மோகனதாஸ் சனசமூக நிலையம்

மோகனதாஸ் சன சமூக நிலையம் ஆனது சிறுவர் பாதுகாப்பு இலங்கை எனும் நிறுவனத்தின் பூரண நிதி உதவியுடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட சன சமூக நிலைய கட்டடத் திறப்பு விழாவினை சிறப்பிக்கும் வகையில் ஒரு சிறப்பு மலரினை வெளியிடப்பட்டது. அம்மலரின் ஒரு அங்கமாக நிலையம் சார்ந்த வரலாறு என்பது காணப்படுகிறது. எந்தவொரு நீண்டநாள் நோக்கிய செயற்பாட்டுக்கும் ஒரு வரலாறு காணப்படுவது இயல்பானதே. அந்த வகையில் இந்த நிலையத்துக்கும் ஒரு நீண்ட வரலாறு காணப்படுகிறது.

கடந்த 2000ம் ஆண்டு தென்மராட்சியில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக சன சமூக நிலையக் கட்டடம், அதனுள் இருந்த சொத்துக்கள், ஆவணங்கள், பதிவேடுகள் என்பவை முழுமையாக அழிவடைந்தது. இதனால் நிலையத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களிடமிருந்து அவர்களின் ஞாபகப் பதிவுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஓர் ஆவணமாகவே இவ்வரலாறு அமைகிறது.

இச் சனசமூக நிலையத்தின் தோற்றத்தை நோக்குவோமானால் அது பல தலைமுறைகளிற்கு முன்னுள்ளவர்களின் சிந்தனைகள், பின்னைய தலைமுறைகளினூடாக செயல் வடிவம் பெற்றதனைக் காணக்கூடியதாகவுள்ளது.
இங்கு ஆரம்ப காலங்களை நோக்கினால் சமூக, பொருளாதார, கலாச்சார விழுமியங்களில் சமூகம் வளர்ச்சியடையாது மிகவும் பின் தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. இதனால் சமூகங்களிடையே ஏற்றத்தாழ்வுகளும் முரண்பாடுகளும் இயல்பாகவே காணப்பட்டது. ஒரு சமூகம் அனுபவிக்கும் வசதிகள் வாய்ப்புக்கள் பிறிதொரு சமூகத்துக்கு மறுக்கப்பட்டிருந்தது. இதனால் இப்பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் என்ற அவா ஒவ்வொருவர் மனதிலும் தோன்றியிருந்தது. இதே காலப்பகுதியில், ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு எந்த வகையிலும் குறைந்தவனல்ல, பொது வாழ்வில் ஈடுபடும் மனிதன் எந்தவொரு வகையிலும் பிறிதொருவனுடன் வேறுபடுத்திப் பார்க்கக் கூடியவன் அல்ல எனும் காந்திய சிந்தனைகளின் தாக்கங்களும் வலுப்பெற மூதாதையர்கள் மத்தியில் தமக்கென ஒரு சன சமூக நிலையம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் தமக்குள்ள பிரச்சனைகள் தீர்க்கப்பட வழியேற்படும் எனவும் அவர்கள் கருதினார்கள். அவ்வாறு சிந்தித்த முன்னோடிகளாக அமரர்கள் வேலன், சிவலையர், இளையவன் போன்ற பலர் காணப்படுகின்றனர். இவர்களின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தவர்களாக இவர்களிற்குப் பின்னர் உருவான தலைமுறை காணப்படுகிறது. இவர்கள் தான் சன சமூக நிலையத்தினை ஒரு அமைப்பு வடிவில் நிறுவி அதனை ஆரம்பித்து வைத்தார்கள். இதில் அமரர்கள் வே. சின்னத்தம்பி, சி. சின்னையா, ஆ.பொன்னர், க. வேலுப்பிள்ளை, க. தம்பு, சி. சின்னத்தம்பி உட்பட வேறுபலரும் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர். நிலையத்தை உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அதற்கான ஒரு அமைவிடம் தேவைப்பட்டது. நிலையம் அமைப்பதற்கான ஒரு காணி அமரர் ஆ. பொன்னர் என்பவரால் இலவசமாக நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வு சன சமூக நிலைய வரலாற்றில் ஒரு முக்கிய முதன்மை பெறும் நிகழ்வாக அமைகிறது.

