பேராசிரியர் சிவசாமி

பேராசிரியர் சிவசாமி

பல்துறை அறிஞரான பேராசிரியர் சிவசாமி (விநாயகமூர்த்தி சிவசாமி – தோற்றம்- 16.03.1933) புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பலாலி வீதி, கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் லண்டன் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத சிறப்புக் கலைமாணி, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதுமாணி, யாழ் பல்கலைக்கழகத்தின் கௌரவ இலக்கிய கலாநிதி ஆகிய பட்டங்களைப் பெற்றவர்.

சமஸ்கிருதம், தென்னாசிய வரலாறு, இந்து நாகரீகம், தமிழ், நுண்கலை முதலியவற்றில் பல்துறை விற்பன்னராக விளங்கும் இவர் வரலாறு, சமஸ்கிருதம், இலக்கிய விமர்சனம், நாஸ்திரிய நடனம், சமஸ்கிருத மரபு முதலிய துறைகளில் நூல்களும், ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். பேராசிரியர் சிவசாமி அவர்கள் ”பூர்வகலா”, ”ஸ்ரீ லங்கா தென்னாசிய ஆய்வேடு”  ஆகியவற்றின் ஆசிரியராகவும், இந்துக் கலைக் களஞ்சிய ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் யாழ்ப்பாணக் கல்லூரியின் ”கலைக்கொத்து” மாணவர் மன்றத்தின் போசகராகவும், யாழ்ப்பாண தொல்லியல் கழகத்தின் ஆரம்ப செயலாளராகவும், யாழ் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் ஆரம்ப செயலாளராகவும் பணியாற்றிய சிறப்பு இவருக்குண்டு. யாழ் பல்கலைக்கழக மூதவை உறுப்பினராக இருபத்தைந்து வருடங்கள் இவர் பணியாற்றியுள்ளார். ஸ்ரீ பரமேஸ்வரன் ஆலய முகாமைத்துவ சபை தலைவராக பன்னிரண்டு ஆண்டுகள் இவர் பணியாற்றியுள்ளார்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளார். இவற்றுள்ளே திராவிடர் ஆதி வரலாறும் பண்பாடும் (1973) எனும் நூல் இவரின் தொடக்க கால நூல்களில் ஒன்றாகும். ஆரியர் ஆதி வரலாறும் பண்பாடும் (1976) Some aspects of South Asian Epigraphy (1985), பரதக்கலை (1988), சமஸ்கிருத இலக்கியச் சிந்தனைகள் (1987), தென்னாசிய கலை மரபில் நாட்டிய சாஸ்திர மரபு (1992), இந்துப் பண்பாடு அன்றும் இன்றும் (2005) ஆகியன இவர் எழுதிய நூல்களில் சிலவாகும்.

இவருடைய ஆய்வுகளுக்கும் ஆக்க இலக்கியங்களுக்கும் விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன. ”சமஸ்கிருத இலக்கியமும் விமர்சனமும்” என்ற இவருடைய கட்டுரைத் தொகுப்பு (1989) சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. தென்னாசிய செந்நெறி நடனங்கள் ஒரு வரலாற்று நோக்கு (1998) வடகிழக்கு மாகாணப் பரிசு பெற்றது. மேலும் இவரின் திறமையையும், கல்விசார் செயற்பாட்டையும், ஆளுமையையும் பாராட்டி 2002 ம் ஆண்டு வடமாகாண சபை, உயர் விருதான ஆளுனர் விருது வழங்கிக் கௌரவித்தது.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

Add your review

12345