பேராசிரியர் சிற்றம்பலம்

பேராசிரியர் சிற்றம்பலம்

ஈழத்தமிழர் வரலாறு பற்றிய ஆய்வு நூல்கள் பலவற்றை எழுதிய முதுநிலை வரலாற்றுப் பேராசிரியர் சிற்றம்பலம் (தோற்றம் – 01.10.1941) அவர்கள் அராலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டவர். யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, இந்தியாவின் புனேய் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி மற்றும் கலாநிதி (முனைவர்) பட்டங்களையும் பெற்றவர். பண்டைய வரலாறும் அகழ்வாராட்சியும் இவர் வரித்துக் கொண்ட துறைகள் ஆகும்.

இவர் யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியராகவும், வரலாற்றுத்துறை பீடத் தலைவராகவும், பட்டப்பின் படிப்புகள் பீடாதிபதியாகவும், பதில் துணைவேந்தராகவும், பல்கலைக்கழக மானியங்கள் அவை உறுப்பினராகவும் பணியாற்றிய பழுத்த அனுபவசாலியாவார்.

தமிழர் நாகரீகம், இந்துசமயம் தொடர்பாக வரலாற்று ரீதியான பன்முனைப்படுத்தப்பட்ட ஆய்வுகளை தனித்து மேற்கொண்டு 50 க்கு மேற்பட்ட ஆய்வு நூல்களையும், 35 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் இவர் இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற துறை சார்ந்த சர்வதேச கருத்தரங்குகள், மகாநாடுகளில் இலங்கைத் தீவின் சார்பில் பங்குபற்றி பல வரலாற்று ஆய்வுரைகளை, கருத்துரைகளை வழங்கி சர்வதேச மட்டத்தில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். தினகரன், ஈழநாடு, வீரகேசரி போன்ற நாளேடுகளில் இவரது வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ”சிந்தனை” பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும், தொல்பொருள் பட்டப்பின் படிப்புகள் நிறுவனத்தின் ஆலோசனை சபையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். யாழ் பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலய புனரமைப்பு கும்பாபிஷேக நிகழ்வுகளை இவர் முன்னின்று நடாத்தியுள்ளார்.

பண்டைய தமிழகம் (1991), யாழ்ப்பாண இராட்சியம் (1992), ஈழத்தில் இந்து சமய வரலாறு (1996), ஈழத்துத் தமிழர்களின் தொன்மை (2001) என்னும் இவரால் எழுதப்பட்ட வரலாற்று ஆய்வு நூல்கள் யாழ் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணைக்குழு வடக்கு கிளை தலைவர், வடக்கு தெற்கு பத்திரிகையாளர் சபை போசகர், இந்து சமய பேரவைத் தலைவர் என இன்னும் பல சமய, சமூக அபிவிருத்தி மையங்களின் பொறுப்புள்ள பதவிகளை வகித்துள்ளார். 1993 ம் ஆண்டு இவரது ”பண்டைய தமிழகம்” என்ற நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் சர்வதேச விபர மையத்தின் 21 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவு ஜீவிகள் பட்டியலில் இடம்பிடித்துள்ள தமிழ்ப் பேராசான் இவராவார்.
By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

Add your review

12345