மண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி

சிவசுப்பிரமணிய சுவாமி

யாழ்ப்பாண தீபகற்பத்திலுள்ள சப்த தீவுகட்கும் தலையாய தீவாக அமைந்த மண்டைதீவில் இந்துமதத்தின் ஆணிவேராக விளங்கும் ஆலயங்களில் ஒன்றாக  திகழ்வது  மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில். இவ்வாலயம் இதிகாச புராணக்கதைகளோடு தொடர்பு பட்டுக் காணப்படுகின்றது.

இவ்வாலயத்தின் ஆரம்பம் ஐயனார் வழிபாடகவே காணப்பட்டது இதனால் இப்பகுதி ஐயன்வெளி என அழைக்கப்பட்டுள்ளது. மண்டை தீவின் தென்பால் முத்துத்தம்பி என்னும் பெரியார் வசித்து வந்தார். இவர் இறை சிந்தனையிலும் குரலிங்க சங்கம பக்தியிலும் ஆன்மீகத்திலும் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தால் ஊர்மக்கள் இவரை முத்தர் என்றே அழைத்துள்ளனர். இவர் பெரும் நிலபுலன்களைக் கொண்டவராகவும் நிதி வசதிஉடையவராகவும் விளங்கியுள்ளார்.

இவர் தனது காணியிலே ஐயனார் கோயிலை தாபித்து வணங்கி வந்தார். இப்பெரியார் காலஞ்சென்றபின் இவரது மகன் குமாரவேலு என்பவர் இக்கோவிலை பராமரித்துவந்தார். இவரை முத்தர்மோன் என்று மக்கள் அழைப்பார்கள்.

முத்தர்மோன் என்று அழைக்கப்பட்ட குமாரவேல் அவர்களும் தந்தையைப் போலவே இறை சிந்தனையிலும் அருள் ஒழுக்க நெறியிலும் ஆன்மீகத்திலும் பெரிதும் நாட்டங்கொண்டவராக காணப்பட்டார்.

இத்தகைய ஆன்மீக ஈடுபாட்டின் காரணமாகத் துறவுநிலையை மேற்கொண்டவராக காணப்பட்டார். இக்காரணத்தால் மண்டைதீவில் தவநிலைத் தோற்றத்தோடு துறவியர் கூட்டம் உருவாயிற்று. இவ்வாறான துறவியர் கூட்டம் மண்டைதீவில் இருப்பதை அறிந்த கடையிற்சுவாமிகள் மண்டைதீவிற்கு வந்து இத்துறவியர் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டார்.
கடையிற் சுவாமிகள் தொடர்பால் பல அற்புதங்கள் நிகழ்ந்தன. மக்கள் வாழ்விலும் இவை பிரதிபலித்தன. இத்துறவியர்கள் ஒன்று கூடி இருப்பதும் தாம் நினைத்த மாத்திரத்திலேயே நினைத்த இடத்திற்குச் செல்வதும் மக்களுடைய துன்பங்களை உய்த்துணர்ந்து தீர்ப்பதும் இவர்களது வழக்கமாக காணப்பட்டது. இவ்வாறான நிலையில் துறவியர் அனைவரும் ஐயனார் கோயில் இருக்குமிடம் வந்து சேர்ந்தனர்.

அரும்பெறல் மரபில் பெரும் பெயர் முருகன் என்று திருமுருகாற்றுப்படையிலே விதந்து கூறப்பகின்ற முருகனே தமிழ் கடவுள்போல கடையிற்சுவாமிகள் இந்த இடத்திலே ஓர் அற்புதத்தை மானசீகமாக நிகழ்த்திக்காண்பித்தார்.

