சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை

http://www.shtms.sch.lk
சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை
முகப்பு தோற்றம்

சிறுப்பிட்டிக் கிராமத்தின் தெற்கு எல்லையாக யாழ். பருத்தித்துறை பிராதான வீதியில் திரு. கு. கனகசபை அவர்களால் தர்மசாதனம் செய்யப்பட்ட ஏறக்குறைய 11 பரப்புக் காணியில் 01.05.1934 தொடக்கம் இப்பாடசாலை ஆரம்பமாகி இயங்கி வருகிறது. ஏறக்குறைய 1910ம் ஆண்டளவில் முதன்முதலாக இப்பாடசாலை திரு ஸ்ரீராமன் கு. கனகசபை என்பவரின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. அவர் அவ்வூரில் வாழ்ந்த கைலாசப்பிள்ளை, கதிர்காமர் ஆகிய இருவரிடமும் பெற்ற நிலத்தில் கட்டடம் அமைத்தார்.

ஆரம்பகாலத்தில் இப்பாடசாலை சிறுப்பிட்டி சைவ வித்தியாசாலை என்ற பெயருடன் இயங்கி வந்தது. முன்னைய கட்டடம் ஏறக்குறைய 1919ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டது என்றும், அங்கு இட நெருக்கடி ஏற்பட்டமையால் புதிய கட்டடம் திரு கு. கனகசபை அவர்களாலும், இவ்வூரில் வாழ்ந்த பெரியவர்களின் ஒத்துழைப்பினாலும் 1930ம் ஆண்டளவில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.

பழைய புதிய கட்டடங்களில் எஸ்.எஸ்.சி வரை இயங்கி வந்ததாகவும், அரசாங்க நன்கொடை மூலம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காலப் போக்கில் ஊரில் ஏற்பட்ட சமாசன அந்தஸ்துப் போட்டியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டு முதலில் அமைக்கப்பட்ட கட்டடம் எரிக்கப்பட்டது. பின்பு அது கைவிடப்பட்டு பாடசாலையும் சிறிது காலம் இயங்காத நிலையில் இருந்தது. பின்பு திரு கு. கனகசபை அவர்கள் அக்காலத்தில் பாடசாலை நிர்வாகங்களுக்கு பெயர் போன சைவ வித்தியா விருத்திச் சங்க அமைப்பின் (Hindu Board) உதவியால் அந் நிர்வாகத்திடம் பாடசாலையை ஏற்று நடத்தும்படி ஒப்படைத்தார். அவர்களே 01.05.1934 தொடக்கம் பாடசாலையை மீண்டும் பழைய நிலைமை போல் இயக்கி வந்தனர். இக் காலப்பகுதியான 01.05.1934 பாடசாலை ஆரம்பநாள் என இப்பொழுது நிர்ணயிக்கப்பட்டு வழங்கி வருகிறது. இதன் பின்பு நிர்வாகத்தில் ஏற்பட்ட பிணக்கினால் சைவ வித்தியா விருத்திச் சங்கம் தனது பொறுப்பை வேறு ஒருநிர்வாக அமைப்பான கந்தரோடை “Board” என்று வழங்கி வந்தனர்.

இங்கு திரு. மாணிக்கம் என்பவர் பல ஆண்டுகளாக தலைமை ஆசிரியராகவும் அதன் பின் திரு நா. கந்தையா, திரு. சுப்பையா, திரு. சிவசிதம்பரம் போன்றோர் அதிபர்களாகவும், உதவி ஆசிரியர்களாகவும் ஆறு பேர் வரை கடமை புரிந்தனர். என்று அறியமுடிகிறது. S.S.C வரை வகுப்பக்கள் நடைபெற்ற போதும் மாணவர் தொகை குறைவாகக் காணப்பட்டது. 26.03.1962 இல் 12997 வெளியான அரசாங்க வர்த்தமானி அறிக்கை மூலம் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை 15.04.1962ல் அரசாங்கம் தனது உடமையாக்கிக் கொண்டது.

1920ல் இக்கிராமத்தில் பிறந்த திரு. ம. கந்தையா அவர்கள் இப்பாடசாலையில் S.S.C வரைபடித்து 1939ல் S.S.C பரீட்சையில் சித்தியடைந்து 1940ல் ஆசிரியக் கலாசாலை சென்று பயிற்சி முடித்து 1946ல் இப்பாடசாலையில் உதவி ஆசிரியராக அக்காலப் பகுதியின் நிர்வாகப் பொறுப்பாக இருந்த கந்தரோடை திரு. சி. கந்தையா அவர்களால் நியமனம் செய்யப்பட்டு 1974 வரை இங்கு கடமைபுரிந்தார். 1974 இல் அவர் வேறு பாடசாலை மாற்றம் செய்யப்பட்டார் என்றும், அவர் மூலமாக அறிய முடிகிறது. 1972 வரை இங்கு S.S.C வகுப்புக்கள் நடைபெற்றன. மாணவர் தொகை அதிகம் இல்லாதபடியால் கல்வி அதிகாரிகள் இப் பாடசாலையை ஓர் ஆரம்பப் பாடசாலையாக தரம் குறைத்து இயங்க வைத்துள்ளனர்.

