புளியம்பொக்கணை நாகதம்பிரான்

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வரலாறு பற்றிய ஒரு பார்வை.

புராதன கரைச்சியின் சிறப்பு

நாலு திசையும்பெரும் சமுத்திரத்தால் சூழப்பட்டு இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படுகின்ற இலங்கை என்ற ஈழநாட்டின் வடபால் அமைந்த மணல்திடலான யாழ்ப்பாணம் என்பது ஒருபெரும் பிரிவாகவும் இதனுள் பதின்மூன்று உட்பிரிவுகளும் வகுக்கப்பட்டிருந்தன. இங்கே பெரும்பிரிவு என்பது மாகாணம் அல்லது மாவட்டம் என்றும் உட்பிரிவு என்பது கோயில் பற்று அல்லது மணியகாரன் பகுதி என்றும் அழைக்கப்பட்டன. இந்தப் பதின்மூன்று உட்பிரிவுகளில் கரைச்சி என்பதும் ஒரு பிரிவாகும். இந்தக்கரைச்சிப் பிரிவானது இயற்கையின் பலவளங்களையும் ஒருங்கே பெற்று பார்ப்போர் மகிழும் வண்ணம் சிறந்து காணப்பட்டது. இதனால் இந்தக் கரைச்சிப் பிரிவு மற்றைய பிரிவுகள்யாவற்றிலும் மேலாகத் திகழ்ந்தது.

புளியம்பொக்கணை நாகதம்பிரான்

கரைச்சிப் பகுதியில் வடக்குப் பக்கமாக சமுத்திரம் போன்ற ஆழமுடைய கழிக்கடலும் மற்றைய மூன்றுதிசைகளிலும் பெரிய குளங்களும் பாய்ந்து ஓடுகின்ற பெருத்த ஆறுகளும் ஒருநாட்டின் எல்லைகளில் வெட்டப்படுகின்ற அகழிகளைப்போன்று எல்லைகளாக அமைந்துள்ளன. இன்னும் பாலை, நாவல், வேம்பு, புளி, முதிரை, பனிச்சை, ஆல், ஆத்தி, கருங்காலி, தேக்கு, இலுப்பை முதலிய பெருமரங்களும் அழகிய மலர்களையுடைய குருத்து காஞா செழுமலருடைய கொன்றை போன்ற மரங்களும் நாலாதிக்குகளிலும் அடர்ந்து வளர்ந்து மதிலைப்போன்று காட்சி தருகின்றன. நல்ல மரங்கள் நிற்கின்ற நாடே நன்நாடு என்று ஆன்றோர் கூறுவதால் ஈடிணையற்ற மகோன்னதமான நாடென்று கூறப்படுகின்றது இந்தக் கரைச்சிப் பகுதி.

நால்வேதம் ஓதி அறுதொழில் செய்வோர்தான் அந்தணர். ஆங்கே கரி என்ற பஞ்சம் வராது என்பது சாத்திரம் இப்படியான அந்தணர்கள் இருக்கின்ற அக்கிரகாரம் என்று சொல்லப்படுகின்ற இல்லப்பகுதிகளும் அரசபணியார்கள் வாழ்கின்ற இடங்களும், தமது பொருட்கள் போல் பிறர்பொருளையும் நிறுத்தி வாங்கி விற்று வியாபாரத்தொழில் செய்கின்ற செட்டிமக்கள் வாழ்கின்ற இடங்களும், குற்றமற்ற வேளாண் தொழிலைச் செய்வதால் வேளாளர் என்று அழைக்கப்படும் நிலமடந்தைப் புதல்வர்கள் வாழ்கின்ற இடங்களும் இந்தப்பகுதியில் நெருக்கமாகக் காணப்படுவதுடன், மேல் மாடங்கள் மண்டபங்கள், வீடுகள், மற்றும் பாடசாலைகள் வைத்தியசாலைகள், நாடகசாலைகள், நல்ல உணவுப்பொருள்கள் விற்கப்பெறுகின்ற வியாபாரசாலைகள் வீதிகள் தோறும் ஆங்காங்கே காணப்படும்.

இங்கே பசுவினங்களும் ஆடுகளும், எருமைகளும் இன்னும் மான்கூட்டங்களும் மரைகளும், யானைகளும், புலிகளும், குரங்குகளும், பன்றிகளும் வலிய கரடிகளும், முயல்களுமாகிய மிருகங்கள் காட்டினது பிள்ளைகள் போல எவர்களும் காணும்படி எவ்விடத்திலும் கூச்சமின்றி உலாவும் இதைப்பார்க்கில் நல்ல நீதிவாய்ந்த நாட்டில் புலியும், மானும் ஒரே நீர்நிலையில் நீர்குடித்துச் செல்லுமென்ற சாஸ்திரம் சொல்லும் உண்மையை கரைச்சிப் பகுதியில் காணக்கூடியதாக இருக்கும்.

இங்கே வருடாவருடம் வரைவின்றி மழை பொழிவதால் வயல் நிலங்கள் வாய்க்கால்கள் ஆறுகள், அளவக்கைகள், கிணறுகள், குளங்கள், ஏரி, நீரோடைகள், மடுக்கள் குண்டு குழி எல்லா இடங்களிலும் தண்ணீர் தேக்க முற்றுக் காணப்படும். மன்னர் செங்கோல் ஆலயதர்மம், மாதர் கற்பு என்பன நெறிதவறினால் மழை பெய்யாது என்பது சான்றோர் வாக்கு.
தென்னை, பனை, மா, பலா, கமுகு, நல்லகரும்பு, வாழை என்பன இங்கே காடுபோல் செழித்துப் பல்கிப்பெருகி இருப்பதால் இங்கு வாழ்பவர்கட்கு எக்காலமும் பஞ்சமும் துன்பத்துக்கு இடமாகிய வறுமையும் வராது என்று கூறப்படுகின்றது. இதனால் பஞ்சமா பாதகங்கள் போன்ற குற்றச் செயல்கள் கரைச்சியிலே இல்லை என்றும் கூறப்படுகிறது. அதோடு எள்ளு, வெண்தினை,  கருந்தினை, சாமை, உழுந்து, கொள்ளு, சோளம், கடலை, வரகு, குரக்கன், மொச்சை, பயறு, துவரை, அவரை, இறுங்கு போன்ற சிறுதானியங்கள் கரவில்லாது விளைகின்ற மேட்டு நிலங்களும் நிறையவே உண்டு.

