யமுனா ஏரி

யாழ்ப்பாண வைபவமாலையின் கூற்றுப்படி நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சிங்கையாரியச்சக்கரவர்த்தி என்ற மன்னனே யமுனா ஏரியைத் தோண்டுவித்ததாக அறிய முடிகிறது. ‘பகர’ வடிவான இவ்வேரி யாழ்ப்பாணப் பண்பாட்டு வரலாற்றில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது. தற்போதைய இவ்வேரியின் தோற்றமானது ஒல்லாந்தர் காலத்தில் வடிவமைக்கப்பட்டதாகும். கோட்டைக்குரிய சுவர் அமைப்பு முறையிலே இவ்வேரியின் இறுதிவடிவம் ஒல்லாந்தர் காலத்தில் கொடுக்கப்பட்டது. இவ்வேரியிலுள்ள சேறுவாரி வெளியே எடுக்கப்பட்டபோது இலுப்பை மரத்தினால் செதுக்கப்பட்ட ஓர் அழகிய அம்மன் சிலை வெளிவந்தது. இவ் அம்மன் சிலையானது தற்போது யாழ்ப்பாண அரும்பொருளகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. சங்கிலியன் தோப்பு மக்கள் மத்தியில் நிலவும் ஐதீகமொன்றினால் மந்திரிமனைக்கும் அந்த யமுனா ஏரிக்குமிடையே தரைக்குக் கீழாக அமைந்த சுரங்கப் பாதையொன்று புராதன காலத்தில் அமைந்திருந்தது என்ற செய்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது. மந்திரிமனையின் பிற்சுவர் ஒன்றுடன் அவ்வாறமைந்த சுரங்கப்பாதையொன்றின் வாயில் மிக அண்மைக்காலம் வரைக்கும் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

Add your review

12345