தட்டிவான்

தட்டிவான் யாழ்ப்பாணத்தில் பிரபலமான வாகனம். எனக்கு மிகவும் பழக்கப்பட்டது பருத்தித்துறையில் தொடங்கி நெல்லியடி ஊடக கொடிகாமம் போகும் தட்டிவான் தான். பிரிட்டிஷ்காரனின் தயாரிப்பு. இந்த தட்டிவானில் பயணம் செய்தால் நீங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் வாகனங்களிலும் பயணம் செய்யலாம்.

முதலில் தட்டிவானின் வடிவமைப்பை பார்ப்போம். முன்பக்கத்தில் மட்டும் கண்ணாடியுள்ள வாகனம். மக்கள் இருக்கும் இடப்பகுதி எல்லாம் திறந்தவெளி. சாவகச்சேரி சந்தைக்கு போகின்ற குஞ்சி ஆச்சி வெத்திலை சப்பித் துப்ப ஏதுவானது. பின்பக்கத்தில் இருக்கும் பலகையில் மீன் பெட்டிகள், மரக்கறி மூட்டைகள் முடிந்தால் மனிதர்களைக்கூட ஏற்றிச் செல்லும் அதிசய வாகனம்.
எப்படியும் காலை 7 மணிக்கு நெல்லியடிச் சந்திக்கு வந்துவிடும். சனமாக இருந்தாலும் கொண்டக்டர் விடமாட்டான் அண்ணே இன்னும் கொஞ்சம் பொறுங்கோ சனம் வரட்டும் என எப்படியும் அரை மணித்தியாலம் அங்கேயே வைத்திருப்பான். பக்கத்து மொடேர்ன் ஸ்டோரில் உதயனையோ, ஈழநாதத்தையோ நின்று நிதானமாக சனம் நிறைந்த பின்னர் ஏறும் பலரைக் கண்டிருக்கின்றேன். சிலவேளை ட்ரைவரே தனக்கு தெரிந்தவர்களுக்கு இப்போ எடுக்கமாட்டான் பக்கத்து சங்குண்ணி கடையில் தேத்தண்ணி குடித்துவிட்டு வாருங்கள் என்பார்.
பெரும்பாலும் ஒரே ஆட்களே தட்டிவானில் பயணிப்பார்கள். இவர்கள் சாவகச்சேரியில் வேலை பார்ப்பவர்கள், கொடிகாமம் சந்தையில் வியாபாரம் செய்பவர்கள், என ஒரே மக்கள் செல்வதால் அவர்களுக்கு பலரையும் பழக்கமாய் இருக்கும் இதனால் ஒருவர் வரப்பிந்தினால் கூட ட்ரைவருக்கு உரிமையாக தம்பி ஆச்சி வரவில்லை சின்னத்தம்பி அண்ணை வரவில்லை கொஞ்சம் பொறுங்கள் என கூறுவார்கள்.

சீட்டுகள் பெரும்பாலும் மரத்தாலே ஆனவை. பின்னுக்கு அரைமுதுகுதான் சாஞ்சு இருக்கமுடியும். இரண்டு சீட்டுக்கு இடையில் தேவைப்பட்டால் இன்னொரு பலகை போட்டு அடிசனலாக ஆட்களை இருத்தும் கலை இவர்களுக்குத் தான் தெரியும்.

நெல்லியடிச் சந்தியில் அரைமணித்தியாலமாக உறுமிக்கொண்டே இருக்கும் சிலவேளைகளில் வெளிக்கிடுவதுபோல் எடுத்து அப்படியே பஸ் ஸ்டாண்டை ஒரு சுற்றுச் சுற்றி திரும்ப அதே நிண்ட இடத்தில் கொண்டுவந்து நிப்பாட்டுவார்கள். சிலவேளை சீரிபி தூரத்தில் வ்ருகின்றது என்றால் மட்டும் உடனே எடுத்துப்போடுவார்கள். ஆனாலும் கோயில் சந்தை, அந்தணத்திடலில் சில நிமிடங்கள் எப்படியும் நிண்டுதான் எடுப்பார்கள். திரும்ப மாலையில் கொடிகாமத்தில் இருந்து தட்டிவான் தன் பயணத்தை நெல்லியடி ஊடக பருத்துறைக்கு செல்லும்.

தொண்டைமானாறு செல்வச் சன்னதித் திருவிழா நேரத்தில் நெல்லியடியிலிருந்து கோவில் வரை ஸ்பெசல் சேர்விஸ் விடுவார்கள். அந்த அனுபவமும் சுவையானது. இதனை விட அச்சுவேலியில் இருந்தும் தட்டிவான் சில இடங்களுக்குச் செல்வது ஆனாலும் பயணம் செய்து பழக்கமில்லை. ஏனைய மாவட்டங்களில் நான் தட்டிவான் கண்டதில்லை. வவுனியா, திருகோணமலை, நுவரேலியாப் பகுதியில் சிறிய வான்களில் மக்களை அடைந்து கொண்டு செல்வதைக் கண்டிருக்கின்றேன். கஸ்டமான பயணம் என்றாலும் நம் மக்கள் மகிழ்ச்சியுடன் பயணிப்பார்கள்.

நன்றி –http://eelamlife.blogspot.com இணையம்.

Sharing is caring!

Add your review

12345