இங்குள்ள இல்லங்களில் ஆடவர், மகளிர் கூடி மகிழ்ந்து பாலும்தேனும் போல வாழ்வதை மகாவிஷ்ணு மூர்த்தியும், மகாலட்சுமி தேவியும் கூடி இருப்பதற்கு உவமித்துக் கூறப்படுகின்றது. இங்கே ஆதியந்தமில்லாத விநாயகப்பெருமானது திருக்கோயில்களும், ஒளியினையுடைய ஆறுமுகப்பெருமானது திருக்கோயில்களும், பத்தினி கண்ணகை வீரபத்திரர் மற்றும் வைரவப்பெருமானது ஆலயங்களும் ஆங்காங்கே காட்சி தந்து நல்ல திருவருள் பாலித்து வருகின்றன.
இங்குள்ளவர்கள் நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்பொருட்டு தங்கள் குலதெய்வங்களுக்குத் தினந்தோறும் செய்கின்ற அபிடேக ஆராதனைகளுடன் கூடிய பூசை பெருந்திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகள் செய்பவர்களது பக்தி மேலோங்கிய சத்தமும் அறிவாளிகளால் வியந்து பேசப்படுகின்ற செல்வந்தர்களின் வீடுகளில் இசை பாடுகின்ற வானொலிகளின் சத்தமும் சிறுவர்கள் கல்வி கற்கின்ற பாடசாலைகளில் இருந்து வெளிப்படுகின்ற சத்தமும் வீதிகளிலே ஓடுகின்ற வாகனங்கள் மற்றும் இயந்திர சாதனங்களினது சத்தமும் எப்பொழுதும் எல்லா இடங்களிலும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

இயல்பு முறையான சாதியத்தின் படி கடற்றொழில் செய்பவர்கள் நிறைந்து வாழுகின்ற இடம் ஒரு பக்கமாகவும், நாவிதர், நீரங்கோரியர் போன்றவர்கள் வாழுமிடம் ஒரு பக்கமாகவும், தொழிலாற்பெயர் பெற்ற கொல்லர், தச்சர், குயவர் வாழ்கின்ற இடங்கள் ஒரு பக்கமாகவும், மற்றும் கன்னார், பொற்கொல்லர், சிற்பியர் வாழ்கின்ற இடங்கள் ஒரு பக்கமாகவும் விளங்குவதோடு பிராமணர், இரப்போர், வறியவர், முதியவர், ஆண்டிகள், சந்தியாசிகள், சங்கமர்கள், தந்தை தாய் இழந்தவர்கள், மனைவி தகுந்ததொழில் இல்லாதவர்கள் யாரேனும் இந்த நல்ல கரைச்சிப் பகுதிக்கு வந்து தங்கள் விருப்பம் போல பொருள் பண்டங்கள் நல்ல விளைநிலங்கள் என்பவற்றைச் சம்பாதித்து நிரந்தரமாகவே குடியேறி வாழ்கின்ற இடம் என்பதால் இது போன்று வேறு இடம் எங்கும் இல்லை என்றே சொல்லப்படுகின்றது.

நீர் அணைகளில் நீரை மறிப்பதும் வயலின் வரம்பு வாய்க்கால்கள் கட்டுவதும் பருவம்பார்த்து நிலத்தை உழுது பண்படுத்துவதும் பயிருக்குத் தக்கபடி நீர்பாய்ச்சுவதும், நெற்பயிரை வளரவிடாது தடுக்கின்ற புற்களைப் பிடுங்குவதும் விளைந்த நெற்பயிரை அறுவடைசெய்வதும் கூடு வைத்துக் காலத்துக்கு ஏற்படி மிதிப்பதும் போன்ற கமவேலைகளை இப்பகுதியில் உள்ளவர்கள் தவறாது செய்ய வருவார்கள்.

புனிதமான ஊர்
சொல்லப்பட்ட சகல வளங்கள் நிறைந்து சிறந்த கரைச்சி என்ற பெண்ணானவள் நெருங்கிய சிறப்பமைந்த யாழ்ப்பாணம் என்ற தலைவனைச் சேர்ந்து முன்னமே பெற்ற பிள்ளைகள் என்று சொல்லப்படுகின்ற கரைச்சியின் உட்பிரிவுகள் பதினெட்டில் மூத்தபிள்ளையாக கருதப்பட்டு உயர்ந்துள்ளது புளியம்பொக்கனை என்ற ஊர்.

