பெண்களின் பாட்டும் விளையாட்டும்

பெண்களின் பாட்டும் விளையாட்டும்

ஆரம்ப காலங்களில் எமது கிராமங்களில் பெரும்பாலும் பெண்களால் பாடப்படும் பாடல்களும் விளையாட்டுக்களும் மிகவும் சுவாரசியமான இருக்கும்.

பிள்ள சினேகிதி சொன்ன குலகுலயா முந்திரிக்கா பாட்டு ஞாபகம் இருக்கே? இதுகளும் அதுகளப் போல தான். ஆனா என்ன கொஞ்சம் பொம்பிளப் பிள்ளயள் விளையாடுற விளையாட்டு. அவ்வளவு தான்.

கிள்ளுப் பிறாண்டி நுள்ளுப் பிறாண்டி:-

நாலஞ்சு பேர் வட்டமா இருப்பினம். இரண்டு கையையும் முன்னால் பரப்பி வைத்திருப்பார்கள். ஒருவர் இந்தப் பாடலை இப்படிப் பாடுவார்.

கிள்ளுப் பிறாண்டி நுள்ளுப் பிராண்டி
கொப்பன் தலையில் என்ன பூ?

கிள்ளுப் பிராண்டி என்னும் போது அவர் ஒருவரது கையை நுள்ளுவார். பின்னர் நுள்ளுப் பிராண்டி என்னும் போது வரிசைக் கிரமமாக வரும் அடுத்தவரின் கையை நுள்ளுவார். கொப்பன் தலையில் என்னும் போது அது அடுத்தவரது கையிற்கான நுள்ளாக இருக்கும். என்ன பூ என்பது 4வது கையிற்கான நுள்ளாக இருக்கும். அவர் ஒரு பூவின் பெயரைச் சொல்ல வேண்டும். பொதுவாக முருக்கம் பூ என்று சொல்வார்கள்.

பாடல் பிறகு இப்படித் தொடரும்.

முருக்கம் பூவத், தின்றவளே,
பாதி விளாங்காய், கடித்தவளே,
பாட்டன், கையை, மு, ட, க், கு,

ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு கையிற்கான நுள்ளாக வந்து கடைசியாக முடக்கு என்ற சொல் தனித்தனி எழுத்துக்கான நுள்ளாக இருக்கும். கு என்ற சொல் முடிகின்றவர் தன் கையை மறு புறமாகத் திருப்பி வைக்க வேண்டும். பூவின் பெயரை வேறொன்றாகக் கூறும் போது வேறொருவரது கை திரும்புகின்ற வாய்ப்புக் கிட்டும். அந்தக் கு என்ற சொல் மீண்டும் திருப்பிய கையில் வந்து முடிந்தால் அவர் தன் கையை எடுத்துக் கொள்ளலாம்.

பாடல் மீண்டும் அவ்வாறே தொடரும். அப்படி முதலில் யாருடைய கை முழுவதுமாக விடுபடுகிறதோ அவர் வெற்றி பெற்றவர்.
இப்போது நினைத்தால் இதிலெல்லாம் என்ன சுவாரசியம் இருக்கிறது என்று தோன்றுகிறது. ஆனால் அப்போதெல்லாம் இது தான் திறம்.

ஆச்சுப் பிச்சிலி ஆச்சுப் பிச்சிலி

இது ஒரு சின்ன முசுப்பாத்தி விளையாட்டு. கைகளை அகல விரித்துக் கொண்டு ஆச்சுப் பிச்சிலி ஆச்சுப் பிச்சிலி என்று சொல்லிக் கொண்டு சும்மா சுத்துவது தான். இறுதியில் தலை சுற்றி ஒவ்வொருவராக தொப்புத் தொப்பென்று விழுவார்கள். அதெற்கெல்லாம் பெரிய வெற்றி பெற்றது போல் பெரிய சிரிப்பெல்லாம் சிரித்துக் கொள்வார்கள். பாசாங்காக ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கொள்வதற்கும் ஒரு சிரிப்பு. இதில் திறிலான சம்பவம் தலை சுற்றுவதை அநுபவிப்பதாகத் தான் இருந்தது என்று இப்போது தோன்றுகிறது.

இன்னொரு பாட்டிருக்கிறது. அதனை ஏன் பாடினோம் என்று இப்போது ஞாபகம் இல்லை. ஆனால் பாடல் ஞாபகமாக இருக்கிறது. பாடல் இது தான்.

