புதிர் எடுத்தல், தைப்பொங்கல்

தைப்பொங்கல்

உழவுக்கு உதவிய சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாக தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் உதிப்பதாலும் நிலைத்து நிற்பதாலும் சூரியன் எனப் பெயர் உண்டானது.
தன்னுடைய கிரணங்களால் அனைவரையும் உற்சாகப்படுத்துவதால் பானு என வழங்கப்படுகின்றது. விசித்திர வர்ணங்களையுடைய கிரணங்களை கொண்டுள்ளதால் சித்திர பானு என சிறப்பாகக் கூறப்படுகின்றது.
அனைத்து உலகிற்கும் வெளிச்சத்தைக் கொடுப்பதாலும் அனைவரையும் காப்பதாலும் சவிதா என்று அழைக்கப்படுகிறது. இவ்விதம் பெயர்களை உடைய சூரியனை வணங்கினால் நலம் விளையும். வறுமை அகலும். அவரது ஆசி எமக்குக் கிடைக்கும்.
இலங்கையின் வட பாகத்தில் யாழ் குடா நாடு உள்ளது. மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் தரையோடும் தொடர்புபட்டமையினால் யாழ்ப்பாண மாவட்டம் குடா நாடு என சிறப்பாக அழைக்கப்படுகிறது.
இலங்கையின் மற்றைய பாகங்களில் வசிக்கும் மக்களின் கலை, கலாசார, வாழ்வியல் முறைகளுக்கும் யாழ்ப்பாணத்து மக்களின் கலை, கலாசார, வாழ்வியல் முறைகளுக்குமிடையில் அதிகளவு வேறுபாடுகள் உள்ளன.
அந்தவகையில் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பற்றியும் தைப்பொங்கலோடு காலங்காலமாக தொடர்புபட்ட புதிர் எடுத்தல் பற்றியும் குறிப்பிடுகிறோம்.
யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மக்களின் உணவுக்கான தேவையில் பெரும்பகுதி விவசாயம் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. ஆனாலும் வருட இறுதிக் காலாண்டுப் பகுதியில் மாத்திரம் அதிகளவான மழைவீழ்ச்சி பெறும் மாவட்டமாக யாழ் மாவட்டம் உள்ளது.
மழைவீழ்ச்சி கிடைக்கும் வருட இறுதிக் காலாண்டுப் பகுதியிலே இம்மாவட்டத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் தழிழர் திருநாளாம் தைத்திருநாளில் புதிய நெல் கொண்டு புதுப்பானையில் பொங்கல் பொங்கி உழவுக்கு உதவிய சூரியனுக்கு படைத்து வணங்குவது தமிழர் மரபாகும்.
தற்கால சூழலில் மாறிவரும் காலநிலைக்கேற்பவும் மாறுபட்ட மழைவீழ்ச்சி காரணமாகவும் அப்பழக்க வழக்கங்கள் மாறக்கூடிய நிலையை எட்டுகின்றன.
யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் வளத்தைக்கொண்டு விவசாயச் செய்கைகள் அதிகளவு இடம்பெறுவதோடு இம்மாவட்ட மக்களுடைய பிரதான உணவாக அரிசி உணவு இடம்பிடிக்கிறது.
ஆனாலும் குரக்கன், பயறு, உழுந்து போன்ற சிறுதானியங்களும் மரவள்ளி போன்ற கிழங்கு வகைகளும் அவர்களுடைய உணவு வட்டத்துக்குள் உள்ளன.
புரட்டாதி மாதம் முடிவடைந்த பின்னர் மழைவீழ்ச்சி ஆரம்பமாகும் நேரத்தில் யாழ் விவசாயிகள் தங்கள் நிலங்களை பண்படுத்தி வைத்திருப்பார்கள். தங்கள் உழைப்பைக்கொண்டு உழுது, விதைத்து, களையெடுத்து, பசளையிட்டு தாங்கள் வளர்த்த நெற்பயிரை ஆசையோடு அரவணைப்பார்கள்.
தமிழில் முதலாம் திகதியை தைப்பொங்கல் தினமாக கொண்டாடும் வழக்கம் தொன்றுதொட்டு தமிழர்களிடையே உள்ளது. இதற்கு யாழ் மாவட்ட மக்களும் விதிவிலக்கல்ல.
