பண்டைத் தமிழர் கலைகள்

பண்டைத் தமிழர் கலைகள் இனது பிறப்பிடமாக மட்டுமல்ல, மனித நாகரிகத்தின் தொட்டிலாகவே, ஈழம் விளங்கியது. “ஈழம்” என்ற சொல்லே, மனித நாகரிக வளர்ச்சிக்கு, அது எதனைக் கொடுத்தது, என்பதைப் பறை சாற்றிக்கொண்டு இருக்கின்றது. அந்தச் சொல் எதனைச் சொல்கின்றது என்பதே, எம்மில் பலருக்குத் தெரியாது! அதிலும், எமது தமிழ்ச் சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கும் தெரியாதிருப்பது, மிக மிக வேதனைப் பட வேண்டிய விடயமாகும்.

பண்டைத் தமிழர் கலைகள்ஈழம் என்றால், பொன். அதாவது, நீரிலிருந்து எடுக்கும் பொன்னுக்குத் தமிழில், ஈழம் என்று பெயர். தமிழுக்குரிய சிறப்பெழுத்துக்களில் ஒன்றான, ““கரம், இச் சொல்லோடு சேர்ந்திருந்து, பொன் போல ஒளிவிடச் செய்தும், தமிழர், ஈழம் என்பது என்னவென அறியாது இருப்பது ஏன்?

நீரிலிருந்து பொன் எடுக்க முடியுமா எனச், சிலர் நினைக்கலாம். இன்றும், ஈழத்தின் ஆற்றங்கரைகளில், உதாரணமாகப் பாலியாற்றங்கரை மணலோடு மணலாகப், பொன் துகள்கள் இழுபட்டுச் செல்வதைக் காணலாம்.

 

“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈந்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே”

 

(புறம்: 9:9:11)

சங்ககாலப் பெண்பாற் புலவரான நெட்டிமையார், புறநானூற்றில், “செந்நீர்ப் பசும் பொன்” என்று சொல்வது, ஈழப் பொன்னையே. அவர், “நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” என வாழ்த்துவதால், அவரது காலத்தில், பஃறுளி ஆறு ஓடிக்கொண்டிருந்தது என்பது, தெளிவாகின்றது. மயன் காலத்திற்குப் பின்னர், கடல் கோள்களுக்கு முன்பு, முதற் சங்க காலத்தில், இன்றைய ஈழத்திற்கு மேற்கே, தமிழகத்திற்குத் தெற்கே இருந்த நிலப் பரப்பை (குமரிக் கண்டத்தின் ஒரு பகுதியை) ஆண்ட நெடியோனால் வெட்டப்பட்டதே, பஃறுளி ஆறு.

பண்டைக் காலத்தில் கிடைத்த செந்நீர்ப் பசும் பொன்னே, ஈழம் என அழைக்கப் பட்டது. நீரிலிருந்து எடுக்கப்பட்ட பொருள் ஈரத்துடன் குளிர்ச்சியும் அழகும் சேர்ந்து இருந்ததால், ஈழம் என்றனர். ஈரப் பொன்னுக்கு வழங்கிய பெயர், அதனைக் கொடுத்த நாட்டின் பெயராக நிலைபெற்று நிற்கின்றது. பொன்னாவெளி, பொன்னாலை, பொன்பரப்பி, பொன் கொடு தீவு போன்ற இடங்கள், தமது பெயரில், ஈழத்தின் பழைமையைச் சொல்லாமல் சொல்வதோடு, எமது பண்டைய வரலாற்றுக் களஞ்சியங்களாகவும் இருக்கின்றன.

ஈழத்தை மயன் ஆண்டதை, A historical, Political and Statistical Account of Ceylon (Charles Pridham), விஸ்வ புராணம், மாந்தைப் பள்ளு, மாந்தை மாண்மியம் போன்ற நூல்களும், எடுத்துச் சொல்கின்றன. இவனின் வழித் தோன்றலான நல்லியக் கோடன், இலங்கையை ஆண்டதை,

“நன்மா இலங்கை மன்னருள்ளும்
மறு இன்றி விளங்கிய வடுஇல் வாய்வாள்
உறு புலித் துப்பின் ஓவியர் பெருமகன்”

 

(சிறுபாணாற்றுப் படை, 120 – 123)

எனச், சங்கப் புலவரான நல்லூர் நத்தத்தனார் புகழ்கின்றார்.

மயனே, தமிழர்களின் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும், ஓவியக் கலைக்கும், வானியற் கலைக்கும், மரக் கலைக்கும், தந்தை ஆவான். அவன், எக் கலைகளிலும் வல்லவன் என்பதைப், பழந்தமிழ்க் கலை நூல்கள் சொல்கின்றன.

“மயன் விதித்துக் கொடுத்த
மரபின் இவைதாம்
ஒருங்குடன் புணர்ந்து
ஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்”

(இந்திர விழவூரெடுத்த காதை: 108 – 109)

இந்திர விழாவில் அமைக்கப்பட்டிருந்த தோரண வாயில்களும், மண்டபங்களும், மயனால் இயற்றப்பட்ட விதி முறைப்படி, மரபு வழுவாது கட்டப்பட்டதால், அறிஞர்களால் புகழ்ந்து பேசப்பட்டதென, இளங்கோ அடிகளும், சிலப்பதிகாரத்தில், மயனின் பெருமை பேசுகின்றார்.

