மாணிக்க தியாகராச பண்டிதர்

அளவெட்டிக் கிராமத்தில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிகளிற் பல பண்டிதர்கள் வாழ்ந்தனர். அவர்களில் முதன் முதலில் பண்டிதர் என்று அழைக்கப்பட்டவர் மாணிக்கத் தியாகராசா அவர்களே. இவருக்கு இப்பட்டம் பரீட்சையெடுத்துப் பெற்றதா அன்றி கௌரவமாக தமிழ்நாட்டு ஆதீனம் ஒன்றால் வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை. எவ்வாறாயினும் மகாலிங்கசிவம் என்பார் பரீட்சையெழுதாத போதும் பண்டிதர் என தகுதி கருதி அழைக்கப்பட்டது போல இவரும் அழைக்கப்பட்டாலும் அப்பட்டத்திற்கு தகுதியானவர் என்பதில் ஐயமில்லை.

அளவெட்டியிலுள்ள வீரசைவர் பரம்பரையில் உதித்தவர் மாணிக்கத்தியாகராசா அவர்கள். இவர் அளவெட்டி தவளக்கிரி முத்துமாரி அம்பாள் பூசகர் மரபில் தோன்றியவர். வீரசைவக்குருவாகவும் மக்களால் மதிக்கப்பட்டவர். முத்துமாரியம்பாள் ஆலயப் பூசகராகவும் பணியாற்றியவர். இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி முதல் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வாழ்ந்தவர். இவர் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் திறமை வாய்ந்தவர். சமயோசிதமாகப் பேசி மக்களைக் கவர்வதிலும் சிலேடை நயம் படப் பேசுவதிலும் வல்லவர். புராணங்களுக்குப் பயன் சொல்வதிலும் மேடைப் பேச்சிலும் கதாப்பிரசங்கத்திலும் கவிகள் இயற்றுவதிலும் வல்லவர்.

இவர் அளவெட்டியிற் பிறந்தவராயினும் தமிழ் நாடு முதலாகப் பல ஊர்களுக்கும் பயணம் செய்தார். தமிழ்நாட்டு ஆதீனங்கள் பலவற்றோடும் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாக அறிகிறோம். தமிழில் இயற்தமிழ் இசைத்தமிழ் இரண்டிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தாரென்பது வெளிப்படை.
பண்டிதரவர்கள் ஒரு முறை ஒரு கோவிலில் திருவாதவூரடிகள் புராணப் படிப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அன்றைய படிப்பு திரு வாதவூரடிகள் புராணத்தில் புத்தரைவாதில் வென்ற சுருக்கமாகும். அப்புராணத்தில் அன்று படிக்கப்பட்ட பாடல்களில் ஒருபாடல்,

“தொக்க நான்மறை சொல்லு நீயிவை சொல்வ தென்கலை மாதராய்
தக்கன் வேள்வியி லுன்றன் நாசி தடிந்த தின்று மறப்பதே
முக்கணானரு ளில்லை யென்றிடு மூகர்நாவை யகன்று நீ
நக்க னார்திரு வாணை யேகென நாமடந்தையு மஞ்சினான்”

இப் பாடல்களை வாசித்தவர் புராணபடன மரபுப்படி செய்யுளை ஒரு தரம் முழுமையாக வாசித்த பின்னர் பிரித்துப் பிரித்துப் பயன் சொல்வதற்கு ஏற்றவாறு வாசித்தார். பண்டிதர் முதலடிக்குப் பயன் சொல்லி முடித்த பின் “தக்கன் வேள்வியிலுன்றன் நாசி தடிந்த தின்று மறப்பதே” என வரும் இரண்டாமடிக்குப் பயன் சொல்லும் போது சிவனை மதித்திடாது தக்கன் செய்த வேள்வியில் அவிப்பாகமுண்ண வந்திருந்த, உன்னுடைய நாசியை வீரபத்திரக் கடவுளானவர் அறுத்துத் தள்ளியதை இன்று மறந்து போனாயோ என்று பொருள் கூறிவிட்டு தக்கன் வேள்வி பற்றி சொல்ல ஆரம்பித்துத் தக்கனுடைய வேள்வியைப் பற்றி கந்தபுராண ஆசிரியர் கச்சியப்ப சிவச்சாரியார் சொல்லிய வாறு வரலாறு முழுவதையும் வாசித்தவர் வாசித்த இராகத்தில் தெளிவாகச் சொல்லி முடிக்க அரைமணித்தியாலத்துக்கு மேலெடுத்தது. புராண படனத்தை கேட்டவர்கள் செவிவாயாக நெஞ்சுகளுக்கு கேட்டவை விடாதுரைத்த முழுவதையும் இரசித்தனர். மூன்றாம் அடி வரையும் பயன் சொல்லி முடித்தபின் கடைசியடிக்குப் பொருள் விரித்த போது மக்கள் உணர்ச்சிவசப்படக் கூடியதாகவிருந்தது.

திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் அறிஞர் அண்ணா ஒருமுறை தங்கள் கூட்ட மென்றில் “மாதமோ சித்திரை நேரமோ பத்தரை மக்களோ நித்திரை மக்கள் அமருமிடமோ புற்றரை” என்று கூறியதாக ஒரு கதையுண்டு. ஆனால் தி.மு.க தலைவர் கூறியதற்குப் பல ஆண்டுகளின் முன்னே இவ்வார்த்தைகளைச் சொன்னவர் மாணிக்கத்தியாகராசா பண்டிதர் என்பது எமக்குத் தெரியும். இது உண்மை வெறும் புகழ்ச்சியல்ல என்பதை உறுதியாகக் கூறமுடியும். பண்டிதர் அவர்கள் இந்த மொழிகளைப் பயன்படுத்திய சந்தர்ப்பத்தையும் இங்கு கூற விரும்புகிறோம். அளவெட்டி சைவ வாலிபசங்கம் ஆயிரத்துத்தொளா யிரத்து முப்பதுகள் தொடங்கி வருடாவருடம் ஆண்டுப் பொதுக்கூட்டங்களைச் சித்திரை மாதத்தில் விமரிசையாக நடத்திவருவது அக்காலத்திலிருந்த அளவெட்டி மக்களுக்கு நன்கு தெரியும். ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தாறாமாண்டுப் பொதுக் கூட்டம் யாழ்.மாவட்ட வித்தியாதிகாரி சதாசிவ ஐயர் தலைமையில் அளவெட்டி ஆங்கில வித்தியாசாலையில் நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் அளவெட்டியில் அன்று சிறப்புற்றிருந்த நான்கு சைவப்பாடசாலை மாணவர்களதும் இசை, நடன, நாடக நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அதன்மேல் கீழ்ப் பிரிவு முதல் சிரேஷ்ட தராதரப் பத்திர வகுப்பு வரையுள்ள மாணவர்களிடையே சங்கம் நடாத்திய பரீட்சையில் திறமை காட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. அதன்மேல் சைவப் பெரியார்களின் சொற்பொழிவுகள் இடம்பெற்றன. மாணிக்கத் தியாகராசாப் பண்டிதரும் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டிருந்தார். அவருடைய பேச்சைக் கேட்க மக்கள் காத்திருப்பார்கள் என்பதால் நிகழ்ச்சி நிரலில் அவரே கடைசிப் பேச்சாளராக இருந்தார். அவர் பேச்சுக்கு அழைக்கப்பட்டு மேடையில் தோன்றினார். நேரம் அப்போது பத்தரை மணியாகவிருந்தது. அவர் மேடை யிலிருந்த மணிக்கூட்டைப் பார்த்து விட்டுக் கூறிய வார்த்தைகள் இவை. மாதமோ சித்திரை நேரமோ பத்தரை சிறுவர்கள் நித்திரை என்பனவே சபை வணக்கத்தின் பின் அவர் பேசிய வார்த்தைகள். இவ் வார்த்தைகளை அவர் கூறிமுடித்தபோது சபையினரின் கைதட்டல் மண்டபத்தை அதிரவைத்தது. நித்திரையாயிருந்த சிறுவர்கள் பலர் கண் விழித்து எழுந்தனர். பின்பு பண்டிதர் தமது பேச்சை ஆரம்பித்தார். அவரது பேச்சு நகைச்சுவையாக அமைந்திருந்தது.

ஒரு முறை பண்டிதர் புராண படனமொன்றிற் பங்குபற்ற ஒரு ஆலயத்துக்கு வந்திருந்தார். அவர் இடையிடையே இருமிக் கொண்டிருந்ததை அவதானித்த உபயகாரர் பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்று கற்கண்டு வாங்கி வந்து அவர் முன் வைத்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த புராணம் வாசிப்பவர் ஒருவர் தமக்கு கற்கண்டு தரும்படி பண்டிதரைக் கேட்டார். பண்டிதர் அப்போது உங்கள் சொற்கண்டு தான் கற்கண்டு தரவிருந்தேன் என்று கூறினார். இது கற்கண்டு கேட்டவரையே சிரிக்க வைத்தது.

இவர் தமிழ்நாட்டு ஆதீனங்கள் பலவற்றோடு நெருங்கிய தொடர்புடையவராக இருந்தார். அவர் அடிக்கடி அங்கு சென்று மடாதிபதிகளுடன் சமயம் தொடர்பில் கலந்துரையாடுவது வழக்கம். இவர் பல நூல்கள் எழுதியதாக அறிந்தோர் கூறுவர். சிலேடை வெண்பா என்பது ஒன்றையன்றி மற்றையவை பெயர் கூட எமக்கு கிடைக்கவில்லை.

நன்றி- அளவெட்டி இணையம்

Sharing is caring!

Add your review

12345