தேவரையாளி இந்துக் கல்லூரி

தேவரையாளி இந்துக் கல்லூரி

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிற் கிறீஸ்தவ சமய ஊடுருவலைக் கண்டு வெகுண்டெழுந்த எம் சமூகத்தினர் மத்தியில் எமக்கென ஒரு சைவப் பாடசாலையைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக உதயமாயிற்று. அப்பொழுது தென்மராட்சி மணியகாரனாக இருந்த கரவெட்டி சிற்றம்பல முதலியார் அவர்கள் கரவெட்டியில் சைவப்பாடசாலைகளைத் தோற்றுவித்து தங்கள் சமூகப் பிள்ளைகள் சைவ சமயத்தைக் கற்பதற்கு போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். வெளியூர்களிலிருந்து பல சைவப் பிரமுகர்களை காலத்துக்குக் காலம் கரவெட்டிக்கு அழைத்து அவர்களைக் கொண்டு பற்பல சைவப்பிரசங்கங்களை நடப்பித்து வந்தார். சிற்றம்பல முதலியாருடைய பாடசாலைக் கட்டடங்களுக்குரிய மரவேலைகளைச் செய்து வந்தவரும் தச்சுத் தொழில் வல்லுநருமாகிய கரவெட்டி க. சுரன் அவர்கள் மேற்படி பிரசங்கங்களைக் கேட்டதனாலும் மணியகாரனுடைய தொடர்பினாலும் மச்சம் மாமிசம் புசித்தலை நீக்கி விட்டிருந்தார். அவருடைய உள்ளத்திலே எங்கள் சமூகத்திலும் ஒரு சைவப் பாடசாலையை கட்டி நடாத்த வேண்டும் என்ற எண்ணம் இலகுவில் நிறைவேற்றத் தக்கதென்றென்பதையும் அவர் நன்றாக அறிந்திருந்தார்.

இந்தச் சந்தர்ப்பத்திலேதான் அல்வாயிலுள்ள வேலுச்சோதிடர் வதிரியிலுள்ள ஆயுள்வேத வைத்தியருமாகிய சின்னப்பிள்ளை ஆகியோருடன் தொடர்பு கொண்டு மிஷன் பாடசாலை ஆசிரியர்களைப் பேட்டி கண்டு தங்கள் பிள்ளைகளுக்குக் கிறீஸ்தவ சமயப் பாடம் படிப்பிக்க வேண்டாமென்று வாதாடினார்கள். அவர்கள் அதனை நிராகரித்ததோடு மட்டும் நின்றார்களில்லை. கிறீஸ்தவ பிரசங்கத்துக்குக் கூட்டிச் சென்று குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு கிறீஸ்தவ சமயப் புத்தகங்களை பரிசில்களாகவும் வழங்கியிருந்தனர். இச்சம்பவம் சின்னப்பிள்ளை வைத்தியருக்குக் கொதிப்பை ஏற்படுத்தியதால் பாடசாலைகக்குப் போகாமற் பிள்ளைகளை மறித்து தன் வீட்டில் வைத்துச் சிலநாட்கள் படிப்பித்தார். இரண்டொரு கிழமையில் “வண்ணாஞ்சீமா” என்னும் தனது காணியில் ஒரு கொட்டில் கட்டுவித்து அதிலே பாடசாலையை நடாத்தி வந்தார்.

வேலுச்சோதிடர் அல்வாயிலே திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிப்பித்துக் கொண்டிருந்த பிள்ளைகளும் இப்பாடசாலைக்கு வரலாயினர். வைத்தியரும் சோதிடரும் முழுநேர ஊழியர்களாக இருந்து படிப்பிக்க முடியாத காரணத்தால் கரவெட்டி க. சின்னத்தம்பியையும் அல்வாய் வடக்கு மு. கந்தப்பு அவர்களையும் ஆசிரியர்களாக நியமித்தனர். இப்பாடசாலை இந்த இரு ஆசிரியர்களின் கீழ் ஏறக்குறைய ஒன்றரை வருடகாலம் நடந்து வந்தது.

1916 இல் கட்டடம் கட்டுவதற்கு இப்பொழுது கல்லூரி இருக்கும் இடத்தில் ஒரு பகுதி விலைக்கு வாங்கப்பட்டுக் கரவெட்டி, வதிரி, அல்வாய், கொற்றாவத்தை, புமாஞ்சோலை ஆகிய இடங்களிலுள்ள சமூகத்தவர்களை உரிமைக்காரர்களாகக் கொண்டு காணி தருமசாதனம் பண்ணப்பட்டது. 1917 இல் பாடசாலையை நடாத்துவதற்கு மேலே கூறிய ஊரிலுள்ளவர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட ஒரு சபை தேவரையாளி சைவகலைஞான சபை என்ற பெயருடன் உதயமாயிற்று அப்பொழுது வண்ணாஞ்சீமாக் கொட்டிற் பாடசாலையில் இடவசதியின்றி இருந்ததாற் புதிய கட்டட வேலைகள் மிகத் துரிதமாக நடைபெற்றன.

