண்டறியாத காட்சியைக் கண்டு சந்தசுவாமிகள் உளங்குளிர்ந்து உபசாந்தராயினார்.

சந்தசுவாமிகள் (James Ramsbotham)

அவர் இங்கிலாந்து நாட்டுக் கண்ணியமான பிரபுக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். இளமையில் நல்லொழுக்க சீலமுடைய வைதிகக் கிறித்தவனாக வளர்ந்தார். மெய்ப்பொருள் காண்டற்குரிய கல்வியை விழைந்த அவர் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் தத்துவஞானத் துறையில் சேர்ந்து சிரத்தையுடன் படித்தார். அப்படிப்பு பட்டத்தை அளித்ததேயன்றி சத்திய தாகத்தைத் தணிக்கவில்லை. அவர் அத்தாகத்தோடு அந்நாளில் உண்மைத் தோட்டத்தில் உழைப்பவர்கள் என ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பிரபலம் பெற்றிருந்த குறுட்ஜீவ் குழுவினருடன் சேர்ந்து பாடுபட்டார். அக்குழுவில் அதே தாகத்துடன் அங்கத்துவம் வகித்த மங்கை நல்லாள் ஒருவரை அவர் வாழ்க்கைத் துணையாகக் கொண்டதும் தெய்வசித்தம் போலும்.

அம்மாதரார் தலைப்பிரசவத்தின் போது சிசுவுடன் மரித்தார். அது அவருக்கு மரும அடியாய் விழுந்தது. அது அவர்தம் தாகத்தைப் பெருவிடாயாக்கியது. அவர் உண்மையைத் தேடி கீழ்த்திசை நோக்கி ஓடலானார். இந்தியத் திருத்தலங்கள், மடங்கள் எங்கும் திரிந்தலைந்தார். திபேத்திய மடாலயங்களுக்கும் சென்றார். ஈற்றில் தன்தந்தையார் இங்கிலாந்து அரசின் ஆளுனராக ஆண்ட இலங்கைத் தீவுக்கு வந்தார். இலங்கையிலும் பௌத்த மடங்கள், கதிர்காமம், செல்வச்சந்நிதி என்று திரிந்து ஈற்றில் கொழும்புத்துறைக் கொட்டிலுக்கு வந்தார். அவரை அழைத்து வந்த நரிக்குட்டிகௌரிபாலா என்போர். “கவர்னர் ஜெனரலின் மகன்” என அறிமுகம் செய்தனர். சுவாமிகள் “உனது கவர்ணரும் நான் ஜெனரலும் நான்” எனக்கூறி அவரைத் தம் ஞானப்புதல்வராக அரவணைத்தார்.

கொழும்புத்துறைக் கொட்டிலிலும், சிவதொண்டன் நிலையத்திலும், மார்க்கண்டு சுவாமிகள் உறைந்த கைதடி ஆசிரமத்திலும் வைத்து அவரைப் படிப்படியாக வளர்த்தெடுத்தார். அவருக்குச் சுவாமிகள் கூறிய முதன் மொழி “ஆதியில் அச்சொல் இருந்தது…….” எனத் தொடங்கும் பைபிள் வாசகமே. தான் ஆயிரக்கணக்கான முறை செபித்ததும், பாதிரிமார் வாயிலாகக் கேட்டதுமான அவ்வாசகம் சுவாமிகளது வாய்மொழியாக மலர்ந்த அப்பொழுதே அதன் மெய்ப்பொருளுடன் பொலிந்ததை அவர் அனுபவித்து மகிழ்ந்தார். சுவாமிகள் பைபிள் வாசகங்களின் அடிப்படையிலே அவருக்கு உபதேசம் செய்ததுடன் அவ்வுபதேசங்களை அவருக்குப் பழக்கமான மொழி மரபிலும் கூறினார். “கயிற்றைக் கைவிடு காண்டாமிருகம் போன்றிரு” என்றவண்ணம் அவர்மொழிகள் அமைந்தன. தத்துவப்படிப்பும், குறுட்ஜீவ் சிந்தனைகளும், சூபிவாசகங்களும், பிடக மொழிகளும் மண்டிக்கிடந்த அவர் மூளையைச் சுவாமிகள் குளப்பு குளப்பெனக் குளப்பிக் கலக்கித் தெளியவைத்தார். அவர் அகத்தே ஆழப்பதிந்திருந்த அகந்தை முள்ளைச் சுவாமிகள் இன்னோர் கூரிய முள்ளினாலேயே எடுத்தெறிந்தார். அதன் பொருட்டுச் செல்லப்பர் தமக்குச்செய்த ஞான வைத்திய முறையினையே சுவாமிகள் கையாண்டனர். ஒரு சந்தர்ப்பத்திலே காலனெனக் கறுத்துச் சீறிய சுவாமிகளது குத்துமொழியைப் பெற்றுக்கொணாத அவர் கொட்டிலைவிட்டு வெளியேறிச்சென்றார். வீதியில் விரைந்து செல்லும் அவரை மதில் மேல் தலையை நீட்டி எட்டிப்பார்த்த சுவாமிகள் மாயக்கிருஸ்ணனின் கள்ளச்சிரிப்புடன் “எங்கே போகிறாய்?” எனக் கேட்டார். “எங்கேனும் போகிறேன்” எனக் கூறிச் சென்ற அவரால் எங்கு போக முடியும். அகந்தைமுள்ளை எங்கோ போகவிட்டு முள் எடுபட்ட சுகத்துடன் ஆறுதலாக மீண்டும் வந்து சுவாமிகளது காலடியில் சாந்தமாக அமர்ந்தார். அவரிடம் சுவாமிகள் “அறிய வேண்டும் என்ற எண்ணமும் ஒப்படைக்கவேண்டும். அப்பொழுதுதான் வாலறிவனின் அறிவு வெளிப்படும் பரமபிதாவின் சித்தமே நிகழ்வதைத் தெளிய முடியும். பரலோகராச்சியம் உள்ளேயேயிருக்கும் மருமம் வெளியாகும்” என்றருளினார்.

