புலோலியூர் க. சதாசிவம்

புலோலியூர் க. சதாசிவம் அவர்கள் கனவுகளுடனும் கற்பனைகளுடனும் காற்றோடு கரைந்த படைப்பாளி!

பிறப்பு: 20.3.1942ல் மறைவு:14.09.2004.
கனவுகளும் கற்பனைகளும் நிறைந்தவன் மனிதன். அதிலும் படைப்பாளியாகவும் இலக்கிய ஆர்வலனாகவும் இருப்பவர்களின் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் வானம் கூட எல்லையிட முடியாது தளரும். அந்த கனவுகளும் கற்பனைகளும்தான் அவர்களின் ஆத்மார்த்த பலமும் கூட. புலோலியூர் க.சதாசிவமும் அத்தகைய பண்புகளைக் கொண்ட ஒரு எழுத்தாளன்தான். தொழில் ரீதியாக அவர் ஒரு வைத்தியர் என்ற போதும் இலக்கியம், வைத்தியம் ஆகிய இரு துறைகளிலும் உறுதியாகவும் சமனாகவும் கால் ஊன்றி நின்றவர் ஆவார்.அவரது இலட்சியம் சமூக மேம்பாடு ஒன்றையே குறியாகக் கொண்டது. சரியாகச் சொல்லப்போனால் இலங்கையின் வெவ்வேறு திசைகளில் வாழ்ந்த, பயணித்த இரு சமூகங்களின் மேம்பாடு அவரது இலட்சியமாக இருந்தது. தான் பிறந்து வளர்ந்து மணம் முடித்த வடமராட்சி மண் ஒரு கண் என்றால், தொழில் ரீதியாக இணைந்து அவரது வாழ்க்கைப் பயணத்தின் பெரும் பகுதியை ஆட்கொண்டுவிட்ட மலையகம் மறு கண் எனலாம்.’நாணயம்‘ என்ற அவரது நாவல் “ வடமராட்சிப் பிரதேசத்தின் நாடித் துடிப்பு, மனித உறவுகளைப் பிணைக்கும் பந்தமாகிய சடங்குகள், நம்பிக்கைகள், பண்பாட்டம்சங்கள், எண்ணக் கருத்துகளின் உயிர்த்துடிப்பான பேச்சு வழக்கு..” ஆகியவற்றை அற்புதமாகப் பதிவு செய்த படைப்பாகும். அதே போல சிறுகதைப் போட்டி ஒன்றில் முதற் பரிசைத் தட்டிக் கொண்ட அவரது முதற் சிறுகதையான –புதுவாழ்வு1961 களில் இருந்த யாழ் மண்ணின் வாழ்வை கண்முன் கொண்டு வருகிறது.அதே நேரத்தில் ‘மூட்டத்தினுள்ளே‘ என்ற நாவலும் ‘ஒரு நாட் போர்‘ என்ற சிறுகதைத் தொகுதியும் மலையக மக்களின் துன்பங்களும் வேதனைகளும் நிறைந்த வாழ்வை பரிவோடும் பாசத்தோடும் பார்த்தது மாத்திரமின்றி அவர்களது வாழ்வில் ஒளியூட்ட வேண்டும் என்ற வேட்கையோடும் படைக்கப் பட்டவையாகும். கடந்த மூன்று தசாப்பதங்களுக்கு மேலாக மலையகத்தோடு ஒன்றியவர் அவர். அதிலும் முக்கியமாக டயபராத் தோட்டத்தின் வைத்திய அதிகாரியாகப் பணியாற்றிய போது அந்த மக்களின் இன்பங்களிலும் துன்பங்களிலும் பங்காளியாக கலந்து வாழ்ந்தவர். அடிப்படை வசதிகள் கனவிலும் கூடக் கிடைக்காத அவர்களின் ஏழ்மையை நேரிடையாகக் கண்டு கண் கலங்கியவர். அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களின் முதுகில் சவாரி செய்ய முற்படும் அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் கபடத்தன்மைகளையும் புரிந்தவர். இதனால் அவர்களது வாழ்வின் உள்ளும் புறத்தையும் மாத்திரமின்றி, அச் சமூகத்தின் பலத்தையும் பலவீனத்தையும், பன்முக விஸ்தாரணத்தையும் தன் கலையுள்ளத்தில் ஆழமாகப் பதித்துக் கொண்டவர்.

