பாரம்பரிய நடன வடிவங்கள்

பாரம்பரிய நடன வடிவங்கள்
பாரம்பரிய நடன வடிவங்கள்

தமிழர்களின் பாரம்பரிய நடன வடிவங்கள். ஈழத்தமிழர்கள் உலகில் வாழ்கின்ற எல்லா சமூகங்களையும் போலவே தமக்கான தனித்துவமான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டிருக்கின்றனர். பல்லாயிரமாண்டு பழமையும் புதிய பண்பாடுகளின் காலநீட்சியையும் பெற்றுள்ள தமிழர்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். இன்று உலகில் ஈழத்தமிழர்கள் வாழாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு அவர்களின் உலக வெளி பரந்துள்ளது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத அடையாளச் சிக்கல்களை உலக வெளியில் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றுள்ளமையை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்கள் இதுவரை காலமும் கட்டிக்காத்து வந்த இசை நடன மரபுகள் எவை? பொதுப்பரப்பில் நம்மவர்கள் எதனை மிகுதியாக தமது பண்பாட்டடையாளமாக கற்கின்றனர்?கர்நாடக இசையும், பரதநாட்டியமும் இன்றுவரை நம்மவர்களின் கைகளில் வீச்சுடனும் ஆழத்துடனும் வெளிப்பட்டுள்ளது.
இத்தகைய ஒரு பகைப்புலத்தில் ஈழத்தமிழர்களின் மரபான இசை பற்றியும் நடனம் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். இசையிலுள்ள ஒத்திசை, ஒழுங்கு, இராகம் என்பன பண்பாட்டுக்கு பண்பாடு வேறுபடும். ஒவ்வொரு இனத்தினிடையேயும் இது தமக்கான தனித்துவமான பண்புகளைக் கொண்டிருக்கும். ஈழத்தமிழினமும் தனக்கான இசைமரபையும் பல தனித்துவமான பண்புகளையும் கொண்டுள்ளது. பண்பாட்டு அடிப்படையில் தமிழ்நாட்டோடு ஈழத்தமிழர்கள் நெருக்கமான தொடர்புகளையும் அடிப்படையான சில ஒற்றுமைகளையும் பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டிலிருந்து வேறுபட்ட தனித்துவமான பல பண்பாட்டு அடையாளங்களை ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றுள்ளது. அதில் இசையும், நடனமும் முக்கிய ஒரு கதையாடலாக உள்ளன. இசை ஈழத்தமிழர்கள் மத்தியில் நம்பிக்கைகள் சார்ந்து கிராமிய வழிபாட்டு முறைகளோடு இணைந்ததாகவும், அதே நேரத்தில் இவற்றையெல்லாம் கடந்து வாழ்வியலோடு நெருக்கமான தொடர்புடையதாகவும் உள்ளது. தமிழிசை மரபின் அறாத் தொடர்ச்சியான ஒரு நீட்சியையே நாம் நமது மரபிலும், இசைமரபிலும் காணமுடிகின்றது. சுவாமி விபுலானந்தர் யாழ்நூலை ஆக்கியதற்கான அடிப்படை ஈழத்தமிழர்களிடையே மரபினடிப்படையில் நீண்டிருந்த இசை மரபின் தாக்கமே என்பதை நாம் இங்கு மனங்கொள்ள வேண்டும். அவருடைய இளமைக்காலத்தில் அவர் காதுகளில் ஒலித்த கண்ணகி குளிர்த்தியும், வசந்தன் பாடல்களும், கூத்திசையும் அவரது இசைபற்றிய ஆராச்சிக்கான அடித்தளமாக அமைந்தன.
ஈழத்தமிழர்களின் பராம்பரியமான தாயகப் பிரதேசங்களான வடக்கிலும் கிழக்கிலும் இன்றுவரை இந்த இசைமரபின் பயில் நிலையை நாம் அவதானிக்க முடியும். இலங்கையில் உள்ள சிங்கள சமூகம் வடஇந்திய இசைமரபோடு நெருக்கமான தொடர்பை கொண்டிருந்த போதிலும் அறுபதுகளுக்கு பின்பு ஏற்பட்ட சிங்கள தேசிய எழுச்சி தங்களுக்கான பண்பாட்டு அடையாளங்களை கட்டமைக்க தொடங்கியது. அவர்களது வண்ணமும், கவியும் பல்வேறு கிராமிய இசைமரபுகளும் இன்றைய சாஸ்திரிய சங்கீதத்திற்கு அடிப்படைகளாக அமைந்தன. இதன் வாரிசுகளாக நாம் அமரதேவா, ஹேமதாச போன்றோர்களை இனங்காண முடியும். ஆனால் ஈழத்தமிழர்களின் இசைமரபுகள் இன்னமும் சாஸ்திர மயப்படாமல் மக்கள் இசையாகவே வழக்கில் உள்ளன. போராசிரியர் வித்தியானந்தன் ஈழத்து பாரம்பரிய இசை மீட்டுருவாக்கத்திற்கு பல ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டார். அவரது முயற்சினால் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் அனுசரணையோடு ஈழத்து பாரம்பரிய இசை மரபுகள் பற்றிய இசைத்தட்டு வெளியிடப்பட்டது. அவரது இந்த முயற்சி இசைத்தட்டு வெளியீட்டுடன் நின்றுவிட்டது. அடுத்த கட்டத்திற்கு அது எடுத்துச் செல்லப்படவில்லை. பின்னைய நாட்களில் அதாவது தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை ஈழத்து இசைமரபை மாணவர்களது கல்வி முறைமைக்குள் இணைத்து செயற்பாடாக்கியது. பல்கலைக்கழகம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் தொலைக்காட்சி தயாரிப்புகளிலும் இசைமரபின் தொடர்ச்சியை வெளிப்படுத்தியது. குறிப்பாக கண்ணகி குளிர்த்தி, கிழக்கிசை, லயம், ஆகிய நிகழ்ச்சிகள் ஈழத்தமிழரின் இசைமரபின் தொடர்ச்சியை அதன் மீட்டுருவாக்கத்திற்கான அடிப்படைகளைத் தந்துள்ளன. இதுபோலவே திருமறைக் கலாமன்றம் யாழ்ப்பாண கூத்துப்பாடல்களையும் இசைநாடகப் பாடல்களையும், வசந்தன் பாடல்களையும் நிகழ்த்துகைகளாகவும் அண்மைய நாட்களில் ஒலி ஒளி இறுவட்டுகளாகவும் வெளியிட்டு ஆவணப்படுத்தி உள்ளது.

