சிற்பி சிவப்பிரகாசம்

சிற்பி சிவப்பிரகாசம் திரு.செல்லையா சிவப்பிரகாசம் இவர் யாழ் மத்திய கல்லூரி ஓய்வுபெற்ற சித்திர ஆசிரியராவார். அவரின் துணைவியார் திருமதி. அன்னலட்சுமி அவர்களும் அதே யாழ் மத்திய கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் என்பது சிறப்பு. இவர்களின் இரு பிள்ளைகள் – திரு.துஸ்யந்தன் -பொறியலாளர்- ஜெர்மனி, வைத்தியகலாநிதி. அனுஷியந்தன்- மகரகம புற்றுநோய் வைத்தியசாலை ஆகியோர் ஆவர்.

சிற்பி சிவப்பிரகாசம்  தனது கலைத்துறையின் பிரவேசத்தை இவ்வாறு கூறுகின்றார். “எனது சொந்த இடமான அளவெட்டி ஞானோதயாவில் 1939ஆம் ஆண்டு தரம் 05ல் படித்துக்கொண்டிருக்கும் போது குன்றன்குடி அடிகளார் எமது பாடசாலைக்கு வந்தார். அன்று நடந்த சித்திரப் போட்டியில் எனது சித்திரம் முதல் இடம் பெற்றது.
அடிகளார் என்னை அழைத்து எனது பெயரை கேட்டு அறிந்து இனி உன்வாழ்க்கை பிரகாசமாய் அமையும் என்று வாழ்தினார்.

தொடர்ந்து SSC முடித்து விட்டு ஆங்கிலம் படிப்பதற்கு தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரிக்குச் சென்றேன். 1947 ல் பாடசாலைச்சின்னம், மகுடவாசகம் ஆகியவற்றை உருவாக்குவதற்கு நடைபெற்ற போட்டியில் என்னால் வரையப்பட்ட சின்னமும், “உன்னையே அறிவாய்” என்ற மகுடவாசகமும் உள்ளது.”

1952 முதல் 1956 வரை கொழும்பு கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் சிற்பம், ஓவியம் ஆகிய கலைகளை கற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அங்கு நடைபெற்ற சிற்பப் போட்டியில் ஆபிரகாம் லிங்கன் அவர்களின் சிலையை வடித்து எலிசபெத் மகாராணியின் கையினால் ரூபா 1000 பணப்பரிசினை பெற்றுள்ளார்.

இவரின் கையால் இன்று எம்முடன் அழகுற காணப்பெறும் அவரது கலைப்பொக்கிசங்கள் சில…

வவுனியாவில் உள்ள பண்டாரவன்னியன் சிலை.
யாழில் உள்ள சங்கிலியன் சிலை.
சேர்பொன் இராமநாதன் சிலை.
வவுனியா நூல்நிலைய முகப்பை அழங்கரிக்கும் புடைப்புச் சிற்பங்கள் மற்றும் சரஸ்வதி தேவி சிலைகள்.
வவுனியா பகவான் ஸ்ரீசத்தியசாயி சேவா நிலையத்தில் உள்ள கீதை உபதேசம் செய்யும் தேர் மற்றும் அங்குள்ள 10 அவதாரச் சிற்பங்கள்.

இவரது கலைப்படைப்புக்களுக்கு கிடைத்த சிறப்புக்கள் சில…

1974ல் சேர்பொன் இராமநாதனின் சிலை வடித்தமைக்காக ஸ்ரீமாவோ பண்டார நாயக்க அவர்களால் “சிற்பக்கலாநிதி” பட்டம் கிடைத்தது.
1996ல் அப்போதைய கலாச்சார அமைச்சர் லக்மன் ஜெயக்கொடி அவர்களால் “கலாபூசணம்” பட்டம் கிடைத்தது.
1996 ல் கொழும்பு சபரிமலை சாகித்திய மண்டபம் “சிற்பக்கலாமணி” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தது.
2001 ல் சுழிபுரைம் விக்ரோறியாக் கல்லூரி ஸ்தாபகர் செல்லப்பாவின் முழு உருவச் சிலையை செய்தமைக்காக உயர்நீதிமன்ற நீதியரசர் விக்னராஜா அவர்களால் “சிற்பச்சக்கரவர்த்தி” என்ற பட்டம் வளங்கி கெளரவிக்கப்பட்டது.
2005 ல் கொழும்பில் நடைபெற்ற 5ஆவது சேக்கிழார் உலகமகாநாட்டின் போது இந்தியா சோழமண்டலம் ஆதினம் “திருத்தொண்டர் மாமணி” பட்டத்தை வழங்கியது.
2006ல் வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருது கிடைத்தது.
2007ல் யாழ்மாவட்டத்தில் முதலாம் இடமும், வடக்கு மாகாணத்தில் முதலாம் இடமும் பெற்றமைக்காக ஜனாதிபதி விருது கிடைத்தது.

இவரின் சிற்பக் கூடத்தில் உள்ள தமிழ்நங்கையின் சிலை

சிற்பி சிவப்பிரகாசம்  சிற்பி சிவப்பிரகாசம்  சிற்பி சிவப்பிரகாசம்  சிற்பி சிவப்பிரகாசம்

இவ்வளவு சிறப்புக்கள் பெற்றுள்ள எம் பெருந்தகையின் ஆசையாக எம்மிடம் எடுத்தியம்பியது “எனது இறுதிக்காலம் வரை அற்புதமான இந்தக் கலைப்படைப்பை செய்து கொண்டே இருப்பது ” என்பது தானாம்.

 

 

 
By – Shutharsan.S

 

நன்றி – தகவல், படங்கள் – தி.லம்போதரன், ஜேர்மனி

Sharing is caring!

Add your review

12345