இவ்வாறு கிடைக்கப்பட்ட காணியில் 1948ஆம் ஆண்டு முதன் முதலாக ஒரு ஓலைக்குடிசை வடிவில் சன சமூக நிலையம் உருவானது. அவ்வாறு உருவாக்கப்பட்ட சன சமூக நிலையத்திற்கு மோகனதாஸ் சன சமூக நிலையம் என்ற பெயர் சூட்டப்பட்டது. அத்துடன் நிலையத்தின் முதல் தலைவராக அமரர் திரு. சி. சின்னையா என்பவரும் முதலாவது செயலாளராக அமரர் திரு.நா.செல்லன் என்பவரும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுடன் தெரிவு செய்யப்பட்டு சன சமூக நிலையம் இயங்கத் தொடங்கியது.

அக்காலப்பகுதியில் இவர்கள் சமூகத்தில் ஒற்றுமை ஐக்கியத்தினை ஏற்படுத்தல், சமூகத்தை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்ல முயற்சித்தல், மக்களுக்கிடையிலான பிணக்குகளைச் சமரசம் செய்தல், மற்றும் வாசகர்களின் பாவனைக்கான பத்திரிகைகள் சஞ்சிகைகளை பாவனைக்கு வைத்தல் போன்ற வழிகளில் செயற்பட்டதுடன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சமூகம் சார்ந்த செயற்பாடுகளிலும் தம்மை ஈடுபடுத்தியுள்ளனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட நிலையம் அன்றிலிருந்து இன்று வரைக்கும் காலத்துக்குக் காலம் புதிது புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகங்களின் கீழ் அவ்வப்போது காணப்படும் வசதி வாய்ப்புக்கள் சமூக பொருளாதார, அரசியல், கலாச்சார சூழ்நிலைக்கேற்ப செயற்பட்டுக்கொண்டு வருகின்றது.

தொடர்ந்து நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டு அமரர் திரு க. தம்பு தலைவராக இருந்த காலப்பகுதியில் நிலையத்துக்கென இரு அறைகளும் இரு விறாந்தைகளும் கொண்டதான ஒரு நிரந்தரக் கட்டடம் அமைக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில் நிருவாகத்தினரும் இளைஞர்களும் முழுமூச்சுடன் செயற்பட்டனர். இவர்களின் பிற்பாடு நிர்வாகத்தில் பங்கு பற்றியவர்களாக அமரர்கள் க. தவசிப்பிள்ளை. ஜே.பி, க. கிருஷ்ணபிள்ளை, வே. முருகேசு, மு. வேலுப்பிள்ளை, மு. செல்லத்துரை, க.தேவராசா, க.சி. கந்தையா மற்றும் வேறு பலரும் முக்கியம் பெறுகிறார்கள். இவர்களது காலப்பகுதியில் தான்
1) அகில இலங்கை சிறுபான்மைத்தமிழர் மகாசபையின் ஆலோசனையின் பெயரில் கிராமத்துக்கென ஒரு பாடசாலை உருவாக்கப்பட்டு இக் கிராமத்தில் கல்வி கற்றுவிட்டு இருந்த இளைஞர் யுவதிகளை ஆசிரியர்களாக நியமித்து இக் கிராமத்துக்கு கல்விச்சேவை வழங்கப்பட்டது. இப்பாடசாலை இன்று மட்டுவில் வடக்கு அ.த.க.பாடசாலை என்ற பெயரில் இயங்கி வருகின்றது. இதில் கல்வி கற்பித்த ஆசிரியர்கள் பிற்காலத்தில் அரசாங்கப்பாடசாலை ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டார்கள். இவ்வாறு வழங்கப்பட்ட இக்கல்விச்சேவை அக்காலத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த சமுதாயத்தை ஒரு வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்ல மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
2)இக் கிராமத்துக்கு ப.நோ.கூ.சங்க கிளைக்கடை ஒன்று 1962ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பொருளாதார ரீதியில் நலிவடைந்திருந்ததுடன் நகரத்திலிருந்து விலகியிருந்த இக் கிராம மக்களுக்கு இச்சங்கக்கடை மூலம் பெறுமதி மிக்க பலசேவைகள் கிடைக்கப்பெற்றன.