பாரம்பரிய நடன வடிவங்கள்

02.ஈழத்தமிழர்களின் தனித்துவமான இசைமரபுகள் என நாம் அடையாளம் காணக்கூடியவையாக : கரகம், கும்மி, மழைக்காவியம், ஒப்பாரி, வயல்பாடல்கள், அம்பா பாடல்கள், கவி, ஊஞ்சல் பாடல்கள், குளிர்த்திப்பாடல்கள், உடுக்கடி காவியம், காத்தவராயன் பாடல்கள், கோவலன் கதைப்பாடல்கள், கண்ணகி வழக்குரை, மாரியம்மன் நடை, மந்திர உச்சாடன முறைகள், கூத்திசைப்பாடல்கள், ஆட்டக்காவடி இசை, நடைக்காவடி இசை, வேடிக்கைப்பாடல்கள், இஸ்லாமியரின் கல்யாணப்பாடல்கள், பக்கீர் பாடல்கள், கிறிஸ்தவர்களின் சிலுவைப்பாடுகள் பற்றிய பாடல்கள் என நீண்டு செல்லும். இந்த இசைமரபு தங்களுக்கான தனித்துவமான தாள ராக ஒத்திசைவுகளைக் கொண்டுள்ளன. இந்த இசைமரபில் இணைந்திருக்கின்ற இசைக் கருவிகள் முக்கியமானவை.
உடுக்கு:
உடுக்கு இரண்டு வகைப்படும். வெங்கல உடுக்கு எனப்படும் பெரிய உடுக்கு மர உடுக்கு, தேங்காய் சிரட்டைகள் இணைந்த உடுக்கு என இரண்டு வகைப்படுத்தலாம்.
பறைமேளம்:
பறைமேளத்திலும் நாம் இரண்டு வகையை நாம் அவதானிக்கலாம். சங்க இலக்கியத்தில் சொல்லப்படுவதுபோல சிறுபறை, பெரும்பறை இந்தப் பாகுபாட்டை நாம் ஈழத்திலும் காணலாம். பறையோடு இணைந்து வருகின்ற சொர்ணாளி ஈழத்திசையில் குழல் வாத்தியமாக உள்ளது. சல்லரி எனப்படும் தாளம், சிலம்பு, தாளமாங்காய், மத்தளம், கொட்டு, சங்கு என இவற்றை வகைப்படுத்திக் நாம் விளங்கிக்கொள்ள முடியும். இன்று நம்மத்தியில் இசைவாணர்களும் இசை விற்பனர்களும் உள்ளனர். நாம் கர்நாடக இசையையே நம்மிசையாக கருதி அதனையே நம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கின்றோம். ஆனால் நம் இசைமரபை மறந்துபோயுள்ளோம். வெறும் தெலுங்கு கீர்த்தனைகளை பயிலுகின்ற நாம் நம் எதிர்காலச் சந்ததியினருக்கு நம்மிசை மரபை கற்றுக்கொடுக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்ப் பாடசாலைகள் இதில் தீவிர கவனம் கொள்ள வேண்டும். அத்துடன் நமது பல்கலைக்கழகங்கள் இதில் அக்கறையோடு செயல்பட்டு கல்விப் பாடத்திட்டத்தில் ஒரு அங்கமாக இதனையும் இணைக்க வேண்டும்.புலம்பெயர்ந்த வெளிநாடுகளில் இயங்குகின்ற ஈழத்தமிழர்கள் இதில் காத்திரமாக பங்களிப்பு செய்யமுடியும்.

