மனோன்மணி அம்பிகா சமேத சிவ பூதநாதேஸ்வர சுவாமி

சிவ பூதநாதேஸ்வர சுவாமி நீர்வையூர், கோவையூர், நிறை செல்வம் மிக்க ஊர் உரும்பிராய் கிழக்குத் கரந்தன் பதி அருள்மிகு மனோன்மணி அம்பிகா சமேத சிவபூதநாதேஸ்வர சுவாமி ஆலய வரலாறு. நிருதி மூலையில் உரும்பிராய் கற்பகக் பிள்ளையார் கோவிலின் அருள்வாசம், வாயு திசையில் உளரெழு அருள்மிகு மனோன்மணி அம்பாளின் அருள்வாசம், குண திசையில் நீர்வேலி குக்குடக் கொடியோன் குமரன் கோயில் அருள்வாசம் மத்தியில் சிவ பூதநாதேஸ்வர சுவாமி . திருக்கரந்தன் பதியிலுறை சிவபூதநாதேஸ்வரர் ஆலய வரலாறு ஒரு சிறப்பு மிக்க வரலாறு திருக்கரந்தன்பதியெனப்படுவது நீர்வளம் மிக்க நீர்வையூரின் (நீர்வேலி) தென்மேற்குப் பகுதியையும், கோவையூரின் (கோப்பாய்) வடமேற்குப் பகுதியையும், ஊரெழுவின் தென்கிழக்குப் பகுதியையும், உரும்பிராயின் ஈசானதிக்கின் ஒருபகுதியையும் உள்ளடக்கிய தெய்வீகப் பிரதேசமாகும்.

வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் கிணற்று நீர் பாயும் திருக்கரந்தனு}ரின் தென்மேற்குப் பகுதி (நிருதி மூலை) வெள்ளை மணல் நிறைந்த மணற்றிடராகும். இம் மணற்றிடரின் மேற்குப் பகுதி கற்பகச் சோலை நிறைந்த பகுதி. தெற்கு, கிழக்கு, வடக்குப் பகுதிகள் வளம் நிறைந்த தோட்டப்பகுதிகளாகும். மணற்றிடரைச்சூழ திருவாத்தி, கொன்றை, பொன்னொச்சி, பாவட்டை, நிழல்வாகை, போன்றவை செழித்துப் பச்சைப் பசேலெனக் காட்சி அளித்தன.

