மாவிலித்துறைமுகம்
மாவிலித்துறைமுகத்துக்கு மாவிலி என்ற பெயர் வந்ததற்குப் பல கதைகள் கூறப்படுகின்றன. மாவிலி என பெயர் வரக்காரணம் தென் இந்திய அரசன் மாவல்லவன் இத்தீவை ஆண்டதாகவும் அதனால் மாவல்லபுர மக்கள் இத்துறைமுகத்தை மாவிலி என அழைத்ததாகவும் ஒரு கர்ணபரம்பரைக் கதைகள் உண்டு. ஒல்லாந்தர் நெடுந்தீவை ஆட்சி செய்த காலத்தில் இத்துறைமுகம் மூலமாகவே குதிரைகளை இறக்கி ஏற்றினார்கள். மா என்ற சொல்லுக்கு குதிரை, பெரிய என்ற அர்த்தங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆகவே குதிரைகள் ஏற்றி இறக்கியதனாலேயே மாவிலி என்ற பெயர் உண்டாயிற்று என்பதே உண்மையான காரணமாகும். இத்துறைமுகமே இன்று நெடுந்தீவு மக்கள் ஏனைய தீவுகளுக்கும், யாழ்ப்பாணக்குடா நாட்டிற்கும் கடல் மூலம் பிரயாணஞ் செய்யப் பயன்படும் பிரதான துறைமுகமாகவும் விளங்குகின்றது. இது ஏறைக்குறைய 300 அடி நீளமும் 75 அடி அகலமும் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது. பிரயாணிகள் இறங்கவும் பொருட்களை இறக்கவும், பொருட்களை ஏற்றவும் கொங்கிறீற்ரினால் கட்டப்பட்ட துறை ஒன்று உள்ளது.