முத்தமிழ்ப் புலவர் நல்லதம்பி

கொழும்பு சாகிராக் கல்லூரியிலே தலைமைத் தமிழ் ஆசிரியராக இருபத்தெட்டு ஆண்டுகள் இருந்து இலங்கை முஸ்லீம் மக்கள் மத்தியிலே தமிழ் ஆர்வத்தை வளர்த்தவர் ஆங்கில நாகரிகத்தில் அக்காலத்தில் திளைத்த கொழும்புத் தமிழரிடையே தமிழ் உணர்ச்சியை ஊட்டியவர். முதுதமிழ்ப்புலவர் நல்லதம்பியெனின் அது மிகையன்று இலங்கையிலே இஸ்லாமிய இலக்கியங்களைப் பற்றியும், அவற்றின் தத்துவங்களைப்பற்றியும் அறிந்த தமிழ்மகன் அவர்தான். சிறுவருக்கேற்ற இனிய எளிய பாடல்கள் இயற்றுவதில் ஆற்றல் வாய்ந்தவர். புலவரவர்கள் இலங்கை சுதந்திர விழாவினை முன்னிட்டு நடைபெற்ற ‘மரதன்’ தமிழ்ப் பாடற் போட்டியிலே முதற்பரிசு பெற்றமை  அவரது புகழை உயர்த்தியது. தாகூர் காணும் தோட்டி, ஆய்அரண்டுனும் ஓடைகிழாரும், பாவலன் பாரதி, சீதனச்சிந்து, பொன்பெற்ற துறவி முதலிய அவரது கவிதைகள் பிரசித்தமானவை. சங்க நூலாராட்சி கைவரப்பெற்ற இப்பெரியார் இலங்கை பல்கலைக்கழகத்திலே சிறிது காலம் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். அவர் எழுதிய கவிதைக் கடிதங்கள் மிகச்சுவையுள்ளன. சிறார் உளப்பாங்கிற்கேற்ப அவர் எழுதிய ‘ஈழவாசக’ வாசிப்புப் புத்தகங்களும், மொழிப்பயிற்சி நூல்களும் உயர்தரமானவை. இவருடைய ஆற்றலை தென்னிந்தியாவும் இலங்கையும் போற்றிக் கௌரவித்தது. பரந்த நோக்கமும் உயர்ந்த இலட்சியமும் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்ந்த நல்லதம்மிப் பாவலன் எல்லோரதும் இனிய நண்பர். நன்றி மறவாத நல்லியல்புடையவர், வெகு அடக்கமானவர். சொற்களைக் கொண்டு அம்மானை ஆடும் இக்காலக் கவிதை உலகைப் பார்க்கும் போது அவர் நினைவு தமிழ் பேசும் மக்களிடையே உதித்தே தீரும்.

Sharing is caring!

Add your review

12345