அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம்

அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம்

சைவமும் தமிழும் தழைத்தோங்க ஊர்கள் தோறும் பாடசாலை அமைத்தல் வேண்டும் என்று நாவலர் பெருமான் அன்று எழுப்பிய கோஷத்தை அளவெட்டியில் செயற்படுத்தி என்றும் அழியாப் புகழைப் பெற்றவர் தான் நாகமுத்து அருணாசல உடையார் ஆவார். இவர் 1910ம் ஆண்டில் அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம் கட்டுவித்தார். ஆரம்பத்தில் இப்பாடசாலை நாகபூசணி வித்தியாலயம் என அழைக்கப்பட்டது.
இப்பாடசாலைக்கு நிலமும், கட்டட வசதிகளும் செய்து கொடுத்த திரு.வு.குமாரவேலுப்பிள்ளை அவர்களின் புதல்வி செல்வி .கு.நாகபூசணி நினைவாக நாகபூசணி வித்தியாலயம் எனப் பெயரிடப்பட்டது. திரு.குமாரவேலுப்பிள்ளை அவர்கள் சுப்பையா உடையாரின் மாமனாராவார். 1939ம் ஆண்டு இதன் பெயரை அருணாசல வித்தியாலயம் எனத் திரு. சுப்பையா அவர்கள் மாற்றினார். ஆரம்பப் பாடசாலையாக ஆரம்பித்த இவ்வித்தியாலயம் படிப்படியாக வளர்ச்சியடைந்து கனிஷ்ட வித்தியாலயமாக இன்று திகழ்கின்றது. அக்காலத்தில் அகில இலங்கையில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிறந்த கனிஷ்ட பாடசாலைகளுள் ஒன்றாக இப்பாடசாலை விளங்கியது.
1910ம் ஆண்டில் 60அடிx10அடி அளவு கொண்ட ஓலைக் கட்டடமாகவே இப்பாடசாலை அருணாசல உடையார் அவர்களால் அமைக்கப்பட்டது. 1916ம் ஆண்டு இது உதவி நன்கொடை பெறும் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டது. பாடசாலையின் வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும் உடையார் அவர்களின் மகன் அமரர்.திருவாளர்.சுப்பையா அவர்களின் தொண்டு அளப்பரியது. இவர்களின் முயற்சியினால் 1931ம் ஆண்டளவில் இரத்தினவேல் ஞாபகார்த்த மண்டபம் 28அடிx 60அடிஅளவிலும் 1941ம் ஆண்டளவில் சுப்பையா ஞாபகார்த்த மண்டபம் 28அடி x 110அடி அளவிலும் அமைக்கப்பட்டன. அதன் பின்னர் 1978ம் ஆண்டில் 40அடிx 120அடி அளவு கொண்ட ஒரு கட்டிடத்தை அரசாங்கம் அமைத்துத் தந்தது. இப்பாடசாலையின் ஆரம்பப் பிரிவுக் கட்டிடத்தை 1983ம் ஆண்டில் அரசாங்கம் முற்றாகத் திருத்தியமைத்துத் தந்துள்ளது. திரு.அ.சுப்பையா அவர்கள் 1960ம் ஆண்டில் பாடசாலையைப் பொறுப்பேற்கும் வரையும் சுப்பையா அவர்களின் சிரேஷ்ட புதல்வன் அமரர்.திரு.சிவசுப்பிரமணியம் (கல்வி அதிகாரி) அவர்கள் பெருந்தொண்டாற்றினார். திரு.சுப்பையாவின் மனைவி காலஞ் சென்ற திருமதி.சு.சின்னத்தங்கம் ஆசிரியையும் இவ்வித்தியாலயத்தின் வர்ச்சிக்கு அரும்பெருந் தொண்டாற்றியுள்ளார். இவர் இவ்வித்தியாலயத்தில் சில காலம் பிரதி அதிபராகவும் இருந்தார்.
