சமூகச்சிற்பி திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை

திருமேனியார்1867 ஆம் ஆண்டு சங்கத்தாபனம் செய்து வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தவரே சமூகச்சிற்பி திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை. வல்வெட்டித் துறையின் புகழ்பெற்ற கடல் வணிகக் குடும்பத்தில் உதித்த ஐயம்பெருமாள் வேலாயுதர் வழிவந்த “திருமேனியாரின்” மைந்தனாக 1822ஆம் ஆண்டு மார்கழி மாதம் 19ம் திகதி வியாழக் கிழமை இவர் வல்வெட்டித் துறையில் அவதரித்தார். இது கலியப்பதம் 4924 இற்கும் சாலிவாகன சகாப்தம் 1745 இற்கும் சமமாகிய சித்திராபானு ஆண்டு மார்களித் திங்கள் 6ம் நாள்ஆகும். இவர் பிறந்த கிரகநிலையானது சிங்க இலக்கணத்திற்கு உரியதாகும். சோதிட நூற்படி சூரியன் என்னும் கிரகத்திற்கு இராசி சக்கரத்தில் உள்ள ஓருவீடு சிம்மம். சூரியன் நவக்கிரகங்களிற்கு நாயகராக விளங்குபவர் மட்டுமல்ல. பால் வீதியில இருக்கும் பல்லாயிரம் நட்சத்திர கூட்டங்களிலும் சூரியக் குடும்பமே மிகவும் பெரியது. உலகின் பேரொளியாகவும் யாரும் அண்டமுடியாத அக்கினிக்கோளமாகவும் விளங்குவதும் சூரியக்கிரகமே ஆகும். கிரகம் என்பது இருத்தல் என பொருள்படும். இத்தகைய சூரியனின் பார்வை பெற்ற சிங்க இலக்கணத்தில் பிறந்த இவருடைய முன்னோர்களும் பின்னோர்களும் பெருமைபெற்ற வரலாறுடையவர்கள்.

திருவேங்கடம் பூட்டன்இவர் Thiruvengadam Pootan ஆவார்.

இவ்வாறு பெருமைமிகு குடும்பத்தில் அவதரித்த இவரின் பிறப்பை நூறுவருடங்களிற்கு முன் வாழ்ந்த வல்வெட்டித் துறையின் மூத்த தமிழ் அறிஞரும் வல்வெட்டித்துறை வைத்திலிங்கப்புலவரின் சகமாணவரும் உடுப்பிட்டி சிவசம்புப்புலவரின் மாணாக்கனுமான பொன்னையா உபாத்தியாயர் என்றழைக்கப்பட்ட புலவர் நா.பொன்னம்பலம்பிள்ளை அவர்கள்

மல்லிகை முல்லை மலரிருவாட்சியாம்
நல்லபைந்தருநிறை நந்தவனமுஞ்
சூழ்ந்திடவதிவளந் துலங்குமிவ்வல்வையில்
ஆழ்ந்திடு கடல்சூழ்வணிகனின் மாக்கள்
வல்வினைப்பிறவியா மறிகடல்நீந்தி
எல்லையில்லா பேரின்பந்துய்ந்திட
கருமேனிகொள்ளாக் கரையறுபுண்யத்
திருமேனிவள்ளல் செய்தவத்துதித்த
தருவேங்கிடநிதித் தாரைபொழிகைத்
திருவெங்கடாசல சீதெந்தரியசிகாமணி!

என சிறப்பாகப் பாடியுள்ளார்.

வல்வை சிவன்

திருமேனியாருடைய முதல் மைந்தனாக அவதரித்த இவருக்கு குழந்தைவேற்பிள்ளை தம்பிப்பிள்ளை, தம்பையா, இராமசாமி, அப்பாச்சாமி, என ஐந்து இளைய சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர். இதனால் மூத்தவர் என்கின்ற காரணப்பெயர் கொண்டு  “பெரியதம்பியார்” என அழைக்கப்படலானார். இளமைப்பருவம் முதல் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவரும் தமது பரம்பரைத்தொழிலான கடல்வணிகம் மூலம் பெரும்பொருள் ஈட்டியவர்களில் முதன்மையானவர். உரியபருவம் வந்ததும் திருமணம் முடித்து குடும்பஸ்தரான இவருக்கு வேலுப்பிள்ளை, திருமேனிப்பிள்ளை, அருணாசலம் எனும் மூன்று ஆண்மக்களும் பொன்னம்மா எனும் ஓரு பெண்மகவும் வாரிசாகினர்.

ஆரம்பத்தில் தென்கிழக்காசிய நாடான மலேசியாவின் துறைமுக நகரங்களான பினாங். போர்ட்வேலோ, பன்கூர், கிள்ளான் என்பவற்றுடன் அரிசி வர்த்தகத்தில் ஈடுபட்டார். இக்காலத்தில் தென்னிங்லங்கை நகரான காலியில் அமைந்திருந்த சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் பலதிருப்பணிகளை மேற்கொண்டதுடன் அதன் புனருத்தான பணிகளிலும் பெரும்பங்காற்றினார்.

1850 – 1870 காலப்பகுதியில் இந்தியாவின் தென்மேற்கு மாநிலமான மலையாள நாடென்று அழைக்கப்பட்ட இன்றைய கேரளாவிற்கும் யாழ்ப்பாணத்திற்குமான புகையிலை வியாபாரமானது பெரு விருத்தியடைந்தது. தந்தைவழியில் கப்பல் உரிமையாளராகவும் சிறந்த கடலோடியாகவும் இருந்ததனால் மலையாளத்தேச வியாபாரிகளினாலும் இந்தியாவின் நாட்டுக்கோட்டை செட்டிகளினாலும் யாழ்ப்பாணத்தில் கொள்வனவு செய்யப்படும் புகையிலையையும் அதன் உற்பத்திப்பொருட்களான சுருட்டையும் ஏனைய நுகர்வுப்பொருட்களையும் மலையாள நாட்டின் கொச்சினிற்கும் திருவாங்கூருக்கும் ஏற்றிச்சென்று கொடுப்பதன் மூலம் அதிக வருவாயைப் பெருக்கினார்.

1856ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு சொந்தமான “King of Atlantic” என்ற கப்பல் திருகோணமலைக்கு வடக்காக முல்லைத்தீவுக்கு கிழக்கே வங்கக்கடலில் மூழ்கிவிட்டது. ஆங்கிலேயரின் கட்டிட நிர்மாணப் பணிகளிற்காக கொண்டு வரப்பட்ட சுண்ணாம்பு மூடைகளுடனேயே அக்கப்பல் மூழ்கியிருந்தது. பல நாட்களாக அதனை மீட்க முயற்சி செய்த கப்பலின் உரிமையாளரான ஆங்கிலேயர்கள் செய்வதறியாது மூழ்கிய நிலையிலேயே அதனை விற்றுவிட முடிவு செய்தனர். ஆங்கிலேய நாட்டிலிருந்து இலங்கை வரை பயணம் செய்த இரட்டைப்பாய் மரக்கப்பலான அதனை மூழ்கிய நிலையிலேயே விலைக்கு வாங்கிய வெங்கடாசலம்பிள்ளை எல்லோரும் ஆச்சரியப்படும் படியாக அதனை நீரிலே மிதக்க விட்டார். கப்பற் சாத்திரம் என்னும் மாலுமி சாஸ்திரத்திலும் வான சாஸ்திரத்திலும் பூரணஅறிவு கொண்ட இவர் இதற்காக பல நாட்கள் முல்லைத்தீவில் கள்ளப்பாடு என்னும் கடற்கரைப் பிரதேசத்தில் தங்கியிருந்து மேற்படிமூழ்கிய கப்பலை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் தன்னிடம் இருந்த சுழியோடிகள் மூலமாக கப்பலில் இருந்த பொருட்களை சிறிது சிறிதாக வெளியே எடுத்தார். கப்பலில் ஏற்றப்பட்டிருந்த சுண்ணாம்பு மூடைகளை கடலில் இட்டு கப்பலின் பாரத்தைக் குறைத்தார். பின்னர் மூழ்கிய கப்பலுடன் நேராகப் பிணைக்கப்பட்டு மிதந்து கொண்டிருக்கும் பாரிய மரக்குற்றிகளை பக்கவாட்டாக நகர்த்துவதன் மூலம் மூழ்கிய கப்பலை நீர்மட்டத்திற்கு கொண்டு வந்து ஆங்கிலேயரும் மெச்சும் வகையில் தனது பொறிமுறை அறிவினைப் பயன்படுத்தி வெற்றி கண்டார். “அத்திலாந்திக் கிங்” என்னும் அக்கப்பல் மூழ்கியதும் அதிலிருந்த சுண்ணாம்பு மூடைகளை வெளியே கொண்டு வரமுடியாமல் அச்சுண்ணாம்புகள் அவ்விடத்திலேயே கடலில் இடப்பட்டன. முல்லைத்தீவிற்கு அண்மையில் வங்காள விரிகுடாக் கடலில் இன்றும்கூட “கப்பல் தட்டு“என அவ்விடம் அழைக்கப்படுகின்றது.