ஈழ வள நாட்டின் சிகரமாய் விளங்கியது யாழ்ப்பாண வரசு. ஈழவள நாட்டின் பெரும்பாலான பகுதிகளை, பறங்கியர் முதலாய் டச்சுக்காரர் ஆங்கிலேயெரெனக் கூறப்படும் அந்நிய நாட்டவர் பெரும் போர் புரிந்து கைப்பற்றி விட்டனர். சைவமும் தமிழும் தழைத்தோங்கிய யாழ்ப்பாண அரசும் அந்நியப் படைகளின் படையெடுப்பால் வீழ்ச்சியுற்றது. அந்நியர்களின் படையெடுப்பால் சைவசமய மக்களுக்கு பெரியதோர் துன்பம் நேரிட்டது. சமய வழிபாடுகளில் ஈடுபடுவோரைத் துன்புறுத்தினர். கோவில்களின் பூசைமுதலியன நடத்த விடாமல் தடுத்தனர். சைவசமய மக்கள் சிவ விரதங்களைக் கடைப்பிடிப்பது, புராண இதிகாச படனங்கள் படிப்பதுயாவும் யாழ்ப்பாண அரசின் பட்டின பக்கத்தில் முதலில் சீரழியத் தொடங்கியது. இதனால் யாழ்ப்பாணம் பட்டினப்பகுதியில் வாழ்ந்த சைவ சமயிகள் சிலர், இப்போ யாழ்வண்ணை வைத்தீஸ்வரர் ஆலயம் இருக்குமிடத்திலிருந்து வடகிழக்குப் பக்கமாக நகர்ந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஈஸ்வரரின் சிலையையும் தங்களுடன் எடுத்துக் கொண்டு இடம் பெயரத் தொடங்கினர். அரச படைகளின் ஆக்கினைக்குப் பயந்து இடம் பெயர்ந்தவர்கள் தாம் கொண்டுவந்த ஈஸ்வரரின் சிலையை திருக்கரந்தன் பகுதிக்குக் கொண்டுவந்தனர். அங்கே மணற்றிடரில் தங்கியிருந்தனர். ஈஸ்வரரின் சிலையை மேலும் எடுத்துச் செல்லமுடியாத நிலை. வெள்ளை மணற்றிடரில் ஆழமாகத் தோண்டி அதனுள்ளே சிலையை மறைத்து வைத்து மேலும் இடம் பெயர்ந்து விட்டனர். பொன்னொச்சி, வாகை, கொன்றை, திருவாத்தி மரங்களுக்கு மத்தியிலே சுவாமியின் விக்கிரகம் மூடப்பட்டுக் கைவிடப்பட்ட நிலையில் பல காலம் கிடந்தது. வெள்ளை மணற்றிடரின் வடக்கு கிழக்கு தெற்கு ஆகிய மூன்று பகுதிகளிலும் மக்கள் விவசாயம் செய்து வந்தனர். வருகின்றனர். அதிகாலை வேளைகளில் தமது விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்ச விவசாயிகள் வருவர். துலா இறைப்பு, சூத்திர இறைப்பு, என்ற இருவகை நீர்ப்பாய்ச்சல் முறைகளை விவசாயிகள் கையாண்டு வந்தனர். துலா இறைப்புக் காரரும், சூத்திர இறைப்புக் காரரும், தேவாரம், திருவாசகம், போன்றவற்றை விடிய விடிய ஓதிக் கொண்டே இருப்பர். இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால், இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் என்பது போன்று விவசாயிகளின் பண்ணிசை கேட்கும். மணற்றிடருக்குள் புதைந்து மறைந்து கிடக்கும் ஈஸ்வரனின் காதிலும் இவ்வொலிகள் கேட்டே தீரும். ஈஸ்வரர், தான் மணலுக்குள் புதையுண்டு கிடக்கும் தன்மையை விவசாய அடியார்களுக்குக் காட்டுவான் கருதி இராத்திரி காலத்தில் தான் புதையுண்டு இருக்கும் இடத்தில் இருந்து பேரொளியை வீசுவார். தோட்டங்களுக்கு வருகின்ற விவசாயிகள் முதலில் பயந்தனர். நடுங்கினர். காலப்போக்கில் அச்சமின்றி அப் பேரொளியின் உதவியுடன் தங்கள் கடமைகளைச் செய்து வந்தனர். மக்கள் மத்தியில் ஒருவகை பீதி ஏற்பட்டது. இராத்திரி காலங்களில் வெளிச்சம் தெரிவதும், இவ்விடத்தில் காற்று மூசிவீசுவதும், அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. தோட்டங்களுக்கு மணற்றிடற்கரையால் போகும் விவசாயிகளின் முகத்தில் சூறாவளிக்காற்று மணலை அள்ளி வீசும். சூறாவளிக்காற்று மணலை அள்ளி கண்களில் அடிக்கும். காதுகளில் அடிக்கும். மக்கள் இந்நிகழ்வுகளைக் கண்டுகளிக்க கூடுவர். ஒரு நாள் மக்கள் அநேகமனோர் கூடி நின்ற வேளையில், பட்டப்பகலில் வழமையான வெளிச்சம் முதலில் தோன்றியது. சூறாவளிக்காற்றும் தொடர்ந்து மூச்சு விடாமல் வீசியது. திடரின் மேற் புறத்து மணல்கள் சூறாவளியால் அள்ளப்பட்டு சோனாவாரியாக மக்கள் மீது வீசப்பட்டது. மக்கள்அலமலந்து நிற்கின்ற வேளையில் சூறாவளியின் ஓசையும் மிக மோசமாக ஒலித்தது. மணலிற்குள் புதையுண்டு