பாடசாலையின் வளர்ச்சியில் ஆரம்பத்தில் தலைமை ஆசிரியராக திரு.பரமு சட்டம்பியார் அவர்கள் பணிபுரிந்தார். அடுத்து திரு.க.கந்தையா அவர்கள் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்த காலம் (1.9.196-1.8.1962) குறிப்பிடத்தக்கது. இவருடைய காலத்தில் பாடசாலை சகல துறைகளிலும் நன்கு வளர்ச்சியடைந்தது. இக்காலத்தில் 5ம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சை சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்சை என்பவற்றில் பெரும்பான்மையான மாணவர்கள் சித்தியடைந்தனர். அக்காலத்தில் பயின்ற மாணவர்களில் பெரும்பான்மையோர் உயர்பதவி வகித்தது இவரின் நற்பணிக்குச் சான்றாகும்.
இவ்வித்தியாலயத்தில் அதிபர்களாக கடமையாற்றியோர் திருவாளர்கள்
ஆ.கணபதிப்பிள்ளை 15.02.1963 31.12.1964
க.நடராசா 01.01.1965 06.01.1966
க.கனகசபை 15.07.1966 29.02.1968
ந.சிவகுரு 10.09.1968 07.07.1969
சி.வல்லிபுரம் 08.07.1969 31.12.1970
க.மாரிமுத்து 01.08.1972 31.12.1974
க.பொன்னுத்துரை 01.02.1976 25.03.1979
ப.கனகரத்தினம் 26.03.1979 31.12.1990
வி.சச்சிதானந்தன் 11.02.1991 31.12.1993
ச.கைலாசநாதன் 01.12.1993 08.06.1997
ம.நாகேந்திரசீலன் 09.06.1997 22.03.1998
க.அருணாசலம் 23.03.1998 06.06.2002
கு.ஜெகநாதன் 07.06.2002 முதல் இன்று வரை
காலஞ் சென்ற கல்வி அதிகாரி திரு.சு.சிவசுப்பிரமணியம், காலஞ் சென்ற வைத்திய கலாநிதி இ.மகேந்திரன், பொறியியலாளர் திரு.க.குலசிங்கம், உதவி அரசாங்க அதிபர் திரு.கோ.அருணாசலம், வருமான வரி உதவி ஆணையாளர் திரு.ப.தம்பிப்பிள்ளை, வைத்திய கலாநிதி சு.சிவதாசன், வைத்திய கலாநிதி திருமதி.சிவரூபவதி சிவசுப்பிரமணியம், வைத்திய கலாநிதி செ.மகேசன் முதலானோரைப் பழைய மாணவர்களாகக் கொண்ட பெருமை எமது வித்தியாலயத்திற்குரியது.
திரு.ப.கனகரத்தினம் அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் கல்வியிலும், விளையாட்டுத் துறையிலும், இசை நாடகத்துறையிலும் , இப்பாடசாலை பெரு வளர்ச்சியடைந்தது. 19581ம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பில் நடைபெற்ற இசை, நடன, நாடகப் போட்டியில் திரு.க.பாலசுப்பிரமணியம் ஆசிரியர் நெறிப்படுத்திய கீழ்ப்பிரிவு இசை நாட்டிய நாடகம் 3ம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்கள் அருகிலுள்ள அருணோதயாக் கல்லூரி, ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, மகாஜனாக் கல்லூரி போன்ற பாடசாலைகளுக்கு உயர்தரத்திற்குச் செல்கின்றனர். திரு.வி.சச்சிதானந்தன் அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் மாணவர்களைக் கணிதத்தில் அதிகளவில் ஈடுபட வைத்தார். கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகளிலும் பாடசாலை வளர்ச்சி கண்டது. நாட்டில் இடம் பெயர்வுகள் நடைபெற்ற வேiயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் செயற்பட்டார். இவரது காலத்தில் குருளைச் சாரணர்களுக்கான போட்டியில் நடைபெற்ற நாடகம், குழுப்பாடல் ஆகிய இரு போட்டிகளிலும் காங்கேசன்துறை வட்டாரத்தில் 1ம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
