பேராசிரியர் கிருஷ்ணராஜா

பேராசிரியர் கிருஷ்ணராஜா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியராக பணியாற்றும் இவர் கோண்டாவில் மேற்கினை வாழ்விடமாகக் கொண்டவர். ஆரம்பக் கல்வி, இரண்டாம் நிலைக் கல்வி என்பவற்றை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் கற்றுத்தேறி பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றும், இந்தியாவின் மைசூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப்பட்டம் பெற்றவர். இந்தியா சாந்தி நிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் ஆசிரிய பரீட்சார்தியாகவும் இருந்தவர். யாழ் பல்கலையில் உதவி விரிவுரையாளர், விரிவுரையாளர் ஆகி பதவிகளை வரலாற்றுத்துறையில் வகித்து தற்பொழுது பேராசிரியராக இருந்து வருகிறார்.

அகழ்வாராட்சி, கற்பித்தல், பயிற்சிப்பட்டறை,கலாசாரப் பயிற்சிப் பட்டறை, தமிழர் வாழ்வியல் கண்காட்சி, அகழ்வாராட்சியில் கிடைத்த பொருட்களைப் பேணி பல்கலைக்கழகத்தில் நூதனசாலை அமைத்தது ஆகிய செயற்பாடுகளில் செயற்பட்டு தனது ஆளுமையை இவர் வெளிப்படுத்தியுள்ளார். பேராசிரியர் இந்திரபாலாவுடன் இணைந்து மன்னார்,மாந்தை, சுன்னாகம், கந்தரோடை போன்ற இடங்களில் அகழ்வாய்வினை மேற்கொண்ட பேராசிரியர் கிருஷ்ணராஜா அவர்கள், யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைமைப் பதவியிலும் இருந்தவர். பேராசிரியர் கே. இந்திரபாலா,பேராசிரியர் S.K. சிற்றம்பலம், ஆகியோரது வழிகாட்டலைப் பின்பற்றி செயலுருக் கொடுத்து வருவதுடன், ஆய்வுக் கட்டுரைகள் பத்திற்கு மேலாகவும், ஆவணப்படுத்தல்,வரலாற்றுக் கண்டுபிடிப்பும் தொல்லியலும் இருபத்தேழு வரையிலும், வித்துவப் பிரசங்கம் பதினேழுக்கு மேலாகவும் எழுதியுள்ளார். யாழ் பல்கலைக்கழகம், இலங்கை வரலாற்றுத்துறை மன்றம், கடல் கடந்த தமிழர் அமையம், தனிநாயக அடிகளார் ஆய்வு மையம், இந்திய இதிகாச சமூகம், தமிழர் தொல்லியற்கழகம், நல்லூர் பிரதேச செயலக கலாச்சாரப் பேரவை ஆகியவற்றில் இணைந்து செயற்பட்டு வரும் இவர் ஈழத்தில் வெளிவரும் பல சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் வரலாற்றுத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இதில் யாழ்ப்பாணத் தீவகற்பத்தில் அகழ்வாராய்வுக்குத் தேர்ந்த பகுதிகள், யாழ் மக்களின் பண்டைக்கால தொல்லியல், யாழ்ப்பாண இராட்சியம், என்ற கட்டுரைகள் முக்கியமானவை. நல்லூர் பிரதேச செயலக கலைஞானச்சுடர் 2008 நூலையும் இவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பன்முனைப்படுத்தப்பட்ட வரலாற்று ரீதியான இவரது ஆய்வுகள் பல நூலாக வந்துள்ளன.

பேராசிரியர் கிருஷ்ணராஜா அவர்கள் எனது இந்த இணையத்தளம் இவ்வளவு வளர்ச்சி பெறவும், காலத்திற்கு காலம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியும், ஆக்கங்களின் திருத்தம், உண்மை தன்மை மற்றும்  பல்வேறு வகையிலும் உதவிகள் புரிந்து எதிர்கால சந்ததிக்கு ஆவணப்படுதுவதற்காக மாபெரும் தூண்டுதலை வழங்கியவர். இச்சந்தர்ப்பத்தில் அவருக்கு எனது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த ஆவணப்படுத்தலை ஆரம்பத்தில் இறுவட்டின் மூலம் வெளியிட்டபோது என்னுடன் இணைந்து மாபெரும் தகவல் தொகுப்பில் பங்காற்றிய நண்பர் ம.நடனதேவன், நிர்வாக இயக்குனர், யாழ் ரெக் மற்றும் CAA, விவசாய பீடம் யாழ் பல்கலைக்கழகம் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

Add your review

12345