தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன்

நெல்லண்டை பத்திரகாளி

வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள தும்பளை என்னுஞ் சின்னஞ்சிறிய ஊர். வங்காளக் கடற்கரையிலிருந்து மேற்கே கால் மைல் தூரத்தில் அமைந்துள்ளது. நெல்லண்டை என்னும் பெயர் கொண்ட பகுதியில் இத்திமரமும் மாமரமும் நிழல் தர பத்திரகாளி அம்மன் வீற்றிருக்கிறாள். கோயில் அருகே செல்லும் வீதி நெல்லண்டை வீதி எனப் பெயர்பெற்றுள்ளது. “நெல்லண்டைப் பத்திரகாளி” எனவும் “இத்திமரத்தாள்” எனவும் தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் அழைக்கப்படுகிறாள்.

வெப்புநோய்களைத் தீர்க்கும் கருணை வள்ளலாக விளங்கும் அம்மன் வழிபாட்டு மரபு தனித்துவமானது. ஆரம்பத்தில் சிறுகட்டடத்தோடு இத்திமரமும் கூரையாக விளங்கிய கோயில் தற்போது வழிபாட்டு மண்டபங்களோடு பொலிவுற்று விளங்குகிறது. தொடக்கத்தில் இத்திமரத்தடியிலே “வெளிமடை” என்ற வழிபாட்டு நடைமுறையிருந்தது. “காய்மடை பூமடை போடுதல்” என்னும் வழக்கம் மக்களால் இன்றுவரை பேணப்படுகிறது. மா, பலா, வாழை என்ற முக்கனி வகைகளையும் பரவி அத்துடன் பொங்கலை படைத்து பூவும் புகையும் சொரிந்து வழிபடும் வெளிமடை ஆண்டுக்கொருமுறை நடைபெறும். முன்னர் மிருகப்பலியும் நடைபெற்றிருக்கலாம். இப்போது ஆடு, கோழிகளை நேர்த்திக்காகக் கொண்டு கட்டட வேலைகளுக்குப் பயன்படுத்தும் மரபு பேணப்படுகிறது.
விளக்கு வைத்தல், மடைப்பண்டம் எடுத்தல், வயந்து கட்டல், காய்மடை பூமடை பரவல், வழிவெட்டல், எட்டாம் மடை என வெளிமடை வழிபாடு நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. சித்திரை மாதத்தில் இது நடைபெறும். வேறு கோயில்களில் இருந்து நேர்த்திக்காக காவடி, கரகம், பாற்செம்பு, கர்ப்பூரச்சட்டி என்பன எடுத்து வருவர். கோயிலையும் வெளிமடைப் பாதியையும் சுற்றிவருவர். பறைமேள ஒலி கேட்டுப் பலர் “சந்நதம்” ஆடுவர். அவ்வாறு ஆடுபவர் வாக்குச் சொல்லும் முறைமையும் உண்டு. நேர்த்திக்காகக் கூத்தாடும் வழக்கமும் இன்றுவரை உண்டு.
குழந்தைப்பேறு, மழைவேண்டல், வளம் வேண்டல் கருதிப் பறையொலி எழுப்புவர். உடுக்குப் பிரதான இசைக் கருவியாக ஒலிக்கும். கோயில் பற்றிய கர்ணபரம்பரைக் கதைகளும் உண்டு. ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மாமரம் இன்றுவரை செழிப்பாக நிற்கிறது. இம் மரத்தைக் “கட்டைச்சிமா” என்று அழைப்பர்.  கோவிலருகில் நின்ற நெல்லி மரங்களும் குறிப்பிடத்தக்கவை. இதனால் கோயில் கிணற்றுநீர் நன்னீராக உள்ளது. 1983ல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறிய மலர் ஒன்றும் 1984ல் வெளியிடப்பட்டுள்ளது. 1994ல் ஆலய தருமபரிபாலன சபையின் பொன்விழா நினைவாகவும் ஒருமலர் வெளியிடப்பட்டது. பத்திரகாளி அம்மன் இத்திமரத்தாளாக கூத்துகந்த நாயகியாக நெவ்வண்டையில் வீற்றிருந்து மக்களுக்கு அருள்பாலிக்கின்றாள்.

நெல்லண்டை பத்திரகாளி
நெல்லண்டை பத்திரகாளி
நெல்லண்டை பத்திரகாளி

   

Sharing is caring!

Add your review

12345