அக்கா வீட்ட போனேன்
பழம் அரிசி தந்தாள்
வேண்டாம் என்று வந்தேன்
வந்த வழியில் பாம்பு
பாம்படிக்கத் தடிக்குப் போனேன்
தடியெல்லாம் ஊத்தை.
ஊத்தை கழுவ தண்ணிக்குப் போனேன்
தண்ணி எல்லாம் மீன்
மீன் பிடிக்க வலைக்குப் போனேன்
வலையெல்லாம் ஓட்டை
ஓட்டை தைக்க ஊசிக்குப் போனேன்
ஊசி எல்லாம் வெள்ளி
வெள்ளி எல்லாம்(அம்மா?) வெள்ளி
பொயிலைக் காம்பை நுள்ளி
வாய்க்கை போடடி கள்ளி.

இப்பாட்டு ஒரு லயத்தோடு பாடப்படும்.

இப்போது இன்னொரு பாட்டும் ஞாபகம் வருகிறது.
இது பலராக பெண்கள் விளையாட்டில் தம்மை இரண்டு பிரிவாகப் பிரிப்பதற்காக இப்பாடலைப் பாடிப் பிரித்துக் கொள்வார்கள். பாடல் இதுதான். எல்லோரும் வட்டமாக நிற்க ஒருவர் தன்னில் இருந்து இப்பாடலை இப்படி ஆரம்பிப்பார். ஓர் என்று தன் உச்சம் தலையில் கை வைப்பார். அம்மா என்று தன் நெஞ்சில் கை வைப்பார். பிறகு ஒவ்வொரு சொல்லாக ஒவ்வொருவரைச் சுட்டியபடி வருவார்.

ஓர் அம்மா கடைக்குப் போனா
ஒரு டசின் பென்சில் வாங்கி வந்தா
அதன் நிறம் என்ன?

( என்ன என்பதில் முடிபவர் ஒரு நிறத்தைச் சொல்ல வேண்டும்)

அவர் சிவப்பு என்று சொன்னால் சி, வ, ப், பூ என்று ஒவ்வொருவராகச் சுட்டிக் கொண்டு வர வேண்டும். கடைசி எழுத்தில் முடிபவர் ஒரு புறமாக நின்று கொள்ள வேண்டும். பின்னர் இப்பாடல் மீண்டும் தொடரும். அடுத்த முறை முடிபவர் மறு புறமாக நின்று கொள்ள வேண்டும். இப்படியாகக் கட்சி பிடித்துக் கொள்வார்கள்.

இன்னொரு பாட்டும் இருக்கிறது.

என்ன?
அன்னம்
என்ன அன்னம்?
சோற்று அன்னம்
என்ன சோறு
பழஞ்சோறு
என்ன பழம்
மாம்பழம்
என்ன மா
அரிசி மா
என்ன அரிசி
குத்தரிசி
என்ன குத்து
வயிற்றுக் குத்து.
என்ன வயிறு
பேத்த வயிறு
என்ன பேத்த
வால்ப் பேத்த
என்ன வால்
நரி வால்
என்ன நரி
குள நரி
என்ன குள
வாழைக் குள
என்ன வாழை
திரி வாழை
என்ன திரி
விளக்குத் திரி
என்ன விளக்கு
குத்து விளக்கு
என்ன குத்து

இந்தக் குத்து
என்று எதிர் பாராத விதமாக ஒரு குத்து ஒன்று கொடுத்து விடுவோம்.

இப்போதெல்லாம் இப்படிப் பாடிக் கொள்கிறார்களா என்றும் தெரியவில்லை. இதுவெல்லாம் நாம் குறிப்பிட்ட காலத்திற்று முன்னர் பயன்படுத்திக் கொண்ட சுவாரசியமான பாட்டுக்களும் விளையாட்டுக்களும் தான்.

By – Shutharsan.S

நன்றி – தகவல் மூலம் – http://eelamlife.blogspot.com இணையம்.

Sharing is caring!

2 reviews on “பெண்களின் பாட்டும் விளையாட்டும்”

  1. பயன்மிகு பதிவு
    ஆழ் மனதின் நினைவலைகளை மீட்டிவந்த ஆக்கம்!
    பாரம்பரியம் மட்டுமல்ல பாசத்தையும், உறவையும் ஊட்டி வளர்த்த பாட்டுக்களும் , விளையாட்டுக்களும் வருகின்ற புதன் கிழமை சர்வதேசத் தமிழ் வானொலியின் காற்றலையினுாடக பகிர்ந்து கொள்ளப் படப் போகின்றது. நன்றி சுதர்சன். இதோ நீங்களும் இரசிக்க http://youtu.be/76MeJks9gcI

  2. முகுந்தமுரளி தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.தங்களை போன்ற ஆர்வலர்களினால் தான் எனது பதிவுகள் மேலும் சிறப்புப் பெறுகிறது.

Add your review

12345