1917 இல் கட்டவேலைகள் முற்றுப்பெற்று மிகவிமரிசையாக பிரவேசம் நடந்தேறியது. அப்பொழுது கா. சுரன், க. சின்னத்தம்பி, மு. கந்தப்பு, க . பெரியதம்பி, க. வே. தம்பையா, திருமதி சுரன் மாணிக்கம் என்பவர்கள் கடமை புரிந்தனர். மிஷனரிமார்களுடைய பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் 1920 ஆண்டில் பாடசாலை கிறான்ற் (அரசின் உதவி நன்கொடை) ஆக்கப்பட்டது. பாடசாலையில் கிறான்ற் ஆக்கும் முயற்சியில் சிற்றம்பல முதலியாரும் அவருடைய மைத்துனர் வித்தியாதரிசி சி. க. இராஜசிங்கம் அவர்களும் பெரிதும் ஈடுபட்டு உதவி செய்தனர். கிறான்ற் ஆனதும் முதல் மனேஜராக நெல்லியடி S. சபாபதிப்பிள்ளை ( கயிலச்சட்டம்பியார்.) அவர்கள் நியமிக்கப்பட்டார். தராதரப் பத்திரமுள்ள ஒருவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட வேண்டும் என்ற நெருக்கடி இச்சந்தர்ப்பத்தில் ஏற்பட்டது. அந்தக்காலத்தில் இச் சமூகத்தில் தராதரப்பத்திரம் பெற்ற சைவ ஆசிரியர் எவருமே இருக்கவில்லை. மற்றைய சமூகத்தவரும் இங்கே வந்து படிப்பிக்க அக்கால சமூக நிலை இடந்தரவில்லை. இந்த இக்கட்டான நிலைமையில் சிற்றம்பல முதலியாரின் தூண்டுதலின் பேரில் கரவெட்டி வ. வேலுப்பிள்ளை என்ற ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியர் எதற்கும் அஞ்சாமல் தலைமையாசிரியராகக் கடமையாற்ற முன்வந்தார். அவருடைய முன்மாதிரியைக் கண்டு மகிழ்ந்த சைவகலைஞான சபையார் அரசினர் கொடுத்த சம்பளத்திற்கு மேலதிகமாகவும் ஒரு தொகையைச் செலுத்தி வந்தனர். சிலமாதங்கள் படிப்பித்த பின்பு இந்த ஆசிரியர் கொழும்பு முதலிய நகரங்களில் வியாபாரிகளாக இருந்தவர்களை பார்ப்பதற்கு சென்றிருந்த போது அந்த வியாபாரிமார்கள் இந்த ஆசிரியருக்குப் பெருந்தொகைப் பணமும், பல நன்கொடைப் பொருள்களும் வழங்கி கௌரவித்தனர்.

இவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டதும் கா. சுரன் அவர்கள் விலகி விட்டனர். சுரன் கௌரவ லோகல் மனேஜராக இருந்து பாடசாலையைக் கண்காணித்து வரலாயினார். 1922 இல் திருமதி சுரன் மாணிக்கம் என்பவருக்குப் பதிலாக கரவெட்டி செல்வி சீ. பொன்னம்மா பெண் ஆசிரியையாக நியமனம் பெற்றர். 1923 இல் தலைமை ஆசிரியர் வ. வேலுப்பிள்ளை அவர்கள் விலகிவிட டீ. எம். கந்தையா அவர்கள் பொறுப்பேற்றுப் பாடசாலையை நடாத்தி வந்தார். சிலவருடங்களுக்குள் பழைய ஆசிரியர்களுட் பலர் ஒவ்வொருவராக விலகி வர 1926 இல் டீ. எம். கந்தையா. சா. தம்பிமுத்து க. வே. தம்பையா, செல்வி சீ. பொன்னம்மா என்பவர்களோடு இன்னும் சில புதிய ஆசிரியர்களும் படிப்பித்தனர். தொடக்கத்தில் இரண்டு வகுப்புக்களை மிஷன் பாடசாலையிலும் மற்ற வகுப்புக்களை தேவரையாளியிலும் படித்த மு. செல்லையா 1927 இல் பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளிவந்து படிப்பிக்கலானார். 1928 இல் சி. வல்லிபுரம் என்பவர் தராதரப்பத்திரமற்ற ஓராசிரியராக க. வே. தம்பையாவின் இடத்துக்குநியமிக்கப்பட்டு 1929 இல் நடந்த ஆசிரியதராதரப்பத்திர பரீட்சையிலும் ஓவியப் பரீட்சையிலும் சித்தி பெற்று தொடர்ந்து கற்பித்து வந்தார்.