இந்த நிலையக்கட்டடத்தை விஸ்தரிப்பதற்கான அத்திவாரம் இவர்களால் இடப்பட்டு எதிர்காலத்தில் கட்டட விஸ்தரிப்புக்கு அடிகோலப்பட்டது. மேற்குறிப்பபிட்டவர்களில் அமரர் திரு. க. தவசிப்பிள்ளை என்பவரின் சிறப்பான செயற்பாடுகளின் காரணமாக மகாசபையின் சிபார்சுக்கமைய நீதியமைச்சினால் யாழ்மாவட்ட சமாதான நீதவான் எனும் கௌரவப்பதவி வழங்கப்பட்டது.

நிலைய நிர்வாகத்தின் கால ஓட்டத்தில் அக்காலப்பகுதியில் இளைஞர்களாக இருந்தோர் புதிதாக இணைந்துகொண்டனர். திருவாளர்கள் க. சுப்பையா, சி. சங்கரப்பிள்ளை, சி. சண்முகம். மு. நடேசன், ப. கிருஷ்ணன், சி. நடராசா, வெ. ஜேசுதாசன், க. கண்மணி, வெ. அல்பிரட், க. மார்க்கண்டு, வே. விநாயகமூர்த்தி, சி. இராசையா, வே. கிருஷ்ணன் போன்றோர் விளங்குகின்றனர். இவர்களுக்குப் பக்கபலமாக இன்னும் பலர் காணப்பட்டனர். இவர்களின் காலத்தில் தான்
1) நிலையக்கட்டடம் பூரணமாகக் கட்டி முடிக்கப்பட்டது. இதற்காக இவர்கள் இரவு பகல் பார்க்காது நீண்ட நாட்களாக நிலையத்துக்காக சிரமதான அடிப்படையில் வேலைகளைச் செய்து கிணறு வெட்டுதல், காடு வெட்டுதல், அருவிவெட்டுதல் மூலம் கிடைத்த நிதியைக் கொண்டு கட்டடத்தைப் பூர்த்தி செய்தார்கள். இவ்வாறு கட்டப்பட்ட நிலையக்கட்டடம் 1996ஆம் ஆண்டு ஆவணிமாதம் 28ம்திகதி அப்போதைய யாழ்மாவட்ட அரச அதிபராக இருந்த திரு வேர்ணன் அபயசேகரா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
2) இச் சன சமூக நிலையத்துக்கென ஏறக்குறைய 40பரப்பு விஸ்தீரணமுள்ள ஒரு விளையாடடு மைதானம் நீண்ட நாட்கள் சிரமதானத்தின் மூலம் துப்பரவு செய்ப்பட்டு பல்வேறு சட்டச்சிக்கல்களை எதிர்கொண்டு உருவாக்கப்பட்டது. மோகனதாஸ் விளையாட்டுக்கழகம் என்ற பெயர் யாழ்மாவட்டடத்தில் பிரசித்தி பெறுவதற்கு இம்மைதானமே வழிகோலியது.
3) இக்காலப்பகுதியில் தான் இந்த நிலையம் நூல் நிலையம் , விளையாட்டுக்கழகம், கலைக்கழகம் என மூன்று துறைரீதியாகப் பிரிக்கப்பட்டு செயற்படத்தொடங்கியது.. இவ்வாறு மூன்று துறைகளும் செயற்பட்டமைக்காக யாழ்மாவட்டத்தில் சிறந்த சன சமூக நிலையமாக உள்ளூராட்சி ஆணையாளரால் தெரிவு செய்யப்பட்டு அப்போது இலங்கைப்பிரதமராக இருந்த திரு டட்லி சேனநாயக்காவினால் கௌரவிக்கப்பட்டு ஒரு யுனிக் வானொலிப்பெட்டி அப்போது நிலையத்தலைவராக இருந்த திரு வே. கிருஷ்ணன் எனபவரிடம் கொழும்பில் வைத்துக் கையளிக்கப்பட்டது. தொடர்பு சாதனத்துறை பெரிதும் வளர்ச்சியடையாத அக்காலப்பகுதியில் இவ்வானொலி நிலையத்திற்கும் மக்களிற்கும் பயனுள்ளதாக அமைந்தது.

