முத்தமிழ்க் குருமணி சோமாஸ்கந்த சர்மா

ஆதித் தமிழனால் உருவாக்கப்பட்ட அழகுக் கலைகளுள் வில்லிசையும் ஒன்றாகும். முத்தமிழின் அனைத்துக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டும் விளங்கும் இந்த கலையானது ஈழத்தமிழரின் மரபுக் கலையாகப் போற்றப்பட்டும் பேணப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்ததே. கதை சொல்லும் முறையைக் கருவாகக் கொண்ட இந்த ஆற்றுகை வடிவமானது, ஈழத்தின் சைவாலயத் திருவிழாக்களில் முக்கிய இடம் பிடித்துள்ளதுடன் பொது மக்களால் பெரிதும் விரும்பப்படும் கலையாகவும் இருந்து வருகின்றது.
ஈழத்தின் வில்லிசைத் துறையில் முதுகலைஞராகவும் கவிதை, சித்திரம், சிற்பம், ஜோதிடம், வேதம், நாடகம் போன்ற அனைத்திலும் வல்லவராகவும் ஆகமத் துறையில் ஆய்வாளராகவும் ஆலோசகராகவும் இந்து சமயக் குருத்துவத் துறையில் ஆழமான அறிவுடையவராகவும் கடந்த பல ஆண்டுகளாகக் கலைப்பணியாற்றி வருபவர் கலைமாமணி ச.சோமாஸ்கந்த சர்மா அமரத்துவம் அடைந்த சாம்பசிவக் குருக்கள் – செல்லம்மாள் தம்பதியரின் மகனாக 02.06.1955 இல் நல்லூரில் இவர் பிறந்தார். செங்குந்த இந்துக் கல்லூரி, நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலை, கனகரட்ணம் மகா வித்தியாலயம், பரமெஸ்வராக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றவர்.
தனது பள்ளிப் பருவத்திலேயே நல்லை ஆதினத்தில் இரண்டு ஆண்டுகள் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைக் கற்று சைவசித்தாந்த வித்தகர் என்னும் பட்டத்தையும் தமிழிலே பாலபண்டிதர் பட்டத்தையும் நல்லை கணபதீஸ்வரர் குருகுலத்தில் சமஸ்கிருத பாலபண்டிதர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டவர்.
இயற்கையாகவே இசைஞானம் கொண்டிருந்த இவர் நாட்டியக் கலைஞர் லீலா நாராயணனிடம் பரத நாட்டியத்தைக் கற்றுக்கொண்டதுடன் நடிகமணி வி.வி.வைரமுத்துவிடம் இசைநாடகப் பாடல்களையும் கற்றுக் கொண்டார். கலைத் துறையில் சிறு வயதிலேயே அதிக நாட்டம் கொண்டிருந்த இவர் தனது 15வது வயதில் கலைமேதை சு.கணேசசுந்தரத்தின் வில்லிசைக் குழுவில் உடுக்கிசையாளராகவும் கடம் வாசிப்பவராகவும் பல வழிகளிலும் தனது பங்களிப்புக்களை வழங்கி வந்தார்.
1974இல் யாழ்ப்பாணம் ஆயுள்வேதக் கல்லூரி மாணவர்களுக்கு வில்லிசையைப் பயிற்றுவிப்பதற்காகச் சென்றபோது அம்மாணவர்கள் இவரையே வில்லிசையின் தலைவராக்கி சரஸ்வதி பூசை தினத்தன்று நிகழ்வை அரங்கேற்றினர். அன்றைய தினம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்ட இவர் வில்லிசைத் துறையில் தன்னை மேலும் வளர்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.
அந்தக் காலத்தில் வில்லிசைக் கலையின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த க.நா.கணபதிப்பிள்ளை சின்னமணியின் வில்லிசை நிகழ்வுகள் நடைபெறும் இடமெல்லாம் செனறு மக்களால் விரும்பப்படும் வில்லிசை ஆற்றுகை முறையைத் தெரிந்து கொண்டார்.அத்துடன் சின்னமணியின் வில்லிசை ஒலிப்பதிவுகளையும் ஏராளமாகக் கேட்டு அக்கலைக்குரிய தனித்துவப் பண்புகளைத் தெரிந்து கொண்டதுடன் திறன் கொண்ட வில்லிசைக் கலைஞனாகத் தன்னை வளப்படுத்திக் கொண்டார்.
