சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்

சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..
இப்பாடலை அன்று முணுமுணுக்காத வாயே இல்லை என்று சொல்லுமளவுக்கு புகழ் பெற்ற ஈழத்துத் துள்ளிசைப் பாடல். இலங்கை, தமிழ்நாடு மட்டுமல்ல தமிழர்கள் வாழும் நாடுகள் முழுவதும் இப்பாடல் புகழ் பெற்றிருந்தது. இன்றும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடல். இப்பாடலுக்கு 40 வயதாகிறது.

இப்பாடலைப் பாடியவர் பொப்பிசைப் பிதா நித்தி கனகரத்தினம். 70களில் நித்தி கனகரத்தினம் இலங்கை மேடைகளில் கோலோச்சியவர். சுகததாச ஸ்டேடியத்தில் அரங்கம் நிறைந்த காட்சிகள் நடக்கும்.

அக்காலத்தில் நான் அவரை அறிந்தது ஒரு பொப் பாடகராக அல்லது மேடை பாடகராக மட்டுமே. பல காலத்துக்குப் பிறகு அன்றைய மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் (வந்தாறுமூலையில்) விரிவுரையாளராக சேர்ந்த போது தான் நித்தியை முதன் முதலாகச் சந்தித்தேன். பொப் பாடகராக அல்ல.

பல்கலைக்கழக விரிவுரையாளராக. ஆமாம், விவசாயபீடத்தில் விரிவுரையாளராக இருந்தார். மேடைகளில் துள்ளிசை பாடிய அந்த மனிதரா இவர். ஆச்சரியமாக இருந்தது. மிகவும் அமைதியானவர். மிகவும் பண்பானவர். சிறந்த ஒரு விரிவுரையாளர். அப்போது அவர் பாடுவதை நிறுத்தி விட்டார் என்பது ஒரு கவலைக்குரிய விடயம் (அது ஏன் எண்டது பற்றிப் பிறகு சொல்லிறன்). ஆறு மாதங்கள் தான் அங்கு இருந்தேன். அந்த ஆறு மாதங்களும் மறக்க முடியாத நாட்கள். (இனப்பிரச்சினை மும்முரமாகத்
அண்மையில் மெல்பேர்ணில் இருந்து வெளியாகும் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் எழுத்தாளர் லெ. முருகபூபதி அவர்கள் நித்தி கனகரத்தினம் அவர்களுடன் நடத்திய நேர்காணலை வாசிக்க நேர்ந்தது. (இப்பத்திரிகையில் இப்படி இடைக்கிடை ஒரு சில நல்ல தகவல்கள் வரும், அதுக்காகவே இந்த இலவசப் பத்திரிகையை இங்கு பலசரக்குக்கடையில் இருந்து பொறுக்கிக் கொண்டு வருவேன் என்பது வேறு விதயம்). அந்நேர்காணலில் சில முக்கிய அம்சங்களை உங்களுடன் பகிரலாம் என்றிருக்கிறன்.தலைதூக்கியிருந்த நேரம் அது). முடிந்து வெளிக்கிடும் போது ஒரு பிரிவுபசார ஒன்றுகூடலை சக ஆசிரியர்கள் ஒழுங்கு செய்திருந்தனர். நித்தியும் கலந்து கொண்ட அந்த ஒன்றுகூடலை மறக்க முடியாது.

நித்தி தற்போது அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறார். அத்துடன் தமிழ் மூலிகை மருத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.

ஈழத்தில் யாழ்ப்பாணம் உரும்பராயில் பிறந்தவர். யாழ் மத்திய கல்லூரி, அம்பாறை ஹார்டி தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றில் படித்துப் பின்னர் அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் விவசாய முதுமாணிப் பட்டம் பெற்றார்.

1955 ஆம் ஆண்டிலேயே பாட ஆரம்பித்து விட்டார். நாடகங்களிலும் நடித்திருக்கிறார். ஊர் மேடைகளில் கிண்டல் பாடல்கள் இயற்றியும் பாடியும் பாராட்டுப் பெற்றிருக்கிறார். அவற்றில் ஒரு பாடல்:

ஆமணக்கம் சோலையிலே
பூமணக்கப் போற பெண்ணே
உன்னழகைக் கண்டவுடன்
கோமணங்கள் துள்ளுதடி

இப்படியான பாடல்களைத் தானே இயற்றிப் பாடினார்.

