நவாலி சிந்தாமணி விநாயகர் ஆலயம்

இலங்கையின் கேந்திரமாய் விளங்குகின்ற யாழ்ப்பாணத்தைச் சார்ந்த நவாலியூரில் மன்னுயிர்களில் மேற்கொண்ட பெருங்கருணையினால் முழுமுதற்கடவுளாகிய சிந்தாமணி வினாயகப்பெருமான் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னரே கோயில் கொண்டெளுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். இவ் ஆலயம் அமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே புளிய மரத்தை தலவிருட்சமாகக்கொண்ட கற்கட்டுவைரவர் கோயில் உள்ளது. சிவாசாரியார் கணபதீசுவரக்குருக்களே இதன் உரிமையாளராவார்.

இவர் மெய்யன்போடு பாரதநாட்டு தீர்த்த யாத்திரை செய்து காசி விசுவநாதப்பெருமானை வணங்கி நிற்கும்பொழுது கைமேற்கண்ட பலனாக ஒருபிராமணப்பெரியார் இங்குதாபிக்கப்பெற்ற விநாயகப்பெருமானின் சிலையைக்கொடுத்துப்; பூசிக்குமாறு கூறினார். இவரது இளைய புதல்வர் விசுவநாதக்குருக்கள் ஆலயம் அமைத்து முன்னேஸ்வரக் குமாரசாமிக் குருக்களால் பிரதீட்சை செய்வித்தனர். இவ்விசுவநாதக்குருக்கள் நல்லூரில் புகழ்மிக்க தம்பையாக் குருக்களெனப் பெயர்பூண்ட கார்த்திகேயக்குருக்களின் சகோதரியாகிய பதிவிரதா சிரோமணி விசாலாட்சி அம்மையாரைக் கூடிமணஞ் செய்து முறை தவறாது ஆலயத்தையும் இல்லறத்தையும் செவ்வென நடத்தி வர விக்கினங்களைத் தீர்க்கும் எம்பிரானது திருக்கருணையினாலே தவப் புதல்வராகிய சோமசுந்தரக் குருக்கள் உதித்தனர்.

இவர் சகல கலைகளையுங் கலைவிற்பனராகிய இவரது மாமனார் சிவாசாரியார் கார்த்திகேயக் குருக்களிடந் திறம்படக்கற்றார். கற்றதை செயற்படுத்தும் அரிய திறன் இவரிலிருந்தது. இவர் ஆலயத்தை நாளடைவில் சைவாபிமானிகளின் உதவியுடன் எல்லாவகையிலும் வளரச் செய்தது. 1921ம் ஆண்டில் நா.சிவசுப்பிரமணியக்குருக்கள் நல்லூர்க் கார்த்திகேயக்குருக்கள் ஆகியோராற் கும்பாவிஷேசம் செய்வித்தனர். வருடந்தோறும் பத்து நாட்களுக்கு அலங்காரத்திருவிழா நடத்தி பின் 1950ஆம் ஆண்டு தொடக்கங் கொடியெற்றம் தேர் தீர்த்தம் ஆகிய திருவிழாக்கள் மகேசுவரப்பூஜை புராணபடனங்கள் கயமுக சூரசங்காரம் முதலியவற்றை நடைபெறச்செய்தனர். தாம் கண்ட காட்சிக்கமைய 1950ஆம் ஆண்ட வைகாசி மாதத்தில் ஜந்துமுக விநாயகப்பெருமானது திருவுருவத்தை முதன்முதலாக இலங்கையில் வண்ணை இராமகிருஸ்ண ஆசாரியைக் கொண்டமைத்து இவரது மைத்துனர் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி கா.கைலாசநாதக்குருக்களால் கும்பாவிஷேகம் செய்வித்தும் விநாயக சஷ்டிவரை 21 நாட்களும் 5 சிவாச்சாரியர்களைக் கொண்டு இலட்சார்ச்;சனை வருடந்தோறும் நிகழ்வித்தும் வந்தனர். தற்பொழுது கோயிலிற்கு சிற்பத்தேர் செய்யப்பட்டு திருவிழாக்களும் பூஜைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பக்தர்கள் பக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.

Sharing is caring!

Add your review

12345