புளியம்பொக்கணை நாகதம்பிரான்

இந்த புளியம்பொக்கனை ஊரிலே அரிய கல்விமான்களும் அதிக நன்மையுடைய பண்காரர்களும் நெற்காணிகள் தொகையாக உடைய நிலச்செல்வந்தர்களும் இராசாக்களைப்போல சகல ஐஸ்வரியங்களும் பெற்று இல்லங்களில் வாழ்வார்கள். பயமுற்றவர்கள் சந்தேக விபரீதம் தீர்க்கல்லாதவர்கள் பிச்சைக்கார்கள் அகம்பிரமம் கொண்டவர்கள் இழிந்தவார்த்தைகளை பேசுகின்றவர்கள் குடிவெறியினையுடைய கோளர்கள் இந்த புளியம் பொக்கணை ஊரில் இருப்பது அருமையாகும். பல்வகைத்திருத்தம் மிகுந்த இந்த சிறந்த புளியம்பொக்கணை ஊரில் இருக்கும் வயோதிபர், வாலிபர், மிருதுவான தித்தித்த வதனத்தையுடைய பாலர்கள், இலட்சணம் பொருந்திய மங்கையர்கள், புத்திகூர்ந்த கன்னியர்கள் முடிவில்லாத சூரியதேவன் உதிப்பதற்கு முன்பாக நித்திரை விட்டெழுந்து அன்றாடம் செய்கின்ற கடமைகளை முடித்துக்கொண்டு தங்கள் குலதெய்வங்களை வணங்குவார்கள். அதன் பின்னர் சூரியன் உதித்து வர அன்பு பூண்ட விசுவாசமுள்ள மனத்தோடு நல்ல பாத்திரங்கள் தகுந்த பொருள்கள் என்பவற்றை விளக்கி சுத்தம் செய்து தோண்டப்பெற்ற நீர்நிலைகளில் போய் வஸ்திரத்தோடு நீராடுவார்.

இன்னும் இல்லங்களில் உள்ள முற்றம் வீடு என்பவற்றை கூட்டி சுத்தம் செய்து கழிமண் கலந்த சுத்தமான பசுவின் சாணத்தினால் மெழுகி தோய்த்துலர்ந்த ஆடைகள்,ஆபரணங்கள் அணிந்து வந்து ஒருவித துன்பமுமின்றி அமுதுடன் கறிவகைகளையும் சமைப்பர் சமைத்த அமுது கறிவகைகளை தங்கள் சிறு பிள்ளைகளும் உடனிருந்து உண்ணும்படியாக நல்ல முகமலர்ச்சியோடு இனிய வார்த்தைகளைப் பேசி கணவனுக்கு உணவு பரிமாறி அவர்கள் உண்டபின்னே தாமும் உணவருந்தி பெரும்புகழ் அடைவர். இன்று வீட்டின் கண்ணே புதிதாக அறியாதவர்கள் யார் வந்தாலும் தகுந்த நல்லவார்த்தைகள் கூறி அகமகிழ்ந்து அவர்களையும் தம் உறவினராக நினைந்து அமிர்தத்தையொத்த சுவையான உணவுகளை வழங்கி இன்புற்று வீட்டுக்கு யாசகத்திற்காக வருகின்ற சங்கமர் என்ற வீரசைவர்கள் பரதேசிகள் பண்டாரிகள் சந்நியாசிகள் தவசிகட்கெல்லாம்நல்ல அரிசியும் நெல் என்பவற்றையும் அள்ளிக்கொடுத்து உணவு கொடுத்து மகிழ்வர்கள் இவ்வூர்பெண்கள்.

இன்னும் அவர்கள் மாதம் தோறும் வருகின்ற சூதகம் என்ற வீட்டு விலக்கான நாளில் யாருடனும் பேசாமல் ஒதுக்கமான இடத்தில் இருப்பார்கள். ஏனெனில் அன்பு பொருந்திய நாயகன் கண்டால் வரப்போகின்ற தோசத்திற்கு தாங்கள் ஆளாகநேருமென்ற சாத்திரமுறைகை; கடைப்பிடித்தே அதுமட்டும் மல்ல சொன்ன நான்கு நாட்களும் கழித்து ஐந்தாம்நாள் நீரில் மூழ்கி சுத்தமாகிய பின்பு அந்நியர்கள்,மற்றும் தினமும் பழகியவர்களையும் பாராது தங்கள் கொழுநன் தன்னையே முதலில் பார்ப்பார். சொந்த நாயகன் தூரதேசங்கள் சென்றிருந்தால் முடிவில்லாத பேரழகினுடைய சூரியதேவனைப்பார்ப்பவர்கள் இதுஏனெனில் அந்தமாதத்தில் கர்ப்பமுற்றால் முதலில் காண்பவர் போலவே குழந்தை கருவில் அமையும் அதனால் தீராத வசைவந்துவிடும் என்ற முன்னோர் முறைமையை உணர்ந்ததே ஆகும்.
இங்குள்ளவர்கள் குளக்கரையில் பசுக்கள் உராய்வதற்காக ஆவுரிசிக்கல் என்னும் கல்லு நாட்டுதல், பாழடைந்த கோயிலை திருத்தி அமைத்து புனருத்தாரணம் செய்தல், பூஞ்சோலை அமைத்தல் கோடைகாலங்களில் குளங்கள் வெட்டுதல் ஆகிய தர்மகாரியங்களை தொண்டாக செய்வதே பிரதான தொழிலாககொண்டார்கள். மட்டுமல்லாது தாங்கள் அனுஸ்டிக்கும் சைவசமய முறைமையை அறிந்து சந்திரனை அணிந்த சடாமுடியினை உடைய சிவபெருமான் உமாதேவியார் பேரொளி பொருந்திய வேற்படையுடைய முருகப்பெருமான் விநாயகப்பெருமான் வீரபத்திரர், வைரவர், கண்ணகை ஆகிய தெய்வங்களின் விரதங்களை தவறாமல் அனுட்டித்தது தேவாலயங்களுக்கு உரிய காலங்களில் பொங்கல் பூசைத்திருவிழா, பெருவேள்வி போன்றவற்றை சங்கமென ஒன்றுகூடி தவறாமல் செய்துவருவார்கள். அது மட்டுமன்றி வேற்கரநாதராகிய கந்தப்பெருமானது கந்தபுராணத்தையும் முறைவழுவாது வருடந்தோறும் படித்து பயனுணர்ந்து வருவார்கள்.