இக்காலத்தில் தன்னைப்போன்ற கடல்வணிகனான “மாநாயக்கன்” னின் மகளான கண்ணகியின் பெயரில் சிறுகொட்டிலாக இருந்த “வற்றாப்பளை கண்ணகி அம்மன்” ஆலயத்தை கற்கட்டிடமாக இவர் புனரமைத்ததுடன் கோயிலுக்கு அண்மையில் பக்தர்கள் தங்குவதற்காக ஓரு மடத்தையும் தனது பெயரில் இவர்அமைத்திருந்தார். அத்துடன் கள்ளப்பாட்டில் இருந்து வற்றாப்பளை வரை உள்ள வீதியின் இரு மருங்கிலும் ஒவ்வொருவருடைய வருணாச்சிரதர்மங்களிற்கு ஏற்றதான மடங்களை அமைத்து பக்தர்கள் தங்கிச் செல்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்தினார்.(யாழ்பாணவைபவக் கொளமுதி பக்கம்) சில வருடங்களிற்கு முன்புவரை வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் முன்றலில் இவர் பெயரில் அமைந்திருந்த யாத்திகர்களிற்கான தங்குமடம் அடையாளம் காணக்கூடியவாறு காணப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது. முறையான வீதிப் போக்குவரத்துகள் அற்ற அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கடற்பயணம் செய்து வரும் பக்தர்கள் வற்றாப்பளை கண்ணகியம்மனை வழிபடும் வசதிகளையும் இவ்வாறு ஏற்படுத்திக் கொடுத்தார். அத்துடன் கள்ளப்பாட்டில் ஒரு பிள்ளையார் கோயிலையும் அமைத்திருந்தார். பாய்க்கப்பல் மூலமாகவும் நடந்தும் கதிர்காமம் செல்லும் யாத்திரிகள் ஓய்வெடுப்பதற்காக கள்ளப்பாடு கடற்கரையில் ஓருமடத்தினையும் அமைத்தார். அக்காலத்தில் கள்ளப்பாடு கடற்கரையில் வேறு கற்கட்டிடங்கள் ஏதுமற்ற நிலையில் இவரால் கொள்வனவு செய்யப்பட்ட ஒரே காணியில் இவை இரண்டும் அமைந்திருந்ததனால் அப்பிள்ளையார் கோவில் “மடத்தடிப்பிள்ளையார்” கோவில் என அழைக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் சிதைவடைந்த அப்பிள்ளையார் கோவில் உள்ளூர் மக்களினால் புனரமைக்கப்பட்டதன் பின்பு இன்று கள்ளப்பாடு பிள்ளையார் கோவில் என அழைக்கப்படுகின்றது.

மீழ்க்கப்பட்ட கப்பலை வல்வெட்டித்துறைக்கு கொண்டு வந்து தமது பரம்பரை வாடியில் (வாடி என்பது கப்பல்கள் மற்றும் படகுகளை உற்பத்தி செய்யவும் அவைகளைப் பழுதுபார்க்கவும் பயன்படுத்தும் இடமாகும்) அதனைச்சீரமைத்து மீண்டும் கடற்பிரயாணம் செய்யும் வகையில் மாற்றியமைத்தார். இவ்வாறான அவருடைய வாடியமைந்திருந்த இடமே இன்றைய முத்துமாரியம்மன் கோவிலுக்கு வடக்காக அமைந்திருக்கம் வாடியொழுங்கைப் பகுதியாகும். “அத்திலாந்திக் கிங்” என அழைக்கப்பட்ட இக்கப்பல் கெச்(ketch)சுக் கப்பல் எனப்படும் வகையைச்சேர்ந்தது. இவ்வகைக் கப்பல்களின் பாய்மரங்களின் உயரம் அதுவரை இலங்கை இந்தியா போன்ற கீழைத்தேச நாடுகளில் கட்டப்பட்ட சமஅளவு கொண்ட பாய்மரங்கள் போலன்றி முன்னிருக்கும் பாய்மரம் எப்பொழுதும் உயர்ந்ததாகவே காணப்படும். இதனால் பருவக்காற்றுக்களின் மூலம் நகரும் இவ்வகைக்கப்பல்கள் ஏனையகப்பல்களை விடவிரைவாக நகரும் தன்மை கொண்டவையாக விளங்கின. இவ்வாறு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட கப்பலைவாங்கி திருத்தியதன் மூலம் ஆங்கிலேயரின் கப்பல் கட்டும் நுட்பட்தையும் நன்கு அறிந்து கொண்டார். இத்தகைய பட்டறிவின் மூலம் தமிழரின் பாரம்பரிய கப்பல் கட்டும் முறையினைச் சீர்திருத்தினார். இதன் மூலம் புகழ்பெற்றிருந்த வல்வெட்டித்துறையின் கப்பல் கட்டும் கலையினை மேலும் மெருகூட்டினார். இவ்வாறு எமது நாட்டின் கடலையும் அது தொடர்பாக இவருக்கு இருந்த நுண்ணிய அறிவையும் பொதுச்செயலில் இவருக்கு இருந்த பரந்த மனப்பாங்கையும் கண்ட ஆங்கிலேயரும் தமது கடல் பயணத் தேவைகளுக்காக பலசமயங்களில் இவரின் உதவியைப் தொடர்ந்து பெற்றுக்கொண்டனர். இதுபற்றிய சிறுகுறிப்பொன்று முருகர் குணசிங்கம் என்பவரால் எழுதப்பட்ட “இலங்கையில் தமிழர் முழுமையான வரலாறு” என்ற புத்தகத்தில் 343 ஆம் பக்கத்தில் காணப்படுகின்றது. அது பின்வருமாறு

 

“திரு சாண்டஸ்(sanders) உடன் சாவகச்சேரியிலிருந்து போதகர் ஹன்ட் (HAND) இரு வினாவிடை உபதேசிமார் ஒரு ஆசிரியர் என நான்கு சுதேசிகளும் ஆனி 16ந் திகதி வல்வெட்டித்துறையிலிருந்து மட்டக்களப்புக்கு பயணித்து எமது மத்திய நிலையமான புளியந்தீவில் தங்கினர்.” எனத் தொடரும் இக்குறிப்பானது 1864ம் ஆண்டிற்கு உரியது. இது அமெரிக்க கிறிஸ்தவமிசனரிமாருடைய(A.C.M) report voi.7 reei 451 – 1857 – 1871 batticaioa 20oct1864 என காணப்படுகின்றது. 1864 இல் வல்வெட்டித்துறையின் எசமானாக விளங்கிய இவரைவிட வேறுயாரால் இது முடியும்.

 

தந்தையிடமிருந்து இரண்டு கப்பல்களை மட்டுமே பெற்றிருந்த இவர் சிவன்கோயிலைக் கட்ட ஆரம்பித்த காலத்தில் 12 கப்பல்களுக்கு சொந்தக்காரராக இருந்தார். என 1967ம் ஆண்டு வெளியிடப்பட்ட சிவன்கோயில் குடமுழுக்கு விழா மலரில் 17ம் பக்கத்தில் வல்வையின் மூத்தஎழுத்தாளரும் விழாமலரின் ஆசிரியருமாகிய பண்டிதர் சங்கரவைத்திலிங்கம். எழுதியுள்ளமை இங்கே நினைவூட்டத்தக்கது.