முத்தர்மோனை அழைத்து தன் முன்பு இருக்கும்படி பணித்தார். பின்பு தான் வைத்திருந்த குடையை விரித்துப் பிடித்துக்கொண்டு தன் இருபக்கத்திலும் இருவரை  நிற்கும்படி பணிந்தார். அவர் வாயிலிருந்து எந்தவொரு வார்த்தையும் வெளிவரவில்லை. கடையிற்சுவாமிகளது மௌனநிலை கண்டு ஏனைய துறவிகள் திகைத்து நின்றனர். இச்சந்தர்ப்பத்தில்  அவர் அருகில் இருந்த முத்தர்மோன் தீடீரென ஏதோவோர் சக்தியால் உந்தப்பட்டு அருகில் கிடந்த கற்களை எல்லாம் பொறுக்கி எடுத்து கடையிற் சுவாமிகளை முருகனாகவும் அவர் அருகில் நின்ற இருவரையும் வள்ளி தெய்வானையாகவும் கருத்திற்கொண்டு முருகப் பெருமான் திருக்கோயிலை அடையாளப்படுத்தினார். பின்னர் தெளிந்து நடைபெற்றவை யாவும் முன்னைத் தவவிசேடத்தினால் நிகழ்ந்தவை என்றுணர்ந்து அவ்விடத்திலேயே முருகப்பெருமான் கோயிலை கட்டினார். ஆரம்பத்தில் இவரால் வணங்கப்பட்ட ஐயனாரை புதிதாக அமைந்த கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஈசானமூலையில் தாபித்து பரிவாரக் கோயிலாகஅமைத்துக் கொண்டார். ஏனினும் வருடந்தோறும் வரும் ஆனி பௌர்னமியில் திருக்குளிர்த்தி பொங்கல் என்பன நடைபெறும். இக்காலத்தில் பறைமேளம் வாசிக்கப்படும். பூனகரியில் இருந்து பூசாரிகள் இங்கு வருவதுன்டு. குளித்தியில் உருக்கொண்டு கட்டுச் சொல்லும் வழக்கமும் காணப்படுகிறது.

புதிதாக முருகன் கோயில் அமைக்கப்பட்ட பின்னர் ஐயன் கோயில் என்றழைக்கப்படும் வழக்கு மறைந்து முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

கடையிற் சுவாமிகள் வாழ்ந்த காலம் கி.பி 1810-1875 எனக்குறிப்பிடப்பட்டு உள்ளதால் இக் கோயில் இக்காலப்பகுதிக்குள் அமைந்ததென கருதலாம். இக்கோயிலைக் கட்டிய குமாரவேலு அவர்கள் தன் ஆண்வழிச் சந்தியினரே தலைமுறை தலைமுறையாக இக்கோயிலை பராமரித்து வரவேண்டும் என்பதை வெளிப்படுத்தி அதற்கான ஏற்பாடுகளை ஏற்படுத்தி வைத்தார். அவர் ஏற்படுத்தி வைத்த கோட்பாட்டின்படியே இக்கோயில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இக்கோயிலைத்தாபித்த முத்தர்மோன் என்றழைக்கப்பட்ட குமாரவேலு என்பவர் சமாதி நிலை அடைந்தார்.

இவருடைய சமாதி இக் கோயிலின் தென்பால் உள்ள இவரது காணியில் கட்டப்பட்டு உள்ளது. இவரை ஆன்மீகநெறியில் இட்டுச்சென்ற கடையிற்சுவாமிகளது சமாதியும் கோயிலும் யாழ்ப்பாணத்திலுள்ள நீராவியடியில் உள்ளது. இவர்களுடன் சேர்ந்து ஆன்மீகப்பணியில் ஈடுபட்ட ஏனைய துறவிகளின் சமாதிகள் மணடைதீவு கொவ்வைகுளி என்னும் மணற்திடரில் தற்காலத்தில் தில்லையேஸ்வரம் என்று கூறப்படும் சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.

சிவசுப்பிரமணிய சுவாமி
சிவசுப்பிரமணிய சுவாமி

நன்றி – தகவல் மூலம் – http://www.mukapuvajal.com இணையம்

Sharing is caring!

Add your review

12345