மாவிட்டபுரம் கந்தசாமி கோயில்

மாவிட்டபுரம் கந்தசாமி கோயில்


ஏழாம் நூற்றாண்டில், தென்னகத்து இளவரசி மாருதப்புரவீகவல்லி தனது குன்ம நோயையும் குதிரைமுகத்தையும் நீக்கக் கீரிமலைப் புண்ணிய தீர்த்தத்திலே நீராடி, மாவிட்டபுரத்தில் கோவில் கொண்டருளியிருக்கும் முருகப்பெருமானை வழிபட்டுத் தனது குன்ம நோயையும், தனக்கேற்பட்ட பெருங்குறையையும் நீக்கிய தீரத்தலமே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலாகும். ஆதலால் இவ்விடத்திற்கு: “துரகானன விமோசனபுரி” என்ற பெயர் ஏற்பட்டது. இதுவே தமிழில் மா விட்ட புரம் ஆகும். இவ்வாலயம் சிறந்த முறையிற் கட்டப்பட்டு இதற்கான விக்கிரகங்கள் சிதம்பரத்திலே தில்லைமூவாயிரவருள் ஒருவரான பெரிய மனத்துள்ளார் அவர்களால் இலங்கைக்கு வருவிக்கப்பட்டது. “காங்கேயன்” விக்கிரகம் வந்திறங்கியமையால் “காங்கேசன்துறை” என்ற காரணப் பெயரும் துறைமுகத்திற்கு ஏற்படலாயிற்று. விக்கிரகங்கள் உரிய முறையிலே பிரதிஷ்டை செய்யப்பட்டு கி.பி 1795 ஆம் ஆண்டு ஆனி உத்தர நட்சத்திரத்தில் மகாகும்பாபிஷேகம் சிறப்புற இடம்பெற்றது. இத் தீஷிதர் பரம்பரையினரே இன்றும் இவ்வாலயத்தின் சகல கருமங்களையும் செய்து வருகின்றனர். மாவிட்டபுரம், கந்தசுவாமி கோவிலில் தைப்பூசத்தை இறுதியாகக் கொண்டு லஷ்சார்ச்சனை நடைபெறுகின்றது. காலையில் நடைபெறும் அர்ச்சனையின் போது கல்லூரி மாணவர்கள் திருப்புகழ் அஞ்சலி செய்கின்றனர். மாலையில் அர்ச்சனையின் போது நாதாஞ்சலி இடம்பெறுகின்றது. இறுதிநாள் அன்று சகஸ்ரீ;ர சங்காபிஷேகமும், ஷண்முகர் நடனமும் இடம்பெற்று, தேவியருடன் ஸ்ரீஷண்முகர் தேர் மீதமர்ந்து பவனி வருவார். மகோற்சவம் ஆடி அமாவாசையை அந்தமாகக் கொண்டு 25 தினங்களுக்கு இடம்பெறுகின்றது. இதிலே 5 ஆம் திருவிழா ஸ்ரீஷண்முகர் நடனமும், சப்பரத் திருவிழாவிலே பிரமாண்டமான சப்பறமும் தேர்த்திருவிழாவிலே 5 தேர்களில் சுவாமி வீதி வலம் வருதலும் கண்கொள்ளாக்காட்சியாக அமைவது குறிப்பிடக் கூடியதொன்று கந்தசஷ்;டி யாகத்துடன் கூடியது. சூரன் போர் புரியுங்காட்சி மிகச் சிறப்பானது. இங்கு நித்திய பூசைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. சுக்கிர வார உற்சவம், மாத உற்சவம் ஆகியனவும் உண்டு. கொடித் தம்பம் வெள்ளியினாலானது. கந்தபுராணத்திற் கூறப்படும் “இந்திர மயில்” இங்கு வாகனமாக உள்ளது. தலவிருட்சம் “காஞ்சி மா” ஆகும். ஆலயத்தின் மேற்குக் கோபுர வாசலில் புராதன ராஐகோபுரம் வானளாவி நிற்கின்றது. இங்கு மூன்று வீதிகள் உள. புராணபடனம் ஆண்டு தோறும் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

Sharing is caring!

Add your review

12345