ஸ்ரீதேவி வில்லிசைக் குழு என்னும் பெயரில் புதிதாகக் குழு அமைத்துத் தனது வில்லிசை ஊடான சமயப் பணியை ஆற்ற தொடங்கினார். புராண இதிகாச வரலாறுகள் அனைத்தையும் தௌ்ளு தமிழில் வில்லிசையில் ஆற்றுப்படுத்தி வந்த இவரது நிகழ்வுகள் ஈழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்புடன் மேடையேற்றம் கண்டது.
பெரிய புராணம், கந்த புராணம் இராமாயணம் போன்ற வரலாறுகளையும் மறைந்த சமூக சேவையாளர்களான பெரியோர்களின் வாழ்கை வரலாறுகளையும் இசைத்துறையின் வாக்கேயக்காரர்களின் வரலாறுகளையும் வில்லிசையாக நிகழ்த்துவதில் பேராற்றல் கொண்ட இவர் தனது வில்லிசைக்குரிய பாடல்கள், வசனங்கள், நகைச்சுவைகள் போன்றவற்றைச் சுயமாக உருவாக்கும் திறன் கொண்டவராகவும் காணப்படுகின்றார்.
இலங்கை வானொலியிலும் ரூபவாகினியிலும் பல ஒலிப்பதிவுகளை வழங்கியதுடன் நாடக மேடைப் பாடல்கள் என்னும் நிகழ்வில் கலந்து கொண்ட இக்கலைஞர் 1997இல் மலேசியா சென்று அங்கும் பல வில்லிசை நிகழ்வுகளை வழங்கியவர். தற்போது கனடாவில் வசித்து வரும் இவா் அங்கே கலைப்பணியுடன் சமய பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். குகார கணபதி சகஸ்ரநாமம், பத்திரகாளி மண்டப பூஜா, ஆகமச் சித்திரங்கள் என்னும் பயன் தரவல்ல சைவசமயத் துறைசார்ந்த ஆய்வு நூல்கள் இவரால் வெளியிடப்பட்டுள்ளன.
“வில்லிசைத் துறையில் ஈடுபட வேண்டும் என்னும் துடிப்போடு இருந்த எனது இளவயதுக் காலத்தில் கலாவினோதன் சின்னமணி இண்ணரின் வில்லிசை நிகழ்வுகளால் கவரப்பட்டு அதனால் ஏற்பட்ட ஆசையால் என்னையும் ஒரு வில்லிசைக் கலைஞனாக உருவாக்கிக் கொண்டேன். ஏனைய வில்லிசையாளர்களில் இருந்து வேறுபட்டுத் தனித்துவ பண்போடு ஒப்பற்ற கலைஞனாக இருந்த அவரை எனது மானசீகக் குருவாகக் கொண்டு இத்துறையில் ஈடுபட்டேன்.
எனது முயற்சி பெரு வெற்றியை தந்தது. 1974இல் இருந்து 1995 வரை ஈழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சமய வரலாறுகளையும் இதிகாசக் கதைகளையும் வில்லிசை ஊடாக முத்தமிழ் கமழ ஆற்றுகைப்படுத்திய இனிமையான காலங்களை என்றும் மறந்து விட முடியாது. சுமயத்தையும் ஆன்மீகத்தையும் வளர்க்கக் கூடிய நிகழ்வுகளாக வில்லிசை இசைநாடகம் போன்ற கலைகள் அக்காலத்தில் மதிக்கப்பட்டதால் திருவிழா காலஙகளில் நாம் ஓய்வற்ற கலைஞர்களாளவே மன மகிழ்வுடன் கலைத் தொண்டாற்றினோம்.
ஆனால் தற்காலத்தில் எமது ஆலயங்களின் திருவிழா கொண்டாட்டங்கள் தலை கீழாக மாறி விட்டன. எமது ஆலயங்கள் புனிதமான ஆன்மீகத் தலங்கள் என்பதை மறந்தவர்களாகவே தற்கால இளைஞர்களும் ஆலய நிர்வாகிகளும் காணப்படுகின்றன. தென்னிந்திய திரையிசைப் பாடல் நிகழ்வுகள் பல இலட்சம் ரூபா செலவில் நடத்தப்படுவதையும் குழு மோதல்கள் இடம்பெறுவதையுமே தற்காலத் திருவிழாக்களில் காணக்கூடியதாக உள்ளது.
பண்பாட்டுச் சீரழிவுகளை ஏற்படுத்த வல்ல தென்னிந்தியச் சினிமாப் பாடல்கள் ஆலயங்களில் இசைக்கப்படுவதைத் தடை செய்து தமிழ்க்கலைகள் வளர்க்கப்படுகின்ற தளங்களாக எமது ஆலயங்கள் மாற்றப்பட வேண்டும்” எனத் தனது கருத்துக்களை இவர் உறுதியுடன் கூறுகின்றார்.

Sharing is caring!

Add your review

12345