தென்மட்டுவில் வேரக்கேணி கந்தசுவாமி கோவில்

மட்டுவில் :

வடஈழத் தமிழ்ப் பிரதேசத்தில் அமைந்துள்ள யாழ் குடாநாட்டின்கண் வேதநெறி தழைத்தோங்கவும், மிகுசைவத்துறை விளங்கவும் நிலைக்களனாய் விளங்குவது மட்டுவிலூர். இவ்வூர் செந்தமிழையும், சீருடைய சைவத்தையும் பேணிக்காத்து சீரும் சிறப்புடனும் அன்று தொட்டு இன்று வரை நின்று நிலவுவதில் பெருமையும் கொண்டுள்ளது. உரையாசிரியர் உயர் திரு ம.க. வேற்பிள்ளை அவர்கள், வரகவி பண்டிதர் வே. மகாலிங்க சிவம் அவர்கள், கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள், வலம்புரிமுத்து, மு.முத்துத்தம்பி ஆசிரியர் அவர்கள் போன்ற சைவச்சான்றோர்களையும், தமிழ்வல்லுனர்கள் பலரையும் பெற்றெடுத்து உவகை கொண்ட பேரூர் மட்டுவிலூர்.

ஆலயம் தோன்றிய வரலாறு :

தென்மட்டுவில் வேரக்கேணி கந்தசுவாமி கோவில்இந்த இடத்தில் தென்மட்டுவில் வேரக்கேணி கந்தசுவாமி கோவில் எப்படி வந்தது என்பதை ஆராய்வுச் சாதனம் மூலம் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது. அன்று மட்டுவிலூர் மக்களும், அயற் கிராமமாகிய கல்வயல், விளைவேலி, நுணாவில் ஊர் மக்களும் மிகவும் அன்பும் அறிவும் பண்புங் கொண்ட மக்களாக வாழ்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஒருவரோடு ஒருவர் அந்நியோன்யமாகவும், உறவு முறையும் கொண்டிருந்தனர். இவர்களுடைய பண்பாடும், பழக்கவழக்கங்களும் தாய்சேய்கள் போன்று ஒருமைப்பாட்டையும் எடுத்துக் காட்டுகின்றன. கல்வயலில் உள்ள முருக பக்தர்கள் சிலரும், தென்மட்டுவிலில் வாழ்ந்த முருகபக்தர் திருவாளர் கதிரவேலு என்பவரும் ஒன்று சேர்ந்து, கதிரவேலு என்பவரின் காணியில் தாமும் ஊர் மக்களும் வணங்கும் பொருட்டு ஒரு கொட்டில் அமைத்து அங்கு ஒரு ‘வேல்’ ஆயுதத்தை நிறுவி வழிபாடியற்றி வந்தனர். அதன் பின் இக்கோயிலை ஆகம விதிப்படி அமைத்து நித்திய, நைமித்திய பூஜையை நடாத்த வேண்டும் எனக் கருதி தென்மட்டுவில், கல்வயல், விளைவேலி, நுணாவில் பகுதிகளில் வாழ்ந்த கந்தன் அடியார்களின் அனுசரனையுடன் ஆலயம் ஒன்று கற்றழி கொண்டு புதிய மெருகுடன் ஆக்கப்பட்டது. அவ்வாலயப் பூஜைகள் யாவும் குறைவின்றி நடைபெறுவதற்காக பூசகர் ஒருவரை நியமித்து பூசைக்கருமங்கள் சீராகவும், சிறப்பாகவும் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன. அக்காலத்தில் முன் குறிப்பிட்ட கதிரவேலு என்பவரே ஆலயத்தின் தர்மகர்த்தாவாகப் பொறுப்பேற்று கோயிலைப் பரிபாலித்து வந்துள்ளார்.
கதிரவேலு என்பவர் காலஞ்சென்ற பின்னர், அவரது மனைவியாரான சிதம்ப்ரம் என்பவர் தனது புதல்வர்களான வைத்திலிங்கம், வைரமுத்து, ஆறுமுகம், கார்த்திகேசு என்பவர்களுடன் சேர்ந்து இவ்வாலயத்தை பரிபாலித்து வந்துள்ளார். இவரின் பின் சிறிது காலம் வைத்திலிங்கம் என்பவருடன் சிதம்பரம் என்னும் அவரது தாயர் கோயில் பரிபாலனத்தை நடாத்தி வந்துள்ளார்.