பன்னிரண்டு கப்பல்களிற்கு அதிபதியாக இருந்த வெங்கடாசலம் பிள்ளையவர்கள் 1852இல் பிரிட்டன் பர்மாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பர்மாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகத்திலும் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டிய வல்வையர்களில் இவரே முதன்மையானவர். இவரால் மேற்படி “கெச்சுக்கப்பல்கள்” வல்வெட்டித்துறையில் கட்டப்படத் தொடங்கியதும் பர்மா வியாபாரம் மேலும் சூடுபிடித்தது. ஆரம்பத்தில் இங்கிருந்து சென்ற கடலோடிகளும் வியாபாரிகளும் அங்கே தரித்திருந்து அரிசியையும் நெல்லையும் கொள்வனவு செய்வதினால் கப்பல்கள் அங்கிருந்து திரும்புவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்த்து செல்லும் கப்பல்களில் உடனடியாகவே பொதிகளை ஏற்றக்கூடியவாறு எம்மவர்கள் சிலரை அங்கேயே தங்கவைத்தார். இவர்கள் எப்பொழுதும் “மேலாளர்“களாக பர்மாவில் தங்கியிருந்து உற்பத்தியாளர்களிடமும் வியாபாரிகளிடமும் பேரம்பேசி குறைந்த விலைகளில் அரிசியை வாங்கி மூட்டைகளாக கட்டி தயாராக வைத்திருப்பர். வல்வெட்டித்துறையில் இருந்து செல்லும் கப்பல்கள் உடனடியாக அவைகளை ஏற்றிக்கொண்டு வல்வெட்டித்துறைக்கு மீண்டும் திரும்பிவிடும். இவ்வாறு மேலாளர்களாக இவரால் அனுப்பப்பட்ட ஊழியர்கள் தங்குவதற்காக “அரக்கனில்” ஓர்இடத்தை வாங்கி மடம், கிணறு என்பவற்றுடன் அவ்விடத்தில் ஒருமுருகன் கோவிலையும் இவர் உருவாக்கினார். 1853 முதல் பர்மாவுடனான அரசி வர்தகத்தை இவர் ஆரம்பித்தது முதல் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தபலரும் இவ்வியாபாரத்தில் குதித்தனர். இவ்வாறாக வல்வெட்டித்துறைக் கடலோடிகளின் அதீத தொடர்பினால் பர்மாவின் அரக்கன். இறங்கூன் துறைமுகங்களில் இருந்து வல்வெட்டித்துறைக்கு நேரடியாகவும் விரைவாகவும் வரும் கடற்பாதை ஒன்று உருவாயிற்று. ஆரம்பத்தில் கோரமண்டலக்கரை என அழைக்கப்படும இந்தியாவின் கிழக்குக்கரை துறைமுகங்களை ஒட்டியே பர்மாவை வல்வெட்டித்துறைக் கப்பல்கள் சென்றடைந்தன. இப்புதிய கடற்பாதை கண்டுபிடிக்கப்பட்டவுடன் வங்காளவிரிகுடாவின் 9346 அடி ஆழமுள்ள கடற்பகுதியை வல்வெட்டித்துறைக் கப்பல்கள் சர்வசாதாரணமாக ஊடறுத்து பயணம் செய்தன. பதினோராம் நூற்றாண்டில் இராஜேந்திரசோழனது காலத்தில் “சோழர்களின் ஏரி” என வங்கக்கடல் வர்ணிக்கப்பட்டதுண்டு. அதனையும்விட அதிகமாகவே 19ம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதியிலும் 20 நூற்றாண்டின் முன்னரைப்பகுதியிலும் வல்வெட்டித்துறை கப்பல்கள் வங்காளவிரிகுடாவை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன. இத்தகைய நிலைக்கு ஈழத்தமிழரின் “கடலாளுமையை” வளர்த்த பெருமை “பெரியவர்“வெங்கடாசலம்பிள்ளையையே சாரும்.

இந்தியாவின் நாட்டுக்கோட்டைச் செட்டிகளுடனும் ஆந்திராவின் சிறந்த வியாபாரிகளான நாயுடுக்களுடனும் வர்த்தகத் தொடர்புகளை இவர் வைத்திருந்தார். பர்மாவின்புகழ்பெற்ற தேக்குமரங்களையும் புட்டரிசி என்னும் சிறந்தரக அரிசினையும் தனது கப்பல்களில் கொண்டுவந்து பெரும் பொருள் ஈட்டியதுடன் தானதர்மங்கள் செய்வதிலும் முன்னின்றார். அத்துடன் எமது மக்களின் உணவுத் தேவையினை பூர்த்தி செய்வதிலும் பெரும் பங்காற்றினார். இவ்வாறு பல கப்பல்களை வைத்திருத்திருந்து கடல்வணிகம் செய்த இவரின் கப்பல்கள்.

 

அரு(ர)க்கன்போர்மான் வந்தேரிரங்கூன்
காக்கை நாடு வங்காளஞ் சென்னை
கூடலூர் கொற்றங் குடிநாகைத்தலம்
திண்டுக்கல்காரைக்கால் புதுச்சேரி
பறங்கிப்பேட்டை பம்பாய்குற(றி)ச்சி
மலையாள மாலபள்ளிதூத்துக்குடி
கொச்சிகள்ளிக்கோடு கொல்லம்
தகைசெறி திருவனந்தபுரம் கொழும்பு
மானார்(நகர்) திருகோணமலை மட்டக்
களப்பெனும் பலபதி

அன்னைபூரணி அன்னைபூரணி மாலுமிகள்

Annapooraniammal Brigantine / Sailors

ஆகிய இடங்களிற்கு சென்று வர்த்தகத்தில் ஈடுபட்டன. என கெச்சுக்கப்பலின் தண்டயைல் ஆகப் பணியாற்றிய நா.வேலுப்பிள்ளையின் சமரகவியில் (1904) குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காலத்தில் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் மணியமாக விளங்கிய இவர் கோயிலின் சுற்று மதிலைக்கட்டியதுடன் கோவிலுக்கு தெற்குப்புறமாக ஒரு குளத்தையும் வெட்டுவித்தார். பன்னிரண்டு கப்பல்களுக்கு அதிபதியாக விளங்கிய இவரிடம் கப்பல் தண்டையல் (கப்ரன்) சுக்கானியர் (மாலுமிகள்) பண்டாரங்கள் (சமையல்காரர்) கிலாசுகள் (பாய்மரம்கட்டுவோர்) எனப்பலர் வேலைசெய்தனர். அது போல் கப்பலுடன் சம்மந்தப்பட்ட பொருட்களை ஏற்றுவது இறக்குவது எனத் தொழில் புரிந்த பலரும் கப்பலுக்கு தேவையான கயிறுகள் திரிப்போர் மற்றும் கப்பல் வாடியில் வேலை செய்வோர் என ஏறத்தாழ 300 பேர்களுக்கு மேல் இவரிடம் ஊழியம் புரிந்தனர். இவ்வாறு இற்றைக்கு 150 வருடங்களுக்கு முன் ஊரில் இருந்த 300பேருடைய குடும்பத்தினரின் வாழ்க்கையினை இவர் தாங்கியுள்ளார். 1946ம் ஆண்டில் எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டு கணக்கெடுப்பின்படி வல்வெட்டித்துறை மக்களின் மொத்தத் தொகை 6015 என 30.7.1950 இல் வித்துவான் வ.மு கனகசுந்தரம் வீரகேசரிவார வெளியீட்டில் எழுதிய “வல்வெட்டித்துறை வரலாறு“என்னும் கட்டுரை தெரிவிக்கின்றது. இதில் சைவர்கள் 5035 பேரும் கிறிஸ்தவர்கள் 85 பேரும் உள்ளடக்கப்பட்டிருந்தனர். அப்படியானால் அதற்கு 100வருடங்களுக்கு முன் எத்தனைபேர் வலவெட்டித்துறையில் வாழ்ந்திருப்பர். அவர்களில் 300குடும்பத்தில் எத்தனை அங்கத்தவர்கள்? எனக் கணக்கெடுத்தால் அம்மக்களுக்கான இவரின் சேவை என்பதை அர்ப்பணிப்பென்றோ அல்லது அளவிடற்கரியது என்றோ கூறலாகாது. அம்மக்களுக்கு அனைத்துமே இவராகத்தான் இருந்திருக்கும். அதனால்தான் தன்னிடம் வேலை செய்தவர்களுக்கு எசமானாக விளங்கியது போலவே ஊர் மக்கள்அனைவருக்கும் எசமானகவே மக்களால் கருதப்பட்டு “எசமான்” என அம்மக்களால் அழைக்கப்படலானார். இன்றும் கூட அவர் வாழ்ந்த வீடு “எசமான் வீடு” என்றே அழைக்கப்படுகிறது. இதன் மூலம் வல்வெட்டித்துறை மக்களினை வழிநடத்தும் தலைமைப்பதவி இயல்பாகவே கைவரப்பெற்றார். அவர் மறைந்து நூற்றிப்பத்தொன்பது வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அவரை குறிப்படும்போது”எசமான்” எனவும் அவருடைய வழிவந்த குடும்பத்தினரை “எசமான் குடும்பத்தினர்” எனவும் அளவிறந்த மரியாதையுடன் வல்வெட்டித்துறை மக்கள் இன்றும் அழைக்கின்றனர். என்பதனைக் கொண்டே அந்த மண்ணில் அவருடைய ஆளுமையானது அழிக்க முடியாதவாறு எவ்வளவு தூரம் ஆழவேருன்றி இருக்கின்றது என்பதனை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஒரு கிராமத்தின் அல்லது பட்டினத்தின் முதல் மனிதராக முன்னுரிமை பெற்றிருந்த வெங்கடாசலம்பிள்ளை அவர்களின் வாழ்வில் 1867ஆம் ஆண்டு பாரிய மாற்றம் உண்டாயிற்று. வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் “தர்மகர்தா” என்னும் கோயில் மணியமாக அக்காலத்தில் கடமையாற்றிவந்த இவர் கண்ட கனவில் “இவரது தந்தையார் வல்வட்டித்துறையில் சிவபிரானுக்கு கோயில் ஒன்றை எடுத்துத்தருமாறு பணிததிருந்தார். இவரது தந்தையராகிய “திருமேனியார்” மறையும் போது வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் தர்மகர்த்தாவாக இருந்தவர். இவற்றுடன் அவருடைய பூட்டனாரான திரு. “வேலர்” ஆரம்பித்து வைத்த நெடியகாட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவில். புட்கரணிப்பிள்ளையார் கோவில். மற்றும் வைகுந்தப் பிள்ளையார் கோவில் எனும் நான்கு கோயில்களுக்கும் மணியமாக இருந்து பெருந்தொண்டு ஆற்றியவர்.