1930 ம் ஆண்டில் தா. சா. தம்பிமுத்து அவர்கள் தலைமையாசிரியரானார். இவ்வாண்டின் பிற்பகுதியில் மு. செல்லையா அவர்கள் நிரந்தரமான தலைமை ஆசிரியரானார். சி. வல்லிபுரம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கும் சென்று பயிற்சி பெறலாயினர். 1931 ம் ஆண்டு இப்பாடசாலை மாணவர்களாயிருந்த ம. செல்லத்துரை, வ. தருமலிங்கம், ச. சிவகுரு என்பவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். 1032 இல் சி. வல்லிபுரமும் க. முருகேசுவும் ஆசிரிய பயிற்சியை முடித்துக் கொண்டு வந்து ஆசிரியர்களாகச் சேர்ந்து கொண்டனர்.

இக்கால இடைவெளியில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக கரவெட்டி ஆ. சின்னையா என்பவரும் நெல்லியடி வேலுப்பிள்ளை என்பவரும் ஒருவர் பின் ஒருவர் பல வருடங்கள் படிப்பித்தனர். 1932 இல் இருந்து 1950 வரையுள்ள காலத்தில் தமிழ் S.S.C பரீட்சைக்கு மாணவர்களை ஆயத்தம் செய்கின்ற பாடசாலையாக மாறியது. அப்பொழுது தூர இடங்களிலிருந்தும் மேல் வகுப்புக்களிலே கல்வி கற்கப் பல மாணவர்கள் வந்து சேர்ந்தனர். அவர்களுட் பலர் ஆசிரியராக இருக்கின்றனர்.

1934 இல் செல்வி மீனாட்சியம்மா ஆறுமுகம் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் மா. செல்லத்துரையும் பயிற்றப்பட்ட ஆசிரியராகத் திரும்பி வந்து கடமையாற்றினார். வர்த்தகப் பெருமக்களாகிய சி. க. ஆறுமுகம், ஐ. ஆறுமுகம், வே. வல்லிக்குட்டி, வே. இராமலிங்கம் முதலியவர்கள் இங்கே படித்த ஏழைப்பிள்ளைகளுக்கு புத்தகம், சிலேற்று, கொப்பி, பென்சில், பேனை முதலிய உபகரணங்களை அன்பளிப்புச் செய்து வந்தனர்.

1950 ஆண்டளவில் S.S.C வகுப்புக்கள் ஆங்கில மீடியத்திலே படிப்பிக்கப்பட வேண்டுமென்ற கல்விப்பகுதியினரின் சட்டத்தின் படி அப்பொழுது மனேச்சராக இருந்த க. மூ. சின்னத்தம்பி அவர்களின் விடா முயற்சியினால் பாடசாலை யூனியர் பாடசாலையாக மாற்றமடைந்தது. 1954ம் ஆண்டளவில் ஆங்கிலக் கல்லூரியாக மாற்றப்பட்டு மூ. சி. சீனித்தம்பி அவர்கள் அதிபராக நியமனம் பெற்றார். அவர் அதிபராக வந்த பின்னர் கல்லூரி என்ற அந்தஸ்த்துக்குப் பல கட்டடங்களும் விஞ்ஞான கூடங்களும் கலை நிகழ்ச்சிகளுக்கான திறந்த வெளி அரங்கு முதலியனவும் தோற்றுவிக்கப்பட்டன. 1956 இல் தாய்மொழி மூலம் கல்வி போதிக்கப்பட் வேண்டுமென்ற நிலை மாற்றப்பட்டு விட்டதால் தாய்மொழியிலேயே பரீட்சைகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு தேவரையாளி இந்துக் கல்லூரி யாழ்ப்பாணத்தில் பிரபலமாக தனது கற்றை நெறிகளை போதித்து வருகிறது.

தொலை நோக்கு

நவீன சமூக இசைவாக்கத்திற்குப் பயனுடைய நற்பிரஜைகளை உருவாக்கக் கூடிய பாடசாலையாக மிளிர்தல்

குறிக்கோள்

மாணவர்கள் விழுமியத்துடன் கூடிய சிறந்த தோ்ச்சி மட்டத்தினைப் பெற்றுக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டு பாடசாலையை சிறந்த களமாக்கி வாண்மை மிகு ஆசிரிய வளத்தினூடாக வினைத்திறனும் விளைதிறனும் மிக்க முன்மாதிரியான பாடசாலையாக உருவாக்குதலை நோக்காகக் கொண்டு செயற்படல்

தேவரையாளி இந்துக் கல்லூரி
தேவரையாளி இந்துக் கல்லூரிக் கீதம்

நன்றி – சான்று – தேவரையாளி இந்து (1975)

மேலதிக தகவல்களுக்கு – http://www.thc.sch.lk/index.htm இணையம்.

Sharing is caring!

Add your review

12345