பின்னர் சிங்கள மேடைகளில் இரட்டை அர்த்தங்களுடனான சிங்கள பைலாப் பாடல்கள் புகழ்பெறத் தொடங்கிய காலங்களில் அம்பாறை ஹார்டி கல்லூரியில் 1966 ஆம் ஆண்டு முதன் முதலாக சின்ன மாமியே பாடலைப் பாடியுள்ளார். அப்பாடல் பிறகு பிரபலமாகி இலங்கையின் பட்டி தொட்டிகளெல்லாம் ஒலிக்கத் தொடங்கி விட்டது. இலங்கை வானொலியில் தினமும் குறைந்தது இரண்டு தடவையாவது போடுவாரகள்.
தமிழில் மட்டுமல்ல சிங்களம், ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளிலும் பாடியிருக்கிறார்.

ஒரு காலத்தில் உச்சத்திலிருந்த தமிழ்ப் பொப்பிசை காலப்போக்கில் தாழ்ந்து விட்டதற்குப் புதிய கலைஞர்கள் தோன்றாமையும் தொலைக்காட்சியின் அறிமுகமும் தான் என்கிறார் நித்தி.

அவர் சொன்ன ஒரு சம்பவம்:

“மலேசியாவில் 45வது சுதந்திர தின விழாக் காட்சிகளை மலேசியாவில் நின்ற சமயம் தொலைக்காட்சியில் பார்த்தேன். மலே, சீனம் தமிழ் மொழிகளில் மக்கள் பாடிக் கொண்டு சென்றார்கள். தமிழர் சென்ற ஊர்வலத்தில் எனது பாடல்களை அம்மக்கள் பாடிக்கொண்டு சென்றாதைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தேன். எங்கோ பிறந்த பாடல், எங்கெங்கோ சென்று மக்களின் மனத்தில் இடம் பிடித்திருக்கிறது”.

தமிழகத்தில் எம்ஜிஆர் முதல்வராகப் பதவி ஏற்ற சமயம் மதுவிலக்கு மீண்டும் அமுலுக்கு வந்த போது அங்கு பட்டி தொட்டி எங்கும் ஒலிபரப்பான பாடல் நித்தியின் “கள்ளுக்கடைப் பக்கம் போகாதே”.

ரஜனியின் அவசர அடி ரங்கா, எஸ்பியின் சிவரஞ்சனி, விஜயகாந்தின் ரமணா படங்களிலும் நித்தியின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. (இதற்காக நித்திக்கு எந்த வெகுமதியும் கிடைக்கவில்லை).

1983இல் நிகழ்ந்த இனப்படுகொலைகளினால் பெரிதும் விரக்தியடைந்திருந்த நித்தி இனி மேடைகளில் பாடுவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறார். அதை இன்றுவரையில் கடைப்பிடித்தும் வருகிறார்.

மகிழ்ச்சியான ஒரு விடயம்: என் இசையும் என் கதையும் என்ற நூலை நித்தி இப்போது எழுதிக்கொண்டிருக்கிறார்.
சின்னமாமி பாடல் வரிகளை வாசித்து விட்டு பாடலையும் கேட்டு மகிழுங்கள்.

சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ
அட வாடா மருமகா என் அழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்கத் தான் சென்றாள்
ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை என்னும் படிக்கவென்று கெடாதே
ஊர் சுழலும் பெடியெளெல்லாம்
கன்னியரைக் கண்டவுடன்
கண்ணடிக்கும் காலமல்லவோ – சின்ன மாமியே

ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே
அவள் வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே
அடக்கமில்லாப் பெண்ணிவள் என்றா
என்மகளை நினைத்து விட்டாய்
இடுப்பொடியத் தந்திடுவேனே – சின்ன மாமியே

ஏனணை மாமி மேலே மேலே துள்ளுறியே
பாரணை மாமி படுகுழியில் தள்ளுறியே
ஏனணை மாமி அவளெனக்கு
தெவிட்டாதவள் எனக்கு
பாரணை மாமி கட்டுறன் தாலியை – சின்ன மாமியே

மக்கள் மயப்பட்டவை நித்தியின் பாடல்கள். எங்காவது ஒலித்துக் கொண்டுதானிருக்கப்போகின்றன.

நித்தியின் அனைத்துப் பாடல்களையும் கேட்டு மகிழ:

tamilamutham.net

நன்றி – http://srinoolakam.blogspot.com இணையம்

 

Sharing is caring!

1 review on “சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்”

  1. lalitha says:

    Unforgettable songs and information. thank you for remembering this song again.

Add your review

12345