(கடலோடுவதால் கிடைத்த பெரும் செல்வத்தில் திளைத்த வல்வெட்டித்துறையில் திரும்பிய இடமெல்லாம் கோயில்களே எனினும் அவைகளில் பெரும்பாலனவை பிள்ளையார் கோவில்களாகவும் வைரவர் கோயில்களாகவுமே காணப்பட்டன. முழு முதற்கடவுளான சிவபிரானை வழிபடுவதாயின் பருத்தித்துறையில் இருந்த பசுபதீஸ்வரர் கோவிலுக்கே மக்கள் செல்ல வேண்டியிருந்தது. வல்வை மக்களின் வாழ்வே தனது வாழ்வாக நினைத்து வாழ்ந்து வந்த திரு. வேங்கடாசலம்பிள்ளைக்கு இது குறையாகவே பட்டிருக்கும் இந்த நினைவே கனவாக வெளிவந்து அவரின் எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.)

அக்கனவினைக் கண்ட நாள்முதலாய் பெரிய தம்பியார் இதே நினைவிலேயே இருக்கலானார். சிவன் கோவிலை எங்கே அமைப்பது என தவிக்கலானார்! இக்காலத்தில் இவரிடம் ஊழியம் புரிந்த கம்பர்மலையைச்சேர்ந்த ஒருவர் தனது வேலைமுடிந்து தினமும் முத்துமாரியம்மன் கோவிலுக்கு தெற்குப்புறமாக அமைந்திருந்த கற்களும் பற்றைகளும் பலவித செடிகொடிகளும் மரங்களும் வளர்ந்திருந்த நடைபாதை வழியூடாக வீட்டுக்கு திரும்பிச்செல்வது வழக்கம். மின்சாரவசதியற்ற அக்காலத்தில் முன்னிரவில் சிறுபற்றைகளினுடாக நடந்து செல்லும் அவர் ஒருநாள் அப்பகுதியில் நின்ற கொன்றை மரத்தடியில் சிறிய வெளிச்சம் ஒன்றைக் கண்டார். தொடர்ந்து சிலநாட்கள் இவ்வாறு தான்கண்ட விபரத்தை தனது எசமானான வெங்கடாசலம்பிள்ளையிடம் அவர்கூறினார். நம்ப முடியாத வெங்கடாசலம்பிள்ளையும் அடுத்தநாள் அந்த ஊழியரையும் உடனழைத்துக் கொண்டு அவ்விடத்துக்கு சென்று பார்த்தார். ஆம் அந்த ஊழியர் காட்டிய இடத்தில் நின்ற கொன்றைமரத்தடியில் பசுவின் சாணம் எரிந்து கிடக்கக்கண்டார். அத்துடன் கொன்றை மரத்தின் பூக்கள் எல்லாம் அதனைச்சுற்றி விழுந்திருக்கவும் கண்டார். அவ்விடத்தில் நின்று நிமிர்ந்து பார்த்த போது நேர்வடக்காக இருந்த முத்துமாரியம்மன் கோவில் மூலஸ்தானத்தைக் கண்டார். தந்தையார் கனவில் சொன்ன பொருளைப் புரிந்து கொண்ட வெங்கடாசலம்பிள்ளையும் அவ்விடத்திலேயே சிவபிரானுக்கு கோயில் கட்டமுடிவெடுத்தார்.

கப்பல் வணிகம் மூலம் பெரும் பொருள் ஈட்டி புகழ்பெற்ற வர்த்தகராய் இருந்த வெங்கடாசலம்பிள்ளை முன்பிருந்த சைவநாயன்மார்கள் போன்று எக்கணமும் முழு முதற்கடவுளாம் சிவபிரானை நினைத்து அவருக்கு கோயில் கட்டும் முடிவில் செயற்படலானார். கொன்றை மரத்தில் ஜோதி தோன்றிய இடத்தில் கோயில் அமைப்பதற்கு கொன்றை மரங்கள் நிறைந்திருந்த அம்மன் கோவிலுக்கு தெற்காகவும் புட்கரணிப்பிள்ளாயா கோவிலுக்கு மேற்காகவும் அமைந்திருந்த 60 பரப்புக்காணியை விலைக்கு வாங்கிக் கொண்டார். இந்நிலப்பகுதி வெங்கடாசலம்பிள்ளையின் பெரிய தந்தையாராகிய் புண்ணிய மூர்த்தியாருக்கே சொந்தமாக இருந்தது. அந்நிலப்பகுதியில் கற்பாறைகள் அதிகமாகக் காணப்பட்டன. ஊருக்கே எசமானாக வழிவந்து வாழ்ந்து காட்டிய குடும்பத்தில் வந்த பெரியவர் ஆனாலும் இறைவனுக்கு ஊழியம்புரியும் அடியவனாகி தனது கையினாலேயே பெரும் பாறைகளைப் புரட்டியும் தகர்த்தும் “புட்கரணி” என்னும் அந்நிலத்தைச் செம்மைப்படுத்தினார்.

புட்கரணி” என்பது தாமரை அல்லது தாமரைக்குளம் எனத்தமிழில் பொருள் தருவதால் அதற்கு அண்மையில் அமைந்திருந்த பிள்ளையார்கோவில் புட்கரணிப்பிள்ளையார் என அழைக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் பின்நாட்களில் புட்கரணி என்பது புட்டணி என திரிபடைந்துள்ளது. “தீருவில்க்குளம்” எனஅழைக்கப்படும் குளமானது முன்பு தாமரைக்குளம் என்னும் கருத்தில் புட்கரணிக்குளம் என அழைக்கப்பட்டு ஈற்றில் குளமானது தூர்ந்த காலத்தில் தீர்ந்த அல்லது முடிந்த என்றும் பொருள் தரும் தீரு-என்னும் அடியாகப்பிறந்து வில் எனப்படும் குளத்துடன் கூடி தீருவில் என அழைக்கப்பட்டுள்ளது பின்னாட்களில் ஒரேபொருள்தரும் இரு சொற்களும் வில் ஸ்ரீ குளம் இணைந்து தீருவில் எனஅழைக்கப்படவேண்டிய அக்குளம் தீருவிற்குளம் எனவும் குளம் அமைந்துள்ள அப்பகுதி தீருவில் எனவும் இன்று அழைக்கப்படுகின்றது.

இவ்வாறு முத்துமாரியம்மன் கோவிலுக்கு தெற்கில் இருந்த மடத்தில் வாழ்ந்த இவர் அங்கிருந்த படியே சிவனுக்கு கோவில் அமைக்கும் வேலையில் இரவும் பகலும் தன்னை ஈடுபடுத்தினார். இவர் 1867ம் ஆண்டு கோயில் கட்டுவதற்காக ஆரம்பிக்கப்படும் சங்கத்தாபனத்தைச் செய்து கோயிலினைக் கட்ட ஆரம்பித்தார். இவ்வாறு கோயில் கட்ட ஆரம்பித்த வேளையில் தான் அதுவரை வகித்து வந்த வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் நெடியகர்டு திருச்சிற்றம்பலப் பிள்யையார், வைகுந்தப்பிள்ளையார், புட்கரணிப்பிள்ளையார் என்னும் கோயில்களில் மணியம் என்று அழைக்கப்பட்ட “அறங்காவலர்” பதவியினை தனது ஒன்றுவிட்ட சகோதரனான ஆறுமுகத்தார் முருகுப்பிள்ளையிடம் ஒப்படைத்துவிட்டு சிவபிரானுக்கு கோயில் கட்டுவதில் தனது முழுநேரத்தையும் செலவிட்டார்.

கோயில் என்பது இந்துக்களின் வணக்கத்தலங்களைக் குறிக்கும் பொதுப்பெயராக விளங்கியபோதும் கோவில் என்பது சிதம்பரத்தின் சிறப்புப்பெயராகும். பல்லவர்காலமான கி.பி 7ம் நூற்றாண்டு தொடக்கம் இன்றுவரை காசி, இராமேஸ்வரம், சிதம்பரம் ஆகிய தலங்களே சிவனுடைய தலங்களில் பெருமைபெற்றவையாக விளங்குகின்றன. காசியிலும் இராமேஸ்வரத்திலும் இறந்தவர்களும் அந்திமக்கிரியை செய்யப்பட்டவர்களும் முத்தியை அடைவார்கள் என்பது ஜதீகம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிதம்பரத்தில் நடராஜப்பெருமானை தரிசித்தவர்களே முத்தியடைவார்கள் என்பதே இவ்வாலயத்தின் பெரும் சிறப்பிற்கு காரணமாகும்.

