நாதஸ்வர வித்துவான் எஸ்.சிதம்பரநாதன்

நாதஸ்வர வித்து வான் சிதம்பரநாதன் தவிற்காரர் செல்லத்தரை அவர்களின் மகனாவார். இவர் தமது நாதஸ்வரக் கலையைக் கும்பழாவளை ஆலயத்தில் இளமைப்பருவத்திலேயே ஆரம்பித்தவர். இவருடைய தந்தையாரும் கும்பழாவளை ஆலயத்தில் தவிற்கலையில் ஈடுபட்டிருந்தவர். தந்தையாருடன் இணைந்து கலைத் தொண்டு பேணிய இவர் நாதஸ்வரக் கலையில் மிக நாட்டங் கொண்டவராக விளங்கி னார். அக் காலத்தில் பிரபல நாதஸ்வரக் கலை ஞராகவிருந்த மாவிட்டபுரம் இராசாவிடம் சாஸ் திர ரீதியில் நாதஸ்வரம் பயின்றார்.
அதன் மேல் இந்தியாவுக்குச் சென்று பிரபல வித்துவான் களிடம் நாதஸ்வரப் பயிற்சி பெற்றார்.
இவர் தமது மாமனாராம் தவிற் கலைஞர் கணேசரத்தினத்தின் வழிகாட்டலில் வருடந் தோறும் அவர் அழைப்பின் பேரில் அவருடன் வந்து தங்கும் வெளியூர்க் கலைஞர்களிடமும் இசைப் பயிற்சி பெற்றார். இவருக்கு இசைத் துறையிற் கேள்வி ஞானம் பெற்றுயர மாமனார் கணேசரத்தினத்தின் உதவி பெரிதும் பயன் பட்டது.
நாதஸ்வரக் கலையரசு பத்மநாதன் ஒரு இசைக்குழுவை அமைத்து பயன் பெரிதும் பெற்றது போல இவரும் தாமாக ஒரு இசைக் குழுவை அமைத்தார். அக்குழுவில் தமது சகோதரனாகிய சிவகுருநாதனையும் இணைத்து பல வருடங்களாக இசைக்கலையை நன்கு வளர்த்தார். இவர் விடாமுயற்சியும் கடின உழைப்பும் உள்ளவராதலினால் இவர் முன்னேற முடிந்தது. “முயற்சியுடையவர் இகழ்ச்சியடையார்” என்பது தமிழன் கண்ட தாரக மந்திரமல்லவா? நாதஸ்வர இளந்தென் றல் என்ற பட்டத்தை இவர் தமது இளமைக்கா லத்திலேயே பெற்று விட்டார். வயது வந்து பெருங் கலைஞராக மாறியபோது இவருக்கு நாதஸ்வரகானவாருதி என்ற பட்டங்கிடைத்தது. இவர் தமிழர் வாழும் நாடுகளிலெல்லாம் பிர பல இசை மேதையாகக் கணிக்கப்பட்டார். இலங்கை அரசாங்கத்தினால் வழங் கப்படும் கலைஞர்களுக் கான கலாபூஷண விரு தினையும் சிதம்பர நாதன் பெற்றுக்கொண் டார். தற்பொழுது கொழும்பை மையமாகக் கொண்டு புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்திலும் நாதஸ்வர இசை பரப்பிவரும் சிதம்பரநாதன் அளவெட்டி தந்த ஒப்பற்ற நாதஸ்வர கலைஞர் என்பதில் எதுவித ஐயமுமில்லை. இவரது மகன் இளவல் ஜலதரன் வயலின் வாத்தியக் கருவியை இந்திய இசைக்கல்லூரிகளில் கற்று இன்று பலராலும் பாராட்டப்படும் இசை நிகழ்வுகளை நடாத்தி வருகின்றமையும் எம்மண்ணுக்குப் பெருமை சேர்க்கின்றது.
அன்று பத்மநாதனும் பாலகிருஸ்ணனும் இணைந்து செய்யும் இசைக் கச்சேரியைக் காணாத கண்ணும் கேளாத செவியும் பயனில்லாதன என்பதுபோல் இன்று இவரின் இசைப் புலமையும் எங்கும் ஒளி வீசிப் பிரகாசிக்கிறது.

Sharing is caring!

Add your review

12345