மோகனதாஸ் நூல்நிலையம்
இந்த நிலையம் சார்ந்த பிரதேசம் பாமரமக்கள் அதிகம் கொண்ட கிராமப்புறமாகக் காணப்பட்டதால் அங்கு கல்வி அறிவு என்பது பெரிதாக வளர்ச்சியடைந்திருக்கவில்லை. இந்த நிலையில் மக்களின் வாசிப்புப் பழக்கத்தை தூண்டுதல், சிந்திக்கும் ஆற்றலை வளர்த்தல், பகுத்தறிவுத்தன்மையை வளர்த்தல் போன்றவற்றுக்கான நூல்நிலையம் காலாகாலமாக செயல்பட்டு வந்துள்ளது. இதற்காக,
1) நாளந்த பத்திரிகைகள், வாரந்த மாதாந்த சஞ்சிகைகள் போன்றவற்றை வழங்குதல்
2) பிரபலமான எழுத்தாளர்கள், அதிபர்கள், பல்துறை சார்ந்த நிபுணர்களை வரவழைத்து கருத்தரங்குகளை நடாத்துதல்
போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டது.

மோகனதாஸ் கலைக்கழகம்
இப் பிரதேசத்தில் கலைகளை வளர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இதற்காக பயிற்றுவிப்பாளர்களை வெளிப்பிதேசங்களிலிருந்து வரவழைத்து பயிற்சிகளை வழங்கல், சங்கீத வகுப்புக்களை நடாத்துதல், மாதாந்த கருத்தரங்கின் போது இறுதியில் கலைநிகழ்வுகளை இடம்பெறச்செய்தல் மூலமாக கலைகளை வளர்க்க கழகம் பாடுபட்டது. குறிப்பாக ஆரம்ப காலங்களில் தென்மராட்சி ரீதியாக இடம்பெற்ற சமாசவிழாவில் பங்குபற்றுவதற்கான போட்டியாளர்களைத் தயார்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது. இதில் பங்கு பற்றிய பலர் தொடர்ந்தும் இந்த நிறுவனத்துக்கு வெற்றிகளைத்தேடித்தந்து பெருமை சேர்த்தனர். இதில் குறிப்பிடக்கூடியவர்கள் அமரர் திரு. சி. பாலசிங்கம், சி. கோகுலவதி, ம.நாகேஸ்வரி, சி. கந்தசாமி போன்றோர்கள் ஆவர்.