இப்பாடசாலைக்கு அண்மையில் வடக்கே புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியும், தெற்கே நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுரியும் முதன்மைப் பாடசாலைகளாக மேல் நிலைவகுப்புக்களை உடையதாக விளங்கி வருவதால் இப்பாடசாலை ஆரம்பப் பாடசாலையாகவே இயங்கக்கூடிய சான்றுகள் காணப்படுகிறது. தற்போது 01.02.1994ல் இப்பாடசாலையில் 148 மாணவர்களும், அதிபர் உட்பட மூன்று நிரந்தர ஆசிரியர்கள் கடமை புரிந்தனர்.

விநாயகமூர்த்தி அதிபர் காலத்தில் 1995 யாழ்ப்பாண இடம்பெயர்வின் போது பாடசாலையும் மூடப்பட்டு தென்மராட்சி பிரதேசத்தில் இயங்கியது. பாடசாலைச் சொத்துக்கள் பல்வேறு இடங்களில் பாதுகாக்கப்பட்டன. மிகுந்த இடர்களின் பின் அதிபர் விநாயகமூர்த்தியின் முயற்சியால் பாடசாலையில் மீண்டும் பழைய இடத்தில் 1996 மே மாதம் ஆரம்பிக்கப்பட்டது. 160 மாணவர்களும் 03 ஆசிரியர்களும் இங்கு பணியை ஆரம்பித்தனர். பாலசிங்கம் அதிபராகப் பொறுப்பேற்ற பின் பாடசாலைக் காணி எல்லை வகுக்கப்பட்டு முன்புற மதிலும், குடிநீர் கிணறும் அமைக்கப்பட்டது. தேவராஜா அதிபர் காலத்தில் GTZ நிறுவனத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட மலசலகூடத் தொகுதி மாணவர்களுக்காக புதிதாக அமைக்கப்பட்டது. மிகப் பழமையான கட்டடத்தில் பாடசாலை இயங்கிய போதும் தரம் 5 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்தபெறுபேறுகளைப் பெற்றனர்.

இடைக் காலத்தில் திருமதி மா. மகேந்திரன் அவர்களும் திரு. பகீரதன் அவர்களும் பாடசாலை அதிபர்களாகப் பதில் பொறுப்புக்களை ஆற்றினர். அக்காலத்தில் இல்ல விளையாட்டுப் போட்டிகளும், பரிசளிப்பு விழாக்களும், கலைநிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.

2013 இல் அதிபராக திரு சு. பரமேஸ்வரன் கடமைப் பொறுப்பேற்றார். ஆரம்பப் பாடசாலை புனரமைப்பு திட்ட நிதி ஒதுக்கீடு மூலம் பாடசாலைகளின் புறச் சூழல், வகுப்பறைச் சூழல் அழகுபடுத்தப்பட்டு பூங்காக்கள் புனரமைக்கப்பட்டது. முன்வாயில், மதில் என்பன அமைக்கப்பட்டு பாதுகாப்பான கற்றல் சூழல் உருவாக்கப்பட்டது. பழையகட்டடம் அகற்றப்பட்டு மிகப் பெரிய விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டது. திறந்தவெளி மண்டபம் அமைக்கப்பட்டு பௌதீக வசதிகள் அதிகரித்தது. 10% வறிய மாணவர்களுக்கு (12 பேர்) புலமைப்பரிசில் நிதி வழங்கப்பட்டது. இவற்றுக்கு புலம்பெயர்ந்த நன்கொடையாளர்களும், பழையமாணவர்களும் உதவ முன் வந்தனர். பெற்றோர் பங்குபற்றுதலும் அதிகரித்தது. இவ்வகையில் புதிய உத்வேகத்துடன் கல்விச் செயற்பாடுகளும் முன் எடுக்கப்படுகிறது.

மகுட வாசகம்
”கல்வியே கருந்தனம்”

பணி நோக்கு
”வளமான வாழ்வுக்கான அடிப்படைக் கல்வியை வழங்குதல்”

பாடசாலைக்கீதம்

வாழ்க! நமது பாடசாலை வாழ்க! வாழ்கவே!!

இந்து தமிழ் கலவன் பாடசாலை வாழ்க! வாழ்கவே!!

கல்விச் செம்மல் கனகசபை மனமுவந்து நமக்கீந்த

கல்வி ஞானம் பெற்று நாமும் பண்புடனே எந்நாளும்

வாழ்ந்திடுவோம் வாழ்க! நமது பாடசாலை வாழ்க! வாழ்கவே!!

இந்து தமிழ் கலவன் பாடசாலை வாழ்க! வாழ்கவே!!

வீங்கு புகழ் சிற்றூர்தனை ஓங்காரமாய் ஒளிபரப்பும்

மங்கை நல்லாள் புன்முறுவல் நீங்காதாள் கலைக்கூடம்

வாழ்க நமது பாடசாலை வாழ்க! வாழ்கவே!!

இந்து தமிழ் கலவன் பாடசாலை வாழ்க! வாழ்கவே!!

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை
இலச்சினை
சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை
பாடசாலைக் கொடி

மேலதிக தகவல்களுக்கு – http://www.shtms.sch.lk இணையம்

Sharing is caring!

1 review on “சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை”

  1. sharuga says:

    தரம் 5 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்தபெறுபேறுகளைப் பெற்றதும் பெற்றோர் பங்குபற்றுதலும் அதிகரித்தது முன்வாயில், புறச் சூ ழல், வகுப்பறைச் சூழல் அழகுபடுத்தப்பட்டு பூங்காக்கள் புனரமைக்கப்பட்டது சிறப்பானமுயற்சி ஆகும்

Add your review

12345