புதுபெரும்புலவர் வை.க.சிற்றம்பலம்
இவருக்கு ஒரு புதல்வியும் மூன்று புதல் வர்களும் உள்ளனர்.
இவர் ஆரம்பத்தில் தமிழ் ஆசிரியராகக் கடமை புரிந்தார். இப்போதைய தமிழ் ஆசிரியர் களும் அப்போதைய தமிழ்ச் சட்டம்பிமார்களும் அறிவால் வேறுபட்டவர்கள். இக்கால தமிழ் பட்ட தாரிகளுக்கு தொல்காப்பியம் பாடநூலாக அமைந்து இருப்பினும் அவர்களுக்கு ஆறுமுக நாவலர் எழுதி அளித்த இலக்கணச் சுருக்கத் தைத்தானும் சரியாக விளங்க ஆற்றல் உண்டோ என்பதை அவர்களில் சிலரைப் பொறுத்தவரை சந்தேகமானதே. ஆனால் பழைய சட்டம்பிமார் நன்நூல் காண்டி உரையையே கரைத்துக் குடித்தவர்கள். எழுத்தெண்ணிப் படித்தவர்கள் என்று சொல்லக் கூடிய பெருமைக்குரியவர்கள். ஆசிரியர் சிற்றம்பலமும் தமிழ்மொழி அறிவில் இந்த ரகத்தைச் சேர்ந்தவர் என்பது மிகையாகாது. தமிழ்மொழியில் திறமை வாய்ந்தவராக இருந்த போதும் அவர் செய்யுள் இயற்றும் வன்மையுடை யார் என்பது அவர் ஓய்வுபெறும் வயது வரும் வரை எவர்க்கும் தெரியாமலே இலைமறைகாய் போலும் குடத்துள் விளக்குப் போலும் தடற்றுள் வாள்போலும் வாழ்ந்துள்ளார். ஓய்வுபெற்ற பின் அவர் செய்யுள் இலக்கணத்தையும் பாட்டியல் இலக்கணத்தையும் நன்கு கற்று செய்யுள் இயற்றலில் தீவிரமாக ஈடுபட்டார்.
புதுக்கவிதைகள் மலிந்த இக்கால கவிஞர் கள் பலர்க்கு பழைய மரபுக்கவி இலக்கணம் தெரியாது. பழமையை கைவிட்டு புதுமை இலக் கியம் படைக்கும் இவர் களது செய்யுள்கள் பழமையுள் வேரூன்றாதவை. இக்கவிதையில் சாதாரண மக்களைக் கவரும் ஆற்றல் இருப்பது உண்மைதான். ஆனால் இவை தமிழ் படித்தவன், தமிழில் தோய்ந்தவன் என்னும் நிலையை உரு வாக்குவது இல்லை. இதற்கு உதாரணமாக ஒரு கவிதை காண்போம்.
“நெருட்டிப்பிடித்து நெருப்புக் கொழுத்திசுருட்டுப் பிடிக்கச் சுகம்”
கொழும்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சுவாமி விபுலானந்தர் கவிதைப் போட்டியில் ‘சுவாமி விபுலானந்தர் நான்மணிமாலை’ என்னும் இவரது பிரபந்தத்துக்கு முதற்பரிசு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ‘நல்லூர் இரட்டை மணிமாலை’ என்னும் நூலும் கொழும்பு தமிழ்ச்சங்க முதற்பரிசு பெற்றுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய செய்யுள்கள் தமிழறிவு பெரிதும் பெறார்க்கும் இலகுவாக விளங்கக்கூடிய தன்மை வாய்ந்தன. கடின நடையைப் பெற்று இரும்புக் கடலைபோல அமைவதே கவிதை என்பதை இவருடைய கவிதைகள் பொய்ப்பித்துள்ளன.