இவ்வாறு பெருமைபெற்ற சிதம்பரம்கோயிலினை அடியொற்றியதாக மூன்றுவீதிகள் கொண்டதாகவும் பிருதிவிலிங்கம், தேயுலிங்கம், அப்புலிங்கம், வாயுலிங்கம், ஆகாயலிங்கம் என்றும் ஐவகை லிங்கங்களை தனித்தனியாக அமைத்தார். மூலஸ்தானத்தில் பாணலிங்கம் உட்பட மற்றும் அண்ணாமலை ஈஸ்வரர் மகாவிஸ்ணு என பல வகைத்தெய்வங்களுடன் நவக்கிரகங்களும் சைவ நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திநாயனார் என்பவர்களுடன் மாணிக்கவாசக சுவாமிகள் என்பவர்களுக்கும் தனித்தனியாக விக்கிரகங்களை பிரதிஸ்டை செய்தே இக்கோயிலினை பெரியவர் வெங்கடாசலம்பிள்ளை அவர்கள் அமைத்தார்.

இச்சிவன்கோவிலின் மூலஸ்தானத்தில் பிரதிஸ்டை செய்யப்பட வேண்டிய மூலலிங்கமான பாணலிங்கத்தை காசியில் இருந்து நேரடியாக கடல்வழி மூலம் வல்வெட்டித்துறைக்கு கொண்டுவந்து பிரதிஸ்டை செய்தார். “பாணலிங்கத்திற்கு” இயற்கையிலேயே பூணூல் அணிவது போன்ற இரேகை அமைப்பு படர்ந்திருக்கும். ஆயிரம்கல் சிவலிங்கத்திற்கு ஒரு ஸ்படிகலிங்கம் சமன் 12இலட்சம் ஸ்படிகலிங்கங்களிற்கு ஒரு பாணலிங்கம் சமனாகும். பாணலிங்கம் வடித்தெடுக்கப்படுவதில்லை. புpரமா. விஷ்ணு முதலிய தேவர்கள் பூஜித்த புண்ணிய நதிகளான கங்கை. யமுனை. நர்மதை போன்றவற்றில் இலிங்கவடிவில் இயற்கையாகவே உருண்டோடி வரும் சிறப்பு வாய்ந்தவையே பாணலிங்கமாகும்.”

இவ்வாறு காசிவரை சென்று இப்புனிதலிங்கத்தைக் கொண்டு வந்தவர் பெரியவர் வெங்கடாசலம்பிள்ளையின் ஒன்றுவிட்ட சகோதரனான ஆறுமுகத்தார் விஸ்வநாத பிள்ளையாகும். இங்கு கூறப்பட்ட ஆறுமுகத்தாரும் பெரியவர் வெங்கடாசலம்பிள்ளையின் தந்தையான திருமேனியாரும் உடன்பிறந்த சகோதராகள் ஆவார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பாணலிங்கத்தை மட்டுமல்லாது உற்சவ மூர்த்தியாகிய நடேசர் மற்றும் சந்திரசேகரர் ஆகியேரின் திருவுருவங்களையும் விஸ்வநாதபிள்ளையவர்கள் காசியில் இருந்து வல்வெட்டித்துறைக்கு மிகுந்த பொருட்செலவில் கொண்டு வந்துள்ளார். இங்கு கூறப்படும் விஸ்வநாதபிள்ளையின் மகனான சரவணமுத்துப்பிள்ளை அவர்களே பின்நாட்களில் சிவன்கோவிலுக்கு தங்கத்தகடுமருவிய தூபியை இயற்றுவித்தார். என1884 ஆம் ஆண்டு வெளிவந்த வைத்திலிங்கப்புலவருடைய “சைவாபிமானி” பத்திரிகை தெரிவிக்கின்றது இவ்வாறு காசிக்கு சென்று சிவலிங்கத்தைக் கொண்டு வந்த கப்பலின் பெயர் “அன்னபூரணி” என்பதாகும். இதனால் இக்கப்பல் பின்னர் “காசிஅன்னபூரணி” என அழைக்கப்பட்டது. விஸ்வநாதர் வாழ்ந்திருந்த வீட்டின் பெயரும் “அன்னபூரணி” ஆகும். வல்வெட்டித்துறை கிழக்குவீதியில் இலக்கம் 84 இல் அமைந்திருக்கும் இக்காணியின் பெயரும் “விஸ்வநாதர் வளவு” என்பதாகும். விஸ்வநாதபிள்ளையின் மகனான சரவணமுத்துப்பிள்ளையின் மறைவின்பின் அவர் மனைவியாகிய “சின்னத்தங்கம்” உடைய காலத்திலும் மேற்கூறப்பட்ட கப்பல் வர்த்தகத்தில் ஈடுபட்டமை தெரியவருகின்றது.

இக்கோவிலை சிறப்புற அமைத்து வரும் வேளையில் 1877ம் வருடம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரும் பஞ்சமும் வாந்திபேதி நோயும் ஏற்பட்டது. இறப்புக்கள் வேகமாக அதிகரிக்க உணவுப்பொருட்கள் கிடைப்பதே அரிதாகியது. பசியாலே பலர் பரிதாபமாக இறந்தனர். இக்காலத்தில் பர்மாவிலும் இந்தியாவின் பலபகுதிகளில் இருந்தும் அரிசி மற்றும் உணவுத் தானியங்களை கொண்டு வந்து குடாநாட்டு மக்களின் பஞ்சத்தைப் போக்குவதில் பெரியவர் பெருமுயற்சி செய்தார். யாழ்ப்பாண மக்களிடைய வியாபார நோக்கில் வந்து குடியேறிய பல செட்டிமாரும் சுதேச பணமுதலைகளும் வறியோரை மேலும் வாட்டி தமது பணப்பைகளை நிரப்ப முற்பட்டபோது தனது சேமிப்புக்கிடங்கில் இருந்த அனைத்து அரிசியையும் தனது கப்பல்களில் வரும் அரிசியையும் பஞ்சமென வந்தவர்களுக்கு இல்லையெனாது அள்ளிக்கொடுத்த வள்ளல் இவர். இதன்மூலம் தன் பொருள் எல்லாம் இழந்தார். இதனால்கோயில் கட்டுவதிலும் பலசிக்கல்கள் பொருளாதார ரீதியாக ஏற்பட்டன. எனினும் இவருடைய தம்பியார் குழந்தைவேலு இராமசாமி மற்றும் ஒன்றுவிட்ட சகோதரன் விஸ்வநாதபிள்ளை என்பவர்களின் உதவியுடன் தனது தந்தையின் சொல்போலவே வல்வெட்டித்துறைமண்ணில் சிவபிரானுக்கு உரிய கோவிலை சிறப்பாகக்கட்டிமுடித்தார்.

காசியில் இருந்து பாணலிங்கமாக கொண்டுவரப்பட்ட இலிங்கேஸ்வரர் வல்வெட்டித்துறை கோயிலில் பிரதிஸ்டை செய்யப்பட்ட பின் “வைத்தீஸ்வரப்பெருமான்” என்னும் பெயரைப்பெற்றார். இவருடன் எப்பொழுதும் கூடஎழுந்தருளியிருக்கும் அம்பிகையின் பெயர் வாலாம்பிகை இதனால் “வாலாம்பிகா சமேத ஸ்ரீவைத்தீஸ்வரபெருமாள்” தேவஸ்தானம் என இக்கோயில் அழைக்கப்படலாயிற்று.

கோயில் கட்டிமுடித்தபின் 08.06.1883 (சுபானுவருடம் வைகாசிமாதம் 27ம் திகதி வெள்ளிக்கிழமை) முதலாவது நூதனபிரதிஸ்டா கும்பாபிஷேகம் நடத்தப்பெற்றது. அக்காலத்தில் இலங்கையில் பிரபல்யமிக்கவராக விளங்கிய நா.குமாரசாமிக்குருக்களின் தலைமையில் மிகச்சிறப்பாக நடத்தப்பெற்ற இக்கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அன்றே ஆறுகாலப் பூசையையும் ஆரம்பமாயிற்று. புலோலியைச்சேர்ந்த சண்முகக்குருக்கள் கோவிலின் முதலாவது பூசகராக நியமிக்கப்பட்டார்.

சைவ ஆகமவிதிப்படி நடைபெறும் இப்பூசைகளை “ஆறுகாலப்பூசைகள்” என்பர் இவைபின்வருமாறு.

 

அதிகாலைப்பூசை 5.45 மணி அதிகாலை
காலைப்பூசை 9.30 மணி அதிகாலை
மத்தியானப்பூசை 11.45 மணி நண்பகல்
மாலைமுதற்காலப்பூசை 6.00 மணி பிற்பகல்
மாலைஇரண்டாம்காலப்பூசை 7.30 மணி முன்னிரவு
அர்த்தசாமம் 8.30 மணி.