03.ஈழத்தமிழர் நடனம் என்று நாம் பேசுகின்ற பொழுது கடந்த இரண்டாயிரம் வருடங்களாக தொடர்கின்ற கூத்து மரபையே நாம் கருத்தில் எடுக்க வேண்டும். கூத்து என்பது நடனத்துக்கான தமிழ்ச்சொல். காலப்போக்கில் ஏற்பட்ட சமஸ்கிருத செல்வாக்கு ‘நட்” என்ற சொல்லடியாக வந்த நடனம் என்ற சொல் தமிழ்ச் சொல்லாகவே இன்று பயன்பாட்டில் உள்ளது. ஈழத்தமிழர்களின் நடன மரபென்பது அவர்களது பண்பாட்டு உருவாக்கத்தின் மூலக்கூறுகளில் ஒன்று. ஒரு இனம் தனித்துவமாக பேசப்படுவதற்கு அதற்கான பண்பாட்டு அடையாளங்கள் முக்கியப்படும். அதிலும் குறிப்பாக நடன நாடக வடிவங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. ஈழத்தமிழர்களின் நடன முறைகள் பல்வகைப்பட்ட கூத்து வடிவங்களில் பல நூற்றாண்டுகளாக யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னியென தமிழர் வாழ் பிரதேசமெங்கும் செறிந்து பரந்துள்ளது.
பறைமேளக்கூத்து:

இது மட்டக்களப்பிலேயே பெருவழக்கில் உள்ளது. இதில் தனியே ஆடல் வடிவம் மட்டுமே. இங்கு பாடல்கள் இல்லை. சொர்ணாளியும், பறையும் அதனோடு சிலம்பும் இணைந்த இசைக்கு பறை வாசிப்பவர்களே ஆடுகின்ற மரபு இதனுடையது. இன்றைக்கு சிங்கவர்கள் மத்தியிலுள்ள கண்டியன் நடனத்திற்கான மூலம் இங்கிருந்துதான் தொடங்குவதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

வசந்தன் கூத்து:

வசந்தன் தனியே பாடலும் ஆடலும் இணைந்த இதில் பாத்திரங்கள் என்றில்லாமல் ஒரு கதையை ஆட்டமுறையின் மூலம் வெளிப்படுத்துவது. சிறுவர்கள் பெரும்பாலும் பங்கு கொள்கின்ற இந்த ஆட்டமுறை பல்வேறு விதமான ஆட்டக் கோலங்களை வெளிப்படுத்தியிருக்கும். இங்கு கதைகூறும் மரபே முக்கியப்பட்டாலும் இதில் ஆட்டமே பிரதானமாக வெளிப்படும்.
மகிடிக்கூத்து:

இதுவும் கதை பாடல் ஆடலெல்லாம் கலந்ததாக இருந்தாலும் பல்வேறு வகையான ஆட்டமுறைகள் பாடல்முறைகளின் இணைவை காணமுடியும். வடமோடி, வசந்தன், தென்மோடி, பிற்காலத்தில் இசையில் வந்து சேர்ந்த விசயங்களென எல்லாவற்றினுடைய கலவையையும் நாம் இங்கு காணமுடியும்.
மன்னார்க் கூத்துக்கள்:

இதில் வடபாங்கு, தென்பாங்கென இரண்டு மரபுகள் காணப்படுகின்றன. வடபாங்கு யாழ்ப்பாண மரபையும், தென்பாங்கு மாதோட்ட மரபையும் வெளிப்படுத்துகின்றன. இக்கூத்துகளில் ஆடல் குறைந்தளவில் வெளிப்பட பாடல்களே பிரதான பங்கு வகிக்கின்றன. ஆனாலும் பாத்திரங்களின் வரவு, தரு என்பன மிகுந்த ஆட்டக் கோலங்களை வெளிப்படுத்தி நிற்கும்.
யாழ்ப்பாணக் கூத்துக்கள்:

வட்டுக்கோட்டை, உடுப்பிட்டி பகுதிகளில் வழக்கில் இருந்த மரபு வடமோடிக்கு அண்டித்த சாயலுடையதாக இருக்க கரையோரப் பிரதேசங்களில் உள்ள கூத்துக்கள் தென்மோடியை அண்மித்ததாக உள்ளன. இதேவேளை காத்தவராயன் சிந்து நடைக்கூத்தையும் நாம் யாழ்ப்பாண மரபில் இணைத்துக்கொள்ள முடியும்.
வன்னிக் கூத்துக்கள்:

இங்கு காத்தவராயன் கூத்தும், கோவலன் கூத்தும் முக்கியம் பெறுகின்றன. காத்தவராயன் கூத்து சிந்துநடையும், துள்ளல் தன்மையும், தனித்துவமான இசை மரபையும் கொண்டது. கோவலன் கூத்து மட்டக்களப்பு தென்மோடியின் சாயலை உள்வாங்கிய ஒரு வடிவமாக காணப்படுகின்றது.
வடமோடி, தென்மோடிக் கூத்துக்கள்:

பாரம்பரிய நடன வடிவங்கள்

ஈழத்தமிழர்களின் செந்நெறி சார்ந்த ஆட்டமரபாக நாம் வடமோடி, தென்மோடி ஆட்ட வடிவங்களையே கொள்ளமுடியும். குறிப்பாக மட்டக்களப்பில் ஆடப்படுகின்ற இந்த வடிவங்கள் இத்தகைய பண்பைப் பெற்றுள்ளன. இதனாலேயே கூத்து மீளுருவாக்க முயற்சியில் ஈடுபட்ட பேராசிரியர் வித்தியானந்தன் மட்டக்களப்பு கூத்துக்களை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மேடையேற்றினார். ஆடலிலும் பாடலிலும் இரு மோடிகளுக்கும் வேறுபாடு உண்டு. தென்மோடி ஆட்டங்கள் வடமோடி ஆட்டங்களைவிட நுணுக்கமானவை. வடமோடி ஆட்டங்கள் அழகுவாய்ந்தவை. தென்மோடியில் பாட்டுக்களை இழுத்துப்பாட, வடமோடியில் நடிகர் தம்பாட்டைப் படிக்க பக்கப்பாட்டுக்காரர் முழுதாக அதனை பாடிமுடிப்பர். தென்மோடியில் கடைசிப் பகுதியை மட்டும் பிற்பாட்டுக்காரர் படித்து முடித்துவிட்டு பாட்டு முழுவதுக்குமுரிய தருவைப் பாடுவார். ஒவ்வொரு பாத்திரத்தின் வரவு நடைபெறும்போது வெவ்வேறு வகையான தாளங்களை மத்தளத்தில் இசைப்பர். அத்தாளங்கள் வாயால் சொல்லப்படும்போது பதவரிசை தாளக்கட்டு எனப்படும். ஆட்டத்திற்குரிய தாளங்களை சொற்கோர்ப்பினாலேயே தொடுத்து அல்லது கட்டி அமைத்தலே தாளக்கட்டு. தாளக்கட்டு, பாத்திர வரவின்போது அண்ணாவியார் திரும்ப திரும்ப படிப்பார். எட்டுமுறை, பன்னிரெண்டுமுறை என அண்ணாவியாரின் மனநிலைக்கேற்ப அது அமையும். இத்தாளக்கட்டுகள் ஆண்கள், பெண்களுக்கு வேறுவேறானதாக இருப்பதோடு பாத்திர வேறுபாட்டையும் பிரதிபலிக்கும். ஆண்களுக்குரிய தாளக்கட்டு உலா, பொடியடி, வீசாணம், எட்டு, நாலடி, குத்துமிதி, பாச்சல் என அமைந்திருக்கும். பெண்களுக்குரிய தாளக்கட்டுகள் ஒய்யாரம், பொடியடி, வீசாணம், எட்டு, தட்டடி, அடந்தை, குத்துநிலை என வரிசைப்படும். வடமோடி ஆட்டங்களின் திறனும் அழகும் இத்தாளக்கட்டில் வெளிப்படுகின்ற ஆட்டங்களினால் வெளிப்படும். இத்தாளக்கட்டுக்கான ஆட்டங்களே வடமோடி தென்மோடியின் உயிர்த்தன்மையாகும். இவையே ஏனைய ஆட்ட முறைகளிலிருந்து வேறுபடுத்துவதோடு இதற்குரிய கலைப் பெறுமானத்தையும் செந்நெறித் தன்மையையும் பெற்றுக் கொடுக்கின்றன.