இதனால்தான் வடமராட்சியைச் சேர்ந்தவரான அவர் வீரகேசரி நடாத்திய நாவல் போட்டியில் மலையகப் பிரதேசத்திற்கான பரிசை ‘மூட்டத்தினுள்ளே’ என்ற நாவலுக்குச் சுலபமாகத் தட்டிக் கொள்ள முடிந்தது.

அவர் பிறந்தது 20.3.1942ல் மறைந்தது 14.09.2004 அன்று.

மறைந்த அன்று கூட புதிய திட்டங்களோடும், சிறகடிக்கும் கற்பனைகளோடும் பண்டாரவளையிலிருந்து கொழும்பு வரும் பஸ்ஸில் பயணிக்க ஏறியிருந்தார். கொழும்பில் நிற்கும்போது தான் இணையாசிரியராகக் கடமையாற்றும் ஞானம் இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ஞானசேகரனைச் சந்தித்து ஞானத்தின் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி உரையாடுவதும், நான் உட்பட சில இலக்கிய நண்பர்களைச் சந்தித்து இலக்கியக் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதும், சில தனிப்பட்ட வேலைகளைக் கவனிப்பதும் அவரது திட்டமாயிருந்தது.

ஆனால் அவரது பயணத்தின் திசை மாறிவிட்டது. அவரதும், எவரதும் கற்பனைக்கும் எட்டாத பயணம் அது. கொழும்பு வரவேண்டியவர் விண்ணுலகுக்குப் பயணமானார். நோய் நொடி என்றும் துன்பப்படாத அவருக்கு, மற்றவர் பிணி தீர்ப்பதில் மனநிறைவு கண்ட அவருக்கு தன்கூட மாயக் கூற்றுவனான நோயொன்றும் பயணித்தது தெரிந்திருக்கவில்லை. திடீரெனத் தோன்றிய இரத்தக் கட்டியொன்று (Clot) சுவாசக் குழாய்க்கான இரத்த நாடியை அடைக்க, பண்டாரவளையில் இருந்து புறப்பட்ட பஸ் ஹப்புத்தளையை அடைய முன்னரே திடீரென மரணத்தைத் தழுவிக் கொண்டார். ஆம் மரணம் மகத்தானது. அதன் முன் மனிதர்களாகிய நாம் அற்பப் புழுக்கள்.

சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், விமர்சகர் எனப் பன்முகப் படைப்பாற்றல் கைவரப் பெற்ற அவர் ஒரு பல மருத்துவக் கட்டுரைகளையும் தினக்குரலில் எழுதியுள்ளார். யுகப்பிரவேசம் (1973), ஒரு அடிமையின் விலங்கு அறுகிறது (1982), ஒரு நாட் பேர் (1995), புதிய பரிமாணம் (1998), அக்கா ஏன் அழுகிறாய் (2003) ஆகிய ஜந்து சிறுகதைத் தொகுதிகளும், நாணயம் (1980), மூட்டத்தின்னுள்ளே (1983) ஆகிய இரு நாவல்களும் நூல் உருவாகியுள்ளன. இவற்றில் அவரது இரண்டு நாவல்களுமே தேசிய சாஹித்திய விருதுகளைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பரிமாணம் யாழ் இலக்கிய வட்டத்தின் பரிசை வென்று கொண்டது. சென்ற மாதம் யாழில் நடந்த பரிசளிப்பு விழாவில் இதற்கான பரிசைப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. லண்டனில் உள்ள கொம்மாந்துறை இலக்கிய வட்டமும் தினக்குரலும் இணைந்து நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இதற்கான பரிசை இன்னமும் நேரிடையாகப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் அச் சிறுகதை தினக்குரலில் வெளியாவதை அவருக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை என்பதும் மனத்தை அழுத்துகிறது.