புளியம்பொக்கணை நாகதம்பிரான்

இப்படி சிறப்புக்கொண்ட ஊரில் நான்முகத்தினை உடைய பிரம்மதேவனும் அரியவராகிய சிவபெருமான் அருளினால் பாம்பு வயிற்றினால் பெண் வயிற்றில் அவதரித்து தெய்வீகமாக மாறி இந்த ஊரிலே ஒரு தேவாலயம் உண்டாகும் அதைப்பார்ப்பேன் என்று நினைத்து தீமைகளை நீக்கி மிகவும் பரிசுத்தமாய் இருந்தது அந்த புளியம்பொக்கனை ஊர்.
இரும்பு, பொன், வெள்ளி ஆகிய கோட்டைகளை வைத்துக்கொண்டு அசுரர்கள் தேவர்களுக்கு தீமை செய்தபோது அவற்றை எரித்து தேவர்களை காப்பாற்றிய முப்புரதகணராகிய பரமசிவன் பாம்புவடிவம் கொண்டு இந்த இடத்திற்கு வருவார் அவருக்கு இருக்க இடமும் உண்பதற்கு பாலும் பழமும் நானே கொடுப்பேன் என்பது போல நல்ல கொம்பர்களை பந்தர்போல் பரப்பி நிற்கின்ற அந்த அரசமரமும் சிரசின் மேலே உள்ள கங்கையை சிவபிரான் திருக்கண்ணால் அவதாரம் செய்து அனுப்பி வைத்தாற்போல தென்கிழக்குத் திசையில் நல்ல திருக்குளம் அமைந்திருக்க இவ்வூரில் சமய விதிமுறைகளில் குறையேதும் இல்லாமல் வேளாளர்களும் வன்னிய குளத்தவர்களும் ஒன்றுசேர்ந்து பெருமையோடு வாழ்ந்தனர்.

திருஅவதாரம்
சொல்லப்பட்ட இவ்வளங்களில் சிறந்த புளியம்பொக்கனை என்ற நல்லூரோடு ஒன்றிணைந்த கொழுந்துபுலம் என்ற சிற்றூரில் பிரிவில்லாது வாழ்கின்ற வன்னிய வேளாளர்கள் அனைவருக்கும் ஓர் முதல்வனாகி முதலியார் பட்டம் பெற்றவராகி ஆதிமூர்த்தியாகி பரமசிவனின் நல்லருள் பெற்று நன்மை ஆகிய கதைகள் ஆகமங்கள் என்பவற்றறை சந்தேகமறக்கற்று பேரறிவினை உடையவராகி நீதி நாயக முதலியார் என்ற பொலிவாகிய பெயரைப்பெற்று பகைவர்களும் வியக்கும் பொருட்டு வேளார்களுக்குரிய முதன்மைசிறப்பான ஏர்ச்சீரோடுவாழ்ந்து வந்தார்.

இவர் அளவற்ற நெற் கழனிகளும் ஆடு,மாடு எருமைகளும் எவ்வளவு பெரிய வேலையானாலும் மிகவும் விரைவாக செய்து முடிப்பதற்குஏற்ற வேலையாட்களும் குடிமக்களும் ஒரு சேர திறமையினாலேயே சம்பாதிக்கப்பெற்ற பல்வகைத்திரவியங்களுமாகிய பதினாறுவகை செல்வசிறப்பையும் ஒருங்கே பெற்று விளங்குவதன் நீதி நாய முதலியாருக்கு நிகராக எவரையும் எடுத்துச் சொல்ல முடியாது.

சுத்தியத்திற்கு நல்ல அரிச்சந்திரனையும் செல்வளத்திற்கு குபேரனையும் பொருட்களை தர்மம் செய்வதில் கர்ணனையும் வலிமையான வீரத்திற்கு அனுமானையும் பார்க்கின்ற பேரழகிலே மன்மதனையும் அடைந்தோரைக்காப்பதில் நெடியமகாவிஷ்ணுமூர்த்தியையும் பொலிவாகிய அன்பு ஆதரவில் இயமபுத்திரனாகிய தர்மராசானையும் நிகர்ந்து விளங்கினார்.

இப்படியான உயர்ந்த நிலைமை பெற்று வாழ்கின்ற சிறப்பைக்கண்ட அவர்களது சுற்றத்தவர்களிலே மூத்தவர்கள் ஆராய்ந்து அறிவது சொல்லப்பட்ட முறை நிறைநீதியுடன் ஒத்து விளங்குவதும் இவருக்கு சமமாகிய வன்னி மரபிலே உள்ளவருமாகிய கமலம் என்னும் பெயருடைய கன்னிகையை அக்கினி சாட்சியாக வைத்து விவாகம் செய்து பிரிவில்லாமல் இருந்தார்.

இதை உவமித்து சொல்வதானால் இரண்டு உடலிற்கு ஓருயிர் போலவும் இரவும் பகலும் நீங்காத காதலுற்ற மன்மதனும் ரதியும் போல இன்பம் அனுபவித்து வாசனையுடைய மலரும் மணமும் போல ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள்.

நீதி நாயகமுதலியார் தான் சம்பாதித்து சேர்த்த செல்வத்தாலும் பிதா மாதா கொடுத்த முதுசொத்தாலும் மனைவியின் சீதனப்பொருட்களாலும் இன்னும் பலவிதவருவாய்களினாலும் அரசனைப்போல செல்வத்தை அனுபவித்தால் எனினும் பிறிதொருகாரியத்தை நினைத்து மனதிலே பெரும் கவலையடைந்தார்.

பொருட்செல்வத்தால் குறைவில்லை சாதியிற் குறைவென்ற துன்பம் இல்லை இனத்தவர்களால் இடரில்லை. பகைவர்களாலும் துயரமில்லை எனினும் நாம் விவாகம் செய்து இவ்வளவு காலம் நடத்திய இல்லற வாழ்வில் கண்ட சுகம் ஒன்றுமில்லை என்று மனதில் நினைந்து பெரிய துன்பக்கடலில் வீழ்ந்தார் நீதிநாயகமுதலியார்.