இக்கோவிலில் நடைபெறும் மகோற்சவம் எனப்படும் பிரமோற்சவம் 16 நாட்கள் என கணிக்கப்பட்டதெனினும் மகோற்சவம் எனப்படும் இத்திருவிழாக்காலம் முழுமையாக முடிவுற மூன்று வாரங்களாகும். இக்கோயிலில் தனியாக சூரிய பூசை நடைபெறுவது போலவே சூரியக்கதிர்கள் இக்கோவிலின் மூலஸ்தானத்தில் மீது நேரடியாக விழுகின்ற நிலையில் தெளிவான வானத்துடன் சூரிய வெப்பம் மக்களை வாட்டாத பங்குனி மாதத்திலேயே மகோற்சவநாட்கள் பெரியவரால் தெரிவுசெய்யப்பட்டு இன்றுவரை நடைபெற்று வருகின்றன.

கொடியேற்றத் திருவிழாவிற்கு முதல்நாளில் சிவன்கோவிலின் பிரதமகுரு கோவிலின் இடது புறத்தில் அமைந்திருக்கும் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்று “ஊரின் குல தெய்வமான” முத்துமாரியம்மனிடம் மகோற்சவத்தைச் செய்வதற்கு அனுமதியையும் ஆசியையும் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு நடைபெறுகின்றது. சிவனுக்கு தனிக்கோயில் அமைத்த பெரியவர் முத்துமாரிஅம்மன் கோவில் தர்மகத்தாவாக இருந்தவேளையிலேயே சிவன்கோயிலை நிர்மாணிக்க ஆரம்பித்தார். அப்பெருந்தாயின் அனுமதியைப் பெற்றே இன்றும் வல்வெட்டித்துறை மக்கள் எக்காரியத்தையும் செய்வர். “அவள் அனுமதியின்றி எக்காரியமும் செய்தல் கூடாது. அனுமதியின்றிச் செய்தால் அக்காரியம் சித்திக்காது” என்பது பலகாலமாக வல்வெட்டித்துறை மண்ணில் தொடர்ந்து வரும் பெரு நம்பிக்கையாகும். இதனை உறுதிப்படுத்தும் தக்கசான்றாக இந்நிகழ்வை நாம்கொள்ளலாம். மறுநாள் மாணிக்கவாசகர் ஊர்முழுக்கச் சென்று சிவன்கோவிலின் கொடியேற்றத்திற்காக கட்டியம் கூறுவார். தொடர்ந்து வரும் அமவாசைத்திதியன்று சிவபிரானின் கொடியேற்றத்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும் அன்றுமுதல் மூன்று நாட்களுக்கு விநாயகப்பெருமானின் சக்தியை அதிகரிக்க விசேடபூசையும் தொடர்ந்து வரும் மூன்று நாட்களுக்கு முருகப்பெருமானுக்கும் வள்ளிதெய்வானைக்குமுரிய விசேடவழிபாடும் நடைபெறும். தொடர்ந்து வரும் நாட்களில் மகாயாகத்துடன் வசந்த மண்டபத்தில் சிவபெருமான் வாலாம்பிகை விநாயகர் முருகன் சண்டேஸ்வரர் என்பவர்களுக்கான விசேடபூசைகளுடன் மூலமூர்த்திக்கு சந்திரசேகரப்பட்டமும் வழங்கப்படும். இவ்வாறு தொடரும் மகோற்சவநாட்களில் பங்குனிப் பூரணை நாளுக்கு முன்நாளில் தேர்த்திருவிழாவும் இறுதிநாளான பூரணைநாள் காலையில் வெள்ளியிலான இடபவாகனத்தில் கோவிலுக்கு ஒருமைல் கிழக்குத்திசையில் அமைந்திருக்கும் ஊறணி தீhத்தக்கடற்கரையான வங்கக்கடலில் சுவாமி தீர்த்தமாடுவார். பின்னர் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலில் தங்கயிருந்து இரவு முழுநிலவில் உமையவளுடன் கல்யாணசமோதரராய் ஆலயம் திரும்புவார். அதன்பின் கொடியிறக்கம் நடைபெறும்.

இதற்கு அடுத்தநாள் சிவபெருமான் உமாதேவி சுந்தரமூர்த்தி நாயனார் பங்குகொள்ளும் ஊடல் திருவிழா நடைபெறும். அடுத்த நாள் சண்டேஸ்வரருக்கு சிறப்பான அலங்காரங்களுடன் குறிப்பாக உற்சவமூர்த்திக்கு அணியப்பட்ட ஆபரணங்களையும் சண்டேஸ்வரருக்கு அணிவித்து இறைவன் வீதி உலாவந்த வாகனம் என்னும் விமானத்தில் சிறப்பான அலங்காரங்களுடன் சண்டேஸ்வரர் வீதி உலா வருவார். இறுதியில் ஆலவட்டம் கொடி என்பனவற்றுடன் மேளதாளம் நாதஸ்வரம் முழங்க சண்டேஸ்வரரை மையப்படுத்தி கோயில்வாசலில் சுற்றிச்சுற்றி வருதல் கண்கொள்ளாக் காட்சியாகும்.

இறுதிநாளில் வைரவர்மடை எனக் கூறப்படும் வைரவர் பூசை நடைபெறும். இத்திருநாளில் ஆலயத்தின் காவல் தெய்வமாக விளங்கும் வைரவருக்கு நடைபெறும் விசேடபூசையுடன் மகோற்சவ காலம் முடிவடையும்.

16வருடங்கள் தனது திரண்டசெல்வத்தையெல்லாம் செலவழித்து ஆகமவிதிகளிற்கு அமைய வல்வெட்டித்துறை மக்களுக்காக வைத்தீஸ்வரப்பெருமான் பெயரில் கோவில் அமைத்த “பெரியதம்பியார்” என்னும் திரு. வெங்காடசலம்பிள்ளை பிறப்பிலே கடல்வணிகராகப் பிறந்திருந்தார். எனினும் சிவன்கோவிலை பிரதிஸ்டாபிஷேகம் செய்தபின் சிவதீட்சைபெற்று உருத்திராட்சமாலை அணிந்து நாள்முழுதும் மேலாடையற்ற உடலில் திருநீறணிந்து எந்நிலையிலும் சிவமந்திரம் ஓதும் சிவனடியாராகவே மாறியவர். அவ்வாறே தன் இறுதிநாள்வரை கழித்தவர்!

வலவெட்டித்துறை மக்களிற்க்கும் அதன் அயலூர் மக்களுக்கும் தன்திரண்ட செல்வங்களை எல்லாம் அள்ளிக்கொடுத்த வள்ளல் திரு. வெங்கடாசலம்பிள்ளை அம்மக்களின் அருட்கொடைக்காக ஆண்டவனின் சன்னிதானத்தையும் அமைத்துக் கொடுத்தார். இவரின் அள்ளிக்கொடுக்கும் வள்ளண்மையை “வல்வைக்கலித்துறை” பாடிய எமது அயலூரவரான உடுப்பிட்டியைச்சேர்ந்த சிவசம்புப்புலவர் உயர்ந்தும் வியந்தும் பாடியுள்ளார். 1829 – 1910ம் ஆண்டுகளை தனது வாழ்க்கைக்காலமாக கொண்டிருந்த உடுப்பிட்டி சிவசம்புப்புலவர் நாவலரின் கடினநடைப் பிரசங்களையும் எளிய நடையில் சாதாரணமக்களும் விளங்கும்படி விளக்கிக்கூறும் அற்புத சொல்லாட்சி மிக்கவர். இத்தகைய சிறப்புமிக்க இவர் வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோவில் பிரதிஸ்டை செய்யப்பட்டதன்பின் பாடிய வல்வைக்கலித்துறையில்.

 

நீதிமரபிற்றிருத் தொண்டரோடு திகழும் பத்திச்
சோதிமலர்முக வெங்கடாசலத்துங்க வள்ளல்
பாதிமதிச் சடையான் தேவி யோடு பயிலத்தந்த
சேதிமமொன்றையும் வல்வைச் சீரைத் தெரிந்திடவே………..

விண்ணியல்செல்வத்தின் மண்ணியல் செல்வமிதக்கத் துய்க்க
புண்ணிய சீலத்திருவெங்கடாசலப் பூபன்வந்து
நுண்ணியவான் குலத்தார் வாழும் வல்வை நகரினூடங்
கொண்ணியல் போக நகர் வேறிங்கியாவதி சைந்திடவே ……..

கார்காமர் கண்டத்து நம் வைத்தியேசர் கருணையினாற்
தீர்காயுளு மிட்டிசித்தியுமெய்திச் செறிந்தருள
நீர்க்காகலெலா முத்த சங்கினமுர்ந்து நிறைந்த வல்வை
ஊர்க்காவவலர்வைகிலெங்களுக்கே பெரிநூதியமே!………..