கிடக்கும் ஈஸ்வர விக்கிரகத்தின் தலைப்பாகம் தெரியும் வரை மணல் கிழறுப்பட்டு வெளியே வீசப்பட்டது. இதுவரை காணாத பிரகாசம் ஒன்றைக் கண்டு மக்கள் ஆச்சரியமுற்றனர். சூறாவளியின் வீச்சையும் புறந்தள்ளிவிட்டு, மக்கள்மணற்றிடரில் ஏறினர். பிரகாசமாக ஒளிவிட்டுக் கொண்டு இருக்கும் ஈஸ்வரர் சிலையருகே சென்றனர். ஈஸ்வரரின் சிரசையும் முடியையும் கண்டனர். கண்களினின்றும் ஆனந்த பாஸ்பம் பொழிய கைகள் சிரசின் மேல் குவிய அப்பெருமானின் முடியைக் கண்டு வழிபட்டனர். என்னே அற்புதம்‚ என்னே அற்புதம்‚ என ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ச்சி மேலீட்டால் உரையாடத் தொடங்கினர். நல்ல நாள் பார்த்து சுவாமியை வெளியே எடுக்க வேண்டும் எனக் கலந்தாலோசித்தனர். சூரியன் தனது கிரணங்களினாலே காலையில் எம்பெருமானின் முகத்தில் கொஞ்சி விளையாடுவான். மாலையில் பூரணை சந்திர தண்ணளி நிரம்பிய ஒளிக்கற்றைகளிலே கொஞ்சி மகிழ்வான். காலையில் சூரியனும் சந்திரனும் திருவிளக்கேற்றுவது போன்ற காட்சியும் இறைவனின் பேரொளியும் செறிந்து திருக்கரந்தன் பதியை அலங்காரம் செய்யத் தொடங்கின. திருக்கரந்தன் பதியானது, தேன்கதலி நிறைந்தவூர் வருக்கை நிறைந்த ஊர் மாங்கனி நிறைந்த ஊர் திராட்சை மலிந்த ஊர் நெல், சாமை, வரகு, குரக்கன், பயறு முதலாய தானியங்கள் விளையுமூர். வெங்காயம், மிளகாய், கத்தரி, இராசவள்ளி, கொடிவள்ளி, சிறுவள்ளி, கரட், பீற்றுட், உருளைக்கிழங்கு, போன்றவையும் செழித்து வளர்ந்து சிறந்த சாகுபடியைக் கொடுக்கும் ஊர். ஆன்பால் நிறைந்த ஊர். நீர்வளம், நிலவளம், மிக்க திருக்கரந்தன் பதியில் எம்பெருமானின் திருச்சிலைக்கு ஊரார் உவந்தளித்த ஆன்பாலும் நெய்யும் அரம்பை முதல் முக்கனியும் பஞ்சாமிர்தமாக்கி அபிஷேகம் செய்து திருச்சிலையை மணலுக்குள் இருந்து வெளியேற்றி அதே இடத்தில் வேதாகம விதிப்படியே இடமெடுத்து தேவப்பிரதிஷ்டை செய்தனர். உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த வீரசைவப் பரம்பரையோரின் (பண்டாரப் பரம்பரை) உதவியுடன் மங்களவாத்தியங்கள் முழங்க வேதங்கள் ஒலிக்க தேவப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. எம்பெருமானுக்கு மஞ்சனம் ஆட்டினர். பட்டுப் பீதாம்பரங்களாலே அலங்காரம் செய்தனர். சந்தனச் சுகந்தம் பூசினர். மல்லிகை, முல்லை, புன்னை, பாதிரி, இருவாட்சி, கொன்றை, நொச்சி,செவ்வந்தி, எருக்கு, படர்கொடியறுகு, என்பவற்றால் மனமகிழப் பூசை செய்து து}பதீபங்கள் சுகம் பெறக்கொடுத்து பச்சரிசிப்பொங்கலும் முதிர்மொழிக்கரும்பும் ஆன்பால், மாங்கனி, அழகிய பலாச்சுளை,தேன்கதலிப்பழம், மாதுளங்கனியொடு, தேங்காய், சீனி, தேன், செவ்விளநீர், என்பவற்றையும் மகா நிவேதனத்துடன் நிவேதித்து பூசனை புரிந்து மனமகிழ்ந்தனர். மிகச்சிறிய அளவிலான இடத்தில் பதி கொண்ட எம்பெருமானுடைய கோயில் விஸ்தரிக்கவென கோவையூர் (கோப்பாய்) சபாபதி கண்மணியும் உரும்பிராய் கிழக்கு முத்துரத்தினம் தவமணியும் அதேயூர் கதிரவேலு செல்லத்துரையும் நீர்வேலி தெற்கு தம்பிமுத்து சுந்தரரேஸ்வரனும் மறுபேரும் சேர்ந்து நீங்கியப்புலம் கொத்தம்பை என்ற பகுதிகளில் 17 பரப்புக்காணியை உவந்தளித்துள்ளனர். அன்பர்கள் உவந்தளித்த காணிக்குள் எம்பெருமானின் திருக் கோவில் காலத்துக்காலம் விஸ்தரிக்கப்பட்டு பெருமை மிக்க, அருள்மிக்க, புகழ் மிக்க திருத்தலமாக இன்று விளங்குகின்றது. ஸ்தலவிசேஷம், மூர்த்தி விசேஷம், தீர்த்த விசேஷம் பொருந்திய திருத்தலமாக விளங்குகின்றது. செங்கரும்பையும் வில்லையும் கையில் ஏந்தியவாறு தெங்குலவு சோலைத் திருக்கரந்தன் பதிதனிலே பங்குலவு கோதை மனோன் மணி அம்பிகை பாகராய் எங்கள் பிறப்பறுத்து எங்களையாட் கொள்ளவென எழுந்தருளியிருக்கும் காட்சியொரு கண்கொள்ளாக் காட்சியாகும்.