திரு.ச.கைலாசநாதன் அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் முகமாக அருகிலுள்ள காணியைத் திருத்தி மைதானமாக அமைத்து விளையாட்டுப் போட்டிகளும் சிறப்பாக நடைபெற வழிகாட்டினார். உதைபந்தாட்டம் இவரது காலத்தில் பெரு வளர்ச்சி கண்டது. பாடசாலை அபிவிருத்திச் சங்கமும், பழைய மாணவர் சங்கமும், ஆசிரியர்களும் இணைந்து இவரது காலத்தில் நிதி சேர்க்கும் பல முயற்சிகளில் ஈடுபட்டு பழைய மாணவர் சங்கத்தின் நிதி வளத்தைப் பெருக்கினர். இடம்பெயர்வு காரணமாகப் பாடசாலையைத் தென்மராட்சியில் நடாத்தி பாடசாலைத் தளபாடங்கள், ஆவணங்கள் பேணிப்பாதுகாத்த பெருமையும் இவரைச் சாரும். 1997ம் ஆண்டில் அதிபராக யா/சங்கானை சிவப்பிரகாச மகாவித்தியாலயத்திற்கு இவர் இடமாற்றம் பெற்றுச் சென்று அங்கு சில வருடங்கள் அதிபராகக் கடமையாற்றி மீண்டும் பதவி உயர்வு பெற்று தெல்லிப்பழைக் கோட்டக் கல்விப் பணிப்பாளராகத் தற்போது கடமையாற்றி வருகின்றார்.
திரு.ம.நாகேந்திரசீலன் அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் பாடசாலையின் கிணறு சுகாதார முறைப்படி திருத்தியமைக்கப்பட்டது. கல்வித்துறையிலும் மற்றும் விளையாட்டுத்துறையிலும் இவரது காலத்தில் பல வெற்றிகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் பல முன்னேற்றங்களைப் பாடசாலையில் மேற்கொள்ள முன்வந்த வேளையில் பதவி உயர்வு பெற்று இவர் மல்லாகம் மகாவித்தியாலயத்திற்கு அதிபராக இடமாற்றம் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது. இவரது பணியை தொடரும் முகமாக யா/மல்லாகம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்த திரு.க.அருணாசலம் அவர்கள் அதிபராக இப் பாடசாலையில் கடமையேற்றார். இவரது காலத்திலும் எமது மாணவர்கள் கல்வித்துறையிலும் விளையாட்டுத்துறையிலும் பல வளர்ச்சிகளைக் கண்டு வெற்றி கண்டனர். பாடசாலையின் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் பாடசாலையின் பின்புறமாக இருந்த காணியை பழைய மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் திரு.க.அருணாசலம் அதிபர் ரூபா10000 (பத்தாயிரம் ரூபா) தை அன்பளிப்புச் செய்த அன்பளிப்பு நிதி மூலமாக காணி ஒன்று விலைக்கு வாங்கப்பட்டது. அத்துடன் இவரது காலத்தில் பெரிய நீர்த்தாங்கியும் அமைக்கப்பட்டதுடன் புவுணு நிறுவனத்தின் உதவியுடன் மலசல கூடங்கள் நவீன முறையில் அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
திரு.கு.ஜெகநாதன் அவர்கள் 2002ம் ஆண்டிலிருந்து இன்று வரை அதிபராகக் கடமையாற்றி வருகின்றார். இவரது காலத்தில் குறிப்பிடத்தக்க பல வளர்ச்சிகளை இப்பாடசாலை கண்டுள்ளது. அந்த வகையில் சகல வசதிகளும் கொண்ட புதிய அலுவலகமானது தரம் 11 வகுப்பறையாக இருந்த இடத்தில் திருத்தியமைக்கப்பட்டது. அத்துடன் சகல வசதிகளையும் உடைய நூலகக் கட்டடமும் 2003ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 2004ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. மேலும் 2007ம் ஆண்டில் பாடசாலையின் பின்புறக் காணியானது துப்பரவு செய்யப்பட்டு பாடசாலைத் தோட்டம் அமைக்கப்பட்டது. அண்மையில் 2008ம் ஆண்டில் சகல வசதிகளும் கொண்ட விஞ்ஞான ஆய்வு கூடமானது மாடிக் கட்டடத்தில் அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