ஆந்தப்பெருந்துன்பம் யாதெனில் அளவில்லாத பெருஞ்செல்வத்தை தனக்கும் பின் அனுபவிப்பதற்கும் இக்காலத்தில் மழலை மொழிகேட்டு இன்புறுவதற்கும் சந்ததி பெருகுவதற்கும் தகுந்த புத்திரபாக்கியம் இல்லாததேயாகும். இதனை பசிய வளையல்களை அணிந்த கைகளைஉடைய கமலம் அம்மையாரிடம் சொல்லுகின்றார் பின்வருமாறு
பேண்ணே நாம் திருமணம் செய்து இதுநாள்வரையும் இல்லறஇன்பம் குறைவின்றி அனபவித்தோம் எமக்கு இறப்புவரும்காலத்தில் ஈமக்கிரியை முதலான கடமைகளை செய்வதற்கேற்ற புத்திரபேறில்லையே இதனால் இந்த இல்வாழ்வில் என்ன சுகத்தைக்கண்டோம் ஒன்றுமில்லையே பசுவதை செய்தேளோ? வீட்டில் அடைக்கலம் என்று வந்தவர்க்கு துன்பம் செய்தேனா? அல்லது நல்ல பூங்காவினை வெட்டி அழித்தேனா? நல்ல கலைஞானங்களை கற்றுணர்ந்த வித்துவான்களை நிந்தித்தேனா? மாவடுவை ஒத்த கூரிய கண்ணினை உடைய கன்னிப்பெண்ணின் கற்பை அழித்தேனா? தேவர்களிடத்தே பழியைப்பெற்றுக்கொண்டேனா? இப்பயான பாவங்கள் எதையுமே நான் செய்யவில்லையே கொலை முதலான பஞ்சமா பாதகங்களையும் குலதெய்வங்களிடத்தில் பொய்ச்சத்தியம் செய்தல் போன்ற பழிகளை செய்த பாவத்தினால் புத்திரபாக்கியம் இல்லாமல் போகலாம் ஆனால் நாம் செய்தது ஒன்றுமில்லையே என்றால் முற்பிறவியிலே நாம் செய்த பிரார்த்துவம் என்ற வினையே இல்லாமல் இப்பிறப்பிலே நான் அறிய செய்த பாவங்கள் ஒன்றுமில்லை ஆகவே எமக்கு புத்திரன் பிறக்க வழி சொல்லு என கற்புடைய மனைவியான கமலம் அம்மையாரிடம் யோசித்துக் கூறுகிறார்

ஐயா கல்வி அறிவு குறைந்த மாந்தர்களைப்போல உள்ளம் கலங்குவது அழகல்ல எமது இந்த சிறிய துன்பம் நீங்கவேண்டுமெனில் சிவபெருமான் உமையாரினது செந்தாமரை மலர் போன்ற பாதங்களில் நல்ல மனம் பொருந்திய மலர்கள் தூவி வணங்கி நல்ல விரதாங்களை முறை தவறாது அனுட்டித்தால் வருகின்ற பாவங்களை நீக்கி புத்திரபாக்கியத்தை தருவார் இது நிச்சயம் என்றார் மனைவியான கமலம் அம்மை.

துணைவியார் சொல்லிய வார்த்தையைச் சிவபெருமான் திருவருள் என்றே ஏற்றுதானும் துணைவியாரும் பற்பல விரதங்களை அனுஸ்டித்தும் அன்னதானம் ஆகிய மகேஸ்வர பூஜை செய்து குறையாய் இருக்கும் ஆலயங்களைக்கட்டி முடித்தும் மற்றும் இப்படியான தானதருமங்களை வரைவில்லாமல் செய்து வந்தார்கன்.

இப்படியே பலகாலம் தர்மதானங்கள் செய்துவர இறைவன் திருவருளினாலும் இன்னும் காலை,உச்சி,மாலை ஆகிய முக்காலங்களிலும் செய்கின்ற தானதருமங்களாலும் பூரண கலத்தையொத்த தனங்களையுடைய கமலம் அம்மையாரினது திடமான கற்புநெறியாலும் தவறில்லாமல் கர்ப்பம் தரித்தாள் சுற்றத்தார்கள் வாழ்த்தும் படியாக அனுஸ்டித்த விரதபலன் எமக்கு இங்கே கைமேல்கிடைத்தது என்று கர்பகாலத்திலே செய்வதாகிய சீமந்தம்,வளைகாப்பு முதலிய கருமங்களை செய்து இன்புற்றிருக்க மயில்போன்ற சாயலை உடைய பெண்ணும் வயிற்றிலே உண்டாகிய கர்ப்பம் முதிர்ந்து பத்துமாதம் நிறைவடைந்து ஒருவிததுன்பமும் இல்லாமல் ஓர் ஆண்மகவைப்பெற்றெடுத்தாள்.

அந்தவேளையில் தந்தையாரான நீதிநாயகமுதலியார் மனம் மகிழ்ந்து தன்புதல்வன் சிறந்த லக்கினம் கிரகநிலை முதலியவற்றை விரைவாகப்பார்த்து அவை நல்ல பலன் அழிப்பதால் பிள்ளை இல்லை என்ற துன்பமும் கெட்ட கிரகவலு இல்லை என்ற துன்பமும் ஆகிய இருவகைத்துன்பங்களும் நீங்கி பேர்உவகையடைந்து நாள்தோறும் தவறாமல் செய்து வருகின்ற சிவபூசை மற்றும் சிவத்தொண்டுகள் என்பவற்றை சுற்றத்தவர்களும் சந்தோசப்படும்படி மேலும் அதிகமாக செய்து வறுமையினால் மனம் கலங்கி வருகின்ற வறியவர்களுக்கு நல்ல பொருட்களும் ஆடை ஆபரணங்களும் தானமாக கொடுத்தார்.

