திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் ஆலயம் – மீசாலை

யாழ்ப்பாண இராட்சியம் போர்த்துக்கேயரின் கைக்கு வருமுன்பே இவ்வாலயம் ஒரு வணக்கத்தலமாக இருந்ததாக கர்ணபரம்பரைக் கதைகள் மூலம் அறியக்கிடக்கின்றது. சாவகச்சேரி வாரிவநாதர் சிவன் கோவில் போர்த்துக்கேயரால் இடிக்கப்படுவதை அறிந்த அடியார்கள் உடனே தாங்கள் வழிபட்டு வந்த விநாயகர் இலிங்கத்தினை அயலிலே புதைத்து வைத்துவிட்டு மானசீகமாக அவ்விடத்து நின்று வணங்கினர். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே அந்த லிங்கம் வெளிப்பட்டது. ( இது இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன் வாழ்ந்த பெரியோரால் அறியப்படுகின்றது) மேலும் வசந்த மண்டப அத்திவாரம் வெட்டும் போது அவ்விடத்திலே பழைய வைரக்கற்களால் ஆன ஒரு அத்திவாரம் காணப்பட்டது. கற்கள் அழுத்தமாக பளபளப்பாக காணப்பட்டன. ஆனால் அவை தொல்லியல் ஆய்விற்கு உட்படுத்தப்படாமை துரதிஸ்டம். இவ்வத்திவாரத்தின் படி சிறு ஆலயம் இருந்ததாக அறிகுறி தென்பட்டது.

பிள்ளையார் வெளிப்பாடு
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஒருநாள் முத்தன் என்று அழைக்கப்படும் விவசாயி வெள்ளை மா நின்ற சந்திரகுமரேசன்புலம் என்ற காணியில் கொள்ளு விதைத்துக் கொண்டிருந்தான். அப்போது வெள்ளை மாவின் அடியில் கொத்தும் போது பெரிய திருநீலகண்டம் ஒன்று அம்மரத்தடியில் இருந்து துவாரத்தினூடாக புகுந்தது. விவசாயி அந்த வி~ப்பிராணியை வெளியே எடுக்க விரும்பி அத்துவாரத்தை மண்வெட்டியால் ஆழமாக்கினார். அப்பொழுது மண்வெட்டி ஒரு பொருள் மீது பட்டுச் சத்தம் கேட்டது. அப்பொழுது அவ்விடத்திலிருந்து இரத்தம் பெருகியது. ஆனால் திருநீலகண்டத்தைக் காணவில்லை. அதைக் கண்ட முத்தனுக்கு மயக்கம் வருவது போன்ற நிலை தோன்றியது. உடனே அவர் வீட்டிற்குச் சென்று உணவும் உண்ணாது படுத்துவிட்டார். அன்றிரவு ஒரு கனவு கண்டார். விநாயகர் உருவத்திலே ஒருவர் தோன்றி

“துன்பப்படாதே அவ்விடத்திலே ஒரு விநாயகர் சிலை இருக்கின்றது அதை எடுத்து நீராட்டி அந்த மாவின் அடியிலே வைத்து பூசிப்பாயாக நீ உண்ணும் உணவில் ஒரு பகுதியை எனக்கும் படைத்துவிடு”

என்று கூறினார். விடிந்ததும் அந்த அடியார் சிலையைத் தோண்டி எடுத்து அந்த மரத்தடியிலேயே வைத்து அமுது படைத்து வணங்கினார். பின்பு அந்த காணியின் சொந்தக்காரராகிய முகமாலையில் இருந்த கேயரத்தின் முதலியாரிடம் நடந்தவற்றைக் கூறினார். பின்னர் அங்கு வந்த முதலியார் ஒரு சிறு வீடு அமைத்து அந்தச் சிலையை அங்கே பிரதிஸ்டை செய்தார். அந்த ஆலயத்தை திருநீலகண்ட வெள்ளை மாவடிப் பிள்ளையார் ஆலயம் என அழைத்து வந்தார். அன்று கிடைத்த அந்த மூர்த்தியே இன்றும் வழிபாட்டில் இருக்கின்றது. மண்வெட்டி வெட்டி பட்டவடு இன்றும் மூலலிங்கத்தில் காணக்கூடியதாக உள்ளது.

Sharing is caring!

Add your review

12345