மோகனதாஸ் விளையாட்டுக்கழகம்
மோகனதாஸ் சனசமூக நிலையத்தின் பெயரை மிகப்பிரபலம் அடையச்செய்ததே இந்த விளையாட்டுக்கழகம்தான். ஆரம்ப காலங்களில் கிராமிய விளையாட்டுக்களில் வயல்வெளிகளிலும், தனியார் காணிகளிலும் ஈடுபட்டுவந்த இக்கிராம வீரர்கள் தமக்கான ஒரு மைதானம் உருவாக்கத்தின் பின்னரும் புதிய முறையிலான கரபந்தாட்டம் 1968ஆம் ஆண்டு காலப்பகுதியில் திரு வ. நடேசன் ஆசிரியர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து புது உத்வேகம் படைத்து குறிப்பாக கரப்பந்தாட்டத்தில் இந்த வீரர்கள் காட்டிய அதிதிறமைகள்தான் இவர்களை மாவட்ட ரீதியில் மிகப்பிரபலம் அடையச்செய்தது. மோகனதாஸ் விளையாட்டுக்கழகத்தினுடைய கரப்பந்தாட்டம் பார்ப்பதற்கென்றே ரசிகர்கள் பெருமளவில் கூடுவார்கள். மாவட்ட ரீதியில் பல போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய இந்த வீரர்கள் 1975ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் அரசினால் நடாத்தப்பட்ட கரபந்தாட்டப் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இக்கழக வீரர்களான வ. நடேசன், வே. மகாலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டமை பெருமைக்குரியதே.
காலத்துக்குக்காலம் இடம்பெற்ற தடகள விளையாட்டுகளில் பலவீரர்கள் பிரதேச, மாவட்ட ரீதியில் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த 2005ஆம் ஆண்டு இக் கழக வீரர் திரு. மா. பிரதீப்குமார் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற தேசிய விளையாட்டுவிழாவில் குண்டுபோடுதல் நிகழ்வில் முதல் நிலைபெற்று நிலையத்துக்கும், பிரதேசத்துக்கும், மாவட்டத்துக்கும் ஏன் வடகிழக்கு மாகாணத்துக்கே பெருமை தேடித்தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சனசமூக நிலையம் மேற்கொள்ளும் பொதுவான வேலைத்திட்டங்கள் செயற்பாடுகளை மேற்கொண்டு இன்றுவரை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இக்காலத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாக நிலையத்தின் நீண்டகால உறுப்பினரான ஜேர்மனியில் வசித்துவரும் திரு. க. பொன்னுத்துரை என்பவரின் நிதியுதவியுடனும் நிலைய நிதிமூலம் நிலையத்துக்கென 100தகரக்கதிரைகளை திருவாளர்கள் க. குணரத்தினராசா, வே. ஜெகதீஸ்வரன், செ. சிவசுந்தரராசா, சி. சோதிலிங்கம், செ. தவராசா, ச. விவேகானந்தன், திருமதி செ. நாகேஸ்வரி, திரு சி. ஆறுமுகம் ஆகியோர் நிர்வாகத்தில் இருந்த காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது.

மீண்டும் யுத்த அழிவுகளின் பின்னர் 2003ஆம் ஆண்டு இளையதலைமுறை ஒன்று நிர்வாகத்தில் பிரவேசித்தது. 21 உறுப்பினர்களைக்கொண்ட நிர்வாகமாக தெரிவு செய்யப்பட்டு தலைவராக திரு. இ. பாஸ்கரனும் செயலாளராக திரு. த. முரளீதரனும் தெரிவு செய்யப்பட்டார்கள். இவர்களின் தொடர்ச்சியான செயற்பாடுகளின்போது 2005ஆம் ஆண்டு காலத்தில் அறவழிப்போராட்டக் குழுவின் செயலாளர் எம்.கே.ஜீவகதாஸ் என்பவரின் முக்கியமான சிபார்சுக்கமைய இலங்கை சிறுவர்பாதுகாப்பு அமைப்பின் நிதி உதவியுடன் தற்போதய நிலையத்தலைவர் திரு. இ. முகுந்தன் தலைமையில் செயலாளர் சி. தர்மசீலன் மற்றும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களின் அர்ப்பணிப்புடனான செயற்பாட்டின் மூலம் மீள்புனரமைப்புச் செய்யப்பட்டது.

இக்கட்டடம் இருமாடிகளைக் கொண்டதாக இருந்தபோதும் தற்போது அடித்தள வேலை மாத்திரமே ரூபா 1900000.00 செலவில் உருவாக்கப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட இக்கட்டடமே 25.01.2006 அன்று வைபவ ரீதியாக சிறுவர் பாதுகாப்பு இலங்கையின் யாழ்.மாவட்ட முகாமையாளர் திருமதி ஞானச்செல்வி சிங்கேஸ்வரன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

By – Shutharsan.S

Sharing is caring!

Add your review

12345