சொல்லப்படுகின்ற தங்கள் குலப்பெருமை விளங்கும் படியாக விருப்பத்தோடு மாப்பாணம் முதலிய என்ற பெயரை புதல்வனுக்கு சூட்டி நல்ல அன்போடு வளர்த்து வந்தார். புத்திரன் பிறந்தமையாலே பிள்ளை இல்லை என்ற பெரும் துயர் மனதில் நீங்கி இன்பம் எய்தி நிலைபெற்ற புதல்வனோடு வாழ்கின்ற நாட்களில் சொல்லப்பட்ட அருந்தவம் மேலோங்கி கமலா அம்மையார் மீண்டும் ஓர் ஆண்மகவைப்பெற்றெடுத்து ஊரில் உள்ள இனசனங்கள் எல்லோரும் மெச்சும்படி வவுனியமுதலியார் என்ற சந்ததிப் பெயரினை சூட்டி மகிழ்ந்து தங்களது இருகண்களைப்போல இருபுதல்வர்ளையும் காத்து சிவபெருமான் திருவருளைப்பெற்று வளர்த்தார்கள்.

இளம்பராயத்தோடு வளர்கின்ற இரண்டு பிள்ளைகளினதும் மழலைமொழிகளைக் கேட்டு மனமகிழ்ச்சியடைந்து அளவில் அடங்காத இன்பம் அடைந்தனர். வளங்கள் சிறந்துவிளங்கும் அன்னை கமலம் அம்மையாரும் பிதா நீதிநாயகமுதலியாரும் இளம்பருவத்தோடு வளர்கின்ற பிள்ளைகளுக்கு தேடுதற்கரிய பொனாபரணங்கள் ஆடைகள் அணிவித்து அழகைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்து உரிய காலத்திலே அவர்களுக்குரிய கல்வியையும் ஓதுவித்தார்கள்.

இரண்டு பிள்ளைகளும் அந்தஊரில் வசிக்கின்றவர்கள் அனைவரும் மிகந்த விருப்பத்தோடு மகிழும்படி உத்தமனான குணத்தோடு தாய்,தந்தை,சுற்றத்தார் எல்லோருக்கும் ஒப்பற்ற செல்வமாக வளர்ந்து சகல கலைகளையும் கற்றுணர்ந்தவர்கள் கண்ணின் மணிபோல அருமையாக இரண்டு ஆண் பிள்ளைகளைப்பெற்றும் பெண்பிள்ளை இல்லையே என்ற பெரிய துன்பம் நீங்கும் பொருட்டு குளிர்ந்த சந்திரனை அணிந்த சடாமுடியினையுடைய சிவபெருமான் திருவருள் பெற்று கமலம் அம்மையார் கர்ப்பம் உற்றுஇருந்தார் மிகுந்த சந்தோசத்தோடு நிலைபெற்ற உலகம் எல்லாவற்றையும் முதன்மையோடு ஆண்டு காக்கின்ற வேதநாயகராகிய சிவபெருமான் திருவருளினாலே கமலம் அம்மையாரும் கர்ப முதிர்ச்சி பெற்று பங்குனி மாதத்தில் வருகின்ற உத்தம நட்சத்திரமும் பூரணையும் கூடிய சுபதினத்தில் பிரசவ வேதனையுற்று ஒரு பாம்பையும் பெண்குழந்தையும் இரட்டையாகப்பெற்றார்.

பெற்ற பாம்புக்குட்டியைப் பார்த்து பிரிவில்லாத சுற்றத்திலுள்ள பெண்களும் ஊரில் உள்ள மற்ற பெண்களும் பயம் கொண்டு மனதிலே துயரமுற்றறு ஒருதடியால் அந்த பாம்புக்குட்டியை தூக்கி வெளியே எறிந்தனர் அப்பாம்பானது உடனே சுற்றி ஊர்ந்து வந்து படுக்கையில் ஏறி மடியில் சேர்ந்தது.

இந்த அதிஅற்புதமான தன்மையை தாயானவர் கண்டு இது சிவன்செயலே என்று எண்ணி அன்போடு எடுத்து அணைத்து அதனையும் தனது பிள்ளை போல இரண்டு பேருக்கும் பாலூட்டி வளர்த்தார் இந்த செயலை பிதாவாகிய நீதிநாயகமுதலியாரும் கண்டு மனதில் அடங்காத சந்தோசம் கொண்டார்.

தேவர்களும் வியந்து வாழ்த்துவதாகிய பாம்புக்குழந்தை வந்து பிறந்ததன் பின்னர் பிதா,மாதாவிற்கு முன்பிருந்த செல்வத்திலும் பத்துமடங்காக செல்வம் அதிகரித்து பெருகியது. கிடைத்த பெரும் செல்வத்தினாலே குபேரனைப்போல பூமியில் அனைவரும் மதிக்கும்படியாக ஒப்பற்ற கொடை வள்ளலும் ஆகினார்.

மனவிருப்பத்தோடு வளர்ந்து பாம்பு உருவான குழந்தைக்கு சற்றேனும் மனத்தளர்ச்சி இல்லாமல் தம்பிரான் எனப்பெயர்சூட்டினர். அதனுடன் கூடப்பிறந்த சகோதரியான அழகுமிகுந்த பெண்குழந்தைக்கு நல்ல அறிவாளர்களும் மகிழும்படியாக வள்ளிநாச்சன் என்ற பெயரும் சூட்டினர். எட்டுத்திசையிலும் உள்ளவர்களும் புகழ்ந்துரைக்கும் படி அந்த ஊரிலே சிறந்த அழகு பொருந்திய புதிய வீடொன்று கட்டி குடியிருந்த மனதில் எந்தவித கவலையுமின்றி மக்கள் நால்வரையும் அதிக அன்போடு வளர்த்தார்கள் அந்தக்காலத்தில் பாம்புக்குழந்தை செய்கின்ற அதிசயத்தன்மையைப் பார்ப்போம்.

