பேராசிரியர் நந்தி

பேராசிரியர் நந்தி

மருத்துவத்துறையில் பெயர் பெற்று விளங்கிய பேராசிரியர் நந்தி (செல்லத்துரை சிவஞானசுந்தரம்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியராக விளங்கியவர். இவர் இணுவிலைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வாழ்விடமாகவும் கொண்டவர். வி. செல்வநாயகம், அ.மரியதாசன், எஸ்.எ. சாள்ஸ், கே. இலக்குமஐயர் ஆகியோரிடம் தமிழ் மொழியை கற்றறிந்த இவர் இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு வைத்தியக் கல்லூரி, லண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மருத்துவக் கல்வி கற்றுத் தேறியவர் வி.செ.சி, பென்சிலின், மகன், ஜெய்ஹிந்தசாஸ்திரி, நந்தி ஆகிய பெயர்களில் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர். மருத்துவத் துறையில் இருந்தவாறே இலக்கியத்துறையை நேசித்த இப்பெருமகன் இலங்கை இலக்கிய வரலாற்றில் பெரும் சாதனை படைத்த ஒருவர் என்றே கூறலாம். இவருக்கு நந்தி என்னும் பட்டப்பெயரை இந்திய அரசியல் வாதியும், எழுத்தாளருமான இராஜாஜி வழங்கியிருந்தார்.

இவர் மலையக மக்களின் வாழ்க்கை அவலங்களை மையமாகக் கொண்டு எழுதிய ”மலைக்கொழுந்து” என்னும் நாவல் 1964ம் ஆண்டு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. இவரால் முதன் முதலில் எழுதப்பட்ட ”சஞ்சலமும் சந்தோசமும்” என்னும் சிறுகதை வீரகேசரிப் பத்திரிகையில் வெளியானது. வெளிநாடுகளில் மருத்துவப் பயிற்சிக் கருத்தரங்குகளில் கலந்து கொண்ட நந்தி அவர்கள் நோய்கள் பற்றிய ஆய்வுகள் பலவற்றை மேற்கொண்டார். ”அருமைத்தங்கைக்கு” (மருத்துவ அறிவுரை), ”ஊர் நம்புமா” (சிறுகதைத் தொகுப்பு), ”அன்புள்ள நந்தினி” (மருத்துவ அறிவுரை), ”உங்களைப் பற்றி” (சிறுவர் அறிவுரை), ”குரங்குகள்” (நாடகம்), ”தங்கச்சியம்மா” (நாவல்), ”கண்களுக்கு அப்பால்” (சிறுகதைத் தொகுப்பு), ”நம்பிக்கைகள்” ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார். இவரின் நாவல்கள், சிறுகதைகள், அதிகமாக சமூக மருத்துவர்களின் வாழ்வியல் ஆகியவற்றை உள்வாங்கி எழுதப்பட்டவை ஆகும்.

நாடகம் எழுதும் ஆற்றல் கொண்ட இவர் ஈழத்தின் முதுபெரும் நாடகக் கலைஞர்களான நவாலியூர் செல்லத்துரை, ஏ. பவளத்துரை ஆகியோருடன் மேடையில் நடித்துமுள்ளார். சொல் தெரிந்து, பொருள் தெரிந்து சுவையோடு இலக்கியம் படைத்த மருத்துவ வள்ளல்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடு

Sharing is caring!

Add your review

12345