ஞானம் சஞ்சிகை நடாத்திய சிறுகதை நூல் கைப்பிரதிப் போட்டியை நடாத்துவதிலும் அதில் முதற் பரிசு பெற்ற சாரங்காவின் ‘ஏன் பெண்ணென்று‘ என்ற பிரதியை புத்தகமாக வெளியிடுவதிலும் அவரே பெரு முயற்சி எடுத்ததை நான் அறிவேன். அது போன்ற முயற்சிகளை எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செய்யவும் எண்ணியிருந்தார். அதன் அறிமுகவிழா சென்ற மாதம் விபவி ஆதரவில் பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு மையத்தில் நடந்தபோது அவரே அறிமுகவுரை நடாத்தினார்.

அன்று கூட்டம் முடிந்தபின் அங்கிருந்து வெள்ளவத்தை பஸல்ஸ் ஒழுங்கை வரை அவருடன் கே.ஆர்.டேவிட் ம் நானும் இலக்கியம் பேசியபடியே நடந்து நேற்று நடந்தது போல் மனத்தில் பசுமையாக இருக்கிறது. அதன் பின் அவரை நேரில் சந்திக்க முடியவில்லையே என்பது சுமையாக உள்ளத்தை அழுத்துகிறது. ஆயினும் தொலைபேசியில் இடையிடையே பேசுவோம். சுமார் 25 வருடங்கள் நெருங்கிய நண்பனாக இருந்த உற்ற நண்பனின் பிரிவுத்துயர் ஆற்றவொண்ணாதது. அதுவும் அன்று 15ம் திகதி நடுநிசி 1.30 அளவில் ஹப்புத்தளை மாவட்ட வைத்திய அதிகாரி அவரது டயறியைப் பார்த்து எனது டெலிபோன் நம்பரை கண்டுபிடித்து ‘உங்களுக்கு டாக்டர் சதாசிவத்தைத் தெரியுமா’ என்று கேட்டு அந்த அதிர்ச்சி மிக்க செய்தியைக் கூறினார். என்றென்றும் என்னால் அதிலிருந்து மீளவே முடியாது.

தென்புலோலியூர் கணபதிப்பிள்ளைக்குப் பின்னர் புலோலியூருக்கு இலக்கிய உலகில் தனிப் பெருமை சேர்த்தவர் புலோலியூர் க.சதாசிவம் ஆவர். அவர் முன்மொழிந்த வழியிலேயே புலோலியூர் தம்பையா, கந்தசாமி, இரத்தினவேலோன் போன்ற பலரும் பின்தொடர்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது பூதவுடல் பொரளை கனத்தையிலுள்ள ஜெயரட்ண மலர்ச்சாலையில் 16ம் திகதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, கம்பவாருதி இ.ஜெயராஜ், ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன், தினக்குரல் ஞாயிறு இதழ் பொறுப்பாசிரியர் தேவகொளரி, மு.பொ, சிதம்பரப்பிள்ளை சிவகுமார், வதிரி இரவீந்திரன், நீர்வை பொன்னையன், வ.இராசையா, புலோலியூர் இரத்தினவேலோன் உட்பட பல எழுத்தாளர்களும், நண்பர்களும் உறவினர்களும் தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். டொமினிக் ஜீவா, தி.ஞானசேகரன், எம்.கே.முருகானந்தன் ஆகியோர் அஞ்சலி உரையாற்றினர். மாலை 5.30 அளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

கனவுகளுடனும் கற்பனைகளுடனும் வாழ்ந்த அந்தப் படைப்பாளியான புலோலியூர் க. சதாசிவம் காற்றோடு கலக்கும் போதும் அவற்றையே தனது வழித் துணையாக்கிக் கொண்டார் என்பதில் மனம் ஆறுவோம்.

By -‘[googleplusauthor]’

நன்றி:- ஆக்கம்- எம்.கே.முருகானந்தன்

                 மூலம்-பதிவுகள் இணையம்

Sharing is caring!

Add your review

12345