திருவிளையாடல்
தம்பிரான் பெயர்சூட்டப்பட்ட பாம்பானது தன்னுடன் கூடப்பிறந்த தமக்கையான் வள்ளிநாச்சனை முத்தமிடும் தனக்கு மூத்ததமையன்மாரோடு விளையாடும் மற்றும் அயலிலுள்ள பிள்ளைகளுடன் ஒருவித தீமையும் செய்யாது விளையாடும் தானுயர்ச்சி பெறுவதற்காக தாய்க்கும் சில பணிவிடைகளைச்செய்யும் எல்லா இடங்களிலும் கூச்சமின்றித்திரிந்து இரவினில் வந்து வீட்டில் படுக்கும் தனது தாயிடத்தில் பாலைக்குடிக்கும் படுக்கின்ற பாய்தனில் உளக்கிவிளையாடும் தந்தையின் தேகமெல்லாம் ஏறிச்சுற்றிக்கொள்ளும் விரும்பும்படி கால்வழியாக ஏறி இறங்கி ஊர்ந்து திரியும் தனக்கு மாறான சூது,வஞ்சகம் செய்கின்ற பேர்களைக்கண்டால் தனது வாலினாற் சுழற்றி அடிக்கும் சுற்றத்தார்கள் வந்தால் அவர்கள் மடிமீது ஏறி இருக்கும் படம் விரித்து ஆடும் பின்னர் படத்தை சுருக்கிக் கொண்டு பதுங்கிக்கிடக்கும் தகுதியான இடத்தில் சென்று சுருணையாடிக்கிடக்கும்.

பின் திரும்பிவரும் எழும் பிரிந்துவிழுந்து புரழும் ஓடும் நீர்நிலையில் சென்று குளிக்கும் இப்படியாக பலரும் கண்டு வியக்கும்படி உறுதியோடு செய்கின்ற திருவிளையாடல்களை எம்மால் சொல்லவும் இயலுமோ இயலாதே.

எல்லோரும் பார்த்து அதிசயிக்கும்படி தம்பிரான் என்ற பாம்பானது செய்கின்ற விளையாட்டை ஊரிலுள்ளவர்கள் எல்லோரும் கேள்வியுற்று பகலிலும், இரவிலும் இடையிலும் வந்து பார்த்து தங்கள் தங்கள் மனதிற்கு பட்டவாறு சொல்லுகின்றார்கள். இது பாம்பு அல்ல பூமியிலுள்ள எல்லோரையும் எந்தநாளும் பாதுகாத்து உறுதியாகிய அவரவர் கன்ம வினைகளை நீக்கும் பொருட்டு விபூதியை உத்தூடணமாக அணிந்திருக்கின்ற சிவபெருமானே இப்படியான உருவத்தோடு வந்திருக்கின்றார் என்று அங்கலாய்ப்போடு கூறுவர். வேறுசிலர் இப்பபாம்புக்கு குழந்தையைப்பெற்ற பின் முன்பை விட பொருட்செல்வம் கூடியுள்ளது. காணிகள்,வயல்நிலங்கள் வீடு வாசல்கள் ஏராளமாக வந்து சேர்ந்தது மட்டுமல்ல இன்னும் பல வந்து சேருமென்பர் நீதி நாயகமுதலியாருக்கு இந்தப்பாம்பு பிறந்தநாள் அளவிடமுடியாத செல்வம் வந்து சேர்ந்தமையால் அதற்கு காரணமாக இருந்த இந்தப்பாம்பினால் ஒரு காலம் தீமை அழிந்து போகும் இது நிச்சயம் என்பார்.
இன்னும் யாரோ ஒரு முனிவரோடு பகைத்துக்கொண்ட எவரையோ பாம்பாக பிறந்து சாபமிட்டதால் குலதெய்வத்தில் சிறந்த அம்மையார் வயிற்றில் வந்து இப்பாம்பு பிறந்தது என்றனர். சிலர் இப்படியே வந்து பார்ப்பார்கள் எல்லோரும் தங்கள் அறிவுக்கு ஏற்றவாறு மனதில் தோன்றுவதையும் சொல்லி செல்கையில் மூத்தவர்களான மாப்பாணமுதலியாரும் வவுனியமுதலியாரும் வளர்ந்து வாலிபர்கள் ஆனார்கள் தம்பிரான் என்ற பாம்புடன் கூடிப்பிறந்த வள்ளிநாச்சன் மகளும் மங்கைப்பருவத்தை அடைந்தாள்.