எனப்பாடியுள்ளமை 19ம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியில் வல்வெட்டித்துறையில் வாழ்ந்த மக்களின் சிறப்பையும் அவர்களுடைய முதல்வனாகவும் முழுமையானவராகவும் திகழ்ந்த வெங்கடாசலம்பிள்ளையின் சீரையும் சிறப்பையும் தெரிந்து கொள்ள இது ஒன்றே போதுமானது அல்லவா!………. வல்வெட்டித்துறையில் வைத்தீஸ்வரர் கோவிலை அமைத்ததுடன் அபிஸேக ஆராதனைகளை புரியும் அந்தணப் பெருமக்கள் தமது குடும்பத்துடன் தங்கி வாழ்வதற்காக கோயிலின் தெற்குவீதியில் குடிமனை ஒன்றையும் அமைத்துக் கொடுத்தார். இதேபோல காலம் தவறாது கோவிலில் தேவாரதிருவாசகங்களை பாடும் “ஓதுவார்” களுக்காக கோவிலின் தென்மேற்கு மூலையில் ஒரு குடிமனையையும் அமைத்திருந்தார். இன்றும் கூட “ஓதுவார் வீடு” என்பது சிதைந்த நிலையிலும் அடையாளம் காணக்கூடியவாறே காணப்படுகின்றது. இவ்வாறு ஆலயத்தின் நித்திய கருமங்களிற்கு இடையூறு நேராது கவனித்துக்கொண்டார்.

கோவிலின் நித்தியபூசைகளின் போது நாதஸ்வரகானம் இசைப்போர் சிவ மந்திரத்திற்கு கட்டியம் கூறும் மேளம் அடிப்போர் மற்றும் ஆஸ்தானவித்துவான்களை இந்தியாவில் இருந்து வரவழைத்து கோவிலுக்கு அண்மையில் தனக்குரிய காணியில் அவர்களை குடியமர்த்தினார். (இக்காணியிலேயே பின்நாட்களில் “குமரகுரு மீன்பதனிடும் நிலையம்” அமைந்திருந்தது) அத்துடன் எப்பொழுதும் தெய்வங்களையே மயக்கும் ஆஸ்தான புல்லாங்குழல் விற்பன்ரையும் சேவைக்கு அமர்த்தி இருந்தார். மக்களுக்கு அருள் புரியும் ஆண்டவன் வாழும் கோயில் என்பது அதற்குரிய அனைத்து தேவைகளையும் தன்னகத்தே பூர்திசெய்யும் வல்லமை கொண்டதாக இருக்கவேண்டும். அதுவே பூரணமான கோயிலாகும். அதற்கேற்பவே வாலாம்பிகா சமோத ஸ்ரீவைத்தீஸ்வரர் கோயிலை அமைத்தவர் பெரியவர் வெங்கடாசலம்பிள்ளை அவர்கள்.

கடல்வணிகனாய்ப் பிறந்து கடலோடியாய் வாழ்ந்த போதும் கோவிலின் தேவைக்கான நெல்லைத்தானே உற்பத்தி செய்துகொண்டார். கோயிலிற்கு அருகாமையில் இருந்த தீருவில் வயலில் சிவன் கோவிலைச் சார்ந்தவர்களினால் உற்பத்தி செய்யப்படும் நெல் விளைச்சலின் நடைபெறும் கதிர்அறுப்பென்பது பெரும் திருவிழாவாக அக்காலத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. ஒவ்வொரு தைப்பொங்கலிற்கு அடுத்த நாள் கோவிலில் இருந்து வயலிற்கு செல்லும் மாணிக்கவாசகப்பெருமான் கதிர்அறுப்பில் ஈடுபடுவார். நாள் முழுக்க அறுவடைசெய்தபின் அறுவடை செய்த நெல்லுடன் பிற்பகலில் மாணிக்கவாசகப்பெருமான் கோவிலுக்குத்திரும்புவார் “புதிர் எடுத்தல்” என்னும் பெயரில் பெரியவர் வெங்கடாசலாம்பிள்ளையால் நடத்தப்பெற்று வந்த இந்த நிகழ்வும் திருவிழாவும் திரு.சபாரத்தினம் எசமான் காலம் வரையில் கொண்டாடப்பட்ட தெனினும் பின்பு ஏனொ கைவிடப்பட்டுவிட்டது.

தனது தந்தையின் கனவையும் ஊர்மக்களின் தேவைகளையும் நாடிப்பிடித்தறிந்த வெங்கடாசலம் பிள்ளையவர்கள் ஆகம விதிக்கமைய சிவன்ஆலயம் அமைத்ததுடன் தனது சமூகக்கடமை முடிந்துவிட்டது என எண்ணாமல் வல்வெட்டித்துறை மக்கள் தொடர்ந்து ஆசாரசீலராய் இருக்கவும் வாழவும் வழிவகுத்தார். பத்தென்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் 1883ம் ஆண்டில் சிவன் கோவில் நிர்மாணம் செய்யப்பட்டதன் பின் சிவபூமியாக விளங்கிய வல்வெட்டித்துறையில் சிவனின் வாகனமானதும் சைவமக்களின் பூசைக்கேற்றதுமான “கோமாதா” என அழைக்கப்பட்ட பசுவதையை முற்றுமுழுதாக தடைசெய்தார். சமூகத்தில் தனக்கிருந்த “எசமான்” என்னும் தலைமைப்பதவியின் பெயரால் பொதுமக்களிடம் எந்தவித கண்டிப்பையும் காட்டாத பெரியவர் உணவுக்காக மாடுவெட்டுவதற்கு தன்னுடைய கடும் எதிர்ப்பைக் காட்டி அதனை மறுத்தார். அன்று முதல் இன்று வரை வல்வெட்டித்துறையில் இறைச்சிக்காக மாடு வெட்டப்படுவதில்லை. பர்மாவிலும் இந்தியாவின் பலபகுதிகளிலம் இருந்து வல்வை மக்களினால் கப்பலில் கொண்டு வரப்படும் அரிசி தேங்காய் மற்றும் சிறு தானியங்கள் என்பன வற்றைக் கொள்வனவு செய்யவரும் பல ஊர் வியாபாரிகளும் உள்ளூர் மீனவர்களினால் பிடிக்கப்படும் மீன்களை வாங்கவரும் சிறுவியாபாரிகளும் கலந்து வல்வெட்டித்துறையில் தங்க முற்படுவதால் ஏற்படும் பல் சமூகச் கலாச்சாரம் தான் நேசித்த தனித்துவம் மிக்க குடும்பமான ஆன வல்வெட்டித்துறையில் எதிற்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்னும் தீர்க்கதரிசனத்தில் வியாபார நோக்கமாகவோ அல்லது வேறெந்த காரணங்களுக்காகவோ வல்வெட்டித்துறைக்குள் எவர் வந்தாலும் இரவுப்பொழுதுக்கு முன் ஊரைவிட்டு போய்விட வேண்டும் என்பதிலும் சமூகத்தலைவரான பெரியவர் வெங்கடாசலம்பிள்ளை எந்த சமரசத்தையும் ஏற்றக்கொள்ளவில்லை. ஊருக்குள் ஏற்படும் எப்பிணக்குகளையும் ஊரவர்களே தீர்த்துக்கொள்ளும் விதியினையும் வல்வைச் சமூகத்தில் இவரே ஆழவேரூன்றியுள்ளார் எனஅறியமுடிகின்றது. இதன் காரணமாகவே வல்வெட்டித்துறை மக்கள் என்பது பல்லின சமூகம் அல்லது ஓரு சமூகம் என்றில்லாமல் ஒரு குடும்பம் என்பதே ஒரு ஊராக இன்றுவரை நின்று நிலவுகிறது (இதனால்தான் வல்வெட்டித்துறை என்னும் ஒரு குடும்பத்தில் இருந்து வந்து உலகத்தமிழரையே “தமிழ்த்தேசியம்” என்னும் ஒரு கொடியில் இணைத்த பெரும் தலைமையை நாம் காண முடிந்தது)

