பருத்தித்துறை கொட்டடி சித்தி விநாயகர் கோவில்

ஈழநாட்டின் முடி போலத் திகழும் பருத்தித்துறையில் இக் கோவில் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்புப் பெற்றது. பருத்தித்துறை துறைமுகத்திற்கு மிக அருகில் உள்ளது. 350 ஆண்டுப் பழமை வாய்ந்தது. பெரிய வீதிகளைக் கொண்டமைந்தமையால் ‘பெரிய பிள்ளையார் கோவில்’ எனவும் அமைக்கப்பட்டது.

ஓல்லாந்தர் காலத்திற்கு முன்பே சிறிய கேணியும் கோயிலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. கேணியில் குளித்துப் பிள்ளையாரை வழிபட்ட பின்தான் மக்கள் துறைமுக வேலைக்குச் செல்லும் வழக்கம் இருந்தது. அப்போது இந்தியாவுக்கும் ஈழத்திற்கும் நேரடி வர்த்தகத் தொடர்பிருந்தமையால் பருத்தித்துறை மூலமே உப உணவுப் பொருட்கள் தோணிகளிலும் வத்தைகளிலும் ஏற்றப்பட்டு இந்தியா கொண்டு செல்லப்பட்டன. தென்னிந்தியாவிலுள்ள விசாகபட்டினம், சென்னைபட்டினம், தூத்துக்குடி முதலிய துறைகளிலிருந்து சொரி நெல் பருத்தித்துறைக்கு இறக்குமதி செய்யப்பட்டது.
ஓல்லாந்தர் காலத்தில் இவ்வாலயம் அழிக்கப்பட மக்கள் இந்தியாவிலிருந்து ஒரு விநாயகரைச் சொரி நெல்லுள் வைத்துக் கொணர்ந்தனர். அவ்விக்கிரத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் பனங்கட்டிக் கொட்டினுள் வைத்து வணங்கினர். அதனால் ‘கொட்டடிப் பிள்ளையார்’ என்ற சிறப்புப் பெயரும் வழங்கப்பட்டது. 1870 ல் கொடித்தம்பம் நடப்பட்டுக் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 1925 ல் இராஐகோபுரம் கட்டிமுடிக்கப்பட்டது.
ஆலயத்தின் கோபுரத்தின் இரு மருங்கிலுமுள்ள காண்டாமணிகளின் ஓசை பல மைல்களுக்கு அப்பால் கேட்கக் கூடியது. ஆலயத்தைச் சுற்றி உள்வீதியும் இரண்டாம் வீதியில் தீர்த்தக் கேணியும் மூன்றாம் வீதியில் தெப்பக்குளமும் அமைந்துள்ளன. ஆண்டு தோறும் நடைபெறும் உற்சவத்தில் தெப்போற்சவம் மிகமுக்கியமானது. 1972ல் வெளியிடப்பட்ட இந்துவாலிபர் சங்க ஆண்டுச் சிறப்பு மலர் கோவில் பற்றிய தகவல்களைத் தருகிறது.

Sharing is caring!

Add your review

12345