எம்பெருமானாகிய மனோன்மணி அம்பிகா சமேத சிவ பூதநாதேஸ்வரருக்கு ஆண்டு தோறும் சித்திரைப் பூரணையன்று மகோற்சவம் ஆரம்பமாகி அடுத்து அமாவாசை திதிக்கு முதனாள் தேர்த்திருவிழாவும் அமாவாசையன்று தீர்த்தோற்சவமும் நடைபெறும். மகோற்சவகாலங்களில் மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத கோசங்கள் ஒலிக்க, பண்ணிசைகள் பாடப்பெற்று வெகு விமரிசையாகத் திருவிழாக்கள் நடைபெறும். மகோற்சவ காலங்களில் எம்பெருமான் அம்பிகை சமேதராய் இடபாரூடராய் வீதிவலம் வந்து பயபக்தியுடன் தம்மைத் துதிப்போர்க்கு வேண்டுவான் வேண்டுவனவீந்து அருள் சுரப்பார். மாதங்கள் தோறும் சிறப்பான வேறு பல திருவிழாக்களும் இங்கே நடைபெறுகின்றன.

மனோன்மணி அம்ப்பிகா சமேத சிவ பூதநாதேஸ்வ்வர சுவாமியின் திருவடி சரணம்.

 By – Shutharsan.S

மேலதிக விபரங்களுக்கு www.poothararkovil.com

நன்றி- ஆக்கம்- கா.சி.குமாரசுவாமி,

மூலம்-http://www.eurumpirai.comஇணையம்

Sharing is caring!

Add your review

12345