எனவே, எழில்மிகு நடராஜ வடிவை, ஒரு தமிழனான மயன் வடிவமைத்தான் என்றால், அவனின் காலத்திற்கு முன், தமிழர் கலைகளும், கலாச்சாரமும், எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்திருக்க வேண்டும்? அதுவும், ஈழத்தில்! இது, ஆராயப்பட வேண்டிய விடயம்.

மயன், எவ்வாறு இந்த நடராஜ உருவை உருவாக்கினான் என்பதை, இன்றைய விஞ்ஞானக் கருத்துக்களுடன் எமக்குக் கூறுகின்றான். கதிரவனின் ஒளிக் கதிரிலுள்ள துகள், ஒரு கனபரிமாண வடிவாக இருக்கின்றது. அதனுள் மிளிர்வது, ஒளியே. இவ்வொளி கட்டிய(து), சிற்சபை அல்லது சிற்றம்பலம் என்றும், அதனுள்ளே இருக்கும் ஒளியை, மூலம் (மூலப் பொருள்) என்றும், மயன் சொல்கின்றான்.

மூலப் பொருளினுள் இருக்கும் ஒளியானது, ஒடுங்கி விரியும் தன்மையானது. இந்த மூலப் பொருள், இடமிருந்து வலமாகச் சுழல்கின்றது என்று கூறி, அச் சுழற்சியை, அவன், காலம் என்ற சொல்லால் அழைக்கின்றான். இக் கால ஓட்டமானது, ஒரே சீராக நடைபெறுகின்றது என்றும், அந்தச் சீரான ஓட்டத்தைச், சீலம் எனவும், இயம்புகின்றான். அந்தச் சீரான துகள்களின் சேர்க்கையால், பல உருவங்கள், வடிவங்கள், பொருட்கள், தோன்றுகின்றன எனவும், அவற்றைக், கோலம் என்றும், குறிக்கின்றான். இந்தக் கோலங்களே, ஞாலத்தை உருவாக்கின என்றும், முடிவாகக் கூறுகின்றான்.

அவன் கூறும் துகளை, இன்று நாம், அணு என்று அழைக்கின்றோம். அதாவது, அணுவிலுள்ள மூலம், கால ஓட்டத்தால், சீலமாகி, அச்சீலம், கோலங்களை உருவாக்கி, ஞாலத்தை ஏற்படுத்துகின்றது என, மிக விரிவாக விளக்குகின்றான்.

இத்தகைய நல்ல விஞ்ஞானக் கருத்துக்களைக் கூறும் மயன், அடுத்து, மூலம், தன்னை வெளிப்படுத்திக்கொள்ள, ஒரு விசையை ஏற்படுத்திக், காலத்தை (காலமாக் கடவுளை) உண்டாக்கி, அதனைக் கட்டுப்படுத்திச், சீலமாக்கி, அதிலிருந்து, கோலங்களை உருவாக்கி, ஞாலங்களைப் படைத்துக் கொள்கின்றது, எனக் கூறி, மூலப் பொருளே, ஞாலமாக வியாபிக்கின்றது எனும் சமயத் தத்துவத்தையும், எமக்குச் சொல்கின்றான்.

அணுவின் உள்ளிருந்து, ஒடுங்கி விரியும் ஒளியின், சீரான நடுக்கத்தை, ஆடல் என்று கூறி, அந்த ஆடலுக்கு, மயன் கொடுத்த உருவமே, உலகப் புகழ் பெற்ற, நடராஜ வடிவமாகும். இவன், விஞ்ஞான, சமயக் கொள்கைகளை ஒன்று சேர்த்தே, நடராஜ திரு உருவத்தை, உலகிற்கு ஈந்திருக்கின்றான்.

ஐந்தொழிலையே (மூலம், சீலம், காலம், கோலம், ஞாலம்), தனித் தொழிலாகச் செய்யும் மூலத்தின் வடிவமே, நடராஜ திருவுரு என்கின்றான். சிற்றம்பலத்தினுள், என்றும் நின்று நடம்புரியும், ஒளிநடராஜனாக விளங்கும் பரம் பொருளை, மயனால், இவ்வுலகம் அறிகின்றது.

ஈழத் தமிழ் மன்னனான மயன், உயிர்ப்பும், உணர்வும், இசையும், நடமும், காலமும், விளக்கும் நடராஜத் திருவடிவை, மாசிமகம் எனும் முழுமதித் திருநாளன்று, இந்த உலகிற்கு உவந்தளித்தான். ஆதலால், தமிழர்கள், மாசி மகத்தை, ஒரு பெருந்திருநாளாகக் கொண்டாடக் கடமைப் பட்டிருக்கிறார்கள் என்பதை, இங்கு நான் நினைவூட்ட விரும்புகின்றேன்.

இந்த உண்மைகளை, மயமதம், மாந்தை மாண்மியம், போன்ற நூல்களைப் படித்து, அறிந்து கொள்ளுங்கள்.

By -‘[googleplusauthor]’

 

நன்றி – ஆக்கம்-தமிழரசி, இலண்டன்

மூலம் – மனஓசை இணையம்

Sharing is caring!

Add your review

12345