“செந்தமிழர் செய்த சிறந்த தவப்பயனால்
வந்துதித்த பண்டித மாமணியைச் – சிந்தித்தேநாவலராய்ப் பாரதியாய் நானேந்திக் கூடலுறைதேவருமாய்ப் பாடுவேன் தேர்ந்து”
இந்த வெண்பாவில் வந்துள்ள பதினான்கு தளைகளும் ஒன்றும் பிசகாமல் கவிதை இலக்கணகாரர் விதிக்கு ஏற்ப அமைந்திருப் பதைக் காணலாம். ஆதலால் இது மரபுக்கவியாக மிளிர்கிறது. இக்கால வெண்பா எழுது வோர், தளை பற்றிக் கவனம் செலுத்தாது தமது மனம்போன போக்கில் வெண்பா பாடுகிறார் கள். இப்படியான கற்றுக் குட்டிகள் தமது பாடல்களுக்கு வெண்பாவென்று பெயரிடாது வசன கவிதையென்றோ,வெண்பாப் போலியென்றோ வேறுவிதமாகவோ பெயரிடுவதே நல்லது. தொல்காப்பியம் புதுக்கவிதைகளுக்கும் இலக் கணம் வகுத்துள்ளது. தொல்காப்பியர் பாட்டு என்பன தவிர்ந்த அறுவகைக்கும் கட்டுப்பாடான இலக்கணம் வகுத்தாரல்லர். ஆதலால் புதுமைக் கவிஞர்கள் அவற்றின் வழி நமது செய்யுள் களை அமைப்பது நல்லது. வெண்பாஇ ஆசிரி யப்பாஇ கலிப்பாஇ வஞ்சிப்பா என்பவற்றை யாப் பிலக்கணகாரர் விதிக்கமைய அமைப்பது மரபுக்கவியாகும். மரபுக் கவிகளில் ஓசையும் பொருளும் நிறைந்திருக்கும். முதுபெரும் புலவருடைய வெண்பாவில் பலவித அமைதியும் நிரம்பியிருப்பது கண்டின்புறுக. இனி முதுபெரும் புலவர் யார்த்த கட்டளைக் கலித்துறையில் ஒன்று காட்டுவோம்.
“மதித்திடு நாவலர் மன்னிய வாழ்வில் – மயங்கிநின்றே
உதித்தெழுந் தேகற்ற வுண்மைப் புலவ – ருரைத்தவெலாம்மதித்தனை யாழ்ந்து பரவினை யந்தகற் – பண்பிலுனைதுதித்தனன் யானுந் தொடர்ந்தென்றும் பாடச் – சுரந்தருனே”
கட்டளைக் கலித்துறை பாடுவது சிரமமான செயலேயாம். கட்டளைக் கலித்துறையும் கலித் துறைபோல் ஒவ்வோரடியும் ஐந்து சீர்களால் அமைவதே. எனினும் வெண்டளை தழுவி வர வேண்டுமென்பது ஒரு விதி. அடிகள் தோறும் ஈற்றுச்சீர் கூவிளங்காயாக அல்லது கருவிளங்காயாக அமைய வேண்டுமென்பது பிறிதோர் விதி. நேரசை முதலாகத் தொடங்கும் அடி பதினாறு எழுத்துக் கொண்டதாகவும் நிரையசை முதலாகத் தொடங்கும் அடி பதினேழெழுத்துக்கள் விலக்கப்படும். சீர்சிதைய வருவழி குற்றிய லுகரம் குற்றியலிகரம் என்பன மெய்யெழுத்துப் போலக் கொள்ளப்படும் என்பது புலவனுக்கு ஒரு சலுகையாகக் கொடுக்கப்பட்டது. கட்டளைக் கலித்துறைக்கு யாப்பிலக்கணகாரர் கூறிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்தனவாகவே முதுபெரும் புலவரின் கட்டளைக் கலித்துறை அமைந்திருப்பதைக் காண்க. முதுபெரும் புலவர் வை.க.சிற்றம்பலம் அவர்களுக்கு 2002ஆம் ஆண்டு இந்து கலாச்சார திணைக்களம் கலாபூஷண விருது வழங்கிக் கௌரவித்துள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி – அளவெட்டி இணையம்