அவர்கள் தைப்பொங்கலுக்கு முதலில் ஒரு நல்ல நாள் பார்த்து “புதிர் எடுத்தல்” நிகழ்வை நடத்துவார்கள். குடும்பத் தலைவர் குறிப்பிட்ட நாளில் காலையில் குளித்து கடவுளை வணங்கி சாணம் மற்றும் அறுகம்புல் கொண்டு பிடிக்கப்பட்ட பிள்ளையார் மற்றும் தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலையுடன் நெற்கதிர்களை அறுப்பதற்கு பொன் என மின்னும் நெல் வயலுக்குச் செல்வார்.
குடும்பத்தலைவர் வயல் வரம்பில் முதற்கடவுளான பிள்ளையாரை வைத்து பூ, பழம், பாக்கு, வெற்றிலை ஆகியவற்றைக்கொண்டு தேங்காய் உடைத்து கடவுளை வணங்கி அதன் பின்னர் அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்கதிர்களில் சிறிதளவை வெட்டி வீட்டுக்குக் கொண்டு செல்வார். இதேநேரம் குடும்பத்தலைவி குளித்து, வீடு பெருக்கி, கழுவி, மெழுகி புதிர் வாங்குவதற்கு தயாராக இருப்பார்.
தலைவன் கொண்டு வருகின்ற நெற்கதிர்களை மனையாள் வாங்கி சாமியறைக்கு கொண்டு செல்லும் வழக்கம் உண்டு. அதன்பின்னர் கடவுளை வணங்கி மாவிலை கொண்டு புதிய நெற்கதிர்களை சாமியறை மற்றும் சமையல் அறைகளில் கட்டித் தொங்கவிடுவார்கள்.
மிகுதியாக உள்ள நெற்கதிர்களை அரிசியாக்கி தைத்திருநாளுக்காக காத்திருப்பார்கள். பாடுபட்டு உழைத்து அந்த உழைப்பின் மூலம் வளர்ச்சி அடைந்த நெற்கதிர்களை நல்ல நாளில் “புதிர் எடுப்பதன் மூலம் வருடம் முழுவதும் குறைவில்லாத உணவுச் செல்வம் கிடைக்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கையாகும்.
தைத்திருநாள் என்பது உழவுக்கு உதவிய சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகும். யாழ்ப்பாணத்து மக்கள் தைப்பொங்கலுக்கு உரிய ஆயத்தங்களை முதல் நாளே தொடங்கி விடுவதோடு முதல் நாள் நடைபெறும் சந்தை முக்கியமான ஒரு சந்தையாக கருதப்படும். இதைப் “பொங்கல் சந்தை” என சிறப்பாக அழைப்பார்கள். பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் தங்களிடம் இருந்தால்.
அதை சந்தைக்கு கொண்டு சென்று விற்றுவிட்டு தமக்குத் தேவையான பொங்கல் பொருட்களை வாங்குவார்கள்.
புதுப்பானை, புதுஅரிசி, சர்க்கரை, பயறு, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, சாம்பிராணி, கற்ப்பூரம், கரும்பு, இஞ்சி, மஞசள் போன்ற பொருட்கள் யாழ் மக்களுடைய பொங்கலில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. இப்பொருட்கள் அனைத்தையும் முதல் நாளே வாங்கி பொங்கலை ஆவலோடு வரவேற்பார்கள்.
தைத்திருநாள் அன்று அதிகாலை விழித்தெழுந்து குளித்து, வீடு பெருக்கி, கழுவி, முற்றம் கூட்டி, வாசலில் சாணம் கொண்டு மெழுகி அதில் உலக்கை வைத்து அரிசி மா செங்கட்டி வைத்து கோலம் போடுவார்கள். நாற்சதுரமாக நாற்புறமும் வாசல் வைத்து அந்த கோலம் போடப்படும் பழக்கம் அவர்களிடம் உண்டு. கோலத்தின் நடுவில் ஒரு மூலையில் மூன்று கல் வைத்து அடுப்பைத் தயார்ப்படுத்துவார்கள்.
குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றுகூடி நிற்க பிள்ளையார் பிடித்து, நிறைகுடம் குத்துவிளக்கு வைத்து, அடுப்பில் நெருப்பு மூட்டி, புதுப்பானை வைத்து, பால் பொங்கும்போது புது அரிசியை வீட்டுத்தலைவர் பானையில் இட மகிழ்ச்சியுடன் பொங்கலிடுவார்கள்.
புதுப்பானைப் பொங்கலை மூன்று வாழை இலைகளில் படைத்து, தேங்காய் உடைத்து பூஜைப் பொருட்கள்கொண்டு அனைவரும் பக்தியோடு சூரியனை வணங்குவார்கள். இறைவனுக்கு படைத்த பொங்கலை அனைவரும் சேர்ந்து உண்டு மகிழந்து பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாடுவார்கள்.