இப்படியே சில ஆண்டுகள் கழிய இடைவிடாது பாம்பு செய்கின்ற கண்கட்டி வித்தை போன்ற எந்த நாளும் செய்கின்ற திருவிளையாடல்களைப்பார்த்து மகிழ்ந்து தங்கள் நிலமைக்கு தகுந்தபடி பிள்ளைகளைத்திருமணம் செய்து வைத்து எவராலும் தப்பமுடியாத வயதில் மூப்படைந்து உடலும் மெலிந்திருந்தார் தந்தையாரான நீதிநாயகமுதலியார் இன்னும் சில ஆண்டுகள் செய்னறால் வயதுமுதிர்ச்சியினாலே பற்கள் விழுந்து உரோமமும் நரைத்து அழகு கெட்டு உடலும் கூனி விடும் என்று நினைத்து இப்பொழுதே தனது கடமையை செய்ய எண்ணி தனக்குரிய காணி பூமிகள் நெல் வயல்கள் மற்றும் செம்பு பொன் வெள்ளி ஆகிய இலட்சுமி வாசம் செய்கின்ற செல்வவளங்களையெல்லாம் மக்களுக்கு பிரித்து கொடுப்பேன் என்று மக்களை அழைத்து தான் தேடிய பெரும் செல்வம் அனைத்தையும் பிணக்கு ஏதும் இல்லாமல் சமமாகப்பகிர்ந்து மூன்றுபிள்ளைகளுக்கும் பிரித்து வைத்து சொந்தமான நிலபுலங்களையும் பகிர்ந்து சாதனம் எழுதுகின்றபோது அந்த சமயத்தில் அங்கு வந்த பாம்பானது அங்கிருந்த பொருட்களையெல்லாம் உளக்கி படத்தினை விரித்து சீறி கோபித்து சாதனம் எழுதிய ஓலை எழுத்தாணி என்பவற்றை மிகுந்த வலிமையுடன் வாயினாற் பற்றித் துண்டாக வெட்டி எறிந்து பொருட்களை உளக்கி அப்பொருட்களின் மீது நின்றாடிய போது தாய் தந்தையார் இதனைப்பார்த்து என்னகாரணமோ என்று யோசிக்கலாயினர் தனக்குரிய பங்கு தரவில்லை என்பது கோபந்தான் என்று குறிப்பால் உணர்ந்து உள்ள பொருட்களில் உனக்குரிய பங்கைத்தருவோம் என்று சொன்னவுடன் கோபம் தணிந்து மனசந்தோசம் கொண்டு எனக்கும் பங்கு வந்தது என்று எண்ணி அங்கு அமைதியாய் இருந்தது அப்பொழுது அரிய பொருட்களையும் நிலபுலங்களையும் தந்தையார் நான்காக பகிர்ந்து சாதனங்கள் எழுதி பிள்ளைகளே இப்பொருள்களில் ஒவ்வொரு பங்கை எடுங்கள் என்று கூற பாம்பானது விரைந்து வந்து ஓர் பங்கைத் தள்ளிக்கொண்டு போய் கூடிப்பிறந்த தங்கை வள்ளிநாச்சனின் பங்குடன் சேர்த்து எனது பங்கும் உனக்கே இதனையும் நீயே எடுத்துக் கொள் என்று சைகையால் உணர்ந்த தங்கை வள்ளிநாச்சனும் பாம்பின் பங்கையும் எடுத்தாள். பின்பு மக்கள் மூவரும் தனித்தனியான இல்லங்களில் இருந்து இல்லறம் நடத்தி பிள்ளைகளும் பெற்று வாழ்ந்து வந்தார்கள். பாம்பு தாய் தந்தையருடன் இருந்தது.

முப்பங்கையும் சிரிப்பக்கினியாலே எழுந்தருளிய முக்கண்ணரும் தேவநாயகருமாகிய சிவபெருமானின் கிருபையினாலே பாம்பு மணஞ்செய்து அரிய பிள்ளைகளைப்பெற்றதென்று சொல்லும்படி மரம் நிறைந்திருந்த காடுகளிலிருந்த மண்ணுணி வழலை, சாரை, வலியபிடையன், நாகம், பெருவிரியன், செட்டிநாகம், செம்பாம்பு, கரும்பாம்பு, வயற்பாம்பு, வட்டுச்சுற்றி, வல்வாசரணம், மணற்சுருட்டை அளவில்லா வெண்கிடாந்தி மலைப்பாம்பு இவைகளின் குட்டிகள் நீண்ட பாம்பு,கட்டைப்பாம்பு,கூளைப்பாம்பு,குறட்டைப்பாம்பு இவைகளெல்லாம் இந்த நல்ல பாம்போடு சேர்ந்து வீட்டிலேவசதியான இடமெங்கும் நெருக்கமாக இருந்தும் மிகுதி புற்றிலும் மனையின் வெளிப்புறங்களிலும் பெட்டி,சட்டிகளிலும் நிறைந்து சொந்த வீடுபோல இருந்தன.

அங்கு வருகின்ற எவர்களுக்கும் ஒரு கெடுதியும் செய்யாமல் முன்பே அவ்வீட்டில் பிறந்து வளர்ந்து வருகின்ற பாம்பை;போல இவைகளும் சாந்தமான குணமுடையனவாகி பழவகைகளும் பசும்பாலும் இவைகளையே உண்டு இருக்கின்ற நாளையில் ஒரு நாள் உதய காலத்தில் தாயார் கமலம் அம்மையார் குறைவில்லாத முற்றத்தைக் கூட்டிக்கொண்டிருந்த போது பாம்பானது வந்து மற்றப்பாம்புகளுடன் கூடி தாயார் கூட்டிக்குவிக்கின்ற குப்பைகளை பெலத்துடன் புரண்டு உருண்டு உளக்கி சிதறி தாயினுடைய தலையில் ஏறி சுற்றி கால் வழியாக இறங்கி காலை எடுத்து வைக்கமுடியாமல் இரண்டு பாதங்களையும் சுற்றி வளைமாடி வாலினால் மடித்து கூட்டுமாறினை சுற்றுகின்ற போது தாய் அடக்க முடியாத கோபமுற்று தொலைந்துபோ என்று பேசி கையிலுள்ள விளக்குமாற்றினால் அடித்ததால் அந்தப்பாம்பின் வினையும் அன்றே தொலைந்தது.

தாயானவள் தொலைந்துபோ என்று சொல்லி அடித்தவுடனே அப்பாம்பானது அக்கினியைப்போன்று கோபித்தும் மனித வயிற்றில் கர்ப்பம் தாங்கி பிறந்த தெய்வீகக் குழந்தை என்பதால் என்னை பத்துமாதம் சுமந்து பெற்று மிகுந்த அன்போடு பாலூட்டி வளர்த்தார் என்று தன்னுள் நினைத்து சற்றே கோபத்தை அடக்கி மாயமாக அந்த வீட்டை விட்டு நீங்கியது.

By – Shutharsan.S

மேலதிக விபரங்களுக்கு http://nagathampiran.com/ இணையம்[:]

Sharing is caring!

2 reviews on “புளியம்பொக்கணை நாகதம்பிரான்”

  1. sivaruban says:

    ungal mujatsitku valththukkal

Add your review

12345