04.இன்று நாம் ஈழத்தமிழரின் நடனம் என்ற ஒரு கருத்துருவாக்கத்தை கொள்வதற்கான அடிப்படைகளை வடமோடி தென்மோடி ஆட்டமுறைகளில் காணலாம். ஆகவே இதனை அடிப்படையாக வைத்தே கடந்த சில ஆண்டுகளாக பேராசிரியர் சு.வித்தியானந்தன் விட்ட இடத்திலிருந்து அடுத்த கட்ட முயற்சிகளை நாம் மேற்கொண்டோம். இந்த முயற்சிகளின் உந்து சக்தியாக போராசிரியர் சி.மௌனகுரு செயல்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 1998ல் கிழக்கு பல்கலைக்கழக நாடக விழாவில் வடிவமைக்கப்பட்ட இன்னிய கருத்துரு, 1999ல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஒரு முழுமையை பெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்றுவரை கிழக்கு பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாக்களில் இன்னிய அணி பயன்படுத்தப்படுகின்றது. இன்னியம் என்பது ஈழத்தமிழர் கலை பாரம்பரிய இசை நடன மரபுகளை இணைத்ததான ஒரு தமிழ்பாண்ட் ( ) என்று சொல்லலாம். நமது அடையாளத்தை தாங்கிய இவ்வகையான ஒரு கலாச்சார இசையணி புலம்பெயர் நாடுகளில் அவசியமான ஒன்றாகும். அவ்வகையில் பிரான்சில் 2008ம் ஆண்டு தைத்திங்களில் நடைபெற்ற தமிழர் திருநாள் என்னும் பொங்கல் விழாவில் இன்னிய அணி அறிமுகப்படுத்தப்பட்டது. பிரான்சின் சிலம்பு அமைப்பின் வழிகாட்டலில் பல்வேறு தமிழர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் இத்தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது. புலம்பெயயர் தேசமொன்றில் இன்னிய அணிக்கு கால்கோல் இட்டது பிரான்ஸ் என்றே கொள்ளலாம். இதில் நடன ஆசிரியை அனுஷாவினையும் அவரது மாணிவியரையும் இணைத்து இன்னிய அணியை வடிவமைத்து அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில் இந்த முயற்சியை கருத்தியலாக முன்னெடுப்பதிலும் அறிமுகப்படுத்துவதிலும் தமிழர் திருநாள் நெறியாளர்களுள் ஒருவரான கி.பி.அரவிந்தனினதும், சிலம்பு அமைப்பின் செயலாளரான க.முகுந்தனினதும் பங்களிப்புகள் முக்கியமானவையாகும். தொடர்ந்து 2008 வைகாசித் திங்களில் இலண்டனில் தேம்ஸ் தமிழ்ச் சங்கம் நடாத்திய தமிழர் விளையாட்டு விழாவிலும் இன்னியம் அறிமுகமானது. இலண்டன் வாழ் தமிழ் மாணவர்கள் இதில் பங்கு பற்றினர். திரு.வரன், திரு.சீலன் ஆகிய இருவரின் முயற்சியால் இது சாத்தியமானது. இதன் தொடர்ச்சியாக 2009ம் ஆண்டு நோர்வேயில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் இன்னியம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏறத்தாழ 50 மாணவர்கள் பங்கேற்றனர். நோர்வே தமிழர்வள நிலையத்தார் இதனைச் செயல்படுத்தினர். இதில் குறிப்பாக பாஸ்கரன், ஆசிரியை மல்லிகா குழுமத்தினர் அக்கறையுடன் செயல்பட்டனர்.