சமூகம் அல்ல ஒரு குடும்பம் என்னும் நிலையில் காணப்படும் வல்வெட்டித்துறைக்கான தலைமைப்பதவியினை எவ்விதசலனமுமின்றி இவர் முன்னெடுத்தார். அதேவேளை 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஈழத்தமிழரின் அரசியல் வழிகாட்டலிலும் இவரின் முன்னெடுப்பு குறிப்பிடக்கூடியதாகவே இருந்துள்ளது. இவ்வகையில் 1879இல் சட்டநிரூபணசபையின் கௌரவஉறுப்பினரான முத்துக்குமாரசாமியின மறைவின் பின்னர் அவரது வெற்றிடத்திற்கான போட்டியில் கத்தோலிக்கரான “கிறிஸ்தோபர் பிறிற்ரோவிற்கு” இவர் வழங்கிநின்ற ஆதரவைக்குறிப்பிடலாம். தேசாதிபதியின் நியமனத்தின்மூலம் நியமிக்கப்படும் உறுப்பினராக பொதுசேவையில் நீண்டஅனுபவமும் பிரபல சமூகசேவையாளராகவும் ஒரு மாவட்டநீதிபதியாகவும் அறியப்பட்ட கத்தோலிக்கரான பிறிற்றோவை நியமிப்பதன் மூலம் இலங்கைத்தமிழரிடையே மதரீதியான காழ்ப்புணர்வை தவிர்ப்பதுடன் மக்களிடையேயான ஒற்றுமையும் அவர்களிற்கான சேவையும் பூரணமாக்கப்படும் என இவர் நம்பினார். எனினும் அப்போட்டியில் “சைவவேளாளர்” என்னும் கோசத்தினை முன்னிறுத்திய ஆறுமுகநாவலரின் அதீத பிரச்சாரத்தினால் பொன்னம்பலம் இராமநாதன் எனும் உயர்குடி வேளாளரே தேசாதிபதியால் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவரும் தனது பதவிக்காலம் முழுமையுமே தனக்காகவும் கொழும்பை மையமாகக் கொண்ட தன்னைப்போன்ற உயர்குடிகளான தமிழர்கள் மற்றும் சிங்களவர்களிற்காகவுமே குரல்கொடுத்து வந்துள்ளார். தனது சொந்த இனமான ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகளிலோ அல்லது பொருளாதார அபிவிருத்திகளிலோ எவ்விதஆர்வத்தையும் காட்டாத அவர் தனது தனிப்பட்ட நலனிற்காகவே ஆங்கிலஅரசை அதிகம் எதிர்பார்த்ததாக பேராசிரியர் வில்சன் கூறுகின்றார். இராமநாதன் தனது “சேர்”பட்டத்திற்காக அக்காலத்தில் தேசாதிபதியாக இருந்த Sir Arthur Gordon மூலம் ஆங்கிலஅரசை வேண்டிக்கொண்டதையும் திரு.வில்சன் வெளிக்கொணாந்தார் (a.j.wilson 2000.op.cit. pa46) பின்வந்த காலங்களில் படித்தவர்களிற்கே வாக்குரிமை என சர்வஜன வாக்குரிமையை மறுத்த இந்த சேர் பொன். இராமநாதனின் செயலின் மூலமே அவரின் உண்மைத்தன்மையை யாரும் உணர்ந்து கொள்ளலாம். தமது இனத்தையும் மொழியையம் சிந்திக்கமறுக்கும் இராமநாதன் போன்ற அரசியல்வாதிகளினாலேயே இன்றும் ஈழத்தமிழினம் அழிவுகளைச்சந்தித்து வருகின்றது. இவ்வகை அரசியல்வாதிகளிற்கு எதிராக 130 வருடங்களிற்கு முன்பே போர்க்கொடி தூக்கிய திரு.வெங்கடாசலம்பிள்ளையின் அரசியல் தீர்கதரிசனமும் போர்க்குணமும் ஆச்சரியயப்படத்தக்கது அல்ல என்பதை வரலாறு நமக்கு உணர்த்தி நிற்கின்றது. இவ்வகையில் வல்வெட்டித்துறையின் சமூகமட்டத்தில் மட்டுமல்லாது ஈழத்தமிழருக்காக அரசியல் அரங்கிலும் போராடிய “தமிழ்த்தேசியவாதி” யாகவே இவரை நாம் பார்க்கலாம். இன்றுவரை ஆறுமுகநாவலரையும் சேர்.பொன்.இராமநாதனையம் வல்வெட்டித்துறை மக்கள் ஏற்றுக்கொள்ளா திருப்பதற்கும் வெறுப்பதற்கும் ஆறுமுகநாவலரின் சிலைகூட வல்வெட்டித்துறை வீதியால் வரமுடியாமல் திரும்பி சென்றதற்கும் இதுவே காரணமாயிற்று.

தான் வாழும் போது மட்டுமல்லாமல் தான் வாழ்ந்த காலத்தின் பின்னும் சீரானபாதையில் ஒருசமூகத்தின் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டுவது என்பது இலகுவானதல்ல. ஓரிரு வருடங்கள் அல்ல 100வருடங்களுக்கு மேல் நீண்ட தான்…… தனதுசமூகம்…… என்னும் அவருடைய நேரிய பாதை என்பது அவருக்கு முன்பிருந்ததைவிட அவரது சமகாலத்தைவிட அவருக்குப்பின் எமது மண்ணிற்கு அதி உயர்ந்த பெரும் கௌரவத்தை பெற்றுக்கொடுத்தது என்றால் மிகையாகாது. அதனால் தான் 1822ம் ஆண்டில் அவதரித்த அவரின் வாழ்க்கையை இன்றும் நாம் தேடுகின்றோம்.

பெரியவர் தான் தேடிய சொத்துக்களையும் நிலபுலங்களையும் தான் கட்டிய கோவிலின் பெயரில் எழுதிவைத்து அக்கோயிலானது எக்காலத்திலும் நெறிபிரளாது இருப்பதற்காக அதன் நிர்வாகத்தை மட்டுமே தொடரும் தனது ஆண்சந்ததிக்காக எழுதிவைத்தார். இதன்மூலம் பல ஏக்கர் நிலங்கள் பின்வந்த காலங்களில் இவரது பரம்பரையினருக்கு பயன்பட்டதைவிட கோயில்க்காணி என்னும் பெயரில் யார் யாரோ என சமூகத்தின் பலதரப்பட்வர்களுக்கும் பயன்பட்டன. 1956ம் ஆண்டில் முல்லைத்தீவில் நீரில்மூழ்கிய நிலையில் இருந்த ஆங்கிலேயக்கப்பலான “King of Atlatic” கப்பலை வாங்கிய காலத்தில் ஆங்கிலேய அரசினரிடமிருந்து இவரால் விலைக்குவாங்கப்பட்டிருந்த வற்றாப்பளைமுதல் இரட்டைவாய்க்கால் வரையிலான நந்திக்கடலின் கிழக்கு மற்றும்தெற்குப் பகுதிகளில் இருந்த காணிகளும் தென்னந்தோப்புகளும் என 90 ஏக்கர் வரையானநிலங்களில் பலவும் பின்வந்தகாலங்களில் உரிமைகேரப்படாத நிலையில் பின்வந்த அரசாங்கத்தினாலும் தனியார்களினாலும் சுவீகரப்படுத்தப்பட்டமை தனக்கென வாழாது பிறருக்கென வாழ்ந்த இவரின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டான உதாரணமாகலாம்?

தனதுநீண்ட நெடுங்கனவை 1883இல் நிறைவேற்றியதுடன் நில்லாமல் தொடர்ந்தும் கப்பல்கள் மூலம் கடல்வணிகம் புரிந்த இவரின் கப்பல்களில் ஒன்றைப்பற்றிய சிறுகுறிப்பொன்று பின்வருமாறு 18.march.1892 The brig Annalachchemy  Belonging Tirumani periathamby  A Wealthy  merchant of valvettithurai. Capaized off mandaitivu in the offing. என 1923 வெளியிடப்பட்ட Notes on Jaffna என்னும் நூலில் பக்கம் 55இல் காணப்படுகின்றது. இக்குறிப்பின் மூலம் தனது இறுதிக்காலம் வரை கடல்வழி வணிகம் புரிந்தவராக இவரை நாம் அறியக்கூடியதாக உள்ளது. ஏனெனில் அக்கோவிலின் திருப்பணியிலேயே தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த “பெரியவர்” திரு.வெங்கடாசலம்பிள்ளை அவர்கள் நந்தன ஆண்டு ஐப்பசிமாதம் 11ம் நாள் அதாவது 24.10.1892 ஆங்கிலநாளில் தன்பூதவுடல் நீங்கி புகழுடன் இறைவன் திருப்பாதம் அடைந்தார்.

 

“குடிதழிஇக் கோலோச்சு மாநிலமன்னன்
அடிதழிஇ நிற்குமுலகு”

என்னும் திருவள்ளுவரின் வாக்கிற்கமைய வல்வெட்டித்துறையில் வாழ்ந்து “திசையெலாமிசை பரப்பிய திருமேனியார் வெங்கடாசலமெனும் பெரியதம்பியார்” ( Notes on  Jaffna பக்கம் 321) எனப்புகழப்பட்டு அவர் வாழ்ந்திருந்தபோது மட்டுமல்லாமல் அவர் வாழ்ந்து நூறாண்டுகள் கடந்தபின்னும் அவர் பெயரையும் அவர் வழியையும் அவர் வழிவந்தவர்களையும் இந்த உலகம் அன்போடு ஆதரித்து நிற்பது தொடரும் புதியவரலாறாகும். வல்வெட்டித்துறையின் “சமூகத்தலைவராக” விளங்கிய வெங்கடாசலம்பிள்ளையின் சொந்த நிலத்திலேயே (கரையா(ர்)முள்ளிவாய்கால்) அவர் வழியில் வந்து ஈழத்தமிழினத்தின் “தேசியத்தலைவராக” உயர்ந்த வேலுப்பிள்ளை பிரபாகரனது புகழுடலையும் கண்டெடுத்தது என இலங்கைஅரசு கூறமுற்படுவது எதன் தொடர்ச்சி!……. வரலாறுகள் மீண்டும் மீண்டும் வரும் என்பதற்கு இவர்களின் வாழ்க்கையே சாட்சி.

By – Shutharsan.S

 

நன்றி – ஆய்வும் ஆக்கமும் -“தமிழ்நீ.”பொன்.சிவகுமாரன்

                  மூலம் – வல்வை இணையம்

Sharing is caring!

Add your review

12345