பொங்கல் தினத்திற்கு அடுத்தநாளை மாட்டுப்பொங்கல் தினமாக கொண்டாடும் வழக்கமும் அவர்களிடம் உண்டு. உழவுக்கு உதவிய மாட்டுக்கு நன்றி செலுத்தும் முகமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடும் மரபு காணப்படுகிறது.
வீட்டு சாமியறையிலும் சமையலறையிலும் கட்டப்பட்ட “புதிர்” நெல் அடுத்த வருடம் புதிர் எடுக்கும் வரை அப்படியே இருக்கும். பொதுவாக பொங்கல் தினம் முடிவடைந்த பின்னர் பொதுவான நாளில் “அருவி வெட்டு” அல்லது நெல் அறுப்பு” இடம்பெறும்.
பாடுபட்டு உழைத்த உழைப்பின் மூலம் கிடைத்த நெற்கதிர்களை அறுத்து காயவைத்து “சூடடிப்பார்கள்”. சூடடிப்பிற்கு பழங்காலத்தில் மாடுகளே அதிகம் பயன்படுத்தப்பட்டன. ஆனாலும் தற்காலத்தில் ட்ரக்ரர்களின் பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது. எந்த முறை மூலம் என்றாலும் சூடடித்த நெற்தானியங்களை வீட்டுக்கு கொண்டு சென்று சாமியறைகளில் வைக்கும் வழக்கம் இன்றும் அங்கு காணப்படுகிறது.
உணவு என்பது செல்வங்களுள் ஒன்றாக அவர்களால் கருதப்படுகிறது. எனவே இறைவன் இருக்கும் இடத்தில்தான் செல்வம் இருக்கவேண்டும் என்பது அவர்களுடைய கருத்தாகும். எனவேதான் சாமியறையில் தங்கள் உழைப்பின் மூலம் கிடைக்கின்ற செல்வங்கள் அனைத்தையும் சேர்த்துவைக்கிறார்கள்.
உழைப்பின் மூலம் கிடைக்கின்ற செல்வம் தை மாதத்தில் கிடைப்பது வழக்கம் என்ற காரணத்தால்தான் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழி தோற்றம் பெற்றிருக்கிறது. தை மாதத்தில் செல்வம் அதிகமாக இருக்கும்.
இதன் காரணமாக திருமணங்கள் போன்ற நல்ல நிகழ்ச்சிகளை அதிகமாக தை மாதத்தில் தமிழர்கள் நடாத்துவார்கள்.
இந்தப் பழமொழியின் தாக்கம் யாழ்ப்பாணத்து மக்களிடையே இன்றும் உண்டு. எது எவ்வாறு இருந்தாலும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலுக்கும் “புதிர்” எடுப்பதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்தத் தொடர்பை யாழ்ப்பாணத்து மக்கள் இன்றும் பேணிப்பாதுகாக்கிறார்கள். தொடரட்டும் மண்ணின் மரபு!

1958 ல் வெளிவந்த “தை பிறந்தால் வழி பிறக்கும்” திரைப்படத்திற்காக மருதகாசி இயற்றிய பாடல் வரிகளும் பாடலும் உங்களுக்காக தரப்படுகிறது.

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம்
ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணமாகுமடி தங்கமே தங்கம் ஆமா
கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணமாகுமடி தங்கமே தங்கம்
வண்ண மணி கைகளிலே தங்கமே தங்கம்
வண்ண மணி கைகளிலே தங்கமே தங்கம் ஆமா
வளையல்களும் குலுங்குமே தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

சுத்தச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
முத்ததிலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
குத்து வெளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்
குத்து வெளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

நன்றி – தகவல் மூலம் – யாழ் மண் இணையம்

Sharing is caring!

Add your review

12345