பாரம்பரிய நடன வடிவங்கள்

இந்தப் பின்னணியில் விடிய விடிய ஆடப்பட்ட கூத்துமரபின் தனியான ஆட்ட மரபுகளை இணைத்து ஈழத்தமிழரின் நடனத்தை கட்டமைப்பதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. நோர்வேயில் நடன ஆசிரியர் திருமதி மாலதியின் நடனப்பள்ளியின் பதினைந்தாவது ஆண்டு விழாவில் (08-11-2008) இம்முயற்சி அரங்கேறியது. வடமோடியின் அரச வரவு ஆட்டத்தினை இருபதற்கும் மேற்பட்ட மாணவர்கள் நிகழ்த்திக் காட்டினர். ஒரு பரதநாட்டியப் பள்ளி முதல்முறையாக கூத்தை அடிப்படையாகக் கொண்ட ஈழத்தவர் நடனத்தை அரகேற்றியது முக்கிய அம்சமாகும். இதுவோர் வரலாற்றுப் பதிவாகும். இதன் அடுத்த கட்டமாக பரத நாட்டிய அரகேற்றத்தில் கூத்து ஒரு உருப்படியாக இணைக்கப்பட்டமையாகும். இந்த அதிசயமும் நோர்வேயிலேயே நிகழ்ந்தது. பரதநாட்டிய ஆசிரியை மேர்சியின் மாணவி ராகவி இதனை நிறைவேற்றினார். இதுவும் உலக அளவில் முதல்முறையாக நிகழ்ந்த ஒரு வரலாற்று பதிவாகும். இத்துடன் நோர்வேயின் அரசசார்பில் இயங்குகின்ற பாடசாலை ஒன்றில் ஈழத்து கூத்து ஒரு பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட உள்ளது. இதனை திருமதி வாசுகி ஜெயபாலன் பொறுப்பேற்று நடாத்த உள்ளார். இலண்டனிலும் நடனஆசிரியை திருமதி ராஜினியின் மாணவிகள் தங்களது பள்ளி ஆண்டுவிழாவில் ஈழத்தமிழர் நடனமாக கூத்தினை அறிமுகப்படுத்தினர். ஈழத்து நடனம், அதன் வடிவம் என்பவற்றிற்கான ஆரம்ப விதைகள் கருத்தியலாகவும், செயல்வடிவமாகவும் புலம்பெயர் நாடுகளில் தூவப்பட்டுவிட்டன என்றே கொள்ளலாம். ஈழத்து நடனம் முழுமை பெற நாம் பயணிக்க வேண்டிய தூரம் நிறையவே உள்ளது. தடைகளைத் தாண்டி உலகப்பரப்பில் நம் அடையாளத்தை நிறுவ இணைந்தே பயணிப்போம்.

By – Shutharsan.S
நன்றி – ஆக்கம் – பாலசுகுமார் – முன்னாள் கலைப்பீடாதிபதி, கிழக்கு பல்கலைக்கழகம்.
இக்கட்டுரை பிரான்ஸ் புலம்பெயர் தமிழர் திருநாள் – 2009 சிறப்பு மலரிலிருந்து மீள் பிரசுரமாகின்றது.

Sharing is caring!