நந்தி

மருத்துவ பேராசான் நந்தி. புன்னகை தவழும் முகம் சிந்தனை ஆழத்தைக் காட்டும் அகன்ற நெற்றி எதையும் கூர்ந்து கவனிக்கும் கண்கள் வார்த்தையின் பெறுமதியை உணர்ந்து ஒவ்வொன்றாக வெளிப்படுத்தும் உரையாடல் இத்தனை திருக்கோலத்துடன் எம் மத்தியில் வாழ்ந்த ஓர் அறிஞன். ஓர் சிந்தனாவாதி, மாபெரும் கலைஞன் தான் நந்தி ஜயா. பழமைக்கும் புதுமைக்கும் உறுதி மிக்க இணைப்புப் பாலமாக இருந்து இலட்சிய மூச்சுடன் இலக்கியம் படைத்து இலக்கிய உலகில் செங்கோல் ஓச்சியவர். ஈழத்தின் மூத்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான நந்தி தமிழ் கலை இலக்கியத் துறைகளில் அரைநூற்றாண்டிற்கும் மேல் தொடர்பு கொண்ட ஓர் இலட்சியங்களுடனான இலக்கியவாதி. படைப்பிலக்கிய வெளிப்பாடு 1947-03-02 வீரகேசரி இதழில் பிரசுரமான “ சஞ்சலமும் சந்தோசமும் “ என்ற சிறு கதையாகும். அதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் ஈழத்திலும் தமிழகத்து சஞ்சிகை பத்திரிகைகளிலும் வெளிவந்தன. நந்தியின் ஆரம்பகால படைப்புகளை நோக்கும் போது அவை பொதுவாக தனி மனித குடும்ப சமூக உறவுச் சூழல்களில் நிகழும் பொட்டுக் கேடுகளை பிட்டுக் காட்டும் வகையிலும் முரண்பாடுகள் போலித்தன்மைகள் முதலியவற்றை கதையம்சங்களாக கொண்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. 2ம் காலகட்டத்தில் சில பிரச்சனைகளை ஆழ்ந்து நோக்க முற்பட்டமை தெரிகிறது. குறிப்பாக வர்க்க முரண்பாடு சாதி ஏற்றத்தாழ்வு இன உணர்வு எனவும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் சமயப்போர்வையில் நிகழ்த்தும் ஊழல்கள், கிராமப் புறங்களில் ஒரே குடும்பத்தாரிடையே நிலவும் போட்டி, பொறாமைகள் என்பன இந்தக் காலப்பகுதி கதைகளுக்கு கருப்பொருளாகின்றன. இவரின் சிறுகதைத் தொகுதிகளான

“ஊர் நம்புமா “ “கண்களுக்கு அப்பால்” “ நந்தியின் கதைகள்”  “ தரிசனம்” “ நந்தியின் சிறந்த கதைகள் 12”

என்பவற்றைக் குறிப்பிடலாம். நாவலாசிரியராக நந்தியை நோக்கும் போது நாவல் துறையில் தனது திறனை ஆழமாகவும் அகலமாகவும் பொறித்துள்ளார் என்பதை அவரது

“மலைக்கொழுந்து (1964)” “தங்கச்சியம்மா (1971)”

ஆகிய இரு நூல்களிலிருந்து விளங்குகிறது. இந்த இரண்டும் தனித்தனி நாவல்கள் போல் இருந்தாலும் உண்மையில் நந்தி எழுதிய பெரியதொரு நாவலின் முதற்பாகமாக “மலைக்கொழுந்தும்” இரண்டாம் பாகமாக “தங்கச்சியம்மாவும்” அமைந்து விட்டது என்பதே உண்மை.

நாடகம், சினிமா, நடிப்பு ஆகிய துறைகளிலும் கால் பதித்த நந்தி மனிதனின் குணாதிசயங்களையும் நடத்தைகளையும் அவதானித்து அவற்றை உள்வாங்கி நடிப்பதில் வல்லமையுடையவர். ஈழத்தில் தயாரான “பொன்மணி” என்ற திரைப்படத்தில் வயது சென்ற குடும்ப பாரம் மிகுந்த ஒரு தந்தையாக நடிக்கிறார். மறைந்த எழுத்தாளர் கே.டானியலின் சிறுகதை ஒன்றுக்கு “அப்பர்” நாடக உருவம் தந்து பிராமணக் குருக்களாக அதில் வேடம் தாங்கினார். கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டோரை விடக்கூடாது என்று கூறும் கோவில் உருமையாளர் ஒருபுறம், கோயிலுக்கு வருவோம் என்று மக்கள் ஒருபுறம் இரண்டு பகுதியினரையும் திருப்திப்படுத்தும் பயந்த குணாதிசயத்துடன் மிக அருமையாக நடித்தார் நந்தி. அதற்கு முன்னரேயே அரிச்சந்திரனில் விசுவாமித்திரராகவும் சிங்ககிரிக்காவலனிலும் நந்தி நடித்தார். சிறந்த சிறுகதை எழுத்தாழர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், கட்டுரையாளர், கல்வியியலாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர் என்ற அவர் தொடாத துறையுமில்லை அவர் தொட்டு துலங்காத துறையுமில்லை.

Sharing is caring!

Add your review

12345