வித்தியாலயத்தில் தற்போது 186ஆண்களும், 184பெண்களும், மொத்தம்370 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 16நிரந்தர ஆசிரியர்களும், பகுதி நேர ஆசிரியர் ஒருவரும், பகுதி நேர ஆங்கில ஆசிரியர் ஒருவரும், தற்காலிக இணைப்பைப் பெற்ற 03ஆசிரியர்களும், இரண்டு தொண்டர் ஆசிரியர்களும் இணைந்து செயற்படுகின்றனர். இன்றைய கல்விச் சிந்தனைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் ஏற்ற வகையில் இப்பாடசாலையின் பௌதீக வளம் பற்றாக்குறையாக இருப்பினும் கல்வி வளர்ச்சிப் போக்கில் பல முன்னேற்றங்களை எட்டியுள்ளது. அதே போல ஏனைய துறைகளிலும் சாதனை படைக்கக்கூடிய வகையில் முன்னேற்றங்களைக் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களது திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் நடாத்தப்படும் சகல போட்டிகளிலும் மாணவர்கள் பங்கு பற்றி பரிசில்களைப் பெற்று வருகின்றனர். 2007ம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பின்வரும் மாணவிகள் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளனர்.
த.டிசாந்தி :- 5A, 3B, C, S
ப.ரேணுகா :- 4A, 3B, 2C, S
இ.குகப்பிரியா 2008 சா/த
இதே போன்று 2007ல் நடைபெற்ற தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி செல்வன் ர.ஜங்கரன் – 163புள்ளிகளையும், செல்வி சி.சாளினி – 146புள்ளிகளையும் பெற்றுச் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலையின் விளையாட்டுத்துறையானது நிலைபேறான பல சாதனைகளை நிலை நிறுத்தி வருகின்றது. பெரிய பாடசாலைகளுடன் போட்டியிட்டு வெற்றிகளை ஈட்டித்தரும் வீரர்களின் சாதனைகளால் இவ் வித்தியாலயம் தலை நிமிர்ந்து நிற்கின்றது. உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் போன்றவற்றிலும் மாணவர்கள் திறம்படச் செயற்பட்டு வெற்றிகளைப் பெற்று வருகின்றனர். அத்துடன் மெய்வல்லுநர் போட்டிகளிலும் மாணவர்கள் கோட்டம், வலயம், மாவட்டம், மாகணம் என்ற வகையில் சென்று சாதனை புரிந்து வருகின்றனர்.
இந்த வகையில் இப் பாடசாலையானது இன்று படிப்படியாக வளர்ச்சி கண்டு பல முன்னேற்றங்களுடன் தலை நிமிர்ந்து நிற்பது பெரும் மகிழ்வைத் தருகின்றது.

By – Shutharsan.S

Sharing is caring!

1 review on “அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம்”

  1. தவநிதி says:

    நானும் இப்பாடசாலையின் பழைய மாணவியாக இருந்த்தையிட்டு மிகவும் பெருமை அடைகின்றேன். எனது அம்மா வல்லிபுரம் மாஸ்டர் அதிபராக இருந்த காலத்தில் சித்திர ஆசிரியராக இருந்தார். பெயர் இரத்தினபூபதி். இவர்1973 ல் காலமாகி விட்டார். எங்கள் வீடு இதே ஒழுங்கையில் தான்.பழைய நினைவுகள் வரும் போது நெஞ்சம் கனக்கிறது.

Add your review

12345