அவ்வாறு அவ்வாலயம் நடந்து வரும் காலத்தில் மேலும் அடியார்களின் அன்பளிப்புக்களாலும், அயரா முயற்சியாலும் பல திருப்பணி வேலைகள் ஆலயத்தில் செய்யப்பட்டுள்ளன. வைத்திலிங்கம் என்பவரின் பெருமுயற்சியால் ஆலயத்தில் பரிவார மூர்த்திகளுக்கு கோவில்கள், திருமஞ்சணக்கிணறு போன்ற புதிய திருப்பணி வேலைகள் நிறைவேற்றப்ப்ட்டுள்ளன. இதன் பின் முன்னாள் தர்மகத்தாவின் பொறாமகன் வைரமுத்து கந்தையாவிடம் கோயிற்பரிபாலனம் சென்றடையலாயிற்று. இவரது காலத்தில் கந்த புராணப் படிப்பு முறையாகவும், ஒழுங்காகவும் நடாத்தப்பட்டது. இக்காலத்தில் ஆலயக் குருக்களாக இருந்த சிவஸ்ரீ கோ வெங்கிடாசலக் குருக்கள் கந்த புராணம் படித்து பயன் சொல்வதில் மிகவும் பாண்டித்துவம் பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்காலத்தில் நித்திய, நைமித்திய பூசைகள் சிறப்பாக நடந்தமையும், மகோற்சவ விழாக்கள் அதி விமர்சையாக நடாத்தப்பட்டமையும் போற்றப்பட கூடியதாகும். இவ்வாறு ஆலயம் சிறப்புற நடந்து வந்த காலத்தில் ஆலயத்தில் உள்ள பிள்ளையார் ஆலயமும், வைரவ ஆலயமும் பழுதடைந்து விட்டன. இதன் காரணமாக ஆலயத்தில் நடைபெற்று வந்த விஷேட பூஜை, விழாக்கள் சில காலம் தடைப்பட்டுள்ளன. இந்த நிலையில் தர்மகத்தா கந்தையா என்பவர் பழுதடைந்த ஆலயங்களைப் புனரமைப்பு செய்ய ஆவல் கொண்டு ‘ஆலயத் திருப்பணி சபை’ என்ற பெயரில் ஒரு சபையை அமைத்தார். இச் சபைக்குத் தானே தலைவராகவும், முருகபக்தர்கள் சிலர் உறுப்பினர்களாகவும் இருந்து திருப்பணி வேலைகளை நிறைவேற்றினர். இதன் பின் இச்சபைக்கு பண்டிதர் சி. தம்பாப்பிள்ளை என்பவரைத் தலைவராகவும், தானும் வேறு சில அங்கத்தவர்களும் உறுப்பினர்களாகவும் இருந்து ஆலய பரிபாலனத்தை சில ஆண்டுகள் நடாத்தி வைத்துள்ளார். தலைவர் சி. தம்பாப்பிள்ளை அவர்கள் வதிவிடம் மாறிச் சென்றபடியால் அவ்விடத்திற்கு அப்புக்குட்டி சுப்பிரமணியம் என்பவர் நியமனம் பெற்று ஆலயப் பரிபாலனம் சில ஆண்டுகள் நடைபெற்று வந்துள்ளன.

By – Shutharsan.S

Sharing is caring!

1 review on “தென்மட்டுவில் வேரக்கேணி கந்தசுவாமி கோவில்”

 1. Thangamalar says:

  Dear Sir,

  When surfing on net, today I found our temple details in your website.
  Thank you very much for link our temple details.

  Keep it up ….

  Thangamalar
  Technical Supporter | Veerakkeenikanthan.com

Add your review

12345