சந்தசுவாமிகள் (James Ramsbotham)

சந்தசுவாமிகள் தொண்டினைப் பிரதான அங்கமாகக் கொண்ட சமயமரபிலே வளர்ந்தவர். அவருக்குச் சேவை செய்யும் ஆசை இருந்தது. அதை அவர் அனுபவித்துத் தீர்க்க வேண்டும். அதன் பொருட்டுக் குருவருள் அவரைப் பெரிய வளவயலுடைய செங்கலடி சிவதொண்டன் ஞானப்பண்ணையில் குடியிருத்தியது. அவர் பன்னிரு வருட காலம் இந்நிலைப் பரிபாலகராக இருந்து சுறுசுறுப்பாகப் பணிசெய்தார். இந்நாள்களிலே நற்சிந்தனை ஆங்கில நூலுருப் பெறுவதில் அவர் அரும்பணி புரிந்தார். உலகெங்குமுள்ளோர் அந்நூலுள் நுழைவதற்கு வாயிலான நீண்ட முன்னுரையொன்றையும் அவரே எழுதினார். சுவாமிகள் தமக்கு ஆங்கிலத்திற் சொன்ன அருள்மொழிகளுடன் மற்றைய அணுக்கத் தொண்டர்களுக்கு அருளிய அமுத மொழிகளையும் மொழிபெயர்த்து Words of our master எனும் நூலாக ஆக்கி அளித்தார். இத்திருநூலை பொருளமைதிக்கேற்பப் பகுத்து அதிகார அங்கங்களையுடைய நூலாக ஆக்குதற்கான ஆயத்தங்களையும் அவர் செய்திருந்தார். ஆயின் “எல்லாம் சரி” என்று சும்மாயிருக்கும் நிலை வந்ததும் எல்லாவற்றையும் அப்படி அப்படியே விட்டு கைதடிக்கு வந்து, மார்க்கண்டு சுவாமிகளுடன் இணைந்து மௌனமாயிருந்தார். தன்னுள்ளே பரலோகராச்சியத்தைக் கண்டு கொண்ட அக்கஸ்தூரிமான் மீண்டும் தனது பிறந்த அகத்துக்கே வந்தது. அங்கு 2nd Viscount Soulbury ஆசனத்தை வேண்டாம் என்று தள்ளவேண்டியிருக்கவில்லை. அவர் சுவாமி நினைவிலேயே இலயித்திருந்தார். இந்நாளில்Words of our master எனும் நூலிலிருந்து திரட்டிய Positive Thoughts for Daily Meditation என்னும் நூலையும், சுவாமிகள் அளித்த மெய்ஞானச் சுடரில் பைபிள் வாசகத்து மெய்ப்பொருளை விளக்கும் A Recapitulation of the Lord’s Prayer என்னும் திருநூலையும் எழுதினார். அவரது சொந்தப்படைப்பு எனக் கூறக்கூடிய இரண்டாவது நூல் மேற்குலகில் போக மயக்கத்தில் துயில்வோர் விழித்தெழுந்து நோக்குமிடத்து இத்திருநூல் அவர்களுக்கு நல்ல வழிகாட்டும்.

By – Shutharsan.S

நன்றி – தகவல் மூலம் – http://www.sivathondan.org

தொடர்புடைய பதிவுகள்

Sharing is caring!

Add your review

12345